அறிவியல் : பருவம் 3 அலகு 3 : நாம் சுவாசிக்கும் காற்று
அலகு 3
நாம் சுவாசிக்கும் காற்று
அறிமுகம்
கற்றலின் நோக்கங்கள்
❖ இந்த பாடப்பகுதியினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன
❖ காற்று ஒரு கலவை என்பதை அறிந்துகொள்ளல்.
❖ காற்றின் உட்கூறுகளையும் அவற்றின் அளவையும் புரிந்துகொள்ளல்.
❖ காற்று மாசுபாடு மற்றும் அதன் விளைவுகளை உணர்தல்.
அறிமுகம்
நமது பூமி நிலம், நீதி காற்று ஆகியவறைக் கொண்கொண்டது அனைத்து உயிரினங்களும் வாழ இம்மூன்றும் மிகவும் முக்கியமானவை. நம்மைச் சுற்றி காற்று உள்ளது. இது மழை பெய்வதற்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசிப்பதற்கு இது அவசியமானது.
செய்து மகிழ்வோம்
காலியான நெகிழி தண்ணீர்ப்பாட்டிலின் மூடியில் ஒரு சிறு துளையிட்டு, அம்மூடியால் பாட்டிலை இறுக்கமாக மூடவும். அம்மூடி உங்கள் முகத்தின் அருகே இருக்கும் வகையில் வைத்து பாட்டிலின் மையத்தில் உங்கள் கையால் அழுத்தவும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
விடை:
காற்று வேகமாக வெளிவருவதை உணரமுடியும்.
அன்றாட வாழ்வில் காற்றின் முக்கியத்துவம்
1. காற்றில் இருக்கும் ஆக்சிஜன் சுவாசத்திற்குத் தேவைப்படுகிறது.
2. நம்மைச் சுற்றி காற்று இருப்பதால் நம்மால் ஒலியைக் கேட்க முடிகிறது.
3. விதைகளை பரப்புவதற்குக் காற்று உதவுகிறது.
4. காற்று வீசுவதால் பருவமழை பொழிகிறது.
5. வளிமண்டல வெப்பநிலையைக் காற்று கட்டுப்படுத்துகிறது.
முயல்வோம்
காற்று/வாயு உள்ள பொருள்களை (✔) குறியிடுக
காற்று ஒரு கலவை
நாம் சுவாசிக்கும் காற்று பல வாயுக்களின் கலவையாக உள்ளது. நீராவி மற்றும் புகை ஆகிய வை கலந்துள்ளன. ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற வாயுக்களும் காற்றில் உள்ளன. காற்று அதில் இருக்கும் அனைத்து வாயுக்களின் பண்புகளையும் காட்டுகிறது.
எடுத்துக்காட்டாக காற்றிலுள்ள ஆக்சிஜன் எரிதலுக்குத் துணைபுரிகிறது. விறகைப் பயன்படுத்தி சமைக்கும் போது, நாம் ஊதுகுழாய் மூலம் காற்றை ஊதுகிறோம். அப்போது காற்றில் உள்ள ஆக்சிஜன் விறகை நன்றாக எரியச் செய்கிறது.
உங்களுக்குத் தெரியுமா
கோடைக் காலங்களில் மண் பானையிலிருந்து எவ்வாறு குளிர்ந்த நீர் கிடைக்கிறது? மண் பானையில் ஆயிரக்கணக்கான சிறிய துளைகள் உள்ளன. இத்துளைகளின் மூலம் நிரானது நீராவியாக வெளியேறுவதால் பானையில் உள்ள நீர் குளிர்ச்சியாக உள்ளது.
முயல்வோம்
எவற்றிலிருந்து நீராவி வெளிவரும்? (✔) குறியிடுக.
உங்களுக்குத் தெரியுமா
நாதஸ்வரமும் புல்லாங்குழலும். காற்றைக் கொண்டு இசைக்கப்படும் இசைக்கருவிகளாகும்.
காற்றின் உட்கூறுகளும் அவற்றின் அளவும்
காற்றில் உள்ள வாயுக்களின் இயைபு நிலையானதன்று . இது இடத்திற்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறுபடும். காற்று ஒரு தனிப்பொருள் அன்று. அது பல்வேறு கூறுகளாலானது.
நிரப்புவோம்
காற்றில் இருக்கும் வாயுக்களின் சதவீதத்தை எழுதுக.
நைட்ரஜன்
காற்றில் சுமார் 78% நைட்ரஜன் உள்ளது. பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவினை நீண்ட நாள் பாதுகாக்க இது பயன்படுகிறது.
