தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை
இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை
கற்கண்டு
சொற்றொடர் அமைப்பு முறை
எழுவாய்
ஒரு தொடரில், யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் (எழுவாய் எப்போதும் பெயர்ச்சொல்லாகவே இருக்கும்)
எடுத்துக்காட்டு : தென்றல் நடனம் ஆடினாள்
செயப்படுபொருள்
ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள்
எடுத்துக்காட்டு : தென்றல் நடனம் ஆடினாள்
பயனிலை
ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்றையே பயனிலை என்கிறோம்.
எடுத்துக்காட்டு : தென்றல் நடனம் ஆடினாள்
ஆடினாள் – என்பது வினைமுற்று
● எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரில் இடம் பெற்றிருக்கும்.
● எழுவாயோ, செயப்படுபொருளோ இல்லாமலும் தொடர் அமையும்.
எ.கா. நடனம் ஆடினாள் – இத்தொடரில் எழுவாய் இல்லை.
● தென்றல் ஆடினாள் – இத்தொடரில் செயப்படுபொருள் இல்லை
● ஒரு தொடர் எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால், பயனிலை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. எழுவாய் எப்போதும் ———— லாகவே இருக்கும்.
அ) வினைச்சொல்
ஆ) இடைச்சொல்
இ) பெயர்ச்சொல்
ஈ) உரிச்சொல்
[விடை : இ) பெயர்ச்சொல்]
2. பாடல் பாடினாள் – இத்தொடரில் ———- இல்லை.
அ) எழுவாய்
ஆ) பயனிலை
இ) செயப்படுபொருள்
ஈ) சொல்
[விடை : அ) எழுவாய்]
3. அமுதன் ஓடினான் – இத்தொடரில் ——— இல்லை
அ) பயனிலை
ஆ) செயப்படுபொருள்
இ) இடைச்சொல்
ஈ) உரிச்சொல்
[விடை : ஆ) செயப்படுபொருள்]
ஆ. எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து எழுதுக.
1. மாதவி சித்திரம் தீட்டினாள்
2. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்
4. கிளி பழம் தின்றது.
விடை
இ. எழுவாய், பயனிலை மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.
விடை
அமுதா திருக்குறள் படித்தாள்.
முகிலன் கவிதை எழுதினான்.
அன்பழகன் பேச்சுப்போட்டியில் பேசினான்.2
ஈ. பயனிலை, செயப்படு பொருள் மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.
விடை
ஆட்டம் ஆடினான்.
வண்ண ம் தீட்டினாள்.
கவிதை பொழிந்தான்.
மொழியை ஆழ்வோம்
அ. கேட்டல்
1. இயற்கை சார்ந்த பாடல்களை வகுப்பறையில் பாடச் செய்து கேட்டு அதுபோலப் பாடி மகிழ்க.
விடை
தன்னானே தானே நன்னே
தன்னானே தானே நன்னே
பச்சை வண்ண காட்டை
நீ பாரு நீ பாரு
அது சொல்லும் வார்த்தை ஆயிரம் அய்யா!
இவனப் போல அழகானவன் தான் யாரு.
ஆமா ! நீ கூறு…
தன்னானே தானே நன்னே
தன்னானே தானே நன்னே
2. புதிர்களைத் தொகுத்து வந்து வகுப்பறையில் கூறுக. நண்பன் கூறிய புதிருக்குச் சரியான விடை கூறி மகிழ்க.
3. இயற்கையைக் காக்க வேண்டியதன் அவசியம் பற்றிய உரைகளைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.
விடை
இயற்கை என்பதே இயல்பாகவே உருவானவை. அவை இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள். அவற்றின் இயக்கம், அவை இயங்குகின்ற இடம், இயங்குகின்ற காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து காட்சியளிப்பதே இயற்கையாகும். இயற்கையாய் உருவான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம்.
வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும். மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம்.
அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறது. எனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும்.
