தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்
இலக்கணம் : அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி
கற்கண்டு
அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி
தேனிசை அடடே, செல்வியா? வா! வா! வா! எப்படி இருக்கிறாய்?
செல்வி (கலகலவென நகைத்தவாறே) ஓ! நன்றாக இருக்கிறேன். அத்தை எங்கே?
தேனிசை அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள்.
(அப்போது தடதட வென அங்கே ஓடி வருகிறான் தேனிசையின் தம்பி மதியழகன்)
செல்வி மதி, ஏன் இப்படி படபடவென மூச்சு இரைக்க ஓடி வருகிறாய்? என்ன ஆயிற்று?
மதியழகன் அக்கா, அங்கே பாம்பு, பாம்பு……
தேனிசை மதி, விளையாடதே, அன்றும் இப்படித்தான் தீ, தீ, தீ என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்தாய். ஆனால், அப்படி எதுவும் இல்லை. போ, போ, போ இப்படியெல்லாம் பொய் சொல்லாதே.
மதியழகன் அக்கா, உண்மையாகத்தான் சொல்கிறேன். நீங்களே வந்து பாருங்கள்.
செல்வி தேனிசை, தம்பி திரும்பத் திரும்பச் சொல்வதைப் பார்த்தால் பொய் சொல்வதுபோல் தெரியவில்லையே, வா, வா, போய்ப் பார்க்கலாம்.
(அவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது, அருகிலிருந்த மரத்தின்மீது பாம்பொன்று சரசரவென ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் உடல் பளபளவென வெயிலில் மின்னியது),
மேற்கண்ட உரையாடலில் சில சொற்கள் தடித்த எழுத்துகளில் உள்ளன. அவை என்னவென்று அறிந்துகொள்வோமா?
சில சொற்கள் எப்போதும் இரண்டாகவே வரும். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தால் பொருள் தரா. உரையாடலில் கலகல, தடதட, படபட, பளபள என வரும் சொற்கள். கலகல என்பதைக் கல எனத் தனியாகப் பிரித்தால் பொருள் இல்லை. அதனால், இம்மாதிரியான சொற்கள் எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வரும். ஆகவே, இவற்றை இரட்டைக்கிளவி என்பர்.
இரட்டை என்பது, இரண்டு. கிளவி என்பது, சொல். இரட்டைக் கிளவி ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, சினக்குறிப்பு போன்ற பலவகைக் குறிப்புகளை உணர்த்தும்,
சில சொற்கள் இரண்டாகவோ மூன்றாகவோ ஏன் நான்காகவோ அடுக்கி வரலாம். ஆனால், அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும். உரையாடலில் வா வா வா, பாம்பு பாம்பு, தீ தீ தீ, போ போ போ, திரும்பத் திரும்ப போன்ற சொற்கள் வந்துள்ளன. இவற்றைத் தனித்தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும். இவற்றை அடுக்குத்தொடர் என்பர்.
வா, வா, வா என மூன்றுமுறை அடுக்கிவரும் சொல்லை வா எனத் தனியே பிரித்தாலும் அஃது ஓரெழுத்து ஒருமொழியாய் வருகையைக் குறிக்கிறது. அடுக்குத்தொடர் அசைநிலை, விரைவு, வெகுளி, அச்சம், உவகை, அவலம், இசைநிறை முதலிய பொருள்களைக் குறித்து வரும்.
● எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வருவது, இரட்டைக்கிளவி.
● ஒரு சொல்லே இரண்டுமுறைக்குமேல் அடுக்கி வருவது, அடுக்குத்தொடர்.
இரட்டைக்கிளவி
இரட்டைச் சொல்லாக வரும்
தனித்தனியே பிரித்தால் பொருள் தராது
இரண்டு முறைக்குமேல் அடுக்கி வராது
அடுக்குத்தொடர்
ஒரே சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வரும்.
தனித்தனியே பிரித்தாலும் பொருள் தரும்.
இரண்டுமுறைக்குமேல் அடுக்கி வரும்.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. அடிபட்ட கால் ………………. என வலித்தது.
அ) கடகட
ஆ) விண்விண்
இ) படபட
ஈ) கணகண
[விடை : ஆ) விண்விண்]
2. காலைப்பொழுது ………………. வென புலர்ந்தது.
அ) பலபல
ஆ) தடதட
இ) புலபுல
ஈ) மளமள
[விடை : இ) புலபுல]
3. குயில் …………………….. எனக் கூவியது.