திரவ நைட்ரஜன் செல்களை சேமிக்க பயன்படுகிறது.
தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் அவசியமானது. சில தாவரங்களின் வேர் முடிச்சுகளில் நைட்ரஜன் உள்ளது.
தற்போது வாகன சக்கரங்களில் நைட்ரஜன் வாயுவை மக்கள் பயன்படுத்துகிறார்கள். நைட்ரஜனின் சில சேர்மங்கள் வெடிபொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா
1772 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து வேதியியலாளர் டேனியல் ரூதர்ஃபோர்டு நைட்ரஜனைக் கண்டறிந்தார்.
விவாதிப்போம்
சில பல்பொருள் அங்காடிகளில், நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட பெரிய பலூன்கள் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதற்கான காரணத்தை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுக.
விடை:
நைட்ரஜன், காற்றை விட சிறிது லேசான, மந்தமான வாயுவாகும். எனவே பலூன் அதிக உயரத்தில் பறக்கத் தேவையில்லாதபோது நைட்ரஜன் அதில் பயன்படுத்தப்படுகிறது.
ஆக்சிஜன்
காற்றில் உள்ள வாயுக்களில் ஆக்சிஜன் மிக முக்கியமானதாகும். இது காற்றில் சுமார் 21% உள்ளது. அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ ஆக்சிஜன் தேவை. எளிய சோதனைகள் மூலம் காற்றில் ஆக்சிஜன் உள்ளது என்பதை அறியலாம்.
ஆக்சிஜனின் பயன்கள்
1. அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க ஆக்சிஜனைப் பயன்படுத்துகின்றன.
2. எரிதலுக்கு ஆக்சிஜன் அவசியம்.
3. இயல்பாக சுவாசிக்க முடியாத நோயாளிகள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உருளைகளைப் பயன்படுத்தி சுவாசிக்கின்றனர்.
4. உலோகங்களை உருக்கி இணைக்க ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா
உயரமான மலைகளில் ஏறுபவர்களும் ஆழ்கடலில் நீந்துபவர்களும் ஆக்சிஜன் உருளைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
கார்பன் டைஆக்சைடு
காற்றில் கார்பன் டைஆக்சைடு 0.03% அளவு மட்டுமே உள்ளது. இது குறைவாக இருந்தாலும், இதன் பயன்பாடுகள் மிக அதிகம். இதைச் சுண்ணாம்பு நீர் கொண்டு சோதிக்கலாம். தெளிந்த சுண்ணாம்பு நீரில் கார்பன் டைஆக்சைடு வாயுவைச் செலுத்தும்போது அது பால் போல் மாறும்.
கார்பன் டைஆக்சைடின் பயன்கள்
1. தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் பயன்படுகிறது.
2. தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
3. குளிர்சாதனப் பெட்டிகளில் உலர் பனிக்கட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
4. நெகிழி மற்றும் பலபடிமம் (polymer) தயாரிக்கப் பயன்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா
காற்றில் கார்பன் டைஆக்சைடு உள்ளதை ஸ்காட்லாந்து வேதியியலாளர் ஜோசப் பிளாக் என்பவர் கண்டுபிடித்தார்.
காற்றில் ஹைட்ரஜன், ஹீலியம், ஆர்கான் போன்ற வாயுக்கள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. காற்றில் நீராவியின் அளவு சுற்றுச்சூழலுக்கேற்ப மாறுபடும். நாம் சுவாசிக்கும்போது, காற்றிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு, கார்பன் டைஆக்சைடு மற்றும் நீராவியை வெளியே விடுகின்றோம்.
முயல்வோம்
பின்வருவனவற்றை வகைப்படுத்துக.
(நாய், பூனை, தென்னை மரம், குரங்கு, கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி)
உங்களுக்குத் தெரியுமா
ஒரு வளர்ந்த மரமானது ஒரு நபரால் வெளியேற்றப்படும் மூன்றில் ஒரு பங்கு (1/3) கார்பன் டைஆக்சைடை எடுத்துக்கொள்கிறது. மேலும், அதே அளவு ஆக்சிஜனை வெளிவிடுகிறது. என்வே, ஒரு மனிதன் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனைப் பெறுவதற்கு மூன்று மரங்கள் தேவை.
