அறிவியல் : பருவம் 3 அலகு 2 : விலங்குகளின் வாழ்க்கை
அலகு 2
விலங்குகளின் வாழ்க்கை
கற்றலின் நோக்கங்கள்
இந்த பாடப்பகுதியினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன
❖ விலங்குகளின் குழு நடத்தை பற்றி புரிந்துகொள்ளல்.
❖ விலங்குகளின் தகவமைப்பினை அறிந்துகொள்ளல்.
❖ பூச்சிகளின் உடலமைப்பை அறிந்துகொள்ளல்.
❖ சில விலங்குகளின் சிறப்புப் புலன் உணர்வுகளைப் பட்டியலிடுதல்.
❖ இரவில் செயல்படும் விலங்குகளைப் பற்றி தெரிந்துகொள்ளல்.
❖ இளம் உயிரிகளைப் பாதுகாப்பது பற்றி உணர்தல்.
அறிமுகம்
உணவைப் பார்க்கும்போது நாயின் நாக்கில் எச்சில் வருவது ஏன் என சிந்தித்ததுண்டா? குயில் ஏன் கோடைகாலத்தில் மட்டுமே கூவுகிறது? தாய்ப்பறவை கூட்டிற்குத் திரும்பும்போது இளம் பறவைகள் வாயைத் திறப்பது ஏன்?
ஒவ்வொரு விலங்கிற்கும் சில தனித்துவமான நடத்தைகள் உள்ளன. விலங்குகளின் நடத்தை என்பது அவற்றின் செயல்பாடுகளையும் பிற உயிரினங்களுடனான தொடர்புகளையும் உள்ளடக்கியதாகும்.
எ.கா: கண் சிமிட்டுதல், சாப்பிடுதல், நடத்தல் மற்றும் பறத்தல்.
விலங்குகளின் குழு நடத்தை
விலங்குகள் தமது இனத்தைச் சார்ந்த மற்ற விலங்குகளுடன் சேர்ந்து வாழ்வதால் பல நன்மைகளைப் பெறுகின்றன. இது குழு நடத்தை என்று அழைக்கப்படுகிறது. புலி, கரடி போன்ற விலங்குகள் தனித்து வாழ்கின்றன. சில விலங்குகள் சிறிய குழுக்களாக வாழ்கின்றன. எ.கா: சிங்கங்கள். சில விலங்குகள் பெரிய மந்தையாக வாழ்கின்றன.எ.கா: புள்ளிமான் கூட்டம்.
உங்களுக்குத் தெரியுமா
யானை, அணில், எலி மற்றும் வௌவால் போன்ற சில விலங்குகள் தூங்கும்போது கனவு காண்கின்றன. பூனை, நாய் மற்றும் குரங்குகள் நீண்ட நேரம் கனவு காண்கின்றன.
உணவைத் தேடவும், வாழிடங்களைத் தேர்ந்தெடுக்கவும், தமது இனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பேணுவதற்கும் விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன. இதையே நாம் குழு நடத்தை அல்லது சமூக நடத்தை என்று அழைக்கிறோம். இயற்கை சூழலில் விலங்குகள் வாழ உதவுவதே குழு நடத்தையின் முக்கிய நோக்கமாகும்.
எ.கா: ஒரு நீர்நிலையில் உள்ள அனைத்து மீன்களும் ஒன்றிணைந்து முன்னால் செல்கின்ற தங்கள் தலைவரைப் பின் தொடர்கின்றன ஒரு குழுவில் இணைந்திருப்பதால், சிறிய மீன்களும் பெரியதாகத் தோன்றுகின்றன.
தேனீக்களின் குழு நடத்தை
பூச்சிகள் குழுவாக வாழும்போது, அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கின்றன. எ.கா: ஒரு தேன் கூட்டில் ஒரு ராணித்தேனியும், ட்ரோன்கள் எனப்படும் ஆண் தேனீக்களும் நூற்றுக்கணக்கான பெண் வேலைக்காரத் தேனீக்களும் காணப்படும்.
பறவைகளின் கூடு கட்டும் நடத்தை
பறவைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. அவை வெவ்வேறு உணவுகளை உண்டு, வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றன. மேலும் வெவ்வேறு வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றன. சில பறவைகள் நிரந்தரமாகக் குழுக்களாக வாழ்கின்றன. சில பறவைகள் இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கின்றன.
