தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்
உரைநடை : வாரித் தந்த வள்ளல்
இயல் ஒன்று
உரைநடை
வாரித் தந்த வள்ளல்
குழந்தைகள் அழுதபடி
அம்மா பசிக்கிறது, சோறு போடுங்கள்
நங்காய்! குழந்தைகள் ஏன் அழுகின்றனர்? உணவு கொடுக்கக்கூடாதா?
இருந்தால் ‘கொடுத்திருப்பேனே! தானியங்களும் மாவும் நேற்றே தீர்ந்து போய்விட்டன.
இந்த நிலைக்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனே, என் செய்வேன்?
ஐயனே! நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?
சொல் நங்காட் நீ சொல்லும் யோசனையால் நம் குழந்தைகள் பசி நீங்கட்டும்.
கொல்லி மலை அரசர் வல்வில் ஓரியைச் சென்று கண்டு வாருங்கள்! அள்ளிக் கொடுக்கும் வள்ளல் என்று எல்லாரும் கூறுகிறார்களே!
ஆம் நானும் கேள்விப்பட்டுள்ளேன். வீரத்திலும் கொடைத் திறத்திலும் சிறந்தவர் இப்பொழுதே செல்கிறேன்.
சென்று வாருங்கள்!’ தாங்கள் வரும் வழிநோக்கி எங்கள் விழிகள் பார்த்திருக்கும்
வாழிய, மன்னா! இசைப் பாணர் ஒருவர் உங்களைக் காண வாயிலில் காத்திருக்கிறார்.
தடுக்காதே! அவரை விரைந்து உள்ளே அனுப்புக!
கொல்லிமலைக் கொற்றவா!” கொடைத் திறத்தின் கோமகனே! நீவிர் வாழ்க! உமது படை வாழ்க
தரணியெங்கும் தமிழ் இசையின் புகழ் பரப்பும் பாணரே! வருக! வளரட்டும் தமிழ்த் தொண்டு! எம்மை நாடி வந்த காரணம்?
வள்ளலே! வறுமை காரணமாக எமது வீட்டின் அடுப்பில் பூனை உறங்குகிறது.
தமிழ் பரப்பும் பாணரே! உமது நிலை என்னை வருத்தமுறச் செய்கிறது.
உணவின்றி என் இல்லாள் மெலிந்து கிடக்கிறாள். பிள்ளைகளோ காற்றை உண்டு கண்ணில் உயிரைத் தேக்கியபடி இருக்கின்றனர்.
கலக்கம் வேண்டாம் பாணரே! உம் வறுமையைப் போக்குவது, என் பொறுப்பு.
மரம்பழுத்து எல்லாருக்கும் பயன் தருவது போல, எம் துயர் துடைத்து உதவுங்கள்
ஆகட்டும் பாணரே!” அமைச்சரே! வாருங்கள்! இப்பாணரின் குடும்பம் பல தலைமுறைகள் வாழ வழி செய்திடுங்கள்
“அப்படியே அரசே! தங்கள் ஆணைப்படி செய்கிறோம்.
பொற்காசுகளை அள்ளித்தருக! அணி மணிகளும் களிறுகளும் அனுப்பிடுக, பற்பல பரிசுகளைப் பேழைகளில நிறைத்து அனுப்பிடுக
தங்கள் ஆணைப்படியே அனைத்தையும் அனுப்பி வைக்கிறேன் அரசே!
கற்ற கல்வி அறியாமை’ அகற்றுதல் போல, உற்ற துயர் துடைக்கும் வள்ளலே! உங்களின் குன்றாப்புகழ் கொடைப் பண்பு ஓங்குக! வாழ்க! வாழ்க! நீவிர் வாழ்க!
போய் வாரும் பாணரே!” நீரும் உமது சுற்றத்தாரும் குறைவின்றி நீடுழி வாழ்க!
படித்து அறிக
சொற்போர் மன்றம்
கல்வியா? செல்வமா? வீரமா?
இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கம்மங்காடு
நேரம்: பிற்பகல் 3.00 மணி
நாள் : 10.01.2020
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து – மாணவ, மாணவியர்
வரவேற்புரை – தமிழாசிரியர்
தலைமை – தலைமை ஆசிரியர்
சிறப்பு விருந்தினர் – ‘சொற்போர் சுடர்’ திரு. நா. எழிலன்
பங்கேற்பாளர்கள் – செல்வன் அ. சுரேஷ், ஐந்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு செல்வி பி. அகிலா, ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு செல்வி ஏ. கம்ருன்னிஷா, ஐந்தாம் வகுப்பு ‘இ’ பிரிவு
நன்றியுரை – திருமதி ஆ. வளர்மதி, சமூக ஆர்வலர்
நாட்டுப்பண்
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. பொற்காசு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .
அ) பொற் + காசு
ஆ) பொல் + காசு
இ) பொன் + காசு
ஈ) பொ + காசு
[விடை : இ) பொன் + காசு]
2. கொடைத்திறம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கொடை + திறம்
ஆ) கோடை + திறம்
இ) கொட + திறம்
ஈ) கொடு + திறம்
[விடை : அ) கொடை + திறம்]
3. களிறு என்பது ——— யைக்குறிக்கும்
அ) குதிரை
ஆ) கழுதை
இ) யானை
ஈ) ஒட்டகம்
[விடை : இ) யானை]
4. தரணி இச்சொல்லின் பொருள்
அ) மலை
ஆ) உலகம்
இ) காடு
ஈ) வானம்
[விடை : ஆ) உலகம்]
5. ‘சோறு‘ இச்சொல்லுடன் பொருந்தாதது.
அ) உணவு
ஆ) அழுது
இ) அன்னம்
ஈ) கல்
[விடை : ஈ) கல்]
ஆ. பொருத்துக
1. பேழை – வாசல்
2. மாரி – கடன்
3. வாயில் – பெட்டி
4. ஆணை – மழை
5. இரவல் – கட்டளை
விடை
1. பேழை – பெட்டி
2. மாரி – மழை
3. வாயில் – வாசல்
4. ஆணை – கட்டளை
5. இரவல் – கடன்
இ. வினாக்களுக்கு விடையளிக்க,
1. பாணனின் குழந்தைகள் பசியால் வாடக் காரணம் என்ன?
விடை
பாணனின் வீட்டில் தானியங்களும் மாவும் தீர்ந்துவிட்டதால், குழந்தைகள் பசியால் வாடின.
2. வல்வில் ஓரியின் சிறந்த பண்பு யாது?
விடை
தன்னை நாடி வருபவர்களின் துயரைக் கண்டு வருத்தமுற்று உடனடியாக அவர்களின் துயர் துடைப்பவர்.
3. பரிசு பெற்ற பாணன், மன்னனை எவ்வாறு வாழ்த்தினான்?
விடை
“கற்ற கல்வி அறியாமை அகற்றுதல் போல, உற்ற துயர் துடைக்கும் வள்ளலே! உங்களின் குன்றாப் புகழ் கொடைப் பண்பு ஓங்குக! வாழ்க! வாழ்க! நீவிர் வாழ்க!” என்று பாணன் மன்னனை வாழ்த்தினான்.
4. வாரித் தந்த வள்ளல் – இப்படக்கதை மூலம் நீவிர் அறிந்து கொண்டதை எழுதுக.
விடை
“வாரித் தந்த வள்ளல்’ இப்படக் கதை மூலம் சங்க கால வள்ளல்கள், தமிழுக்குப் புகழ் சேர்க்கும் விதமாக தமிழ் பாடும் புலவர்களையும் பாணர்களையும் பரிசுப் பொருள்கள் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ உதவி செய்துள்ளனர் என்பதை அறிந்து கொண்டேன்.
ஈ. சிந்தனை வினா
வல்வில் ஓரியைப் போல் ஈகைக் குணம் உனக்கிருந்தால் நீ யாருக்கெல்லாம் உதவி செய்வாய்?
விடை
● வல்வில் ஓரியைப் போல் ஈகைக் குணம் எனக்கிருந்தால், ஆதரவற்ற முதியவர்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கெல்லாம் உதவி செய்வேன்.
● அவர்கள் சுயமாக வாழ்வதற்குத் தேவையானவற்றைச் செய்வேன்.
உ. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தான் செய்யும் வேலையில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று எண்ணுவான். சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதே அவன் ஆசை. ஒருநாள், அவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய தந்தை அங்கு வந்தார். “இந்தப் பட்டத்தைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது” எனக்கேட்டார். அதற்குக் குப்பன், “இந்த நூல் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறது என்றான்.உடனே அவன்தந்தை, பட்டத்தின்நூலை அறுத்துவிட்டார் பட்டம் தடுமாறிக் கீழே விழுந்தது. இப்பொழுது பார், வரையறைக்குட்பட்டு நூலுடன் இருக்கும்போது இந்தப் பட்டம் எவ்வளவு அழகாகப் பறந்து கொண்டிருந்தது? ஆனால், அந்த நூல்தான் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுக்கிறது என்று நீ நினைத்தாய். இப்போது என்ன ஆயிற்று? நூல் அறுந்ததும் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்துவிட்டதே! இதுபோலத்தான் நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்” என்று கூறினார்.
