தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்
வாழ்வியல்: திருக்குறள்
கல்வி
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள் : கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும். கற்றபின் கற்ற வழியில் நடக்க வேண்டும்.
2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
பொருள் : எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை.
3. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.*
பொருள் : தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும். அதுபோல் கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு அறிவு வளரும்.
4. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
பொருள் : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை.
தெரிந்து செயல்வகை
5. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
பொருள் : செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.
6. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.*
பொருள் : எந்தச் செயலையும் நன்கு சிந்தித்த பின் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
4. நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.
பொருள் : நாம் ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.
சுற்றந்தழால்
1. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள.
பொருள் : காகம் தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும். அத்தகைய பண்பு உடையவர்களிடமே செல்வமும் சேரும்.
மடியின்மை
1. மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
பொருள் : தம் குடியைச் சிறப்புடைய குடியாகச் செய்ய விரும்புபவர், சோம்பலைத் துன்பமாகக் கருதி முயற்சியோடு வாழ்தல் வேண்டும்.
இடுக்கண் அழியாமை
1. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.*
பொருள் : துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.
திருக்குறள்
40. கல்வி
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
2. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கணஎன்ப வாழும் உயிர்க்கு.
3. கண்உடையர் என்பவர் கற்றார் முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர்.
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
6. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
9. தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
47. தெரிந்து செயல் வகை
1. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
2. தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
3. ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
4. தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
5. வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.
6. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
7. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
8. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
9. நன்றுஆற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.
10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
53. சுற்றந்தழால்
1. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
2. விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்.
3. அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் தற்று.
4. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
5. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
6. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
7. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
9. தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
10. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கௌல்.
61. மடியின்மை
1. குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாயந்து கெடும்.
2. மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
3. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
4. குடி மடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
5. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
6. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
7. இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
8. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
9. குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும்.
10. மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.
63. இடுக்கண் அழியாமை
1. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதொப்பது இல்.
2. வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
3. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
4. மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
5. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.
6. அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்.
7. இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
8. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
9. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
10. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையுஞ் சி்றப்பு.
வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும். அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளின் 50 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்காக அல்ல.
திருக்குறள் கருத்துகளை மாணவர்களிடையே பரப்புவதற்கான வழிகாட்டுதல்கள்
• நாள் தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் திருக்குறளைப் பொருளுடன் கூறலாம்.
• வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தலாம்.
• இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகளைக் கூறலாம்.
• திருக்குறள் கருத்துகளை விளக்கும் நாடகங்களை நடத்தச் செய்யலாம்.
• திருக்குறள் கருத்துகளை விளக்கும் ஓவியப் போட்டியை நடத்தலாம்.
• குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து வினாடி வினா நடத்தலாம்.
• சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் கருத்துகளை விளக்கலாம்.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ________ தீமை உண்டாக்கும்.
அ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ) செய்யத் தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்
[விடை : இ. செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்]
2. தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ________ இருக்கக் கூடாது.
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு
இ) ஏழ்மை
ஈ) செல்வம்
[விடை : அ. சோம்பல்]
3. ‘எழுத்தென்ப்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) எழுத்து + தென்ப
ஆ) எழுத்து + என்ப
இ) எழுத்து + இன்ப
ஈ) எழுத் + தென்ப
[விடை : ஆ. எழுத்து + என்ப]
4. ‘கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) கரைந்து + இன்னும்
ஆ) கரை + துண்ணும்
இ) கரைந்து + உண்ணும்
ஈ) கரை + உண்ணும்
[விடை : இ. கரைந்து + உண்ணும்]
5. கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) கற்றனைத்தூறும்
ஆ) கற்றனைதூறும்
இ) கற்றனைத்தீரும்
ஈ) கற்றனைத்தோறும்
[விடை : அ. கற்றனைத்தூறும்)
பொருத்துக.
வினா
1. கற்கும் முறை – செயல்
2. உயிர்க்குக் கண்கள் – காகம்
3. விழுச்செல்வம் – பிழையில்லாமல் கற்றல்
4. எண்ணித் துணிக – எண்ணும் எழுத்தும்
5. கரவா கரைந்துண்ணும் – கல்வி
விடை
1. கற்கும் முறை – பிழையில்லாமல் கற்றல்
2. உயிர்க்குக் கண்கள் – எண்ணும் எழுத்தும்
3. விழுச்செல்வம் – கல்வி
4. எண்ணித் துணிக – செயல்
5. கரவா கரைந்துண்ணும் – காகம்
குறுவினா
1. ‘நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்’ எப்போது?
நாம் ஒருவருடைய பண்பை அறிந்த அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.
2. தீமை உண்டாக்கும் இரண்டு செயல்கள் யாவை?
செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.
3. துன்பத்தில் துன்பம் உண்டாக்குபவர் யார்?
துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.
பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.
விடை :
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
விடை :
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.