எல்லாப் பறவை இனங்களும் கூடுகளை கட்டுவதில்லை. அவற்றுள் சில தங்கள் முட்டைகளைத் தரையில் அல்லது பாறைகளின் இடைவெளியில் இடுகின்றன. பெரும்பாலான பறவைகள் பொறியாளர்களைப் போல கவனமாக தாமும், தம் இளம் பறவைகளும் பாதுகாப்பாக வாழ்வதற்கு கூடுகளைக் கட்டுகின்றன. பறவைகள் இலை மற்றும் மரக்குச்சிகளைக் கொண்டு கூடுகளைக் கட்டுகின்றன. சில பறவைகள் முட்களால் கூடுகளைக் கட்டி, பின் அதன்மீது மென்மையான பொருள்களை கொண்டு கூட்டினை மென்மையாக்குகின்றன.
உங்களுக்குத் தெரியுமா
சமூக நெசவாளர் (Social weavers) என்ற பறவைகள் தனியாகக் கூடுகளைக் கட்டுவதில்லை. அவ்வினத்தின் ஆண்பறவைகள் ஒன்றாக இணைந்து 400 பறவைகள் தங்கக் கூடிய ஒரு பொதுவான கூட்டினைக் கட்டுகின்றன.
பச்சை ஹெரான் (Green Heron) என்ற பறவையால் நீந்த முடியாது என்றாலும், அது தண்ணீரிலிருக்கும் மீனை எப்படி பிடிக்கிறது? அது வண்ணமயமான இலைகள் மற்றும் பழங்களைத் தண்ணீரில் போடும்போது, அவற்றை நோக்கி மீன்கள் வரும். அப்போது, தன் அலகால் அவற்றைப் பிடித்து உண்கிறது.
யானைகளின் குழு நடத்தை
ஒரு குழுவாக இருக்கும் யானைகளை, யானைக் கூட்டம் என்று அழைப்பர் ஒவ்வொரு குழுவிலும், ஒரு பெண் யானை தலைவராக உள்ளது. இது உணவு, நீர் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக அக்குழுவை வழிநடத்திச் செல்லும் இக்குழுவில் உள்ள அனைத்து யானைகளும் பெண் யானையின் கட்டளைக்குக் கீழ்ப்படியும். ஒரு கூட்டத்தில் உள்ள மூத்த யானைகள் குட்டிகளுக்குப் பழக்கவழக்கத்தையும் வாழ்க்கைத் திறன்களையும் கற்றுக்கொடுக்கின்றன. யானைகளைப் போல மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள் போன்றவையும் கூட்டமாக வாழும்.
முயல்வோம்
விலங்குகளை அவற்றின் குழு நடத்தையுடன் பொருத்துக.
குழு நடத்தையால் விலங்குகள் பெறும் நன்மைகள்
குழு நடத்தை : எடுத்துக்காட்டு
1. உணவைப் பெறுதல் – சிங்கம் வேட்டையாடி உணவைப் பகிர்தல்
2. இளம் உயிரிகளின் பாதுகாப்பு – பெண் யானை தன் குட்டிகளைப் பாதுகாத்தல்
3. வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பு – காட்டெருமைகள் பலத்த ஒலியை எழுப்பி, தம் கூட்டத்தை எச்சரித்தல்
4. வேலைப் பகிர்வு – வேலைக்காரத் தேனீக்கள் மலரிலிருந்து தேனை சேகரிச்சல், தேன் கூட்டை உருவாக்குகல்
5. ஆற்றல் சேமிப்பு – காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பறவைகள் “V” வடிவத்தில் பறத்தல்
உங்களுக்குத் தெரியுமா
கடல் நீர்நாய்கள் தூங்கும்போது அவை கைகளைப் பிடித்துக்கொள்கின்றன. அதனால் அவை ஒன்றைவிட்டு ஒன்று விலகிப் போவதில்லை.
விலங்குகளில் தகவமைப்பு
தகவமைப்பு என்பது அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு விலங்கு தன் வாழ்விடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது தகவமைப்பு ஆகும். அவ்வாறு அதன் நடத்தையை மாற்றத் தவறினால் அது உயிர் வாழ்வது கடினம்.