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும். இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பக்கவிளைவுகள், ஆபத்தான பின்விளைவுகள் உண்டாக்குகின்ற வேதிப்பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கையான மூலிகைகள், காய்கறிகள், பழங்களை விளைவிப்போம்
ஆ. பேசுதல்
● இயற்கை சார்ந்த பாடல்களைப் பாடி மகிழ்க.
● பழமொழிக் கதைகளை உம் சொந்த நடையில் கூறுக.
விடை
பேராசைக்காரன்
ஓர் ஊரில் அகிலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது நண்பன் முகிலன். அகிலன் எதற்கெடுத்தாலும் பேராசை கொள்பவன். ஆனால், முகிலனோ பேராசை கொள்ளாதவன். இருவரும் ஒருநாள் காட்டிற்கு விறகு எடுக்கச் செல்கின்றனர். அங்கிருந்த செடி கொடி அழகை இரசித்துக் கொண்டு காய்ந்தக் குச்சிகளை மட்டும் முகிலன் எடுத்தான்.
காய்ந்த குச்சிகளை மட்டும் எடுக்காமல், பல மரக்கிளையை வெட்டி வீழ்த்தினான் அகிலன். ஏன் இப்படிப் பச்சை மரத்தை வெட்டுகின்றாய் என்று முகிலன் கேட்டான். அதற்கு அகிலன் அடுத்த முறை இந்த ஒடித்த பச்சைக் குச்சிகள் காய்ந்து எனக்கு நிறைய விறகுகள் கிடைக்கும் என்றான். திடீரென காட்டில் பயங்கர சத்தம் கேட்டது. இருவரும் சென்று பார்த்தனர்.
மயில் ஒன்று புதருக்குள் முள் வேலியில் சிக்கிக் கத்திக் கொண்டு இருந்தது. முகிலன் அதனைக் காப்பாற்றுகின்றான். இருவருக்கும் அந்த மயில் மரக்கன்றுகளைப் பரிசளித்தது. இது தங்கப்பூ தரும் என்று சொல்லிச் சென்றது. காட்டிற்குச் சென்று வந்த இருவரும் அதை வளர்க்கின்றனர். இருவரின் மரமும் வளர்ந்தது.
ஆனால் முகிலன் மரம் பூக்கவில்லை . அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை . அகிலன் ஒரு சில பூக்கள் பூத்ததும், பேராசை கொண்டு கிளையில் இத்தனைப் பூ என்றால், மரத்திற்குள் நிறைய பூக்கள் இருக்கும் என்று பேராசையில் மரத்தை வெட்டிவிட்டான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாந்து போனான். காலந்தாழ்த்தினால் முகிலன் மரமோ ஏராளமான தங்கப் பூக்கள் பூத்துக் குலுங்கின.
கதை உணர்த்தும் பழமொழி: பேராசை பெருநஷ்டம்.
● நீ சென்று வந்த சுற்றுலா (அ) ஊர் பற்றி வருணித்துப் பேசுக.
விடை
நாங்கள் மகிழ்வுந்தில், செங்கல்பட்டு அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். மிகுந்த உற்சாகத்துடன் பயணம் தொடர்ந்தது. செல்லும் வழியில் உள்ள கோயில் ஒன்றின் வெளிப்பிரகாரத்தில் உணவு உண்டோம்.
கோயில் வாசலில் வயதான முதியோர் ஒருவர் உணவின்றி வருந்தியதைக் கண்டோம். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவில் சிறிதளவு கொடுத்து, அவரை உணவு உண்ண வைத்து, அவருடன் மகிழ்ந்து உரையாடி அவர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வந்தோம்.
பல ஊர்களில் இருந்தும் வண்ணமயமான பறவைகள் அங்கு வருவதைப் பார்த்து மகிழ்ந்தோம். அதைக் காணும் மனிதர்களின் கூட்டம் ஏராளம் ஏராளம். பல நாடுகளில் இருந்தும் பறவைகள் அங்கு தங்கியிருந்து செல்வதைக் கண்டோம். அதனால் அவ்விடத்திற்குப் ‘பறவைகள் சரணாலயம்’ என்று அழைக்கின்றனர் போலும். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த சில தானியங்களைப் பறவைகளுக்குப் போட்டோம். அங்குச் சிறிது நேரம் விளையாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பினோம்.
