தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்
இலக்கணம்: தொழிற்பெயர்
உழவர் செய்யும் தொழில் உழுதல். தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல். இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன. இவ்வாறு ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
(எ.கா.) படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல் , பொறுத்தல்
தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என வகைப்படுத்துவர்.
விகுதி பெற்ற தொழிற்பெயர்
நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை ஆகிய பெயர்களைக் கவனியுங்கள். இவற்றில் நட, உண், வாழ் ஆகிய வினைப்பகுதிகள் தல், அல், வு, கை ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.
இவ்வாறு வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.
(எ.கா.)
தருதல் – தல்
கூறல் – அல்
ஆட்டம் – அம்
விலை – ஐ
வருகை – கை
பார்வை – வை
போக்கு – கு
நட்பு – பு
மறைவு – வு
மறதி – தி
உணர்ச்சி – சி
கல்வி – வி
செய்யாமை – மை
முதனிலைத் தொழிற்பெயர்
வானில் இடி இடித்தது
சோறு கொதி வந்தது
இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர். முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா.)
செல்லமாக ஓர் அடி அடித்தான்
அறிஞர் அண்ணா தம் பேச்சால் புகழ் பெற்றார்
இவற்றில் அடிக்கோடிட்ட சொற்கள் விகுதி பெறாமல் தம்பொருளை உணர்த்துகின்றன.
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
உணவின் சூடு குறையவில்லை .
இத்தொடர்களில் பேறு, சூடு ஆகிய சொற்களைக் கவனியுங்கள். பெறு, சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு, பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன. இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா.) விடு – வீடு, மின் – மீன், கொள் – கோள், உடன்படு – உடன்பாடு
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற் பெயர் எது?
அ) எழுது
ஆ) பாடு
இ) படித்தல்
ஈ) நடி
[விடை : இ. படித்தல்]
2. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற் பெயர் எது?
அ) ஊறு
ஆ) நடு
இ) விழு
ஈ) எழுதல்
[விடை : ஆ. நடு]
பொருத்துக.
வினா :
1. ஒட்டகம் – முதனிலைத் தொழிற்பெயர்
2. பிடி – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
3. சூடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்
விடை :
1. ஒட்டகம் – விகுதி பெற்ற தொழிற்பெயர்
2. பிடி – முதனிலைத் தொழிற்பெயர்
3. சூடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
சிறு வினா
1. வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.
வளர்தல், பேசுதல் – இவை விகுதி பெற்ற தொழிற் பெயர்கள். ‘தல்’ என்ற தொழிற்பெயர் விகுதி பெற்று வருவதால் இஃது விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் ஆயிற்று.
2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
முதனிலைத் திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
சான்று : விடு – வீடு
மொழியை ஆழ்வோம்
கேட்க.
கோட்டோவியம் பற்றிய செய்திகளை உங்கள் பள்ளி ஓவிய ஆசிரியரிடம் கேட்டு அறிக.
பேசுக.
நீங்கள் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றி வகுப்பறையில் பேசுக.
வணக்கம். நான் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றிப் பேசுகின்றேன். சித்தன்னவாசல் ஓவியங்களையும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சித்தன்னவாசல் ஓவியங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவையாக, உண்மையான காட்சிகள் போல காட்சி அளிக்கின்றன. ஓவியங்களா உயிருள்ள பொருளா என்று வியக்கும் வகையில் உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கல்சிற்பங்கள் அருமையானது. பஞ்சபாண்டவர் ரதம், நந்தி ஆகியன கலை நயத்துடனும் நவீன வேலைப்பாடுகள் அமைந்து காணப்படுகின்றது. நம் கலையறிவுக்குச் சான்றாக இது உள்ளது. அனைவரும் அதனைக் கண்டு களிப்போம். நன்றி.
கவிதையை நிறைவு செய்க.
வானும் நிலவும் அழகு
வயலும் பயிரும் அழகு
கடலும் அலையும் அழகு
காற்றும் குளிரும் அழகு.
படம் உணர்த்தும் கருத்தை ஐந்து வரிகளில் எழுதுக.
ஒன்று கூடுவோம் நாம் ஒன்று கூடுவோம்
பச்சை மரங்களைக் காப்போம்
பசுமையை நேசிப்போம்! சுவாசிப்போம்!
இனியொரு விதி செய்வோம்
இயற்கையைப் போற்றவே!
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் உருவாக்குக.
(ஓவியக்கலை, இசை, கட்டடக்கலை, வண்ணங்கள்)
(எ.கா.) : ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.
நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை.
1. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை.
எங்கும் தமிழ் இசை.
2. கட்டடக்கலையில் தமிழர் சிறந்திருந்தனர்.
சிறந்த கலை கட்டடக்கலை.
3. வண்ணங்கள் தீட்டி ஓவியம் வரைவோம்.
மயில் தோகையில் எண்ணற்ற வண்ணங்கள்.
சொல்லக் கேட்டு எழுதுக.
1. கலைப்படைப்பு மானுடத்தைப் பேச வேண்டும்.
2. இருபொருள் தருமாறு பாடப்படுவது இரட்டுற மொழிதல் ஆகும்.
3. வண்ணங்கள் பயன்படுத்தாமல் வரைவது புனையா ஓவியம்.
4. ஆற்று மணலுடன் சுண்ணாம்பைச் சேர்த்துச் சுவரைச் சமப்படுத்துவர்.
5. வள்ளுவர் கோட்டத்தின் அமைப்பு திருவாரூர்த் தேர் போன்றது.
இடைச்சொல் ‘ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.