அனைத்து விலங்குகளும் ஒரு குறிப்பிட்ட பருவநிலைக்கு ஏற்பவும், குறிப்பிட்ட சூழலில் வாழவும் சில சிறப்புப் பண்புகளைப் வற்றுள்ளன. எ.கா: ஒட்டகச்சிவிங்கிகள் அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மிக நீண்ட கழுத்தைக் கொண்டுள்ளன.
முயல்வோம்
சுற்றுப்புறத்தில் நீங்கள் காணும் ஏதேனும் ஒரு விலங்கைப் பற்றி சிறுகதை ஒன்றினை எழுதுக.
சில விலங்குகள் பெற்றுள்ள தகவமைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
புலிகள் மற்றும் வரிக்குதிரைகளில் உள்ள கோடுகள் இவ்விலங்குகள் மறைந்துகொள்ள உதவுகின்றன.
ஒட்டகங்கள் பாலைவனத்தில் நடக்க ஏதுவாக அகலமான கால் பாதங்களைப் பெற்றுள்ளன.
மீன்கள் நீரில் சுவாசிக்க செவுள்களையும், நீந்த துடுப்புகளையும் பெற்றுள்ளன.
யானைகள் உணவினைப் பெற நீண்ட மற்றும் பெரிய தும்பிக்கையைக் கொண்டுள்ளன.
விலங்குகளில் மூன்று வகையான தகவமைப்புகள் காணப்படுகின்றன. அவை,
1. உடல் தகவமைப்பு
விலங்கின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல் தகவமைப்பு எனப்படும்.
எ.கா: குளிர்ப் பிரதேசங்களில் வாழும் துருவக் கரடிகள் வெப்ப இழப்பைக் குறைக்க தடிமனான ரோமங்களையும், குறுகிய காதுகளையும் கொண்டுள்ளன.
2. உடற்செயலியல் தகவமைப்பு
விலங்குகளின் உடல் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் உடற்செயலியல் தகவமைப்பு ஆகும்.
எ.கா: குளிரும்போது நாய் உடலில் சூட்டை அதிகரிக்க நடுங்குகிறது. மேலும், கோடை காலங்களில் உடலின் வெப்பத்தைத் தணிக்க நாக்கை வெளியே தொங்கவிடுகிறது.
3. நடத்தை தகவமைப்பு
விலங்குகளின் நடத்தை சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் நடத்தை தகவமைப்பு ஆகும். எ.கா: சாதகமற்ற சூழலைத் தவிர்க்க பறவைகள் இடம்பெயர்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா
முள்ளம் பன்றிகளின் உடலில் முட்கள் இருப்பதால் அவை எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன.
முதலைகள் தங்கள் தோலின் மூலம் நீரில் ஏற்படும் சிறிய அதிர்வுகளைக் கூட உணர முடியும்.
முயல்வோம்
கீழ்க்கண்ட வினாக்களைப் படித்து ஏற்ற விடையைக் கண்டறிந்து எழுதுக.
நான் யார்?
பூச்சியின் உடலமைப்பு
பெரும்பான்மையான பூச்சிகள் உடலமைப்பில் ஒத்துள்ளன.
பொதுவாக பூச்சிகளின் உடல், தலைப் பகுதி, மார்புப் பகுதி மற்றும் வயிற்றுப்பகுதி என் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. பூச்சிகளின் உடல் பகுதியானது புறச்சட்டகத்தால் மூடப்பட்டுள்ளது.
● தலை: தலையில் காணப்படும் முக்கிய பாகங்கள் பெரிய கூட்டுக் கண்கள், உணர் நீட்சிகள் மற்றும் வாயுறுப்புகள் ஆகும்.
● மார்புப் பகுதி: இது உடலின் நடுப் பகுதியைக் குறிப்பதாகும். இது மூன்று இணை கால்களையும் இரண்டு இணை இறக்கைகளையும் பெற்றுள்ளது.
● வயிற்றுப்பகுதி: இது பூச்சிகளின் கடைசி உடற்பகுதியாகும். பெரும்பாலான பூச்சிகளின் வயிற்றுப்பகுதி கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பூச்சிகளின் இறக்கைகள், கால்கள், உணர் நீட்சிகள் மற்றும் வாய் உறுப்புகள் போன்ற உடலமைப்புகளில் வேறுபாடுகள் உள்ளன.
