அறிவியல் : பருவம் 2 அலகு 3 : தாவரங்கள்
அலகு 3
தாவரங்கள்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ இலைகளின் பாகங்களையும் அவற்றின் பணிகளையும் பட்டியலிடுதல்.
❖ ஒளிச்சேர்க்கையின் செயல்முறையை விளக்குதல்
❖ தாவரங்கள் முதல்நிலை உற்பத்தியாளர்கள் என்பதனை விவரித்தல்.
❖ மலரின் பாகங்களை விவரித்தல்.
❖ பச்சையம் உள்ள மற்றும் பச்சையம் அற்ற தாவரங்களைப் பற்றி அறிதல்.
❖ அழகுத் தாவரங்களையும் அவற்றின் பங்கினையும் பட்டியலிடுதல்
❖ தாவரங்களின் உண்ணக்கூடிய பல்வேறு பகுதிகளை அடையாளம் காணுதல்.
அறிமுகம்
அனைத்து உயிரினங்களும் உணவை உட்கொள்கின்றன. உயிரினங்களின் வளர்ச்சிக்கும் அவற்றின் அன்றாடச் செயல்பாட்டிற்கும் உணவு அவசியமாகிறது. விலங்குகள் தமக்குத் தேவையான உணவைத் தேடி உண்பதைக் காண்கிறோம். ஆனால் தாவரங்கள் தங்கள் உணவை எவ்வாறு பெறுகின்றன என்பதனை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? இலைகளில் இருக்கும் பச்சையம் எனும் நிறமியின் உதவியுடன் தாவரங்கள் தங்கள் உணவைத் தாங்களே உற்பத்தி செய்கின்றன. மனிதர்களும் விலங்குகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உணவுக்காகத் தாவரங்களைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. இத்தகைய தாவரங்களைப் பற்றி இப்பாடத்தில் மேலும் அறிந்து கொள்வோம்.
I. இலையின் பாகங்கள்
இலைகள் வேறுபட்ட வடிவம் மற்றும் அளவுகளையும், பல்வேறு பாகங்களையும் கொண்டுள்ளன. எனினும், பெரும்பாலான இலைகள் பொதுவான சில அடிப்படையான பாகங்களைப் பெற்றுள்ளன.
இலைத்தாள் : இது இலையின் பரந்த தட்டையான பகுதியாகும் (லாமினா).
இலை நுனி : இது இலையின் முனைப் பகுதியாகும்.
மைய நரம்பு : இலையின் நடுவில் மைய நரம்பு காணப்படும்.
நரம்புகள் : இலை நரம்புகள் மைய நரம்பிலிருந்து கிளைகளாகப் பிரிகின்றன. அவை நீர் மற்றும் தாது உப்புகளைக் கொண்டு செல்லும் வெற்றுக்குழாய்களாக செயல்படுகின்றன.
இலைக்காம்பு : இலைக்காம்பானது இலையை முதன்மைத் தண்டுப் பகுதியுடன் இணைக்கிறது.
இலைத்துளைகள் (Stomata)
இலைத்துளைகள் என்பவை இலையில் காணப்படும் சிறிய துளைகளாகும். இவை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் காணப்படும் அத்துளைகளின் வழியாக காற்று உட்புறமும் வெளிப்புறமும் செல்கின்றது. இலைத்துளைகள் தாவரங்களின் சுவாசித்தலுக்கும் வாயுப்பரிமாற்றத்திற்கும் உதவுகின்றன.
.
1. இலை ஓர் உணவுத் தொழிற்சாலை (Leaf as a Food Factory)
தாவரங்களுக்கும் உணவு தேவைப்படுகின்றது. ஆனால் அவை உணவிற்காக மனிதர்களையோ, விலங்குகளையோ சார்ந்திருப்பதில்லை. பெரும்பான்மையான தாவரங்கள் தமக்குத் தேவையான உணவை தாங்களே தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. இதனையே ஒளிச்சேர்க்கை (Photosynthesis) என்கிறோம்.
ஒளிச்சேர்க்கை = ஒளி (சூரிய ஒளி) + சேர்க்கை (தயாரித்தல்)
ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும். தாவரங்கள் இச்செயல்முறையினை அவற்றுள் எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்கின்றன என்பதைப் பார்ப்போம்.
சிந்தித்து விடையளி
● எப்பகுதி வழியாக கார்பன் டைஆக்சைடு இலையினுள் செல்கிறது?