காற்று மாசுபாடு
புவியின் வளிமண்டலமானது மனிதனின் செயல்களால் சீர்குலைக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலின் முக்கிய பிரச்சனைகளான காற்று மாசுபடுதலும், புவி வெப்பமடைதலும் நிகழ்கிறது வாகனங்களால் வெளியேற்றப்படும் புகை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களிலிருத்து வரும் பிறதுகள்கள் போன்றவற்றை காற்று சுமந்து செல்கிறது. இவை காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களாகும்.
செயல்பாடு
உங்கள் வீடு / பள்ளியின் ஜன்னல் வழியாக நுழையும் சூரிய ஒளிக் கதிர்களைப் பாருங்கள். மிகச்சிறிய தூசித் துகள்கள் காற்றில் நகர்வதைப் பார்க்க முடியும். நாம் இதேபோல இருளில் மின் விளக்கு ஒளியின் உதவியுடன் இதைப் பார்க்க முடியும்.
உங்களுக்குத் தெரியுமா
தும்மல் மற்றும் இருமல் போன்ற செயல்களின்போது வாய் மற்றும் மூக்கை மூடுவதனால் தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகள் காற்றின் வழியே பிறருக்குப் பரவாமல் தடுக்கலாம்.
காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள்
புவி வெப்பமயமாதல்
இது உலகின் வெவ்வேறு பகுதிகளின் காலநிலைகளை மாற்றுகிறது.
இது விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்தல் ஆகியவை புவி வெப்பமடைதலின் முக்கிய விளைவுகளாகும்.
பனிப்புகை உருவாக்கம்
தூசித் துகள்கள் மற்றும் புகை, சூரிய ஒளியில் மூடுபனியுடன் இணையும்போது, பனிப்புகை உருவாகிறது. இது காணும் தன்மையைக் குறைக்கிறது. இது சுவாசப் பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிறது.
அமில மழை உருவாக்கம்
கந்தக டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் வளிமண்டலத்தில் உள்ள நீருடன் வினைபுரிந்து, கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த அமிலங்கள் மழை நீருடன் கலந்து, அமில மழையாகப் பொழிகிறது.
அமில மழையின் விளைவுகள்
● சுவாசக் கோளாறு மற்றும் தோல் வியாதிகளை ஏற்படுத்துகிறது.
● இலைகளைச் சேதப்படுத்தி, தாவரங்களின் உற்பத்தித்திறனை குறைக்கிறது.
● நீரிலும் நிலத்திலும் கலந்து, நீர்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
● பளிங்குக் கற்களை அரித்து, தாஜ்மஹால் போன்ற நினைவுச்சின்னங்களைச் சேதப்படுத்துகிறது.
ஏரோசால் உருவாக்கம்
திரவ அல்லது திண்மத் துகள்கள் காற்றில் சிதறும்போது இவை ஏரோசால் என்று அழைக்கப்படுகின்றன. ஏரோசால் இலைகளில் படிவதனால், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது.
ஓசோன் குறைதல்
குளோரோபுளுரோ கார்பன்கள் (CFC) ஓசோன் அடுக்கினைப் பாதிக்கின்றன.
ஓசோனில் துளைகள் ஏற்பட்டு, புற ஊதா (UV) கதிர்கள் பூமியில் நுழைவதனால், வனவிலங்குகளும், தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும், இது மனிதர்களுக்குத் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
முயல்வோம்
புவி வெப்பமயமாதலுக்குக் காரணமானவற்றை (✔) குறிப்பிடுக.
மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
காற்று மாசுபாடு மனித உடல் நலத்தைப் பாதிக்கிறது. காற்றில் மாசுபடுத்திகள் அதிகரிக்கும்போது, அவை கண், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தும். காற்று மூச்சுத்திணறல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளை உருவாக்கும்.
காற்று மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்:
1. சுவாச நோய்கள். எ.கா: காசநோய்.
2. இதய இரத்தநாள பாதிப்பு.
3. சோர்வு, தலைவலி மற்றும் பதட்டம்.
4. நரம்பு மண்டல பாதிப்பு.
முயல்வோம்
● அருகிலுள்ள இடங்களுக்கு நடந்தோ மிதிவண்டியிலோ செல்லுங்கள்.
● அதிக மரக்கன்றுகளை நட முயற்சி செய்யுங்கள்.
காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வழிமுறைகள்
பின்வரும் வழிமுறைகள் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம்.
1. மாற்று ஆற்றல் மூலங்களைப் (எ.கா. சூரிய ஆற்றல்) பயன்படுத்த வேண்டும்.
2. தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் காற்றில் கலப்பதைத் தடுக்க காற்று வடிகட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.
3. மோட்டார் வாகனங்களுக்கான புகை உமிழ்வு சோதனையை கட்டாயமாக்க வேண்டும்.
4. கார்பண் டைஆக்சைடை உறிஞ்சுவதற்கு அதிகமான மரங்களை நட வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா
சூரிய சக்தி, அணுசக்தி, நீர்மின்சக்தி, அலை ஆற்றல், புவிவெப்ப சக்தி, காற்று ஆற்றல், உயிர் எரிபொருள் மற்றும் ஹைட்ரஜன் வாயு போன்றவை ஆற்றலின் மாற்று மூலங்கள் ஆகும்
செயல்பாடு
காற்று மாசுபாட்டின் விளைவுகள் குறித்த விளம்பர சொற்றொடர்களை எழுதி காட்சிக்கு ஒட்டவும்.
விடை:
1. உலகனைத்திற்கும் ஒரு தாய் மடியாம் புவி இயற்கையை காப்போம்.
2. மரத்தின் சேவை நமக்கு தேவை.
3. இன்று காற்று மாசுபாடு நாளை நுரையீரல் அழிபாடு.
4. மரம் வளர்ப்போம் தூய காற்று சுவாசிப்போம்.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. காற்று ஒரு —————
(அ) கலவை
(ஆ) சேர்மம்
(இ) கூட்டு
[விடை : (அ) கலவை]
2. காற்றில் ஆக்சிஜன் ———– சதவீதம் உள்ளது.
(அ) 21
(ஆ) 78
இ) 1
[விடை : (அ) 21]
3. சில தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ——— உள்ளது.
(அ) ஆக்சிஜன்
(ஆ) நைட்ரஜன்
(இ) நியான்
[விடை : (ஆ) நைட்ரஜன்]
4. காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம்
(அ) கழிவு
(ஆ) புகை
(இ) நீராவி
[விடை : (ஆ) புகை]
II. நான் யார்?
(மிதிவண்டி, கார்பன் டைஆக்சைடு, காற்று, மரம்)
1. நான் வாயுக்களின் கலவை.
விடை : காற்று
2. நான் உங்களுக்கு ஆக்சிஜனைத் தருகிறேன்.
விடை : மரம்
3. நான் எரிவதற்கு உதவி செய்பவன் அல்ல
விடை : கார்பன் டைஆக்சைடு
4. என் மீது சவாரி செய்வதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம்.
விடை : மிதிவண்டி
III. சரியா தவறா என எழுதுக.
1. தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் தேவை. [சரி]
2. காற்றில் ஆக்சிஜன் வாயு மட்டுமே உள்ளது. [தவறு]
3. பொருள்களை எரிக்க ஆர்கான் வாயு பயன்படுகிறது. [தவறு]
4. கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்கள் உடல் நலத்திற்குத் தீங்கானவை. [சரி]
IV. பொருத்துக.
1. நைட்ரஜன் – காற்று மாசுபாடு
2. பலூன் – புகை மற்றும் மூடுபனி
3. புகை – 78%
4. நுரையீரல் – காற்று
விடை:
1. நைட்ரஜன் – 78%
2. பலூன் – காற்று
3. புகை – காற்று மாசுபாடு
4. நுரையீரல் – புகை மற்றும் மூடுபனி
V. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. காற்று என்பது பல ——– கலவையாகும்
விடை : வாயுக்களின்
2. காற்றில் ———— % அளவு கார்பன் டைஆக்சைடு உள்ளது.
விடை : 0.04%
3. நாம் —————- வாயுவை உள்ளிழுக்கிறோம்.
விடை: ஆக்ஸிஜன்
4. ————- வாயு தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
விடை: கார்பன் டை ஆக்சைடு
VI. சுருக்கமாக விடையளி.
1. நமது அன்றாட வாழ்வில் காற்றின் முக்கியத்துவம் என்ன?
விடை:
மழையை உருவாக்குவதற்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசிப்பதற்கும் காற்று அவசியமானது.
2. காற்றின் கூறுகள் யாவை?
விடை:
ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, நீராவி
3. காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
உலக வெப்பமயமாதல், பனிப்புகை உருவாக்கம், அமில மழை உருவாக்கம், ஏரோசால் உருவாக்கம், ஓசோன் குறைதல்
4. ஆக்சிஜனின் பயன்கள் யாவை?