● மழை எவ்வாறு பெய்கிறது? அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக.
விடை
கடல் நீர் ஆவியாகி, வானத்திற்குச் செல்கின்றது. அது வானத்தில் மேகமாக மாறித் தங்குகின்றது. குளிர்ந்த நீர் பட்டவுடன், வானத்தில் இருந்து மேகம் மழையாகப் பொழிகின்றது.
● தென்னை, வாழை, பனை, வேம்பு, முருங்கை ஆகிய மரங்கள் பேசுவது போல நடித்து “நானே அதிகம் பலன் தருவேன்” என ஒவ்வொருவரும் வகுப்பில் பேசிக்காட்டுக.
விடை
தென்னை : நான் கட்டும் சணலாகவும், வீட்டுக் கூரையாகவும், தாங்கு பலகையாகவும் பயன்படுகின்றேன். பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு, தென்னையை வைத்தால் இளநீர் என்று மனிதர்கள் என்னைப் பெருமையாகச் சொல்வார்கள். எனவே, அதிக பலன் தருவது நான் தான்.
வாழை : எனக்குச் சாவு என்பதே கிடையாது. நான் வெட்டினாலும் முளைத்துக் கொண்டுதான் இருப்பேன். பூவும், காயும், கனியும், நாரும், மட்டையும், இலையும் என எனது உடல் முழுவதும் மக்களுக்காகவே தருகின்றேன். ‘வாழையடி வாழை’ என்ற சொல்லுக்கு ஏற்பதலைமுறை தலைமுறையாக பயன்படுவது நான் தான்.
பனை : நான் பனம் நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை எனப் பலவிதமாக மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளேன். வெயில் காலங்களில் தாகம் தீர்க்கும் பானமாக என்னை அருந்துகின்றனர். பனை ஓலை, மரம் ஆகியவற்றை எடுத்து வீடு கட்டி பலரும் பயனடைகின்றனர். எனவே, அதிக பலன் தருவது நான் தான்.
வேம்பு : வேப்பம்பூ, இலை, கிளை, பட்டை, காய், கனி என அனைத்து பாகங்களையும் எடுத்து மருந்துப் பொருட்கள் தயாரிக்க என்னைப் பயன்படுத்துகின்றனர். என் மரத்தடியில் அமர்ந்தால் நோயே வராது. ஆகவே மனிதர்களைப் பாதுகாக்கும் கவசமாக நான் இருக்கிறேன்.
முருங்கை : நான் சத்து மிக்க முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப் பூ. ஆகியவற்றை மனிதனுக்குத் தருகின்றேன். உணவாகவும், மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறேன். ஆகவே, அதிகமாக பயன்தருவது நான்தான்.
இ. படித்தல்
● பழமொழிகளைப் படித்துத் தொகுப்பு தயார் செய்க.
விடை
1. ஒற்றுமையே பலம்.
2. சிறுதுளி பெருவெள்ளம்.
3. பணம் பத்தும் செய்யும்.
4. கூழானாலும் குளித்துக் குடி.
5. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
6. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
7. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.
8. செய் அல்லது செத்து மடி.
9. நூல் பல கல்.
10. நாய் விற்ற காசு குரைக்குமா.
● சிறந்த புதிர்களைப் படித்துச் சேகரித்துத் தொகுப்பு தயார் செய்க.
விடை
1. சின்னத்தம்பி குனிய வச்சான். அது என்ன?
விடை : முள்
2. திரி இல்லாத விளக்கு, உலகமெல்லாம் தெரியுது. அது என்ன?
விடை : சூரியன்
3. மூடாத வாய்க்கு முழு வால். அது என்ன?