விடை: இலைத்துளைகள்.
● இலையின் எப்பகுதி நீரை எடுத்துச் செல்கிறது?
விடை: இலை நரம்புகள்
நீர் : நீரானது வேர்களால் உறிஞ்சப்பட்டு, தண்டுகளின் வழியாக இலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
கார்பன் டைஆக்சைடு: காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு இலைகளில் உள்ள சிறிய இலைத்துளைகளின் வழியே இலையினுள் செல்கிறது.
சூரிய ஒளி: இலைகளில் உள்ள பச்சையம் என்ற நிறமி சூரிய ஒளியினை எடுத்துக்கொள்ள உதவுகிறது. இந்த நிறமி பச்சையம் என்றழைக்கப்படுகிறது. இந்த நிறமி இருப்பதாலேயே பெரும்பாலான இலைகள் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. ஒளிச்சேர்க்கையின் மூலம் தாவரங்கள் உணவை உற்பத்தி செய்து ஆக்சிஜனை (உயிர்வளி) காற்றில் வெளியேற்றுகின்றன.
தாவரங்கள் தங்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தேவையான உணவைத் தாங்களே தயாரிப்பதனால் அவை முதன்மை உற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
முதன்மை உற்பத்தியாளர்களான தாவரங்கள் இல்லாமல் பிற உயிரினங்களால் தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே உற்பத்தி செய்ய இயலாது. மேலும் அவ்வுயிரினங்களால் வாழவும் இயலாது.
சிந்தித்து விடையளி
தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் ஏன் உயிர் வாழ முடியாது?
விடையளிப்போம்
அடைப்புக் குறியில் உள்ள எழுத்துகளை ஒழுங்குபடுத்தி, கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியிடுவது. (ன்சி ஆஜக்)
விடை: ஆக்சிஜன்
2. முதல் நிலை உற்பத்தியாளர் என்பது. (ம்ரவதா)
விடை: தாவரம்
3. இலைத்துளைகள் இலையின் ___________ பகுதியில் காணப்படுகின்றன (டிஅ).
விடை: அடி
4. உணவு தயாரித்தலில் ஈடுபடும் நிறமி. ___________ பகுதியில் காணப்படுகின்றன (சைம்ச்பய).
விடை: பச்சையம்
மேலும் அறிந்து கொள்வோம்
கள்ளிச்செடி போன்ற தாவரங்களில் இலைகள் முட்களாக மாறியுள்ளன. அவை தமது உணவினைப் பச்சைநிறத் தண்டுகள் மூலமாக தயாரித்துக் கொள்கின்றன.
செய்து கற்போம்
இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை, சூரிய ஒளி படும்படியாகவும், மற்றொன்றை சூரிய ஒளி படாமல் முழுமையாக மூடப்பட்ட பெட்டியிலும் வைக்கவும். இரண்டிலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வாருங்கள். ஒரு வாரம் சென்ற பிறகு இரு தொட்டிச் செடிகளையும் உற்று நோக்குங்கள்.
II. தாவரங்களின் வகைப்பாடு
தாவரங்கள் அவற்றின் தண்டு, ஆயுள்காலம், விதைகள், பூக்கள் மற்றும் நிறங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இப்பகுதியில் தாவரங்களின் பூக்கும் தன்மை மற்றும் நிறத்தின் அடிப்படையிலுள்ள வகைப்பாடு பற்றிப் படிப்போம்.
1. பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்கள்
பூக்கள் (மலர்கள்) என்பவை தாவரங்களின் மிக முக்கியமான பகுதியாகும். ஏனெனில் இவை தாவரங்களின் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் சிலவகைத் தாவரங்கள் மலர்களைப் பெற்றிருப்பதில்லை. இவ்வகைத் தாவரங்கள் வேறு முறைகளில் தங்கள் இனத்தைப் பெருக்கிக்கொள்கின்றன. பூக்கும் தன்மையின் அடிப்படையில் தாவரங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
❖ பூக்கும் தாவரங்கள்
❖ பூவாத் தாவரங்கள்
பூக்கும் தாவரங்கள்
மலர்களைக் கொண்டுள்ள தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுள் சில பாலின செல்களால் விதைகளை உருவாக்கி இனப்பெருக்கம் செய்கின்றன. எ.கா. மா, வேம்பு, வேர்க்கடலை, நெல்.
