தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்
துணைப்பாடம் : நேர்மை நிறைந்த தீர்ப்பு
இயல் மூன்று
துணைப்பாடம்
நேர்மை நிறைந்த தீர்ப்பு
பல ஆண்டுகளுக்குமுன் தென் பாண்டிய நாட்டை மங்கையர்க்கரசி என்பவர் ஆண்டு வந்தார். அவர், நீதியும் நேர்மையும் மிக்கவராக விளங்கினார். அவர் ஆட்சியில் மக்கள் குறைவின்றி வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள், கிராமத் தலைவர் ஒருவர் அரசியிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தார். அவருடன் நான்கு பேர்களும் அரண்மனைக்கு வந்தனர். அரசியை வணங்கிய கிராமத் தலைவர், தம் வழக்கை எடுத்துரைத்தார்.
“செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர். நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர்.
ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். அவரவர்க்கும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் அந்தப் பஞ்சாயத்து தலைவர்.
அரசியார் அந்நால்வரையும் பார்த்தார்., ‘ஒவ்வொருவராக உங்கள் சாதனையைச் சொல்லுங்கள்,” என்று ஆணையிட்டார்.
முதலில் முருகேசன் என்பவர் தம் சாதனையைச் சொல்லத் தொடங்கினார்; “நான் ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக்கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள். அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள். ஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா? அதனால்தான பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன். என்று சொன்னார் முருகேசன்.
இரண்டாவதாக, கண்ணன் என்பவர் தம் சாதனையைச் சொல்லலானார். நான் ஒரு கவிஞன். பல பாடல்களும் கவிதைகளும் இயற்றியுள்ளேன். ஒரே இரவில், உலகம் வியக்கும்படியாக நூறு செய்யுள்களைக் கொண்ட ‘ஆனந்த வாழ்வு என்ற காவியத்தைப் படைத்துள்ளேன். மக்கள் எல்லாரும் அதை விரும்பிப் படிக்கிறார்கள். ஒரே இரவில் இப்படி ஒரு காவியத்தைப் படைத்தது ஓர் இலக்கிய சாதனை அல்லவா? எனவே பொற்கிழி பெற முற்றிலும் தகுதி உள்ளவன் நான் ஒருவனே!” இவ்வாறு தன்னிலை விளக்கம் அளித்தார் கவிஞர்.
அடுத்ததாக மூன்றாவது ஆள், கல்தச்சர் கந்தசாமி. அவர் தம் சாதனையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். ‘கரடுமுரடான பாறையையும் வெட்டிக்கொண்டு வந்து, அழகிய சிலையாகவும் எழிலான தூண்களாகவும் செய்யும் கல் தச்சன் நான். சிற்றுளியைக் கையில் எடுத்தால் போதும், அது பேசும்; பாடும்; நடனமாடும். பாறையைக் குடைந்து குடைவரைக் கோவில்களும் மண்டபங்களும் செய்துள்ளேன். நான் செதுக்கிய குகைக் கோவிலைக் கண்டு வியந்து பாராட்டாதவர்களே இல்லை. அது என் அரிய சாதனை. அதில் என்னை வெல்ல எவருமில்லை. எனவே, பொற்கிழியை எனக்குக் கொடுப்பதே பொருத்தம்!” என்றார் கல்தச்சர் கந்தசாமி.
நான்காவதாக முதியவர் ஒருவர் வந்தார். அவர், தமது சாதனை என்ன என்று சொல்லலானார். ‘நான் சாதாரண ஓர் ஏழை விவசாயி. என் மூதாதையர் வழியில் எனக்குக் கிடைத்த ஒரு காணி நிலத்தை நன்கு உழுது பயிரிட்டுப் பிழைத்து வருகிறேன். என் மனைவி காலமாகிவிட்டாள். என் மகளும் நானும்தான் வயலில் உழைத்து வாழ்க்கை நடத்துகிறோம். இருவரும் பாடுபட்டு வேலை செய்ததால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மூன்று மடங்கு விளைச்சல் கண்டுள்ளது. என் குடும்பத்திற்குத் தேவையான நெல் போக, மீதியைப் பத்துக் குடும்பத்திற்கு விற்றேன். ஒரு காணி நிலத்தைக் கொண்டு பத்துக் குடும்பத்தைக் காப்பாற்றியது என் சாதனைதானே?” என்று கேட்டார் முதியவர்.
