தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்
செய்யுள் : சிறுபஞ்சமூலம் – காரியாசான்
இயல் ஒன்று
செய்யுள்
நாடு / சமூகம் / அரசு / நிருவாகம்
கற்றல் நோக்கங்கள்
❖ பண்டைத் தமிழ் மன்னர்களின் நிருவாகத் திறனையும் ஆட்சிமுறையையும் அறிந்துகொள்ளுதல்
❖ கடையெழு வள்ளல்களின் கொடைத்தன்மையைத் தெரிந்துகொள்ளுதல்
❖ தமிழர்களின் சமூகச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளுதல்
❖ நடைமுறை வாழ்க்கையில் இணைச்சொற்களைப் பயன்படுத்துதல்
சிறுபஞ்சமூலம்
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு
– காரியாசான்.
சொல்பொருள்
வனப்பு – அழகு
கண்ணோட்டம் – இரக்கம்
இத்துணை – இவ்வளவு
வேந்தன் – அரசன்
வாட்டான் – வருத்தமாட்டான்
பண் – இசை
பாடல் பொருள்
கண்ணுக்கு அழகு, இரக்கம் கொள்ளுதல்; காலுக்கு அழகு, பிறரிடம் பொருள் வேண்டிச் செல்லாமை; ஆராய்ச்சிக்கு அழகு, இது இவ்வாறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல்; இசைக்கு அழகு, அதனைக் கேட்போர் நன்று எனச் சொல்லுதல்; அரசனுக்கு அழகு, தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.
நூல் குறிப்பு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம். கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன. அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகள், மக்கள் மனநோயைத் தீர்ப்பனவான உள்ளன. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர், காரியாசான்.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. வனப்பு – இச்சொல்லின் பொருள்
அ) அறிவு
ஆ) பொறுமை
இ) அழகு
ஈ) சினம்
[விடை : இ) அழகு]
2. நன்றென்றல் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன் + றென்றல்
ஆ) நன்று + என்றல்
இ) நன்றே + என்றல்
ஈ) நன்றெ + என்றல்
[விடை : ஆ) நன்று + என்றல்]
3. என்று + உரைத்தல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) என்று உரைத்தல்
ஆ) என்றுயுரைத்தல்
இ) என்ற உரைத்தல்
ஈ) என்றுரைத்தல்
[விடை : ஈ) என்றுரைத்தல்]
4. கண்ணுக்கு அழகு
அ) வெறுப்பு
ஆ) பொறுமை
இ) இரக்கம்
ஈ) பொறாமை
[விடை : இ) இரக்கம்]
ஆ. பொருத்துக
1. கண்ணுக்கு அழகு – கேட்பவர் நன்று என்று சொல்லுதல்
2. காலுக்கு அழகு – இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்
3. ஆராய்ச்சிக்கு அழகு – நாட்டு மக்களை வருத்தாமை
4. இசைக்கு அழகு – பிறரிடம் சென்று கேட்காமை
5. அரசனுக்கு அழகு – இரக்கம் காட்டல்
விடை
1. கண்ணுக்கு அழகு – இரக்கம் காட்டல்
2. காலுக்கு அழகு – பிறரிடம் சென்று கேட்காமை
3. ஆராய்ச்சிக்கு அழகு – இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்
4. இசைக்கு அழகு – கேட்பவர் நன்று என்று சொல்லுதல்
5. அரசனுக்கு அழகு – நாட்டு மக்களை வருத்தாமை
இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
● கண் வனப்பு
● எண் வனப்பு
● கேட்டார்
● வாட்டான்
ஈ. வினாக்களுக்கு விடையளிக்க,
1. கண்ணுக்கு எது அழகு?
விடை
கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளும் பண்பாகும்
2. காலுக்கு எது அழகைத் தருகிறது?
விடை
பிறரிடம் பொருளை வேண்டிச் செல்லாமல் இருப்பது காலுக்கு அழகைத் தருகிறது.
3. இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது?
விடை
இசையைக் கேட்போர் அதனை நன்று என்று கூறுதல், இசைக்கு அழகாகும்.
4. அரசனுக்கு அழகைத் தருவது எது?
விடை
தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல் அரசனுக்கு அழகைத் தரும்.
உ. சிந்தனை வினா
நம்மைப் பிறர் பாராட்ட வேண்டுமெனில் நம்மிடம் எத்தகைய பண்புகள் இருக்கவேண்டும்?
விடை
● மனித நேயம்.
● பிறருடைய நலத்தைப் பற்றி அறிதல்.
● பகைவனிடமும் அன்பு காட்டுதல்.
● பிறர் செய்யும் தவற்றை மன்னித்து விட்டு அவருக்கே உதவியும் செய்தல்.
● தம்மைவிட எளியவரிடமும் பணிவுடன் இருத்தல்.
● பிற உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுதல்.
கற்பவை கற்றபின்
● பாடலைப் பொருள் புரிந்து படித்துக்காட்டுக.
● பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.
● பாடலை அடிபிறழாமல் எழுதுக