பூவாத் தாவரங்கள்
மலர்கள் இன்றி இனப்பெருக்கம் செய்யும் திறன் பெற்ற தாவரங்கள் பூவாத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்வகைத் தாவரங்கள் விதைகளை உற்பத்தி செய்வதில்லை. இவை ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. எ.கா. பாசிகள், பூஞ்சைகள், பெரணி.
செய்து கற்போம்
உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்களைப் பட்டியலிடுக.
2. பச்சையம் உள்ள மற்றும் பச்சையம் அற்ற தாவரங்கள்
தாவரங்களில் காணப்படும் மிக முக்கியமான நிறமி பச்சையம் (குளோரோபில்) ஆகும். தாவரங்களில் காணப்படும் நிறமியின் அடிப்படையில் அவற்றை பச்சையம் உள்ள தாவரங்கள், பச்சையம் அற்ற தாவரங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பச்சையம் உள்ள தாவரங்கள்
பச்சை நிறமிகளைக் (பச்சையம்) கொண்ட தாவரங்கள் பச்சையம் உள்ள தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பார்ப்பதற்குப் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. இவை பச்சையத்தின் உதவியுடன் தம் உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன.
இவை உணவு தயாரிப்பதற்கு வளிமண்டலத்தில் உள்ள காற்று, சூரிய ஒளி மற்றும் பச்சையம் ஆகியவற்றைச் சார்ந்துள்ளன. பச்சையம் உள்ள தாவரங்கள் பொதுவாக தற்சார்பு உயிரினங்கள் (ஆட்டோட்ரோப்கள்) என்று அழைக்கப்படுகின்றன. எ.கா. புல், நெல், பாசிகள்.
பச்சையம் அற்ற தாவரங்கள்
பச்சையம் இல்லாத மற்றும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்காத தாவரங்கள் பச்சையம் அற்ற தாவரங்கள் எனப்படுகின்றன. இவ்வகைத் தாவரங்களால் அவற்றிற்குத் தேவையான உணவைத் தயாரிக்க முடிவதில்லை. மாறாக, இத்தாவரங்கள் அவற்றின் உணவிற்காக பிற உயிரினங்களைச் சார்ந்துள்ளன. இவை பொதுவாக, பிறசார்பு உயிரினங்கள் (ஹெட்டிரோட்ரோப்கள்) என்று அழைக்கப்படுகின்றன.
செய்து கற்போம்
பச்சையமற்ற தாவரங்கள் காணப்படும் இடங்களைப் பட்டியலிடுக.
விடை:
அழுகிய மரக்கட்டை, ஈரமான ரொட்டி, விழுந்து கிடக்கும் மரங்கள், அழுகிய உணவுப் பொருள்கள்.விடையளிப்போம்
விடையளிப்போம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ———- ஒரு பூவாத் தாவரமாகும்.
விடை: பெரணி
2. தாவரங்கள் ——- மற்றும் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
விடை: மலர்
3. ———- தாவரங்கள் வாழ்வதற்கும் அவற்றின் உணவைப் பெறுவதற்கும் பிற உயிரினங்களைச் சார்ந்துள்ளன.
விடை: பச்சையமற்ற
4. ஆட்டோட்ரோப் தாவரங்கள் ———–, ———– மற்றும் பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கின்றன.
விடை: காற்று, சூரிய ஒளி
III. மலரின் பாகங்கள்
நீங்கள் பூக்களைப் பார்த்திருக்கிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் அளிக்க முயற்சிக்கவும்.
1. உங்களுக்குப் பிடித்த மலர் எது? ரோஜா
2. உங்களுக்குப் பிடித்த மலரின் நிறம் என்ன? சிவப்பு
3. அதன் வாசனை எப்படி உள்ளது?, நறுமணம் மிக்கதாக உள்ளது.
மலரில் காணப்படக்கூடிய நான்கு முக்கிய பாகங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
புல்லிவட்டம் : மலரானது மொட்டாக இருக்கும்போது அதனைப் பாதுகாக்கும் வெளிப்புற அடுக்கு புல்லிவட்டம் எனப்படும். இது பெரும்பாலும் பச்சை நிறத்தில் காணப்படும்.
அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே தேன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.
மகரந்தத்தாள் வட்டம்: மகரந்தத்தாள் வட்டம் மலரின் மையத்தில் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும்.
சூலகம்: மலரின் நடுப்பகுதியில் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.