1. குப்பன் எந்த வகுப்பில் படிக்கிறான்?
விடை
குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.
2. பட்டத்தின் நூல் அறுந்ததும் அதன் நிலை என்னவாயிற்று?
விடை
பட்டத்தின் நூல் அறுந்ததும் அதன் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்து விட்டது.
3. இக்கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன?
விடை
நாம் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவ்வாறின்றி சுதந்திரமாய் வாழ விரும்பினால் வாழ்வில் தடுமாறுவோம்.
ஊ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கண்ணுக்கு அழகு பிறரிடம் இரக்கம் காட்டல்,
2. சிறுபஞ்ச மூலம் காரியாசான் என்பவரால் எழுதப்பட்டது.
3. வாரிக் கொடுக்கும் வள்ளல் வல்வில் ஓரி
4. நாட்டு மக்களை வருத்தாமை அரசனுக்கு அழகு
எ. பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக.
1. என்னுடைய புக் டேபிளில் உள்ளது.
என்னுடைய புத்தகம் மேசையில் உள்ளது.
2. நான் டிவியில் நியூஸ் பார்த்தேன்.
நான் தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன்
3. தை மாதம் பர்ஸ்ட் நாள் பொங்கல் பெஸ்டிவேல் கொண்டாடினான்.
தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடினான்.
4. பாலன் ஸ்நாக்ஸ் சாப்பிட்டான்.
பாலன் நொறுக்குத் தீனி சாப்பிட்டான்
ஏ. பாடலை நிறைவு செய்க
நாடு அதை நீயும் நாடு
பாடு அதன் புகழ் பாடு
விடை
ஓட்டு அதன் வறுமை ஓட்டு
கூட்டு அதன் வளம் கூட்டு
விரட்டு அதன் பகை விரட்டு
திரட்டு அதன் நிதி திரட்டு.
கற்பவை கற்றபின்
● கல்விச் செல்வமே பிற செல்வங்களைவிட நிலையானது- இக்கூற்றைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
விடை
கல்விச் செல்வமே பிற செல்வங்களைவிட நிலையானது. இக்கூற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.
திருவள்ளுவரும் ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’ என்று குறிப்பிடுகிறார்.
கல்விச்செல்வமானது கேடு இல்லாதது. ஒரு கட்டடம் கட்டினால்கூட, அக்கட்டடம் கட்டப்பட்ட தன்மையைப் பொறுத்துதான் அதன் வாழ்நாள் அறியப்படும். ஆனால் கற்ற கல்விக்கு எவ்வித அழிவுக்காலமும் இல்லை . உடலில் உயிர் இருக்கும் வரை அவருடைய கல்வியால் – உலகம் அவரை அறிந்து கொள்கிறது.
ஒருவர் பெற்ற கல்வியின் பயனாய்ப் பல பொருள்களைப் பெற்றிருந்தாலும், பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவையெல்லாம் வெள்ளம், நெருப்பு போன்ற இயற்கைச் சீற்றங்களால் அழிந்து போனாலும் அவர் கற்ற கல்வி மட்டும் அழியாது. எனவே, கல்விச் செல்வமே பிற செல்வங்களைவிட நிலையானது.
● வல்வில் ஓரி அன்பில் சிறந்தவன்-இக்கூற்றுக்கு விளக்கம் தருக.
விடை
வல்வில் ஓரி அன்பில் சிறந்தவன் ;
ஓரி தன்னை நாடி வரும் பாணர்களைப் பாடுங்கள்’ என்று சொல்லமாட்டான். வயிறார அறுசுவை உணவளிப்பான். அவர்கள் உறங்குவதற்கு மெத்தென்ற படுக்கையைக் கொடுப்பான்.
அவர்களாக இவனைப் புகழ்ந்து பாடினால் கேட்டு மகிழ்வான். தன்னைப் புகழ்ந்து பாடினாலும் பாடாவிட்டாலும் அனைவருக்கும் பரிசுப் பொருள்களை அள்ளிக் கொடுப்பான். தன் அரண்மனையில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கி ஓய்வெடுக்கலாம். அவர்களின் இன்பத்தில் இன்பம் கண்டவன். இக்காரணங்களால் வல்வில் ஓரி அன்பில் சிறந்தவன் என்பதை உணரலாம்.
