தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை
துணைப்பாடம் : தப்பிப் பிழைத்த மான்
இயல் மூன்று
துணைப்பாடம்
தப்பிப் பிழைத்த மான்
கா… கா….
காகம் கரைந்து தன் நண்பனான மானைத் தேடியபடி அழைத்தது
இதோ வந்துவிட்டேன் என்று கூறியபடி துள்ளிக் குதித்து ஓடி வந்தது மான்.
காகம் : நண்பா! நலமாக இருக்கிறாயா?
மான் : ஏதோ இருக்கிறேன் நண்பா .
காகம் : குரலில் உற்சாகமில்லையே…. ஏன் சோர் வாகப் பேசுகிறாய்?
மான் : எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது.
காகம் : என்னோடு வா. உனக்குப் புல் உள்ள இடங்களை காட்டுகிறேன். அங்கு நீ வயிறாரப் புல்லை மேயலாம்.
மான் : நீ என்மேல் மிகவும் அன்பாக இருக்கிறாய். தினமும் எனக்காக அலைந்து திரிந்து புல்லுள்ள இடங்களைக் கண்டறிந்து வந்து என்னிடம் கூறுகிறாய். நன்றி நண்பா…..
காகம் : நன்றியெல்லாம் கூறத் தேவையில்லை எனக்குச் சோர்வான நேரத்தில் உன்மீது அமர்ந்து பயணம் செய்கிறேன். நாமிருவரும் நெடுநாள் நண்பர்கள். ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்பது இது ஒன்றும் புதிதல்லவே……
மான் : சரி நண்பா ! பேசிக் கொண்டே நெடுந்தூரம் வந்துவிட்டோம். இங்கேயே இன்றைய உணவை உண்டுவிட்டு இருப்பிடம் செல்வோம்.
காகமும் மானும் நல்ல நண்பர்களாக நெடுநாள்கள் இணைந்திருப்பதை நரி ஒன்று கவனித்தது. தன் மனத்திற்குள், கொழு கொழுவென இருக்கும் இந்த மானை நாம் எப்படியாவது கொன்று தின்றுவிட வேண்டும். அதற்கு, எப்பொழுதும் இணைந்தே இருக்கும் இவர்கள் இருவரையும் தனித்தனியே பிரிக்கவேண்டும். அப்போதுதான், மானை இரையாக்க முடியும் என எண்ணியது.
நரி : என்ன தோழர்களே…. எப்பொழுதும் இணைந்தே இருக்கிறீர்கள்….. என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்வீர்களா?
மான் : அதற்கென்ன…. இன்று முதல் நீயும் எங்கள் நண்பனாக எங்களோடு சேர்ந்திருக்கலாம்.
நரி : நன்றி!
காகம் : சரி நேரமாகி விட்டது. இருப்பிடம் செல்லலாம்.
நரி, தன் இருப்பிடம் நோக்கிச் சென்று விடுகிறது
காகம் : நண்பா, யாரையும் சீக்கிரமாக நம்பிவிடாதே! அது நமக்குத் தான் ஆபத்து.
மான் : அப்படியெல்லாம் எந்த ஆபத்தும் வந்துவிடாது. நரியைப் பார்த்தால் நல்லவனாக நல்ல குணமாகத்தான் தெரிகிறது.
காகம் : கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரிப்பதே மெய்.
மான் : ஐயா! கருத்து கந்தசாமி ! பேசியது போதும். வீட்டிற்குச் செல். நானும் என், இருப்பிடம் செல்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.
அடுத்த நாள் காலை நரி மானை சந்திக்கிறது.
நரி : நண்பனே! நலமா?
மான் : அடடே ! நரியா? என்ன இவ்வளவு காலையில் என்னைத் தேடி வந்திருக்கிறாய்?
நரி : நண்பனைப் பார்க்க நேரம் காலம் ஏது? உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
மான் : ஏன் எனக்கு என்ன? என்னைப் பார்த்து ஏன் பரிதாபப்படுகிறாய்?
நரி : உடல் மெலிந்து காணப்படுகிறாயே…. சரியான உணவு கிடைக்காததால் கொழு கொழுவென இருக்க வேண்டிய நீ பஞ்சத்தில் அடிபட்டாற்போல் இருக்கிறாய்…..
மான் : விலங்குகளுக்குமே இதே உணவுப் பற்றாக்குறைதான். வானம் பொய்த்ததால் வனமெல்லாம் பாலைவனமாக மாறி வருகிறதே.
நரி : பிற விலங்குகளைப் பற்றி நமக்கென்ன கவலை?
எனக்குத் தெரிந்த இடம் ஒன்று இருக்கிறது. அங்கே உனக்கு நல்ல மேய்ச்சல் நிலம் உண்டு என்னோடு வா உனக்கு மட்டும் அந்த இடத்தைக் காட்டுகிறேன்.