மங்கையர்க்கரசி சற்று யோசித்தார். பிறகு தம் தீர்ப்பைக் கூறலானார்.
‘தன் உயிரையோ, பகையையோ பொருட்படுத்தாமல், பாய்ந்துசென்று பகையாளி மகளைக் காப்பற்றியது அரிய சாதனைதான். பகைவருக்கும் நட்பு காட்டுவது நமது பண்பாடு. ‘இராவணனைப் பார்த்து இன்றுபோய், நாளை வா!” என்றதும் “சுற்றி நில்லாதேபோபகையே, துள்ளி வருகுதுவேல்” என்றபாடல் வரிகளும் பண்பாட்டையே வெளிப்படுத்துகின்றன. எனவே, பகைவரின் மகளை நீர் காப்பாற்றியது, நமது பண்பாட்டுச் செயலே தவிர, புதிய சாதனை ஏதுமில்லை”.
“அடுத்து, கவிஞர் ஒரே இரவில் நூறு கவிதைகளைப் புனைந்து காவியம் படைத்துள்ளதாகச் சொன்னார். சோழ நாட்டில் இருந்த பெண் கவி ஒருவர், ஒரே இரவில் ஆயிரம் கவிதை புனைந்து காவியம் படைத்தது பழைய செய்தி. எனவே, ஒரே இரவில் நீர் நூறு கவிதை புனைந்து காவியம் படைத்ததை அரிய சாதனையாக ஏற்க முடியாது”.
‘அடுத்ததாகக் கல் தச்சர், பாறையைக் குடைந்து பார்ப்போர் வியக்கும்வகையில் குடைவரைக் கோவில் உருவாக்கியதை ஒரு சாதனையாகச் சொன்னால், மாமல்லபுரம் கோவில்களும், திருச்சி பல்லவர்காலக் கோவில்களும் அழகிய குடைவரைக் கோவில்களே! எனவே, இவர் செய்தது புதுமையான சாதனை அன்று”,
நாலாவதாக, முதிய விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான். எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது. விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம், இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்’ என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை வழங்கினார் மங்கையர்க்கரசி அவரது தீர்ப்பைக் கேட்டு, மக்கள் எல்லாரும் அவரை வாழ்த்தினர்.
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க,
1. அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு யாது?
விடை
அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு:
“செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர்.
நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர்.
ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் கிராமப் பஞ்சாயத்து தலைவர்.
2. முருகேசன் தாம் என்ன சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார்?
விடை
“நான் ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக் கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள்.
அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள்.
ஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா? அதனால்தான் பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன்” என்று சொன்னார் முருகேசன்.
3. விவசாயியின் சாதனைதான் உயர்ந்தது என்று அரசி கூறக் காரணம் என்ன?
விடை
“முதியவரான விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான். எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பம்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது.
விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம். இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்” என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை அரசி வழங்கினார்.
சிந்தனை வினா
நண்பர்கள் உன்னை வீட்டில் வந்து சந்திக்கின்றனர். அவர்கள் சென்றபிறகு, பணப்பை ஒன்று நாற்காலியில் இருப்பதைக் காண்கிறாய். இந்நிலையில் நீ செய்யப்போவது என்ன?
அ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்
ஆ) உரியவரே தேடிக்கொண்டு வரட்டும் எனக் காத்திருப்பேன்.
இ) நான் பார்த்ததால், எனக்குத்தான் உரியது என வைத்துக்கொள்வேன்.
விடை
அ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்
கற்பவை கற்றபின்
● நேர்மையால் உயர்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்க.
● நேர்மை நிறைந்த தீர்ப்பு கதையை நாடகமாக நடித்துக்காட்டுக.