நடத்தல், குதித்தல், தோண்டுதல், நீந்துதல் ஆகிய செயல்களைச் செய்வதற்கு ஏற்ப பூச்சிகளின் கால்கள் மாறுபாடு அடைந்துள்ளன. பெரும்பாலான பூச்சிகள், உடலின் மேல் பகுதியில் மடித்துக்கொள்ளும்படியான இறக்கைகளைக் கொண்டுள்ளன. எ.கா: வண்டுகள். இறக்கைகளை மடிக்க முடியாத சில பூச்சிகள் உள்ளன. எ.கா: தட்டாம்பூச்சி சில பூச்சிகளில் இறக்கைகள் இல்லை. எ.கா: புத்தகப்பூச்சி.
உங்களுக்குத் தெரியுமா?
பூச்சிகளின் கூட்டுக் கண்கள் சிறிய அலகுகளால் ஆனவை அவை ஒமட்டியா (Ommatidia) என அழைக்கப்படுகின்றன.
முயல்வோம்
விடுபட்ட வார்த்தையை நிரப்புக.
பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை தலை, மார்புப் மற்றும் வயிற்றுப் பகுதி ஆகும். பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதிபகுதியில் நான்கு இறக்கைகள் மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு உணர் நீட்சிகளினால் நுகர்கின்றது
எறும்புகள் மற்றும் வௌவால்களில் சிறப்புப்புலன் உணர்வுகள்
சில விலங்குகள் நன்கு வளர்ச்சியடைந்த சிறப்புப் புலன்களைப் பெற்றுள்ளன. இந்தச் சிறப்புப்புலன்கள், விலங்குகள் தம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையை அறிந்துகொள்ள உதவுகின்றன.
எறும்புகள்
பார்த்தல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் தொடுதல் போன்ற அனைத்து புலன் உணர்வுகளையும் எறும்புகள் பெற்றுள்ளன. எறும்புகளின் உணர்நீட்சியில் வாசனை மற்றும் சுவை உறுப்புகள் உள்ளன. அவை, கால்களால் தரையின் அதிர்வுகளை உணர்கின்றன. எறும்புகளுக்கு நல்ல நுகரும் தன்மை உண்டு.
கலந்துரையாடுவோம்
ஒரு தட்டில் சிறிது கற்கண்டை வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து. எறும்புகள் சாரை சாரையாகத் தட்டை நோக்கிவருவது ஏன்?
உங்களுக்குத் தெரியுமா
● உங்கள் பூனையின் உணவில் சர்க்கரை சேர்ப்பது பயனில்லை, ஏனெனில் பூனையால் இனிப்பை சுவைக்க முடியாது.
● பாம்புகள் நாக்கைக் கொண்டு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை நுகர்ந்து உணர்கின்றன
வௌவால்கள்
வௌவால்களுக்குக் கேட்கும் திறன் அதிகம். அவை மீயொலியை எழுப்பும் தன்மை உடையவை. இரவில் தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் பாதையில் உள்ள பொருள்களைத் தெரிந்து கொள்வதற்கும் இந்த ஒலியைப் பயன்படுத்துகிறது. இதனையே நாம் ‘எதிரொலித்து இடமறிதல்’ என்கிறோம்.
வாம்பயர் வௌவால்கள் வெப்பத்தைக் கண்டறியும் மூக்குகளைக் கொண்டுள்ளதால் தம் இரையை எளிதில் கண்டுபிடிக்கின்றன. இவை தங்கள் இரையின் இரத்தத்தை உணவாகக் கொள்கின்றன.
இரவில் இரைதேடும் விலங்குகள்
காலையில் எப்போது எழுந்திருப்பீர்கள்? 6 மணிக்கு
இரவில் எப்போது தூங்கச் செல்வீர்கள்? 10 மணிக்கு
நீங்கள் எப்போது விளையாடுவீர்கள்? மாலையில்
சில விலங்குகள் பகல் நேரத்தில் தூங்கி, இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. எ.கா: பூனை. விலங்குகள் மட்டுமின்றி, சில பறவைகளும் இரவில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. இத்தகைய விலங்குகள் இரவில் இரைதேடும் விலங்குகள்’ என அழைக்கப்படுகின்றன. எ.கா: ஆந்தை, வௌவால்.