விடை : அகப்பை
4. ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைகிறான். அது என்ன?
விடை : ஊசி
5. மண்டை உண்டு. கட்டை இல்லை. பூ உண்டு. மணமில்லை. அது என்ன?
விடை : வாழை
● புத்தகப் பூங்கொத்துப் பகுதியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழமொழி, புதிர்களைத் தொகுத்து வருக.
விடை
ஈ. எழுதுதல்
1. சொல்லக் கேட்டு எழுதுக.
1. மாங்காய் பறித்துத் தருகிறேன்
2. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
3. பழமொழி ஒன்று சொல்
4. கண்ணிமைக்கும் நேரம்
2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. அமைதியாக – ஆசிரியர் பாடம் நடத்தும் போது அமைதியாகக் கேட்க வேண்டும்.
2. தருகிறேன் – தினமும் ஏழைக்கு உணவு தருகிறேன்.
3. சிறுவர்கள் – சிறுவர்கள் பூங்காவில் விளையாடுகின்றனர்.
4. முழக்கம் – பாரதி தமிழ் முழக்கம் செய்தார்.
5. தங்கம் – தங்கம் மிகவும் விலை உயர்ந்தது.
6. விளைவு – தீமைக்குத் தீய விளைவே கிடைக்கும்.
3. பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
என் உடல் ஏழு நிறங்களால் ஆனது ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் இளஞ்சிவப்பு சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருக்கும் எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம் பின்பகுதி என் வடிவம் என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா
விடை
என் உடல் ஏழு நிறங்களால் ஆனது. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருந்தாலும், எனது பெயரின் முன் பகுதி என் இருப்பிடம். பின்பகுதி என் வடிவம். என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா?
4. பொருத்தமான சொற்களால் நிரப்புக.
(உறுதியாக, சொத்தையாக, பல்வலி, பல்துலக்க)
மருத்துவர் : விமலா உன் உடம்புக்கு என்ன?
விமலா : எனக்கு பல்வலி ஐயா,
மருத்துவர் : எங்கே வாயைத் திற, பல்லெல்லாம் சொத்தையாக இருக்கிறதே.
விமலா : அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா?
மருத்துவர் : இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடக்கூடாது. தினமும் இருமுறை காலையிலும், இரவிலும் பல்துலக்க வேண்டும். அப்பொழுதுதான் பற்கள் உறுதியாக இருக்கும்.
விமலா : நீங்கள் சொன்னதை நான் பின்பற்றுகிறேன் ஐயா.
5. கதையை நிறைவு செய்க.
ஒரு நாள் அந்த நாட்டின் அரசர் குதிரையின் மேல் வலம் வந்து கொண்டிருந்தார். வயதான மனிதர் ஒருவர், தம்முடைய தள்ளாத வயதிலும் சாலையின் ஓரங்களில் குழிகளைத் தோண்டி, விதைகளையும் செடிகளையும் நட்டுத் தண்ணீர் ஊற்றியதைப் பார்த்தார். அரசர் அந்த வயதானவர் செய்யும் செயல்களைத் தொடர்ந்து பார்வையிட்டு வந்தார். ஒரு நாள்
விடை
மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற நீர் கிடைக்காததால் தான் குடிக்கக் கொண்டு வந்த சிறிதளவு தண்ணீரையும் தான் குடிக்காமல் மரத்திற்கு ஊற்றி, மயங்கி கீழே விழுந்து விடுகின்றார். அரசர் உடனே குதிரையை விட்டு இறங்கி வேகமாக ஓடுகின்றார். அவரைத் தூக்கித் தண்ணீர் கொடுக்கிறார்.
ஆனால் முதியவர் எனக்குத் தண்ணீர் வேண்டாம். இந்த மரத்திற்கு ஊற்றுங்கள். நான் செத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த மரம் செத்தால், இந்த நாட்டுக்கே பாதிப்பு. ஆகவே அதனைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி தன் உயிரை விட்டார். அரசர் அந்த மரங்களை வளர்க்கத் தொடங்கினார். நாடே மரங்கள் பெருகி வளம் மிக்கக் காடானது.
6. விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்க.
பேசும் கிளி! தீ வளையத்திற்குள் பாயும் புலி! பார் விளையாட்டில் பறக்கும் தேவதைகள்! கூண்டுக்குள் உருண்டோடும் குல்லா மனிதர்! வெள்ளைப் புறாக்களின் எல்லையில்லா ஆட்டம்! கோமாளிக் குள்ளர்களின் கும்மாள விளையாட்டு! குதிரையேறும் கொஞ்சும் மழலைகள்!
வாருங்கள்! வண்ணவொளியில் காணுங்கள்!
விளம்பரம் படி ! விடையைக் கொடு
1. சர்க்கஸ் நடைபெறும் இடம் எது?
விடை :
நேரு விளையாட்டரங்கம், விழுப்புரம்.
2. விளையாடுபவர்கள் யார்?
விடை :
கோமாளிக் குள்ளர்கள்.
3. குதிரையேறுபவர்கள் யார்?
விடை :
கொஞ்சும் மழலைகள்.
4. சர்க்கஸ் நடைபெறும் அரங்கத்தின் பெயர் என்ன?
விடை :
நேரு விளையாட்டரங்கம்.
5. சர்க்கஸின் பெயர் என்ன?
விடை :
ஜம்போ சர்க்கஸ்
7. இணைத்துக் கூறுவோம்
● தொடர்புடைய பல சொற்றொடர்களைத் தனித்தனி அட்டைகளில் எழுதிக் கொள்ளுங்கள்.
எ.கா. மழையில் நனைந்தேன்.
சட்டை ஈரமானது.
● அனைவரும் வட்டமாக அமர்ந்து கொள்ளுங்கள்
● ஒவ்வொருவரும் ஓர் அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்
● ஒருவர் எழுந்து கையிலுள்ள அட்டையில் எழுதியுள்ளதைப் படியுங்கள்.
● அதனோடு தொடர்புடைய சொற்றொடர் எழுதியுள்ள அட்டையை வைத்துள்ளவர் உடனே எழுந்து படிக்க வேண்டும்.
● மற்றவர்கள் இரண்டு சொற்றொடர்களையும் இணைத்துக் கூற வேண்டும்.
மழையில் நனைந்ததால் சட்டை ஈரமானது.
8. தடித்த சொல் விடையாக வருமாறு வினா அமைக்க.
1. என் நண்பனின் பெயர் தேனமுதன்.
விடை : உன் நண்பனின் பெயர் யாது?
2. பாட்டி எனக்குக் கதை கூறுவார்.
விடை : உனக்குக் கதை கூறுபவர் யார்?
3. தினமும் மாலையில் விளையாடுவேன்.
விடை : தினமும் எப்போது விளையாடுவாய்?
4. எனக்கு மட்டைப் பந்து விளையாட மிகவும் பிடிக்கும்.
விடை : உனக்கு எந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும்?
5. உயிர்களிடத்தில் அன்பாக நடந்துகொள்வேன்.
விடை : யாரிடத்தில் அன்பாக நடந்து கொள்வாய்?
9. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
ஒரு நாள் மாலை முத்துவின் வீட்டிற்கு அவனுடைய நண்பர்களான கென்னடியும் அன்வரும் விளையாட வந்தனர். பிறந்து சில நாள்களே ஆன நான்கு நாய்க் குட்டிகளைத் தோட்டத்தில் கண்டனர். நாய்க் குட்டிகளைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்ல விரும்பினர். இருவரும் ஆளுக்கொரு நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டனர். முத்து அவர்களிடம், “நண்பர்களே, பால் குடிக்கும் இந்தக் குட்டிகளைத் தாயிடமிருந்துபிரிக்க வேண்டா. நம்மை நம் பெற்றோரிடமிருந்து யாராவது பிரித்தால் நாம் எவ்வளவு துன்பப்படுவோம், சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறினான். நண்பர்கள் அமைதியாக நாய்க்குட்டிகளைக் கீழே இறக்கி விட்டனர். நாய்க் குட்டிகள் மகிழ்ச்சியாகத் தம் தாயோடு விளையாடுவதை நண்பர்கள் மூவரும் பார்த்து மகிழ்ந்தனர்.