மான் : நமது நண்பன் காகமும் வரட்டும்……
நரி : காகத்தை மற்றொரு நாள் அங்கே அழைத்துச் செல்லலாம். இன்று நீ மட்டும் என்னோடு வா.
மான் : சரி, இவ்வளவு வலியுறுத்திச் சொல்கிறாய். வருகிறேன்.
நரி, மானை விவசாயி ஒருவனின் விளைச்சல் நிலத்தில் கொண்டு விடுகிறது. மான் பயிரை நன்கு மேய்ந்து பசியாறிய பிறகு இருப்பிடத்திற்குத் திரும்புகிறது. இச்செயல் காகத்திற்குத் தெரியாமலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
விவசாயி தன் விளைச்சலைப் பாழாக்கும் விலங்கைப் பிடிக்க முடிவு செய்கிறான்.
அடுத்த நாள் வழக்கம் போல் மான் நரியோடு அந்த வயலுக்குச் சென்று பயிரை மேய்கிறது. அந்த நேரத்தில் விவசாயி வருவதைப் பார்த்தவுடன், தப்பிக்க நினைத்த மான், வேகமாக ஓடும்போது அருகிலிருந்த கம்பிவேலியில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்கிறது.
இதையறிந்த நரி, எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு வந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தது. மானை அப்படியே தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போய் அருகிலுள்ள கரும்பு வயலில் மறைந்து கொண்டு நடக்க இருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தது.
காகம் : நண்பா…. நண்பா… எங்கே இருக்கிறாய்?
காகம் தேடி வருகிறது
என் ஆருயிர் நண்பா ! இங்கேயா இருக்கிறாய்? ஆ! வேலியில் மாட்டிக்கொண்டாயே கத்துவதற்குக்கூட முடியாத நிலையில் இப்படி கம்பிவேலியில் சிக்கிக் கொண்டாயே.
சரி, சரி நீ தப்பித்துக் கொள்ள ஒரு யோசனை சொல்கிறேன். விவசாயி அருகில் வரும்வரை நீ இறந்ததுபோல் அசையாமல் இரு விவசாயி உன்னை வேலியிலிருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து கா கா “கா என்று குரல் கொடுக்கிறேன், உடனே தப்பித்து விடு.
விவசாயி : ஓ…. மானா? நீ தான் இத்தனை நாளாக என் பயிரை நாசப் படுத்தினாயா? இன்று வேலியில் மாட்டிக்கொண்டாய் என்று கூறியவாறே மானைப் பிடிக்க வருகிறான். ஓ.. இறந்துவிட்டதுபோல் இருக்கிறதே! சரி, வேலியிலிருந்து மானை விடுவித்து வீட்டிற்கு எடுத்துச் செல்வோம் என்று சொல்லிக்கொண்டே வேலியிலிருந்து மானை விடுவிக்கிறான்.
அப்போது, காகம் கரைகிறது, அதுவரை இறந்தவாறு நடித்துக்கொண்டிருந்த மான் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் பிழைத்தால் போதும் எனத் துள்ளிப் பாய்ந்து வேகமாக ஓடியது.
விவசாயி : அடடே..மான் என்னை ஏமாற்றிவிட்டதே!
தன் நீண்ட தடியை எடுத்து, ஓடும் மானை நோக்கி வேகமாக வீசுகிறான். அந்தத் தடி பதுங்கியிருந்த நரியின்மேல் பட்டு, நரி மயங்கிக் கீழே விழுகிறது. விவசாயி ஏமாந்து போகிறான்.
சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்து எழுந்த நரியிடம்,
காகம் : நரியே ! உன் வஞ்சக எண்ணம் உனக்கே கேடாக முடிந்தது. நம்பினவர்களுக்கு என்றும் துரோகம் செய்யாதே !
நரி : வெட்கித் தலைகுனிந்தவாறே மன்னித்துவிடு நண்பா! இனிமேல் இப்படி நடந்து கொள்ளமாட்டேன்.
காகம் : தன்னைப் போல் பிறரையும் நேசிக்க வேண்டும். நண்பர்களோடு உண்மை அன்புடன் பழக வேண்டும்.
நீதி : ‘ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்‘
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க.
1. நரி, காகத்திடமிருந்து ஏன் மானைப் பிரிக்க எண்ணியது?
விடை
காகமும் மானும் இணைபிரியாத நண்பர்கள், அவர்களைப் பிரித்து மானைக் கொன்று தின்றுவிட வேண்டும் என எண்ணி நரி, காகத்திடம் இருந்து மானைப் பிரித்தது.
2. நரியை நண்பனாக ஏற்றுக்கொண்ட மானிடம் காகம் கூறியதென்ன?