மேலும் அறிந்து கொள்வோம்
உலகின் மிகப் பெரிய மலர் ரஃப்ளேசியா ஆகும். இந்தோனேசியாவின் மழைக்காடுகளில் இந்த அரிய வகை மலர் காணப்படுகிறது.
விடையளிப்போம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. புல்லிவட்டமானது மலர் மொட்டாக இருக்கும் போது அதனைப். பாதுகாக்கிறது
2. மகரந்தத்தாள் வட்டத்தில் மகரந்தத் துகள்கள் உள்ளன.
3. சூலகம் என்பது மலரின் பெண் பகுதியாகும்.
செய்து கற்போம்
ஆசிரியர்களுக்கான குறிப்பு
சில செம்பருத்திப் பூக்களை வகுப்பறைக்குக் கொண்டு வாருங்கள். அவற்றை மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கவும். அவற்றைக் கொண்டு மலரின் பாகங்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் உற்றுநோக்கி உணர்ந்தபின் மலரின் பாகங்கள் குறித்து அவர்கள் கூறுவதைப் பதிவிடச் சொல்லுங்கள்.
மலரின் பாகங்கள் நிறம்
பருவகால மலர்கள்
அவ்வப்போது ஏற்படும் காலநிலை மாற்றங்கள் பருவ காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக நான்கு பருவ காலங்கள் உள்ளன. அவை வசந்த காலம், கோடைக்காலம், இலையுதிர் காலம், குளிர்காலம் என்பனவாகும். பெரும்பாலான மலர்கள் குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மட்டும் பூக்கின்றன. எனவே, இவற்றைப் பருவகால மலர்கள் என்று அழைக்கிறோம்.
சிந்தித்து விடையளி
நான்கு பருவ காலங்களின் பெயர்கள் உனக்குத் தெரியுமா?
விடை : வசந்த காலம், கோடைக்காலம், இலையுதிர் காலம், குளிர்காலம்
குளிர்காலத்தில் பூக்கும் மலர்கள்
கோடை காலத்தில் பூக்கும் மலர்கள்
இலையுதிர் மற்றும் வசந்த காலத்தில் பூக்கும் மலர்கள்
மேலும் அறிந்து கொள்வோம்
கனகாம்பரம் அனைத்துப் பருவங்களிலும் மலரும்
குறிஞ்சிப் பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும்
IV. அயல் தாவரங்கள் (அழகு தாவரங்கள்)
இயல்பாக வளரும் இடத்திலிருந்து குறிப்பிட்ட காரணத்திற்காகவோ அல்லது தற்செயலாகவோ மனிதர்களால் கொண்டுவரப்பட்டு வளர்க்கப்படும் தாவரங்கள் அயல் தாவரங்கள் எனப்படும். அலங்கார நோக்கங்களுக்காக பெரும்பாலான தாவரங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அறிந்து கொள்வோம்
பார்த்தீனியம் எனப்படும் ஒருவகை களைச்செடி திடீரென புதிய இடங்களில் வளர்கிறது. இது அதன் எல்லையை விரிவுபடுத்தி பிற விளைச்சல் பகுதிகளை ஆக்கிரமித்து வளர்வதால் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. இத்தாவரத்தின் மகரந்தத் துகள்கள் இயற்கையிலேயே ஒவ்வாமை கொண்டவை. ஆகையால் இவ்வகைச் செடியைத் தொடாமல் இருப்பது நல்லது.
விடையளிப்போம்
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
1. டிசம்பர் பூ, சம்பங்கி பூ, மணிப்பூ (டியூனிப்)
விடை : சம்பங்கி பூ
2. குங்குமப்பூ, டாலியா, ரோஜா
விடை : ரோஜா
3. ரோஜா, படகு அல்லி, குரோட்டன்ஸ்
விடை : ரோஜா
செய்து கற்போம்
பல்வேறு அலங்காரத் தாவரங்களைச் சேகரித்து உங்கள் பள்ளித் தோட்டத்திலோ அல்லது வீட்டிலோ வளர்க்கவும்.
V. உணவாகும் தாவரங்கள்
மனிதர்களும் பிற விலங்குகளும் பெரும்பாலும் தாவரங்களை உணவாகப் பயன்படுத்துகின்றன. சில தாவரங்களின் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் உணவாகப் பயன்படுகின்றன. தாவரங்கள் உற்பத்தி செய்யும் கனிகளையும் நாம் உணவாக உட்கொள்கிறோம்.