உங்களுக்குத் தெரியுமா
பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகளை பகலில் இரை தேடும் விலங்குகள் என்று அழைப்பர். எ.கா: கோழி, குதிரை மற்றும் ஒட்டகம்.
சிங்கங்கள் பகலிலும் இரவிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன.
இரவில் இரைதேடும் விலங்குகள் பொதுவாக மிகவும் சிறந்த செவிப்புலன், நுகர்தல் மற்றும் கண்பார்வை ஆகியவற்றைப் பெற்றுள்ளன. இரவில் நடமாடும் சில விலங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கண்டறிவோம்
இரவில் நடமாடும் விலங்குகளை வட்டமிடு.
பெற்றோர் பராமரிப்பு
பெரியவர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் ‘பெற்றோர் பராமரிப்பு’ என்று அழைக்கப்படுகின்றது. இதனால், இளம் உயிரினங்களின் உடல் நலம் பேணப்படுவதுடன் அவற்றின் வாழும் காலமும் அதிகரிக்கிறது. மேலும், இது விலங்குகளின் இனப்பெருக்கத் திறனை அதிகரிக்கிறது.
கங்காரு
பெற்றோர் பராமரிப்பிற்கு கங்காரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பெண் கங்காரு தனது குட்டியை அதன் வயிற்றுப்பையில் சுமந்து செல்கிறது. குட்டிகள் பெரியதாக வளர்ந்து, வெளியே தன்னிச்சையாக செயல்படும்வரை, பாதுகாப்பான இடமாக அந்தப் பை விளங்குகிறது.
பசு
பசு அதன் கன்றுக்குப் பால் கொடுப்பதுடன், அதன் கன்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறது. ஒலியினால் தாயும் கன்றும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வர். கன்றுகள் தங்கள் தாயிடமிருந்து வரும் அழைப்புகளுக்குத் திரும்ப அழைத்து பதிலளிக்கின்றன.
மனிதர்கள்
மனிதர்கள் அவர்களின் குழந்தையின் உடல், மனவெழுச்சி சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சி போன்றவற்றை ஊக்குவிக்கிறார்கள். பச்சிளங்குழந்தைக்கு உதவி தேவைப்படுகிறது. தாய் அக்குழந்தைக்கு உணவளித்தும், தூங்க வைத்தும், உடைகள் அணிவித்தும் நன்கு கவனித்துக் கொள்கிறார். மிகப் பொறுப்பாக, கவனமாகப் பராமரிக்கப்படும் குழந்தைகள் இச்சமூகத்தில் வெற்றிகரமாக வாழக் கற்றுக்கொள்கிறார்கள்.
நிரப்புவோம்
விலங்குகளை உற்றுநோக்கி அவற்றின் செயல்களை எழுதுக
மதிப்பீடு
I. நான் யார்?
1. எனது குழு காலனி என்று அழைக்கப்படுகிறது.
விடை : எறும்பு
2. எங்களின் வீடு கூடாகும்.
விடை : பறவை
3. மணலில் நடப்பதற்காக என் கால் பாதங்கள் அகலமாக உள்ளன.-
விடை : ஒட்டகம்
4. எனது பாதையில் உள்ள பொருள்களைக் கண்டுபிடிக்க மீயொலியைப் பயன்படுத்துவேன்.
விடை : வௌவால்
5. நான் பகலிலும், இரவிலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.
விடை : சிங்கம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகளை ———- என்று அழைப்பர்.
விடை: இரவில் இரைதேடும் விலங்குகள்
2. ———– பெற்றோர் பராமரிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
விடை: கங்காரு
3. ஆந்தைகளின் குழு ——– எனப்படும்.
விடை: கூட்டம்
4. ——– தேன் கூட்டில் வாழ்கின்றன.
விடை: தேனீக்கள்
5. ————— நம் இரத்தத்தை உறிஞ்சும்.