விடை தருக
1. முத்துவின் தோட்டத்தில் எத்தனை நாய்க்குட்டிகள் இருந்தன?
விடை : நான்கு நாய்க்குட்டிகள்.
2. நண்பர்கள் இருவரும் முத்துவின் வீட்டிற்கு எதற்காக வந்தனர்?
விடை : விளையாடுவதற்காக வந்தனர்.
3. கென்னடியும் அன்வரும் என்ன செய்ய விரும்பினர்?
விடை : நாய்க்குட்டிகளைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்ல விரும்பினர்.
4. நண்பர்களுக்கு முத்துவின் அறிவுரை என்ன?
விடை : நண்பர்களே, பால் குடிக்கும் இந்த நாய்க் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிக்க வேண்டாம். நம்மை நம் பெற்றோரிடமிருந்து யாராவது பிரித்தால் நாம் எவ்வளவு துன்பப்படுவோம். சிந்தித்துப் பாருங்கள்.
5. நண்பர்கள் நாய்க்குட்டிகளை எடுத்துச் சென்றனரா? ஏன்?
விடை : நண்பர்கள் நாய்க்குட்டிகளை எடுத்துச் செல்லவில்லை. முத்துவின் அறிவுரையால் நாய்க்குட்டியின் பெற்றோரிடமிருந்து பிரிக்க மனமில்லாமல் விட்டுச் சென்றனர்.
மொழியோடு விளையாடு
1. கண்டுபிடித்து எழுதுக.
1. மணம் மிக்க மலர்…………………
விடை : மல்லிகை
2. சிலந்திக்கு எத்தனை கால்கள்?
விடை : எட்டு
3. பந்தை அடிக்க உதவுவது…………………
விடை : மட்டை
4. பசுவின் உணவு …………………
விடை : புல்
5. மீன் பிடிக்க உதவும் …………………
விடை : வலை
6. ஒரு தின்ப ண்ட ம் ……………..
விடை : அப்பம்
2. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எழுதுக.
1. Seashore – கடற்கரை
2. Morning – காலை
3. Field – களம், நிலம்
4. Mango tree – மாமரம்
5. Cyclone – புயல்
6. Nature – இயற்கை
7. Pearl – முத்து
8. Farmer – விவசாயி
9. Project – செயல்திட்டம்
10. Circus – வித்தை
3. கலங்கரை விளக்கம் – இச்சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குக,
எ.கா
1. கலம்
விடை :
கலங்கரை விளக்கம் – கலம், கரை, கலக்கம், விளக்கம்.
4. ஒரு கதையின் முதல் தொடர் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தொடர் கூறிக்கதையை நிறைவு செய்க.
கதை தொடர் 1:
அன்று காட்டு அரசன் சிங்கத்திற்குப் பிறந்த நாள்.
விடை
அன்று காடே விழாக் கோலமாக இருந்தது. சிங்கம் அனைத்து விலங்குகளையும் துன்புறுத்தி இருந்ததால் அனைத்து விலங்குகளும் இது தான் நேரம் என்று சிங்கத்திடம் சென்று அரசே! பிறந்தநாள் அன்று எதைக் கேட்டாலும், நீங்கள் தருவீர்கள் எங்களைத் துன்புறுத்தக் கூடாது என்ற வாக்குறுதியைக் கேட்டது, சிங்கமும் அதனை ஏற்றது.
கதை தொடர் 2:
இன்சுவை பள்ளி செல்லும் வழியில் பணப்பை ஒன்றைக் கண்டெடுத்தாள்.