தாவரங்களின் உண்ணக்கூடிய பாகங்கள்
தாவரங்களின் பெரும்பாலான பாகங்கள் உண்ணக்கூடியவையாக உள்ளன. அவற்றை நாம் உணவாக உட்கொள்கிறோம்.
உணவாகும் வேர்கள்
சில தாவரங்கள் அதிகப்படியான உணவைத் தம்முடைய வேர்களில் சேமிக்கின்றன. இதன் காரணமாக அவை பருத்த மற்றும் தடிமனான வேர்களைக் கொண்டுள்ளன. இந்த வேர்கள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உணவாகும் தண்டுகள்
சில தாவரங்கள் தண்டுப்பகுதியில் அதிகப்படியான உணவைச் சேமிக்கின்றன. நாம் உண்ணும் வெங்காயம், இஞ்சி, உருளைக்கிழங்கு போன்றவை நிலத்திற்கு அடியில் காணப்படும் தண்டுகள் ஆகும். உணவாகும் தண்டுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உணவாகும் இலைகள்
சில தாவரங்களின் இலைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில தாவரங்கள் கூடுதல் உணவை இலைகளில் சேமிக்கின்றன. முட்டைக்கோஸ் போன்ற தாவரங்களின் இலைகள் உணவாகப் பயன்படுகின்றன. அவற்றை நாம் உட்கொள்கிறோம். உணவாகும் சில இலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உணவாகும் பூக்கள்
பூக்கள் தாவரத்தின் ஒரு பகுதியாகும். பல பூக்கள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உணவாகும் பழங்கள்
பலவித பழங்கள் உணவாகப் பயன்படுகின்றன. பழங்களில் உயிர்ச்சத்துகள் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. இவை நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. பழங்களை நாம் பச்சையாக உண்ணலாம்.
உணவாகும் தானியங்கள்
பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் பயறு வகைகள் போன்றவை பொதுவாக உண்ணப்படும் விதைகளாகும். இவைகளில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
விடையளிப்போம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மலர் உணவாகப் பயன்படுகின்றது.
2. உருளைக்கிழங்கின் ——– பகுதி உணவாகப் பயன்படுகிறது.
3. ——- தாவரம் தண்டுகளில் உணவைச் சேமிக்கின்றது.
4. விதைகளில் ———- மற்றும் ——— போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும் அறிந்து கொள்வோம்
பூமியில் அதிக நாள் வாழும் உயிரினம் மரங்கள் ஆகும். மூங்கில் மரங்கள் ஒரு நாளில் 90 சென்டிமீட்டர் அளவு வளரக்கூடியவை.
செய்து கற்போம்
தாவரத்தின் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது என்பதை அறிந்து அட்டவணையை நிரப்புக.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இலையின் முனைப்பகுதி —————- ஆகும்.
அ. இலைத்தாள்
ஆ. இலை நுனி
இ மைய நரம்பு
ஈ. நரம்புகள்
[விடை : ஆ. இலை நுனி]
2. பின்வருவனவற்றுள் எது முதன்மை உற்பத்தியாளர்?
அ. தாவரம்
ஆ. விலங்கு
இ. மனிதன்
ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை
[விடை : அ. தாவரம்]
3. குளிர்காலத்தில் மட்டுமே மலரும் மலர் எது?
அ) மல்லிகை
ஆ) மணிப்பூ
இ) டிசம்பர் பூ
ஈ) கனகாம்பரம்
[விடை : இ) டிசம்பர் பூ]
4. அலங்காரத் தாவரத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ. பார்த்தீனியம்
ஆ. மாங்காய்
இ. விசிறி வாழை
ஈ. நிலக்கடலை
[விடை : இ. விசிறி வாழை]
5. பின்வருவனவற்றுள் எந்தத் தாவரத்தின் மலர் உண்ணக் கூடியது?
அ. காலிபிளவர்
இ. புதினா
ஆ. உருளைக்கிழங்கு
ஈ. முட்டைக்கோஸ்
[விடை : அ. காலிபிளவர்]
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒளிச்சேர்க்கையின் போது ——— உற்பத்தி செய்யப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது.
விடை : உணவு
2. பசுந்தாவரங்கள் ———- எனும் நிறமியைக் கொண்டுள்ளன.
