தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்
கவிதைப்பேழை: விருந்தோம்பல்
நுழையும்முன்
தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி. அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் பாடலை அறிவோம்.
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்
ஒன்றாகு முன்றிலோ இல்*
— முன்றுறை அரையனார்
சொல்லும் பொருளும்
மாரி – மழை
வறந்திருந்த – வறண்டிருந்த
புகவா – உணவாக
மடமகள் – இளமகள்
நல்கினாள் – கொடுத்தாள்
முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
பாடலின் பொருள்
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல் என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.
நூல் வெளி
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மரம் வளர்த்தால் ——— பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
[விடை : ஆ. மாரி]
2. ‘நீருலையில்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ——
அ) நீரு + உலையில்
ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில்
ஈ) நீரு + இலையில்
[விடை : இ. நீர் + உலையில்]
3. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் —–
அ) மாரியொன்று
ஆ) மாரிஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
[விடை : அ. மாரியொன்று]
குறு வினா
1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
• அங்கவை
• சங்கவை
2. ‘பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை ’ – எவ்வாறு?
• மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
• பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
சிந்தனை வினா
தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.
ஈகை, உயிரிரக்கம், நடுவுநிலைமை, பிறருக்கென வாழ்தல், எளிய வாழ்க்கை, தூய அன்பு, உலகப்பொதுமை ஆகியன தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.
கற்பவை கற்றபின்
1. வள்ளல்கள் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
பாரி, திருமுடிக்காரி, வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி, அதியமான் நெடுமானஞ்சி ஆகியோர் கடை எழுவள்ளல்கள்.
2. விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
ஓர் ஊரில் சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவரும் அவரது குடும்பமும் தினமும் யாரேனும் ஒருவருக்காவது விருந்தோம்பல் செய்வது வழக்கம். சிவனடியாரின் குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தாலும் அதனைக்காட்டாது, விருந்தினரை உபசரிப்பர். விருந்தினர் உண்ட பின்புதான் அனைவரும் உண்ணுவர். காலையில் இருந்து மாலை வரை உணவு தயாராக இருந்தும் விருந்தினர் வராததால் யாரும் உண்ணாமல் பட்டினி கிடந்தனர். சிவனடியாரின் குழந்தைகளும் காலையில் இருந்து மாலை வரை பட்டினியாகக் கிடந்து, அழ ஆரம்பித்துவிட்டனர். இரவு நேரத்தில் பெரியவர் ஒருவர் வந்தார். ஆனால் அவரோ தான் யார்வீட்டிலும் உண்ணுவதில்லை, இரவு தங்குவதற்கு இடம்தாருங்கள், அது போதும் என்றார். சிவனடியார் தன் நிலையை உணர்த்தி, தாங்கள் உண்டால் தான். என்னுடைய குழந்தைகள் உண்ண முடியும் என்றார். குழந்தைகளுக்காக அந்தப் பெரியவரும் சாப்பிட்டார். பிறகு அனைவரும் உண்டனர்.