● கடையெழு வள்ளல்களின் கொடைச் சிறப்பை அறிந்துகொண்டு வந்து பேசுக. படித்து அறிக
விடை
கடையெழு வள்ளல்கள் :
சங்க இலக்கியங்களில் கடையெழு வள்ளல்கள் பற்றி அறியலாம். இவர்கள் குறுநில மன்னர்கள் ஆவர். பேகன், பாரி, நள்ளி, ஓரி, காரி, ஆய், அதியமான் ஆகியோர் கடையெழு வள்ளல்கள் ஆவர்.
பேகன் :
இன்றைய மதுரை மாவட்டத்தில் உள்ள பொதினி என்ற ஊரில் ஆட்சி செலுத்தியவன் பேகன். வீரமும் கொடையும் இவனுடைய அணிகலன்கள். புலவர்களைப் போற்றி ஆதரிக்கும் பண்பாளன். ஒருநாள் தன் நாட்டின் மலை வளத்தைப் பார்க்கக் கருதி தனது பரிவாரங்களுடன் புறப்பட்டான். அப்போது வானம் கருத்து, குளிர் காற்று வீசியது.
சற்று நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறி தெரிந்தது. ஓரிடத்தில் மயில் ஒன்று தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. அதனை அவன் குளிரால் நடுங்குகிறது என எண்ணினான். அதனால் தான் போர்த்தியிருந்த விலை உயர்ந்த போர்வையை எடுத்து மயிலுக்குப் போர்த்தினான்.
தன்னை நாடி வந்தவர்களின் துயர் துடைத்தான். “மழை பாரபட்சமின்றி அனைத்து நிலத்தின் மீதும் பொழியும். அது போலவே பேகன், பயன் உண்டா, பயன் இல்லையா என்பதை ஆராயாமல் எல்லோருக்கும் கொடை கொடுத்தவன்.
பாரி :
இரண்டாவது வள்ளல் பாரி. இவன் பாண்டி நாட்டில் பறம்பு மலையை ஆண்டவன். சிறந்த கொடை வள்ளல். இவனுக்கு அங்கவை, சங்கவை என்ற இரண்டு புதல்விகள் இருந்தனர். ஒருநாள் மாலை, பாரி தனது தேரில் ஏறி மலைவளம் காணச் சென்றான்.
அவன் சென்ற வழியில் சாலையோரத்தில் ஒரு முல்லைக் கொடி படர்வதற்குப் பற்றுக்கோல் இல்லாமல் ஆடி அசைந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு வருந்திய பாரி, தன் தேரை அதன் அருகில் கொண்டு போய் நிறுத்தினான். ஆதரவற்றிருந்த முல்லைக்கொடியைத் தேர் மீது படர விட்டான். பிறகு நடந்தே அரண்மனையை அடைந்தான். ‘முல்லைக்குத் தேரீந்தவன்’ என்று புகழப்படுகிறான்.
அதியமான் நெடுமான் அஞ்சி :
மூன்றாவதாக நான் குறிப்பிடப் போவது அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றி. சங்க காலத்தில் தகடூர் நாடு என்று அழைக்கப்பட்ட நாட்டை ஆண்டவன். அதியமானுடைய சிறப்பை அறிந்த ஔவையார் அதியமானின் அவைக்கு வந்தார். வாயிற்காவலன் அதியமானிடம் ஒளவையார் வந்துள்ளதைக் கூறினான்.
அதனைச் சரியாக செவிமடுக்காத அதியமான் ஔவையாரைச் சென்று வரவேற்கவில்லை. இதனால் கோபம் கொண்ட ஒளவையார், “புலவர்கள் வறுமையில் வாடினாலும், புலமையில் குறைந்தவர்கள் அல்ல. பாடிப் பிழைத்தாலும் தன்மானம் இழக்க மாட்டார்கள்.” என்று காவலனிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்.
இதை அறிந்த அதியமான் ஒளவையாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, வரவேற்று தன் அரசவையைச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக் கொண்டான்.
அதியமான் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்குக் கொடுத்து இன்புற்றான். அக்கனியை உண்பவர் நீண்டகாலம் உயிர் வாழ்வர் என்பதை அறிந்த ஔவையார் மனம் நெகிழ்ந்து அதியமானைப் பாராட்டினார்.
தொண்டைமான் அதியமானுடன் போரிட திட்டமிட்டிருந்தார். அதனை ஒளவையார், போரினால் ஏற்படும் இழப்புகளைச் சுட்டிக்காட்டிப் போரைத் தடுத்து நிறுத்தினார்.