விடை : பச்சையம்
3. வெங்காயம் தாவரத்தின் ———- பகுதியாகும்.
விடை : தண்டுப்
4. மலரின் ஆண் பகுதி ————— ஆகும்.
விடை : மகரந்தம்
5. உணவாகப் பயன்படும் விதைக்கு ஓர் எடுத்துக்காட்டு ————-
விடை : அரிசி
III. ஓரிரு வார்த்தையில் விடையளி.
1. தாவரத்தின் பெண் பகுதி எது?
விடை : சூலகம்
2. உணவாகப் பயன்படும் ஏதேனும் ஓர் இலையின் பெயரை எழுதுக.
விடை : கொத்தமல்லி
3. உணவில் நறுமணப் பொருளாகப் பயன்படும் பூ எது?
விடை : கிராம்பு
4. தானியங்களில் காணப்படும் சத்துகள் யாவை?
விடை : கார்போஹைட்ரேட், புரதங்கள்.
5. கோடை காலத்தில் பூக்கும் மலர்களுள் ஏதேனும் ஒன்றின் பெயரை எழுதுக.
விடை : ரோஜா
IV. சுருக்கமாக விடையளி.
1. இலையின் பாகங்களை எழுதுக.
விடை:
இலைத்தாள், இலை நுனி, மைய நரம்பு, நரம்புகள், இலைக்காம்பு.
2. ஒளிச்சேர்க்கை – வரையறு.
விடை:
ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும்.
3. அயல் தாவரங்களின் பெயர்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
விடை:
சைக்கஸ், பெரணி, குரோட்டன்ஸ், விசிறி வாழை, படகு அல்லி, கற்றாழை.
4. நிலத்திற்கு அடியில் காணப்படும் எவையேனும் இரு தண்டுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
இஞ்சி, உருளைக் கிழங்கு.
5. நாம் ஏன் பார்த்தீனியம் தாவரத்தைத் தொடக்கூடாது?
விடை:
இத்தாவரத்தின் மகரந்தத் துகள்கள் இயற்கையிலேயே ஒவ்வாமை கொண்டவை. ஆகையால் இவ்வகைச் செடியைத் தொடாமல் இருப்பது நல்லது.
V. விரிவாக விடையளி.
1. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எவையேனும் நான்கு பாகங்களைக் குறித்து அவற்றை விளக்குக.
விடை:
இலைத்தாள் : இது இலை யின் பரந்த தட்டையான பகுதியாகும் (லாமினா).
இலைநுனி : இது இலை யின் முனைப் பகுதியாகும்.
மைய நரம்பு : இலையின் நடுவில் மைய நரம்பு செல்கிறது.
நரம்புகள் : இலை நரம்புகள் மைய நரம்பிலிருந்து கிளைகளாகப் பிரிகின்றன. அவை நீர் மற்றும் தாதுக்களைக் கொண்டு செல்லும் வெற்றுக்குழாய்கள் ஆகும். .
இலைக்காம்பு : இலைக்காம்பானது இலையை முதன்மைத் தண்டுப் பகுதியுடன் இணைக்கிறது.
2. மலரின் படம் வரைந்து அதன் பாகங்களை விவரி.
விடை:
அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே தேன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.
மகரந்தத்தாள் வட்டம்: மகரந்தத்தாள் வட்டம் மலரின் மையத்தில் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும்.
சூலகம்: மலரின் நடுப்பகுதியில் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.
VI. செயல்திட்டம்
1. உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு தாவரங்களின் உண்ணக்கூடிய பாகங்களைச் சேகரித்து, அவற்றை உங்களது வகுப்பறையில் காட்சிப்படுத்தவும்.
2. மலர்கள் சிலவற்றைச் சேகரித்து அவற்றின் பாகங்கள் குறித்து உங்களது நண்பர்களுடன் கலந்துரையாடவும்.
சிந்தித்து விடையளி
● எப்பகுதி வழியாக கார்பன் டைஆக்சைடு இலையினுள் செல்கிறது?
விடை: இலைத்துளைகள்.
● இலையின் எப்பகுதி நீரை எடுத்துச் செல்கிறது?
விடை: இலை நரம்புகள்
சிந்தித்து விடையளி
தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் ஏன் உயிர் வாழ முடியாது?