விடை
அதனை என்ன செய்வது என்று நினைத்தாள். அவளின் தோழி நாம் வேண்டியதை வாங்கி செலவு செய்யலாம் என்றனர். ஆனால் இன்சுவை அது தவறு. பணத்தைத் தொலைத்தார்கள் எவ்வளவு துன்பப்படுவார் என்றாள். பணம் தொலைத்தவர் கதறிக் கொண்டு அழுது கொண்டே ஓடிவந்தார். இன்சுவை பணப்பைக்குக் கொடுத்ததும் மகிழ்ந்து, அவளை வாழ்த்திச் சென்றார்.
கதை தொடர் 3:
கவியரசன் நாய், பூனை போன்ற விலங்குகளைத் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சியடைவான்.
விடை
கதை நிறைவு உயிரிரக்கம் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. ஒரு நாள் நாய் ஒன்று அவனைத் துரத்தியது. அவனைக் கடிப்பது போல வந்தது. அவன் பயந்தான் நாயின் பார்வையைப் புரிந்துக் கொண்டான். இனி யாரையும் துன்புறுத்தக் கூடாது என்று முடிவு செய்தான்.
கதை தொடர் 4:
நரி ஒன்று கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த மான்களைக் கண்டது.
விடை
கதை நிறைவு மனதில் திட்டம் ஒன்றைப் போட்டது. எப்படியாவது ஒரு மானைத் தனியே அழைத்துவரத் திட்டம் போட்டது. தந்திரமாகப் புல் அடர்ந்த இடத்தில் மறைந்து கொண்டது. ஒரு மான் தனியே வந்தது. நரி மானைப் பிடிக்கும் நேரத்தில் மற்றொரு மான் நரியைத் தள்ளிவிட்டு மானைக் காப்பாற்றியது. நரி ஏமாற்றம் அடைந்தது.
5. கடல் வளங்களைக் கண்டுபிடிப்போம்
விடை
1. சிப்பி
2. பவளம்
3. மீன்
4. முத்து
5. சங்கு
6. ஆமை
6. சரியான சொற்களை எடுத்துப் பொருத்துக
1. வீட்டுக்கு ஒரு வளர்ப்போம் (மறம் / மரம்)
2. உயிர் கொடுப்பான் தோழன் (தோழன் / தோலன்)
3. நேர்மை எப்போதும் நன்மை தரும். (நண்மை / நன்மை)
4. கொடுத்து இன்பம். மகிழ்வது (மகிழ்வது / மகிள்வது)
5. குழந்தை இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். (குழந்தை / குலந்தை)
7. பின்வரும் சொற்களைக் கொண்டு சொற்றொடர் உருவாக்கலாமா!
எ.கா:
மழை – மரம் வளர்ப்போம்,மழை பெறுவோம்
மலை – உயர்ந்து நிற்பது மலை
1. கரி – விறகை எரித்தால் கரி.
கறி – சந்தையில் உள்ளது காய்கறி.
2. தவளை – நிலத்திலும் நீரிலும் வாழ்வது தவளை.
தவலை – தவலையில் தண்ணீர் பிடித்தேன்.
3. வழி – ஊருக்கு வழி காட்டு.
வலி – எனக்குத் தலைவலி.
4. அரை – ஒன்றில் பாதி அரை.
அறை – இது சமையல் அறை.
5. மனம். – அவன் மனம் நல்ல மனம்.
மணம் – மல்லிகை மலர் மணமுடையது.
அறிந்து கொள்வோம்
கடலைக் குறிக்கும் வேறு பெயர்கள்
1. புணரி
2. ஆழி
3. சாகரம்
4. சமுத்திரம்
5. பௌவம்
6. வேலை
7. முந்நீர்
8. நீராழி
9. பெருநீர்
நிற்க அதற்குத் தக…
● என்னால் இயன்றவரை இயற்கையைக் காப்பேன்
● எனது வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்ப்பேன்
● எனது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பேன்
செயல் திட்டம்
1. கடல் படம் வரைந்து கடலின் பயன்களைப் பட்டியலிட்டு வருக.