அ) கீச்கீச்
ஆ) கூகூ
இ) கொக்கொக்
ஈ) பக்பக்
[விடை : ஆ) கூகூ]
4. மணமக்களை …………………….. என வாழ்த்தினர்.
அ) வருக வருக
ஆ) வாழ்க வாழ்க
இ) வீழ்க வீழ்க
ஈ) வளர்க வளர்க
[விடை : ஆ) வாழ்க வாழ்க]
ஆ. பொருத்துக.
1. கலகலவென – விரைவுக்குறிப்பு
2. நறநறவென – ஒலிக்குறிப்பு
3. தடதடவென – சினக்குறிப்பு
விடை
1. கலகலவென – ஒலிக்குறிப்பு
2. நறநறவென – சினக்குறிப்பு
3. தடதடவென – விரைவுக்குறிப்பு
இ. கீழ்க்காணும் உரைப்பகுதிக்குப் பொருந்துமாறு இரட்டைக்கிளவி/ அடுக்குத்தொடர்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக..
அடர்ந்த காடு. ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்த குரங்குகள், திடீரெனக் குரலெழுப்பியவாறு, ஒவ்வொரு மரமாக ஏறியும் இறங்கியும் கிளைக்குக் கிளை தாவித் தாவிச் சென்றன. அவை எழுப்பிய ஓசையினால், பறவைகள் தத்தம் சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டு பறந்தன. அருகிலிருந்த சிற்றாற்றில், நீர் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. நீர்நிலை தேடிக் கூட்டங்கூட்டமாக வந்த யானைகள், அந்த ஆற்றைக்கண்டு, களிநடனமிட்டன. அருகில் வளர்ந்திருந்த தென்னை மரமொன்றிலிருந்த தேங்காய்கள், பொத்து பொத்து எனக் கீழே விழுந்தன. அந்த ஓசையைக் கேட்டு, மிரண்ட யானைக்கன்று தபதபவென ஓட, அருகிலிருந்த மான்கள் அங்குமிங்கும் துள்ளித்துள்ளி ஓடின. சூல்கொண்ட மேகங்கள், கருகருவெனத் திரள, பளபளவென மின்னல் மின்னியது. சற்றுநேரத்தில், சடசடவென மழை பெய்ய, குரங்குகள் மரத்தின் மீது மடமடவென ஏறின.
தபதப, துள்ளித் துள்ளி, கூட்டங்கூட்டம், படபட, சலசல, சட்சட், கருகரு, பள்பள், மடமட, தாவித் தாவி, பொத்து பொத்து
மொழியை ஆழ்வோம்
அ. கேட்டல்
● எளிய, இனிய ஓசைநயமிக்க பாடல்களைக் கேட்டு மகிழ்க.
● உழவு வேலை நடைபெறும் இடங்களில் பாடப்படும் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
ஆ. பேசுதல்
● ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்‘ என்னும் தலைப்பில் 5 மணித்துளி பேசுக.
விடை
அனைவருக்கும் வணக்கம்!
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று மகாகவி பாரதியார் உழவினை உயர்த்திப் பாடியுள்ளார். ‘உழவர்கள் சேற்றில் கால் வைக்கவில்லையென்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது’ இது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முதுமொழி. இவ்வாறு உழவர்களுக்கும், உழவுத்தொழிலுக்குப் பாடுபட்ட காளைமாடுகளுக்கும், வந்தனை செய்யும் விழாவே அறுவடைத் திருவிழா.
இவையனைத்துமே உழவுத்தொழிலின் இன்றியமையாமையைப் பற்றிக் கூறுகிறது. ஆனால் இன்று நாகரிகம், நகரமயமாக்கல் என்றுசொல்லிக்கொண்டு விவசாய நிலங்களை அழித்து வீடுகளாக்கிவிட்டோம். இதனால் விளைநிலங்கள் குறைந்துவிட்டன. விவசாயமும் குறைந்துவிட்டது. இப்படியே இந்நிலை தொடர்ந்தால் நம் நிலை என்னவாகும் எனச் சிந்திக்க வேண்டும். உண்ண உணவு, உடை இவற்றை நமக்களிப்பதே உழவுத்தொழில்தான். இவையிரண்டும் நமக்கு அடிப்படைத் தேவைகள். அடிப்படைத் தேவையைக்கூட நம்மால் நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையே உண்டாகும்.