நள்ளி :
நான்காவதாக நான் குறிப்பிட விருப்பது நள்ளி. இவன் ஆண்ட பகுதி மதுரைக்குத் தெற்கே உள்ள தோட்டி மலையையும் அதனைச் சூழ்ந்த காடுகளையும் கொண்ட கண்டீர நாடாகும். நள்ளி தன்னை நாடி வந்தோருக்கெல்லாம் யானை, தேர் ஆகியவற்றையும் பெருஞ்செல்வத்தையும் வாரி வழங்கியவன்.
ஒரு சமயம் வறுமையால் வாடிய வன்பரணர் என்ற பெரும்புலவர் நள்ளியைக் காணச் சென்றார். களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தார். அப்போது அங்கு ஒரு வேடன் புலவரிடம் வந்து அவருடைய களைப்பு தீர இறைச்சியுணவைக் கொடுத்து உண்ணச் செய்தான்.
தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையையும் கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றிக் கொடுத்தான். அவன் சென்ற பிறகு புலவர் வழியில் வந்த வழிப்போக்கனிடம் வேடனின் அடையாளங்களைக் கூறி, “அவர் யார்?” என்று கேட்டார். அவ்வழிப்போக்கன் வேடன் வேடத்தில் வந்தவர் வள்ளல் நள்ளி என்று கூறினான். அத்தகு சிறப்புப் பெற்றவன் நள்ளி .
ஓரி :
அடுத்ததாக நான் குறிப்பிடவிருக்கும் வள்ளல் ஓரி. இவன் அழகு மிகுந்த கொல்லிமலையை ஆட்சி செய்தவன். பல போர்களில் வெற்றி பெற்றவன். தன்னை நாடி வந்தவருக்குப் பொன்னையும், தேர், யானை போன்றவற்றையும் வழங்கிய வள்ளல். வில் வித்தையில் சிறந்தவன்.
ஒருமுறை ஓரி வேட்டைக்குச் சென்றபோது ஒரு புலி சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த யானையைத் தாக்க தயாராக இருந்தது. இதைக் கண்ட ஓரி யானையைக் குறிவைத்து அம்பைத் தொடுத்தான் அந்த அம்பு யானையை வீழ்த்தி விட்டுப் புலியைக் கொன்றது.
பிறகு ஒரு புள்ளிமானையும் காட்டுப் பன்றியையும் துளைத்துவிட்டு, ஒரு முள்ளம் பன்றியைத் துளைத்தது. ஒரு புற்றுக்குள் இருந்த உடும்பைக் கொன்றது. இக்காட்சியைக் கண்ட வன்பரணர் மற்றும் உடன் இருந்தவர்களும் இசை இசைத்துப் பாடல் பாடினர். ஓரி அவர்களுக்குப் பெருஞ்செல்வமளித்து மகிழ்ந்தான்.
காரி :
அடுத்ததாக நான் குறிப்பிடும் வள்ளல் காரி. முள்ளூர் மலைநாட்டின் தலைநகரான திருக்கோயிலூரை ஆட்சி செய்வதன். இவன் பெரும் வீரன் மட்டுமல்ல, சிறந்த கொடை வள்ளலாகவும் விளங்கினான்.
மூவேந்தர்களின் நண்பனாக விளங்கியவன். அவர்களுடன் சேர்ந்து போரிடுவதன் மூலம் கிடைக்கும் பொருள்களையும் பரிசுகளையும் பிறருக்கு வாரி வழங்கிடுவான்.
ஆய் ஆண்டிரன் :
இறுதியாக நான் குறிப்பிடும் வள்ளல் ஆய் ஆண்டிரன். இவ்வள்ளல்பொதிய மலையையும் அதைச் சூழ்ந்திருந்த பகுதிகளையும் ஆண்டவன். இதன் தலைநகர் ஆயக்குடி ஆகும். சிறந்த வீரன். தன்னைத் தேடி வரும் அனைவருக்கும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கியவன். வந்தவர்களுக்கெல்லாம் யானைகளையும் 3 தேர்களையும் வழங்கி வறுமையுற்றவன்.
வறுமை அவனுக்குக் கவலை அளிக்கவில்லை . தன்னை நாடி வருபவர்களுக்குக் கொடுக்க ஒன்றும் இல்லையே என்று கலங்கினான். அதனால் காட்டுக்குச் சென்று உயிர்விட எண்ணினான். ஆனால் ஒரு முனிவரின் அருளால் அவன் மீண்டும் செல்வங்கள் கைவரப் பெற்றான். வாழ்நாள் முழுவதும் கொடை வள்ளலாகத் திகழ்ந்தவன்.