விடையளிப்போம்
அடைப்புக் குறியில் உள்ள எழுத்துகளை ஒழுங்குபடுத்தி, கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியிடுவது. (ன்சி ஆஜக்)
விடை: ஆக்சிஜன்
2. முதல் நிலை உற்பத்தியாளர் என்பது. (ம்ரவதா)
விடை: தாவரம்
3. இலைத்துளைகள் இலையின் ___________ பகுதியில் காணப்படுகின்றன (டிஅ).
விடை: அடி
4. உணவு தயாரித்தலில் ஈடுபடும் நிறமி. ___________ பகுதியில் காணப்படுகின்றன (சைம்ச்பய).
விடை: பச்சையம்
செய்து கற்போம்
இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை, சூரிய ஒளி படும்படியாகவும், மற்றொன்றை சூரிய ஒளி படாமல் முழுமையாக மூடப்பட்ட பெட்டியிலும் வைக்கவும். இரண்டிலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வாருங்கள். ஒரு வாரம் சென்ற பிறகு இரு தொட்டிச் செடிகளையும் உற்று நோக்குங்கள்.
செய்து கற்போம்
உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்களைப் பட்டியலிடுக.
செய்து கற்போம்
பச்சையமற்ற தாவரங்கள் காணப்படும் இடங்களைப் பட்டியலிடுக.
விடை:
அழுகிய மரக்கட்டை, ஈரமான ரொட்டி, விழுந்து கிடக்கும் மரங்கள், அழுகிய உணவுப் பொருள்கள்.விடையளிப்போம்
விடையளிப்போம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ———- ஒரு பூவாத் தாவரமாகும்.
விடை: பெரணி
2. தாவரங்கள் ——- மற்றும் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
விடை: மலர்
3. ———- தாவரங்கள் வாழ்வதற்கும் அவற்றின் உணவைப் பெறுவதற்கும் பிற உயிரினங்களைச் சார்ந்துள்ளன.
விடை: பச்சையமற்ற
4. ஆட்டோட்ரோப் தாவரங்கள் ———–, ———– மற்றும் பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கின்றன.
விடை: காற்று, சூரிய ஒளி
விடையளிப்போம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. புல்லிவட்டமானது மலர் மொட்டாக இருக்கும் போது அதனைப். பாதுகாக்கிறது
2. மகரந்தத்தாள் வட்டத்தில் மகரந்தத் துகள்கள் உள்ளன.
3. சூலகம் என்பது மலரின் பெண் பகுதியாகும்.
செய்து கற்போம்
ஆசிரியர்களுக்கான குறிப்பு
சில செம்பருத்திப் பூக்களை வகுப்பறைக்குக் கொண்டு வாருங்கள். அவற்றை மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கவும். அவற்றைக் கொண்டு மலரின் பாகங்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் உற்றுநோக்கி உணர்ந்தபின் மலரின் பாகங்கள் குறித்து அவர்கள் கூறுவதைப் பதிவிடச் சொல்லுங்கள்.
மலரின் பாகங்கள் நிறம்
சிந்தித்து விடையளி
நான்கு பருவ காலங்களின் பெயர்கள் உனக்குத் தெரியுமா?
விடை : வசந்த காலம், கோடைக்காலம், இலையுதிர் காலம், குளிர்காலம்
மேலும் அறிந்து கொள்வோம்
கனகாம்பரம் அனைத்துப் பருவங்களிலும் மலரும்
குறிஞ்சிப் பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும்
விடையளிப்போம்
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
1. டிசம்பர் பூ, சம்பங்கி பூ, மணிப்பூ (டியூனிப்)
விடை : சம்பங்கி பூ
2. குங்குமப்பூ, டாலியா, ரோஜா
விடை : ரோஜா
3. ரோஜா, படகு அல்லி, குரோட்டன்ஸ்
விடை : ரோஜா
செய்து கற்போம்
பல்வேறு அலங்காரத் தாவரங்களைச் சேகரித்து உங்கள் பள்ளித் தோட்டத்திலோ அல்லது வீட்டிலோ வளர்க்கவும்.
விடையளிப்போம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மலர் உணவாகப் பயன்படுகின்றது.
2. உருளைக்கிழங்கின் ——– பகுதி உணவாகப் பயன்படுகிறது.
3. ——- தாவரம் தண்டுகளில் உணவைச் சேமிக்கின்றது.
4. விதைகளில் ———- மற்றும் ——— போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
செய்து கற்போம்
தாவரத்தின் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது என்பதை அறிந்து அட்டவணையை நிரப்புக.