படித்த இளைஞர்கள் சேற்றில் கால் வைப்பதை இழிவாக எண்ணாமல் பெருமையுடன் செயலாற்ற வேண்டும். உழவுத்தொழிலை மேன்மையடைய செய்ய வேண்டும். இந்த உலகமே உழவர்களின் பின்தான் சுற்றுகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். நன்செய், புன்செய் நிலங்களுக்கேற்ப மழையின் அளவிற்கேற்ப பயிர் செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவமழைக்காலங்கள் மாறியதால், வேளாண்மைத் தொழில்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம்மாற்றங்களை நமக்கேற்றதாக மாற்றிக் கொண்டு அதற்கேற்ற பயிர்களை விளைவிக்க வேண்டும்.
“தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு” என்று உழவரின் மாண்பினைப் போற்றுகிறது குறட்பா. உழவர்கள் பிறருக்கு அன்னமிடுவார்கள். ஒருபோதும் பிறரைச் சார்ந்து இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட உழவர்களையும் உழவுத்தொழிலையும் மதிப்போம்.
● நேர்மையாக வாழ்ந்தவர்களுள் யாரேனும் ஒருவரின் பண்புகளைப் பாராட்டிப் பேசுக.
விடை
அனைவருக்கும் வணக்கம்!
நேர்மையாக வாழ்ந்து புகழ்பெற்றவர் கக்கன். இவர் விடுதலைப் போராட்ட வீரர். தலைசிறந்த அரசியவாதியும் ஆவார்.
தமிழக அமைச்சரவையில் பத்தாண்டுகள் பணியாற்றியவர். ஐந்தாண்டுகள் லோக்சபா உறுப்பினராகவும் இருந்தவர். ஆனால் அவருக்கென்று ஒரு வீடுகூட இல்லை. வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழ்ந்தவர். அரசு பேருந்தில் பயணம் செய்தவர்.
பொதுவாழ்வில் தூய்மையும் நேர்மையும் செயல்திறனும் கொண்டு அரசுப் பணியை மக்கள் பணியாகச் செய்தவர்.
மதுரை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஓராசிரியர் பள்ளியை நிறுவ முதல் 6 உத்தரவைப் பிறப்பித்தார்.
ஒருமுறை மலேசிய அமைச்சர், கக்கனைச் சந்தித்தார். அப்போது கக்கனின் கையில் இருந்த பழைய பேனாவைப் பார்த்தார்.
உடனே தனது பேனாவை அவருக்குத் தந்தார். அந்தத் தங்கப் பேனாவை வாங்க மறுத்த கக்கன், அந்தத் தகுதி தனக்கு இல்லை என்றார். அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதில் வாங்கிக் கொண்டார். கக்கன், ஊழியரை அழைத்து அலுவலகப் புத்தகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார்.
“இது அரசுக்கு அல்ல, உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்குத் தான் தந்தேன்’ என்று மலேசிய அமைச்சர் கூறியும் கக்கன் கேட்கவில்லை. கக்கன் “நான் அமைச்சராக இருப்பதால்தான் கொடுக்கிறீர்கள். இல்லையென்றால் கொடுப்பீர்களா? மக்களுக்குத் தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மைப் போன்றவர்கள் பரிசுப் பொருட்களைச் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளக்கூடாது” என்றார். மலேசிய அமைச்சர் “உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளாமல் அரசுப் பொருட்களோடு சேர்ப்பதாக இருந்தால் தரமாட்டேன்” என்று கூறினார். உடனே கக்கன் “அந்தத் தங்கப்பேனாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறித் திருப்பித் தந்துவிட்டார்.
இதைப்போல பல உதவிகளை நேர்மையாகச் செய்தவர் கக்கன் அவர்கள்.
இ. படித்தல்
● செய்தித்தாளில் இடம்பெறும் வேளாண்மை பற்றிய செய்திகளை வகுப்பில் படித்துக்காட்டுக.
● உங்கள் பள்ளியில் நடைபெறும் விழாவுக்குத் துண்டு விளம்பரத்தாள் தயாரித்து, அனைவருக்கும் படித்துக்காட்டுக.
ஈ. எழுதுதல்
1. சொல்லக் கேட்டு எழுதுக.
1. விதைத் திருவிழாவிற்குச் செல்வோம்.
2. இயற்கை வேளாண்மை அன்புடன் வரவேற்கிறது.
3. நீர்வளத்தைப் பெருக்குவோம்.
4. மண்ணின் ஊட்டச்சத்து நீர் மேலாண்மை
5. ஆர்வலர்களைச் சுண்டியிழுக்கும் அரங்குகள்
2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
● திருவிழா – திருவிழாவிற்குச் செல்வதென்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
● இரசாயன விதை – இரசாயன விதைகள் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை கெடுகிறது.