விடை:
சுவாசித்தல், எரிதல், உலோகங்களை உருக்கி இணைத்தல் ஆகியவை ஆக்ஸிஜனின் பயன்கள் ஆகும்.
VII. விரிவாக விடையளி.
1. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வழிமுறைகள் யாவை?
விடை:
● காற்று ஆற்றல் ஆதாரத்தை (எ.கா. சூரிய ஆற்றல்) பயன்படுத்த வேண்டும்.
● தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் காற்றில் கலப்பதைத் தடுக்க காற்று வடிகட்டிகளை பயன்படுத்தவேண்டும்.
● மோட்டார் வாகனங்களின் சான்றிதழ் மற்றும் புகை உமிழ்வு சோதனையினை செயல்படுத்தப்பட வேண்டும்.
● கார்பன் டைஆக்சைடை உறிஞ்சுவதற்கு அதிகமான மரங்களை நட்வேண்டும்.
2. காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள் யாவை?
விடை:
● சுவாச நோய்கள். எ.கா. காய்ச்சல், காசநோய்
● இருதய இரத்தநாள பாதிப்பு
● சோர்வு, தலைவலி மற்றும் பதட்டம்
● நரம்பு மண்டல பாதிப்பு
3. கார்பன் டைஆக்சைடின் பயன்களை எழுதுக.
விடை:
● ஒளிச்சேர்க்கையில் பயன்படுகிறது.
● தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
● குளிர்சாதனப் பெட்டிகளில் உலர் பனிக்கட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
● நெகிழி மற்றும் பலபடிமம் (Polymer) தயாரிக்கப் பயன்படுகிறது.
செய்து மகிழ்வோம்
காலியான நெகிழி தண்ணீர்ப்பாட்டிலின் மூடியில் ஒரு சிறு துளையிட்டு, அம்மூடியால் பாட்டிலை இறுக்கமாக மூடவும். அம்மூடி உங்கள் முகத்தின் அருகே இருக்கும் வகையில் வைத்து பாட்டிலின் மையத்தில் உங்கள் கையால் அழுத்தவும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
விடை:
காற்று வேகமாக வெளிவருவதை உணரமுடியும்.
முயல்வோம்
காற்று/வாயு உள்ள பொருள்களை (✔) குறியிடுக
முயல்வோம்
எவற்றிலிருந்து நீராவி வெளிவரும்? (✔) குறியிடுக.
நிரப்புவோம்
காற்றில் இருக்கும் வாயுக்களின் சதவீதத்தை எழுதுக.
விவாதிப்போம்
சில பல்பொருள் அங்காடிகளில், நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட பெரிய பலூன்கள் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதற்கான காரணத்தை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுக.
விடை:
நைட்ரஜன், காற்றை விட சிறிது லேசான, மந்தமான வாயுவாகும். எனவே பலூன் அதிக உயரத்தில் பறக்கத் தேவையில்லாதபோது நைட்ரஜன் அதில் பயன்படுத்தப்படுகிறது.
முயல்வோம்
பின்வருவனவற்றை வகைப்படுத்துக.
(நாய், பூனை, தென்னை மரம், குரங்கு, கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி)
செயல்பாடு
உங்கள் வீடு / பள்ளியின் ஜன்னல் வழியாக நுழையும் சூரிய ஒளிக் கதிர்களைப் பாருங்கள். மிகச்சிறிய தூசித் துகள்கள் காற்றில் நகர்வதைப் பார்க்க முடியும். நாம் இதேபோல இருளில் மின் விளக்கு ஒளியின் உதவியுடன் இதைப் பார்க்க முடியும்.
முயல்வோம்
புவி வெப்பமயமாதலுக்குக் காரணமானவற்றை (✔) குறிப்பிடுக.
முயல்வோம்
● அருகிலுள்ள இடங்களுக்கு நடந்தோ மிதிவண்டியிலோ செல்லுங்கள்.
● அதிக மரக்கன்றுகளை நட முயற்சி செய்யுங்கள்.
செயல்பாடு
காற்று மாசுபாட்டின் விளைவுகள் குறித்த விளம்பர சொற்றொடர்களை எழுதி காட்சிக்கு ஒட்டவும்.
விடை:
1. உலகனைத்திற்கும் ஒரு தாய் மடியாம் புவி இயற்கையை காப்போம்.
2. மரத்தின் சேவை நமக்கு தேவை.
3. இன்று காற்று மாசுபாடு நாளை நுரையீரல் அழிபாடு.
4. மரம் வளர்ப்போம் தூய காற்று சுவாசிப்போம்.