தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம்
கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே?
இயல் ஒன்று
பாடல்
அறிவியல் / தொழில்நுட்பம்
கற்றல் நோக்கங்கள்
❖ அறிவியல் விழிப்புணர்வுப் பாடல்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்
❖ சுற்றுப்புறத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் பின்புலம் உள்ளதை அறிந்துகொள்ளுதல்
❖ அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தவர்களையும் தெரிந்துகொள்ளல்
❖ காரணகாரியங்களை அறிவியல் மனப்பான்மையுடன் அணுகுதல்
❖ மூவிடப்பெயர்களை அறிந்துகொண்டு, உரிய இடங்களில் பயன்படுத்துதல்
எதனாலே, எதனாலே?
எதனாலே, எதனாலே?
பலவண்ண வானவில் எதனாலே?
விண்மீன் ஒளிர்வது எதனாலே?
ரோஜாப்பூ சிவப்பது எதனாலே?
இலைகள் உதிர்வது எதனாலே?
மின்மினி மின்னுவது எதனாலே?
பறவைகள் பறப்பது எதனாலே?
மின்னல் மின்னுவது எதனாலே?
மேகம் கறுப்பது எதனாலே?
கடலில் அலைகள் எதனாலே?
அனைத்தின் காரணம் கண்டறிந்தால்
அறிஞனாகலாம் அதனாலே
பாடல் பொருள்
ஏன், எதற்கு, எப்படி என்னும் அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களைக் காரணகாரியங்களுடன் விளக்க முற்படுகிறது.
● வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும்போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது,
● விண்மீன்கள், தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன.
● ரோஜாப்பூவில் ‘ஆந்தோசைனின்’ என்ற நிறமி இருப்பதால், சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது.
● கோடைக்காலங்களில் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகத் தாவரங்களிலிருந்து இலைகள் உதிர்கின்றன.
● மின்மினிப் பூச்சிகளின் பின்னால் அடிக்கடி விளக்கு எரிவதைப் போல் மின்னுகின்றன. காரணம், லூசிஃபெரேஸ் என்சைம் மின்மினிப்பூச்சி பின்னால் இருப்பதால் மின்னுகிறது.
● பறவைகள், பறக்கக் காரணம் அவற்றின் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. அவை, பறப்பதற்கு உதவுகின்றன.
● மின்னிறக்கத்தால் மின்னல் மின்னுகிறது.
● மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால், சூரிய ஒளி ஊடுருவ முடியாது. ஆதலால், மேகம் கறுப்பாகத் தோன்றுகிறது.
● பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. பொருத்துக
1. விண்மீன் – உதிரும்
2. ரோஜாப்பூ – பறக்கும்
3. மேகம் – ஒளிரும்
4. இலை – சிவக்கும்
5. பறவை – கறுத்திருக்கும்
விடை :
1. விண்மீன் – ஒளிரும்
2. ரோஜாப்பூ – சிவக்கும்
3. மேகம் – கறுத்திருக்கும்
4. இலை – உதிரும்
5. பறவை – பறக்கும்
ஆ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. வானவில் எப்படி தோன்றுகிறது?
விடை
வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும் போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.
2. கடலில் ஏன் அலைகள் உண்டாகின்றன?
விடை
பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.
இ. சிந்தனை வினா
நாம் வாழும் பூமி, சுழன்று கொண்டேயிருக்கிறது. ஆனால், அதில் வாழும் நாம் சுழல்வதில்லை. ஏன்? விடை காண்போமா?
விடை
(i) நாமும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் (பெருங்கடல்கள் மற்றும் காற்று மண்டலம் உட்பட) பூமியுடனேயே சேர்ந்து, பூமி சுழலும் அதே வேகத்திலேயே சுழல்வதால், நமது சுழற்சியை நாம் உணர்வதில்லை.
(ii) நாம் ஒரு காரில் வேகமாகச் செல்லும் போது, நாம் நமது இருக்கையிலிருந்து நகர்கிறோமா? பூமி சட்டென்று சுழல்வதை நிறுத்தினால் மட்டுமே, நம்மால் அதை உணர முடியும். ஆனால் அது முடியாத செயல்.
அறிந்து கொள்வோமா?
மோட்டார் வண்டி உருவான கதை
தந்தையுடன் சிறுவன் ஒருவன் தெருவில் சென்று கொண்டிருந்தான். எதிரில், ஒரு வண்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த வண்டியை மாடும் இழுக்கவில்லை; குதிரையும் இழுக்கவில்லை. அதைப் பார்த்த சிறுவனுக்கு வியப்பு ஏற்பட்டது. அப்பாவிடம் அதைப் பற்றிக் கூறினான். அதுமட்டுமின்றி, அந்த வண்டியோட்டியிடமும் சென்று வண்டியைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டான். அந்த வண்டியின் பெயர் ரோடு – என்ஜின் எனவும் அது, நீராவியால் ஓடுகிறது எனவும் அறிந்துகொண்டான். அன்றே அந்தச் சிறுவனுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. மனிதர்களை ஓட்டிச் செல்லக்கூடிய வண்டிகளைச் செய்து, அவை மிக வேகமாக ஓடுமாறு செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
பெரியவனானதும் ஓர் இயந்திரத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான். பகலில் அங்கு வேலை செய்வான். இரவில், வேகமாக ஓடும் வண்டியை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிடுவான். பல நாள் செய்த முயற்சி ஒரு நாள் வெற்றி பெற்றது. ஆம். 1983இல் மோட்டார் வண்டி கண்டுபிடிக்கப்பட்டது. அன்று மோட்டார் வண்டியைக் கண்டுபிடிக்க அயராது முயற்சி செய்து வெற்றி கண்ட அந்தச் சிறுவன்தான், அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி போர்ட் என்பவர். தாமே சொந்தமாக மோட்டார் தொழிற்சாலையொன்றை நிறுவி, ஆயிரக்கணக்கான மோட்டார்களை உருவாக்கினார். ‘மோட்டார் மன்னன்’ என்று உலகமே அவரைப் புகழ்ந்தது. அவருடைய தொழிற்சாலையில் உருவான மோட்டார் கார்கள் உலகப் புகழ் பெற்றன.
இளம் வயதிலிருந்தே புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என எண்ணும் எண்ணத்தை நாம் வளர்த்துக்கொண்டால், முடியாததனையும் முடித்துக்காட்டலாம். விடாமுயற்சியும் கடின உழைப்பும் நம்மை மென்மேலும் உயர்த்தும்.
கற்பவை கற்றபின்
● பாடலைப் புரிந்துகொண்டு பாடுக.
● அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வினாக்களுக்கு விடை அறிந்துகொள்க,
● பாடலில் உள்ளதுபோல், வேறு சில வினாக்களுக்குரிய விடைகளை அறிய முயல்க.