● விளம்பரப் பலகை – விளம்பரப் பலகையைப் பார்த்துப் படித்தான் கந்தன்.
● பழங்காலம் – பழங்கால விவசாயத்தில் இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன.
3. ஒருபொருள் தரும் பல சொற்களை எழுதுக.
● வயல் – செய், கழனி
● உழவு – ஏர், வேளாண்மை
● மகிழ்ச்சி – இன்பம், களிப்பு
● வீடு – மனை, இருப்பிடம்
● பேசு – சொல், செப்புவயல்
4. கீழ்க்காணும் உரைப்பகுதியைப் படித்து, வினாக்களுக்கு விடை எழுதுக.
நீர்வளமும் நிலவளமும் உடைய தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பயிர்த்தொழில் சிறந்ததாகக் கருதப்பட்டது. முற்காலத் தமிழர் தொழுதுண்டு வாழ விரும்பினார் அல்லர்: உழுதுண்டே வாழவே விரும்பினார்கள். ‘சீரைத் தேடின் ஏரைத் தேடு’ என்றார் ஒரு புலவர். ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய்முகம் காணாப் பிள்ளையும் மழை முகம் காணாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந்தார்கள். உயர்ந்து ஓங்கிய மலைகளில் மேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும்; கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் அவர் உள்ளம் துள்ளி மகிழும்.
1. பண்டைக்காலத்திலேயே சிறந்ததாகக் கருதப்பட்ட தொழில் எது?
விடை
பண்டைக்காலத்திலேயே சிறந்ததாகக் கருதப்பட்ட தொழில் பயிர்தொழில்.
2. முற்காலத் தமிழர் எப்படி வாழ விரும்பினர்?
விடை
முற்காலத் தமிழர் உழுதுண்டு வாழவே விரும்பினார்கள்.
3. ஏர்த்தொழில் இனிது நடைபெற எது தேவை?
விடை
ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது.
4. தமிழர் உள்ளம் துள்ளி மகிழக் காரணம் என்ன?
விடை
கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் தமிழர் உள்ளம் துள்ளி மகிழும்.
5. மழையுடன் தொடர்புடைய சொற்களை எழுதுக.
விடை
மேகம், மின்னல்.
5. கீழ்க்காணும் பாடலைப் படித்து மகிழ்க.
நீர் மேலாண்மை ஆத்திசூடி
அகலத் தூறிடு
ஆழ்துளை நீக்கு
இருகரை சமன்செய்
ஈராறு இணை
உப்புநீர் வடி
ஊற்றுநீர் பெருக்கு
எரிபொருள் சேமி
ஏரியைக் காத்தல் செய்
ஐம்பொறி அழுக்கறு
ஒன்றாக்கு நீர்நிலை
ஓங்கிடும் உலகெலாம்
ஒளடதம் நீர்
மொழியோடு விளையாடு
1. உழவுத் தொழிலுடன் தொடர்புடைய பழமொழிகளின் சொற்கள் இடம் மாறியுள்ளன. அவற்றை முறைப்படுத்தி எழுதுக.
1. பட்டம், தேடி, ஆடிப், விதை, – ஆடிப்பட்டம் தேடி விதை
2. தேடு, ஏரைத், தேடின், சீரைத் – சீரைத் தேடின் ஏரைத் தேடு.
3. உழுவதை, அகல, விட, உழு, ஆழ – அகல உழுவதைவிட ஆழ உழு.
2. கீழ்க்காணும் பாடலிலுள்ள தொகைச்சொற்களை விரித்து எழுதுக.
இருவினை அறிந்து கொள்வோமே!
முத்தமிழ் கற்றுத் தேர்வோமே!
நாற்றிசை தேடிச் செல்வோமே!
ஐந்திணை சுற்றி வருவோமே!
அறுசுவை உண்டு மகிழ்வோமே!
இருவினை – நல்வினை, தீவினை
முத்தமிழ் – இயல், இசை, நாடகம்
நாற்றிசை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
ஐந்திணை , – குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை
அறுசுவை – இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு
3. குறிப்புகளைப் படித்துத் ‘தை‘ என முடியும் சொற்களை எழுதுக.