(எ.கா.) வீடு கட்டினான் – வீடு + ஐ + கட்டினான் = வீட்டைக் கட்டினான்
1. கடல் பார்த்தான் – கடல் + ஐ + பார்த்தான் = கடலைப் பார்த்தான்
2. புல் தின்றது – புல் + ஐ + தின்றது = புல்லைத் தின்றது
3. கதவு தட்டும் ஓசை – கதவு + ஐ + தட்டும் + ஓசை = கதவைத் தட்டும் ஓசை
4. பாடல் பாடினாள் – பாடல் + ஐ + பாடினாள் = பாடலைப் பாடினாள்
5. அறம் கூறினார் – அறம் + ஐ + கூறினார் = அறத்தைக் கூறினார்.
கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
தலைப்பு : எங்கள் ஊர்
முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம் – தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை
முன்னுரை :
அழகான நகரம், அமைதியான நகரம் எங்கள் ஈரோடு ஆகும். எண்ணற்ற வளங்கள் பொங்கும் இடம் ஈரோடு. மனிதநேயம் தவழும் நகர் எங்கள் ஈரோடு. அச்சிறப்புமிகு நகர் பற்றிக் காண்போம்.
அமைவிடம் :
கரூர், சேலம், கோவை ஆகியற்றுக் கிடையே ஈரோடு நகர் அமைந்துள்ளது. காடுகளும் வயல்களும் சூழ்ந்து நடுவினில் இயற்கை அழகு தவழும் வண்ணம் ஈரோடு அமைந்துள்ளது. காவிரி ஆறு பாயும் புண்ணிய பூமி ஈரோடு ஆகும்.
பெயர்க்காரணம் :
இரண்டு ஓடைகள் ஓடுவதால் ஈரோடை எனப்பெயர் பெற்றது.இதுவே காலப்போக்கில் மருவி ஈரோடு என்று ஆனது. பிரம்மா ஐந்தாவது தலையைத் துண்டித்த போது அந்த மண்டையோடு சிவபெருமானோடு ஒட்டிக்கொண்டு பிரம்ம தோசம் பிடித்தது. அவர் தோசம் போக இந்தியா முழுவதும் நீராடினார். ஈரோட்டில் வந்து நீராடிய போது மண்டை ஓடு மூன்றாகப் பிரிந்து மூன்று இடத்தில் விழுந்தது. ஈர் (இறுதி) ஓடு விழுந்த இடம் ஈரோடு ஆயிற்று என்பர்.
தொழில்கள் :
வேளாண்மை, கைத்தறி, ஜமக்காளம், ஆடை ஆயத்தம் ஆகிய தொழில்கள் ஈரோட்டில் சிறந்து விளங்கிவருகின்றது.
சிறப்புமிகு இடங்கள் :
பெரியார் – அண்ணா நினைவகம், திண்டல் முருகன் கோயில், பிரப் தேவாலயம், பள்ளிபாளையம் தர்கா, பண்ணாரி அம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா ஆகியன ஈரேட்டில் சிறப்புமிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்
மாரியம்மன், பண்ணாரி அம்மன், பாரியூர் அம்மன், அறச்சாலை அம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். திரளான பக்தர்கள் இதில் கலந்து கொள்வர்.
மக்கள் ஒற்றுமை :
இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே இருந்துவருகின்றோம். ஒரே பகுதியில் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் ஆகிய மூன்றும் அமைந்து எங்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றது.
முடிவுரை :
நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் புதிரைப்படித்து விடையைக் கண்டறிக.
1. நான் இனிமை தரும் இசைக் கருவி.
எனது பெயர் ஆறு எழுத்துகளை உடையது.
அதில் இறுதி நான்கு எழுத்துகள் விலை உயர்ந்த ஒரு உலோகத்தைக் குறிக்கும்.
முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் விலங்கின் வேறு பெயர் கிடைக்கும். நான் யார்?
விடை : மிருதங்கம்
2. நான் ஒரு காற்றுக் கருவி.
நான் புல் வகையைச் சேர்ந்த தாவரத்திலிருந்து உருவாக்கப்படுகிறேன்.
எனது பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டது.
முதல் இரண்டு எழுத்துகள் ஒரு தாவர வகையைக் குறிக்கும்.
நான் யார்?
விடை : புல்லாங்குழல்
பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.
சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலை விதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.
சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது.
ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும் போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.
வினாக்கள்:
1. சாலையின் எந்தப் பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்?
சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும்.
2. விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக் குறிக்கும்?
இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.
3. எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை?
இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.
4. ஒருவழிப் பாதை எனப்படுவது யாது?
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரே சாலையில் இரு கூறாகப் பிரிக்காமல், வாகனங்கள் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ அமைக்கப்பட்டுள்ளவை ஒருவழிப்பாதை ஆகும்.
5. வாகனங்களைப் பின் தொடர்வதற்கான முறையைக்கூறு.
வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.
நிற்க அதற்குத் தக…
என் பொறுப்புகள்……
1. நம் நாட்டுத் தொன்மைக் கலைகளை மதிப்பேன்.
2. கலைகளில் ஒன்றையேனும் கற்றுக் கொள்வேன்.
3. கலைச் சின்னங்களைப் பாதுகாப்பேன்.
4. தமிழகச் சுற்றுலாச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்குச் சென்று தமிழர்தம் கலைத்திறனை அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
படைப்பாளர் – creator
சிற்பம் – sculpture
கலைஞர் – artist
கல்வெட்டு – inscriptions
கையெழுத்துப்படி – manuscripts
அழகியல் – aesthetics
தூரிகை – brush
கருத்துப்படம் – cartoon
குகை ஓவியங்கள் – cave paintings
நவீன ஓவியம் – modern art
இணையத்தில் காண்க
ஓவியம், சிற்பம், இசை, நடனம் உள்ளிட்ட கலைகளில் புகழ்பெற்றோரின் பெயர்களை இணையத்தில் தேடி எழுதுக.