விடை
பழமொழிகள்
(1) நூல் பல கல்.
(2) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
(3) பணம் பத்தும் செய்யும்.
(4) கூழானாலும் குளித்துக் குடி.
(5) ஒற்றுமையே உயர்வு.
(6) சிறுதுளி பெருவெள்ளம்.
(7) விளையும் பயிர் முளையிலே தெரியும்.
(8) நாய் விற்ற காசு குரைக்குமா?
(9) தனி மரம் தோப்பாகாது.
(10) தன் வினை தன்னைச் சுடும்.
(11) தோல்வியே வெற்றியின் முதல் படி.
(12) பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
(13) இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே!
(14) அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
(15) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
(16) பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
(17) பாம்பின் கால் காம்பறியும்.
(18) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
(19) ஆழமறியாமல் காலை விடாதே.
(20) ஆறிலும் சாவு நூறிலும் சாவு
2. உமது பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதைத் செயல்திட்டமாக மேற்கொள்க, புகைப்படத்துடன் எழுதி வழங்குக.
3. பழமொழிகள், புதிர்கள், விடுகதைகள் தொகுப்பு தயார் செய்க.
விடை
(i) பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?
விடை : சீப்பு
ஒற்றைக் கால் குள்ளனுக்கு எட்டு கை. அது என்ன?
விடை : குடை
(iii) அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன?
விடை : தண்ணீர்
(iv) ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?
விடை : மரம்
(v) வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?
விடை : மழை
(vi) பூமியிலே பிறக்கும் புகையாய் போகும். அது என்ன?
விடை : பெட்ரோல்
(vii) முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
விடை : நாக்கு
(viii) மண்டையில் போட்டால் மகிழ்ந்து சிரிப்பான். அது என்ன?
விடை : தேங்காய்
கற்பவை கற்றபின்
1. தொடரின் அமைப்பு முறையை அறிந்து கூறுக.
விடை
தொடர் அமைப்பில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் கட்டாயம் இடம்பெற வேண்டும். பயனிலை இல்லாமல் தொடர் சில நேரத்தில் அமையலாம். எ.கா. தரணி பாடல் பாடினான்.
2. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் தொடரில் சில இடங்களில் வருவதையும், அவை வராமல் தொடர் அமைவதையும் குறித்துக் கலந்துரையாடுக.
விடை
● தென்றல் நடனம் ஆடினாள் என்ற தொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் தொடரில் வரும்.
● எழுவாய் இல்லாமல் தொடர் அமையும். எ.கா: நடனம் ஆடினாள்.
● செயப்படுபொருள் இல்லாமல் தொடர் அமையும். எ.கா. தென்றல் ஆடினாள்.
● பயனிலை இல்லாமல் தொடர் அமையாது.
அகரமுதலி
1. அம்மி – அரைக்கும் கல்
2. அலுப்பு – களைப்பு
3. ஆல் – ஆலமரம்
4. இளகிய – இரக்கமுள்ள
5. இம்மை – இப்பிறப்பு
6. இன்னல் – துன்பம்
7. எஞ்சியிருந்த – மீதியிருந்த
8. கலகம் – சண்டை
9. களர்நிலம் – பயிர் செய்ய உதவாத நிலம்
10. கழை – கரும்பு
11. குயவர் – மண்பாண்டம் செய்பவர்
12. குளிரிள – குளிர்ச்சியான
13. சாதம் – சோறு
14. செருக்கு – தலைக்கனம்
15. நனிபசு – மிகுதியாகப் பால் தரும் பசு
16. நெசவாளர் – துணி நெய்பவர்
17. பஞ்சம் – வறட்சி
18. பாண்டம் – பாத்திரம்
19. புரவி – குதிரை
20. மகரம் – மீன்
21. முற்றல் – முற்றிய காய்
22. விவாதம் – சொற்போர்