1. மெதுவாக ஊர்ந்து செல்லும் ஓர் உயிரி – நத்தை
2; பொதி சுமக்கும விலங்கு – கழுதை
3. பகலில் கண் தெரியாப் பறவை – ஆந்தை
4. காய், கனியில் இருக்கும் – விதை
4. கீழ்க்காணும் தொடரைப் பல தொடர்களாக மாற்றுக.
1. மணமலர் படம் வரைந்தாள்
அ) மணமலர் படம் வரைந்தாளா?
ஆ) மணமலரா படம் வரைந்தாள்?
இ) மணமலர் படம் வரை
ஈ) மணமலர் படம் வரைவாயா?
2. கதிரவன் வீட்டுக்குச் சென்றான்
அ) கதிரவன் வீட்டுக்குச் சென்றானா?
ஆ) கதிரவனா வீட்டுக்குச் சென்றான்?
இ) கதிரவா வீட்டுக்குச் செல்.
ஈ) கதிரவா வீட்டுக்குச் செல்வாயா?
5. புதிய சொற்களை உருவாக்குக.
1. விளையாட்டுத் திடல் – விளை, விளையாட்டு, திடல், விடல், விடு, விடுதி, வில்.
2. பல்கலைக்கழகம் – பல்கலை, கழகம், பல், கல், கலை, பக்கம், பழக்கம்.
3. கவிதைத்திரட்டு – கவிதை, திரட்டு, விதை, கவி, தை, விரட்டு, கட்டு, விட்டு.
6. பாடலைத் தொடர்ந்து பாடி மகிழ்க.
விடுகதையாம் விடுகதை
விடை காணும் விடுகதை
உயரமாக இருப்பானாம்
ஒரே இடத்தில் நிற்பானாம்
இளநீர்,தேங்காய் தருவானாம்
ஓலைக்கீற்றும் தருவானாம்
அவன் பெயர் என்ன?
தென்னை மரம் அவன்தானே
விடுகதையாம் விடுகதை
விடை :
பகலிலே துயிலுவானாம்
இரவிலே அலறுவானாம்
அவன் பெயர் என்ன?
ஆந்தை அவன்தானே.
விடுகதையாம் விடுகதை
செக்கச் சிவந்திருப்பாளாம்
வாலும் முளைத்திருக்குமாம்
சந்தைக்கு வந்திருப்பாளாம்
அவள் பெயர் என்ன?
மிளகாயாம் அவள் பெயர்.
விடுகதையாம் விடுகதை.
நிற்க அதற்குத் தக…
● உழவின் மேன்மையை அனைவருக்கும் உணர்த்துவேன்.
● இயற்கை உரங்களின் பயன்களைச் சொல்வேன்.
● மழைவளம் பெருக மரம் வளர்க்க உதவுவேன்.
செயல் திட்டம்
● உழவு தொடர்பான படம் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டுக.
● உழவு தொடர்பான பாடல்களுள் ஐந்து எழுதி வருக.
கற்பவை கற்றபின்
● இரட்டைக்கிளவிகளைப் பயன்படுத்தித் தொடர்கள் எழுதுக.
விடை
சிலுசிலு எனக் காற்று வீசியது.
கமகம என மணந்தது முல்லை .
மளமள என வேலையைச் செய்.
● உரைப்பகுதிகளில் காணப்படும் அடுக்குத்தொடர்களைத் தொகுத்து எழுதுக.
விடை
திரும்பத் திரும்ப
வா வா
பாம்பு பாம்பு
போ போ
● அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி வருமாறு கற்பனைக் கதையொன்றை எழுதுக.
அகரமுதலி
1. அம்மி – அரைக்கும் கல்
2. அலுப்பு – களைப்பு
3. ஆல் – ஆலமரம்
4. இளகிய – இரக்கமுள்ள
5. இம்மை – இப்பிறப்பு
6. இன்னல் – துன்பம்
7. எஞ்சியிருந்த – மீதியிருந்த
8. கலகம் – சண்டை
9. களர்நிலம் – பயிர் செய்ய உதவாத நிலம்
10. கழை – கரும்பு
11. குயவன் – மண்பாண்டம் செய்பவர்
12. குளிரிள – குளிர்ச்சியான
13. சாதம் – சோறு
14. செருக்கு – தலைக்கனம்
15. நனிபசு – மிகுதியாகப் பால் தரும் பசு
16. நெசவு – துணி நெய்பவர்
17. பஞ்சம் – வறட்சி
18. பாண்டம் – பாத்திரம்
19. புரவி – குதிரை
20. மகரம் – மீன்
21. முற்றல் – முற்றிய காய்
22. விவாதம் – சொற்போர்