விடை
நரியை நண்பனாக ஏற்றுக் கொண்ட மானிடம், “நண்பா, யாரையும் நம்பிவிடாதே! அது நமக்குத்தான் ஆபத்து” என்று காகம் கூறியது. மேலும் “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்றது.
3. நரி, மானை எங்கு அழைத்துச் சென்றது?
விடை
நரி, மானை விவசாயி ஒருவரின் விளைச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றது.
4. வேலியில் மாட்டிக்கொண்ட மானைக் காகம் எவ்வாறு காப்பாற்றியது?
விடை
விவசாயி அருகில் வரும் வரை நீ இறந்தது போல அசையாமல் இரு. விவசாயி உன்னை வலையில் இருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து ‘கா கா’ என்று குரல் கொடுக்கிறேன். உடனே தப்பித்து விடு என்றது காகம். அதன்படி மான் நடந்து கொண்டு நடித்தது. வேடன் விடுவித்தவுடன் காகம் கரைய மான் ஓடியது.
5. ‘தப்பிப் பிழைத்த மான்‘ கதையிலிருந்து நீங்கள் அறிந்துகொண்ட நீதி யாது?
விடை
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்.
சிந்தனை வினா
நமக்கு நண்பர்களாக இருப்பவர்களிடம் என்னென்ன நற்குணங்கள் இருக்கவேண்டும்? பட்டியலிடுக.
விடை
அன்பு, உண்மை , நல்லொழுக்கம், இரக்கம், மனிதநேயம், சகிப்புத் தன்மை , சினம் கொள்ளாமை, ஈகை குணம் ஆகிய நற்குணங்கள் இருக்க வேண்டும்.
கற்பவை கற்றபின்
1. ஆபத்தில் உதவுபவர்களே உண்மையான நண்பர்கள் என்னும் தலைப்பில் பேசுக.
விடை
தமிழ்த் தாயே வணக்கம்!
ஆபத்தில் உதவுபவர்களே உண்மையான நண்பர்கள் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். நட்பு என்பது சிரித்து பேசி மகிழ்வதற்கு மட்டுமே அல்ல. துன்பம் வருகின்ற போதும், ஆபத்து வருகின்ற போதும் உடன் இருப்பது தான் உண்மையான நட்பாகும். எதிர்பாராத விதமாக ஏதாவது சண்டையில் மாட்டிக் கொண்டால், நண்பனை இவன் யார் என்று எனக்குத் தெரியாது என்று ஓடிவிடுபவன் நண்பனா? இல்லவே இல்லை.
அருகில் இருந்து காப்பவன் தான் உண்மையான நண்பன். கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையர் நட்பு, அதியமான் – ஔவையார் நட்பு. இவர்கள் நட்பு உலகம் போற்றும் நட்பு. ஆபத்தில் உதவிய நட்பு. ஆபத்தில் உதவுங்கள் அதுதான் உண்மையான நட்பு.
நன்றி!
2. தீயோருடன் கொள்ளும் நட்பு, தீமையையே தரும் என்பதற்கு வேறொரு கதையைக் கூறுக.
விடை
ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அங்கு ஒரு கொக்கும் இருந்தது. அது அந்தக் குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்துத் தின்று கொண்டிருந்தது. குளத்தில் தண்ணீர் வற்றத் தொடங்கியது.
மீன்கள் தவித்தன. கொக்கு நல்லவனைப் போல நடித்தது. தொலைவில் உள்ள ஒரு குளத்தில் நீர் இருப்பதாகவும் ஒவ்வொருவராகக் கொண்டு போய் பத்திரமாக விடுவதாகவும் சொன்னது. அதனை நம்பி மீன்களும் கொக்கு ஒவ்வொருவரையும் தினமும் கொண்டு சென்றது.
ஒருநாள் இந்தக் குளத்தில் வசித்த நண்டு மீன்களிடம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கொக்கிடம் நட்பு கொண்டன. கொக்கு “இந்த முறை என்னை அந்தக் குளத்தில் கொண்டுபோய் விட்டுவிடு” என்று கொக்கிடம் சொல்லி, அதன் மீது ஏறிக் கொண்டது. ஒரு மலையைத் தாண்டிச் செல்லும் போது கீழே மீன் முள்கள் நிறைய கிடந்தன. மீன்களைக் குளத்தில் விடாமல் கொக்கு தின்றதை அறிந்தது.
உடனே நண்டு கொக்கின் கழுத்தை அழுத்தி தப்பித்து ஓடி, குளத்திலுள்ள மீன்களிடம் நடந்ததைச் சொன்னது.
தீய நட்பை நினைத்து மீன்கள் வருந்தின.
தீயோருடன் கொள்ளும் நட்பு, தீமையே தரும் என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்.