விடை: கொசு
III. பொருத்துக:
1. இறக்கையற்ற பூச்சி – நுகர்தல்
2. யானை – செவுள்கள்
3. ஒட்டகச்சிவிங்கி – மந்தை
4. எறும்புகள் – நீண்ட கழுத்து
5. மீன் – புத்தகப்பூச்சி
விடை:
1. இறக்கையற்ற பூச்சி – புத்தகப்பூச்சி
2. யானை – மந்தை
3. ஒட்டகச்சிவிங்கி – நீண்ட கழுத்து
4. எறும்புகள் – நுகர்தல்
5. மீன் – செவுள்கள்
IV. பின்வரும் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளிக்க.
1. பறவைகள் ஏன் கூடுகளைக் கட்டுகின்றன?
விடை:
பறவைகள் தம் இளம் பறவைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு கூடுகளை கட்டுகின்றன
2. உடல் தகவமைப்பு என்றால் என்ன?
விடை:
வாழ்விடத்திற்கு ஏற்ப விலங்குகளின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல் தகவமைப்பு எனப்படும்.
3. எதிரொலித்து இடமறிதல் – வரையறு.
விடை:
வௌவால் இரவில் தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் பாதையில் உள்ள பொருள்களை தெரிந்து கொள்வதற்கும் மீயொலியை பயன்படுத்துகிறது. இதனையே நாம் எதிரொலித்து இடமாக்கல்’ என்கிறோம்.
4. எறும்புகள் அதிர்வுகளை எவ்வாறு உணர்கின்றன?
விடை:
எறும்புகள் கால்களினால் தரையின் அதிர்வுகளை உணர்கின்றன.
5. குழுக்களாக வாழும் மூன்று விலங்குகளை எழுதுக.
விடை:
யானைகள், மான்கள், வரிக்குதிரைகள்
6. பறவைகள் ஏன் ‘V’ வடிவத்தில் பறக்கின்றன?
விடை:
காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பறவைகள் ‘V’ வடிவத்தில் பறக்கின்றன. பறவைகள் V’ வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன.
V. பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க.
1. விலங்குகள் ஏன் குழுக்களாக வாழ்கின்றன?
விடை:
உணவைத் தேடவும், வாழிடங்களை தேர்ந்தெடுக்கவும், தமது இனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பேணுவதற்கும் விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன.
2. பூச்சியின் மூன்று முக்கிய உடல் பகுதிகளை விளக்குக.
விடை:
தலை : தலையில் காணக்கூடிய முக்கிய பாகங்கள் பெரிய கூட்டுக் கண்கள், உணர்வு நீட்சிகள் மற்றும் வாயுறுப்புகள் ஆகும்.
மார்புப் பகுதி : இது உடலின் நடுப் பகுதியை குறிப்பதாகும். இது மூன்று இணை கால்களையும் இரண்டு இணை இறக்கைகளையும் பெற்றுள்ளது.
வயிற்றுப் பகுதி : இது பூச்சிகளின் கடைசி உடற் பகுதியாகும். பெரும்பாலான பூச்சிகளின் வயிற்றுப் பகுதிகள் கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
3. இரவில் இரைதேடும் விலங்குகள் பற்றி எழுதுக.
விடை:
சில விலங்குகள் இரவில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. இத்தகைய விலங்குகளை இரவில் இரைதேடும் விலங்குகள் என்று அழைக்கின்றார்கள். (எ.கா. ஆந்தை, வௌவால்). இரவில் இரைதேடும் விலங்குகள் பொதுவாக மிகவும் சிறந்த செவிப்புலன், நுகர்தல் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கண்பார்வை ஆகியவற்றைப் பெற்றுள்ளன.
முயல்வோம்
விலங்குகளை அவற்றின் குழு நடத்தையுடன் பொருத்துக.
முயல்வோம்
கீழ்க்கண்ட வினாக்களைப் படித்து ஏற்ற விடையைக் கண்டறிந்து எழுதுக.
நான் யார்?
முயல்வோம்
விடுபட்ட வார்த்தையை நிரப்புக.
பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை தலை, மார்புப் மற்றும் வயிற்றுப் பகுதி ஆகும். பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதிபகுதியில் நான்கு இறக்கைகள் மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு உணர் நீட்சிகளினால் நுகர்கின்றது
கண்டறிவோம்
இரவில் நடமாடும் விலங்குகளை வட்டமிடு.
நிரப்புவோம்
விலங்குகளை உற்றுநோக்கி அவற்றின் செயல்களை எழுதுக