அறிவியல் : பருவம் 3 அலகு 1 : பசுமை சுற்றுச்சூழல் அலகு 1 பசுமை சுற்றுச்சூழல் கற்றலின் நோக்கங்கள் இந்த பாடப்பகுதியினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன ❖ கழிவு மேலாண்மை முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல். ❖ கழிவு மேலாண்மையின் 3R களின் பங்கைப் புரிந்துகொள்ளல். ❖ நல்ல பழக்கங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் நமது சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்துகொள்ளல். ❖ சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உணர்தல். அறிமுகம் இயற்கை நமக்குப் பல பயனுள்ள பொருள்களை வழங்குகிறது. தொழிற்சாலைகள் இந்த இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, நாம் கடைகளில் வாங்கும் பொருள்களை உருவாக்குகின்றன. இவற்றை நாம் பயன்படுத்திய பின், அவை கழிவுகளாக மாறுகின்றன. பயன்படுத்திய ஒரு பொருள் மீண்டும் தேவைப்படாதபோது, அதைக் ‘கழிவு’ என்கிறோம். அது உடைந்து, தேய்ந்து அல்லது மீண்டும் பயன்படுத்த முடியாததினால், நமக்கு உபயோகப்படுவதில்லை. கழிவு என்பது திட திரவ அல்லது வாயு நிலையில் இருக்கலாம். மேலும், அவை வீடுகள், பள்ளிகள், சந்தைகள், மருத்துவமனைகள், கடைகள் போன்ற பல இடங்களிலிருந்து பெறப்படலாம். பொதுவாகக் கழிவுகள் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. கழிவு மேலாண்மை சிருஸ்திக்கா : நமது சுற்றுச்சூழலில் அதிக அளவில் குப்பைகளைக் காண்கிறேன். நாம் இவற்றைக் குறைக்க ஏதேனும் வழி உள்ளதா? ஆசிரியை : ஆம். குப்பைகளான இந்தக் கழிவுகளைக் குறைக்க பல வழிகள் உள்ளன. கழிவுகளைக் குறைத்தல் கழிவு மேலாண்மையில் மிக முக்கியமான படிநிலை ஆகும். : விமல் : கழிவு மேலாண்மை என்றால் என்ன? ஆசிரியை : சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதற்காக, கழிவுகளை முறையாகக் கையாளுவதற்கு நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் கழிவு மேலாண்மை’ ஆகும். இது மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளைப் பிரித்தெடுக்கும் செயல்களை உள்ளடக்கியது. ஜனனி : கழிவு மேலாண்மையின் படிநிலைகளைக் கூறுங்களேன். ஆசிரியை : அதைப்பற்றிக் கூறுகிறேன். கேளுங்கள். கழிவு மேலாண்மையில் நான்கு படிநிலைகள் உள்ளன. அவை, 1. கழிவுகளைப் பிரித்தல் 2. கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல் 3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல் 4. கழிவுகளை அகற்றுதல் 1. கழிவுகளைப் பிரித்தல்: கழிவுகளை வெவ்வேறு கழிவுத் தொட்டிகளில் பிரித்து வைப்பதே கழிவுகளைப் பிரித்தல் எனப்படும். ஒவ்வொரு தொட்டியிலும் வெவ்வேறு கழிவுகள் இருக்க வேண்டும். மட்கும் கழிவிற்கு பச்சை, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவிற்கு நீலம், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவிற்கு சிவப்பு என மூன்று வெவ்வேறு நிற தொட்டிகளில் பிரிப்பது சிறந்தது. மட்காத கழிவினை, ‘மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு’ என்றும் ‘மறுசுழற்சி செய்ய இயலாத கழிவு’ என்றும் பிரிக்கலாம். 2. கழிவுகளைச் சேசுரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்: வீடுகளிலும் பள்ளிகளிலும், கழிவுகளைப் பிரித்தவுடன், ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியினால் அக்கழிவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுகளை எடுக்கும் செயலை ‘கழிவு சேகரிப்பு’ என்கிறோம். கழிவுகளை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது ‘கழிவுகளை எடுத்துச் செல்லுதல்’ எனப்படும். 3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்: மட்கும் கழிவு உரமாக மாற்றப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரமாக்கப்படுகிறது. உரம் தாவரங்களுக்கு உணவாகிறது. மேலும் இது மண்ணை வளமாக்குகிறது. புதிய பொருள்களைத் தயாரிப்பதற்காக மட்காத கழிவு (மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு) மறுசுழற்சி தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 4. கழிவுகளை அகற்றுதல்: இது மறுசுழற்சி செய்ய இயலாத கழிவினை அகற்றும் நிகழ்வாகும். இம்முறையில் கழிவுகள் திறந்த வெளியிலோ, நிலத்தின் அடிப்பகுதியிலோ நிரப்புவதற்காக அனுப்பப்படுகிறது. செயல்பாடு கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக. (கழிவுகளை அகற்றுதல், கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளைப் பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்) 1. கழிவுகளைப் பிரித்தல் 2. கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், 3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல் 4. கழிவுகளை அகற்றுதல் ராகுல் : நாம் வீட்டில் கழிவுகளை எவ்வாறு கையாளுவது? ஆசிரியை : வீட்டிலுள்ள கழிவுகளை முறையாகக் கையாளுவதற்கு மூன்று முறைகள் உள்ளன. இதை சுருக்கமாக 3R என்பார்கள். கோமதி : ‘3R’ கள் என்றால் என்ன? ஆசிரியை : குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) ஆகிய செயல்களை 3R கள் என்கிறோம். முதலில் கழிவுப் பொருள்களைக் குறைத்து, பின் அவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும். அதன் பிறகே மறுசுழற்சி செய்ய வேண்டும். இச்செயல்முறைகளை எளிதில் மனதில் வைத்துக்கொள்ள பின்வருமாறு குறிக்கலாம். 3Rகள் குறைத்தல் என்பது பொருள்களைக் குறைவாக உருவாக்குவது மற்றும் குறைவாகப் பயன்படுத்துவது எனப் பொருள்படும். அதாவது குறைவான கழிவினை உருவாக்கும் பொருள்களைத் தயாரிப்பது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவதாகும். இதுவே கழிவுகளைக் குறைப்பதற்கு செய்யப்படும் முதன்மையான செயலாகும். குறைவான கழிவுகளை நாம் எப்படி உருவாக்க முடியும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1. நீங்கள் ஒரு மை பேனா வாங்கிப் பயன்படுத்தும்போது, அதில் மை தீர்ந்தால் மீண்டும் நிரப்பி அதே பேனாவைப் பயன்படுத்தலாம். 2. உங்கள் பெற்றோருடன் கடைவீதிக்குச் செல்லும்போது, நீங்கள் ஒரு துணிப் பையை எடுத்துச் செல்வதால் அங்கு நீங்கள் நெகிழிப் பைகளை வாங்குவதைத் தவிர்க்க முடியும்.