சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 2 : வேளாண்மை
அலகு 2
வேளாண்மை
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
❖ வேளாண்மையின் சிறப்புகளை விவரிப்பர்.
❖ வேளாண்மையின் வகைகள் மற்றும் நீர்ப்பாசனத்தின் வகைகள் பற்றிப் புரிந்து கொள்வர்.
❖ தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பல்வேறு பயிர்களைப் பற்றித் தெரிந்து கொள்வர்.
அறிமுகம்
வேளாண்மை என்பது சாகுபடிக்கு மண்ணை உழுதல்,பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய கலை மற்றும் அறிவியல் ஆகும். இது மனிதகுலத்திற்கு இன்றியமையாததாக விளங்குகிறது. விவசாயம் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இந்தியா, ஒரு விவசாய நாடு. நமது தேசிய வருமானத்தில்,
மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திலிருந்து கிடைக்கிறது. வேளாண் வளர்ச்சி நம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
இந்தியாவில் உள்ள விவசாயிகள்
விவசாயி என்பவர், உணவு அல்லது மூலப்பொருள்களுக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார். இந்தியா, விவசாயிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், பெரும்பான்மையான இந்தியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாவர்.
ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தில் பயிரிடும் விவசாயிகள், குறு விவசாயிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
வேளாண்மையின் வகைகள்
வேளாண்மையில் பல வகைகள் உள்ளன.
• தன்னிறைவு வேளாண்மை
• வணிக வேளாண்மை
• தோட்ட வேளாண்மை
• கலப்புப் பொருளாதார வேளாண்மை
தன்னிறைவு வேளாண்மை
தன்னிறைவு வேளாண்மையில், முழு உற்பத்தியும் குடும்ப நுகர்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை விவசாயம் சிறு மற்றும் குறு விவசாயிகளால் துண்டு துண்டான நிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் பின்பற்றப்படும் விவசாய முறைகள் தொன்மையானவை (Archaic).
வணிக வேளாண்மை
வணிக வேளாண்மை முற்றிலும் தன்னிறைவு வேளாண்மைக்கு நோக்கம் மாறுபட்டதாகும். இதன் சந்தையில் பொருள்களை விற்பனை செய்வதாகும். இவ்வகை வேளாண்மை நவீன கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
தோட்ட வேளாண்மை
ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப்பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவது தோட்ட வேளாண்மையாகும். எடுத்துக்காட்டுகள்: தேயிலை, காபி, இரப்பர்.
கலப்புப் பொருளாதார வேளாண்மை
கலப்புப் பொருளாதார வேளாண்மை என்பது, பயிர்களைப் பயிரிடுவதோடு மட்டுமல்லாமல்விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது. கலப்பு விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்தவர்களாக உள்ளனர்.
நாம் அறிந்து கொள்வோம்.
விவசாய விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை நியாயமான விலையில் நேரடியாக வாங்க இந்திய உணவுக் கழகம் போன்ற நிறுவனங்களை அரசு அமைத்துள்ளது.
செயல்பாடு
நாம் செய்வோம்.
விவசாயிக்கு அவரின் பண்ணையைக் கண்டுபிடிக்க உதவுக.
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான இடைத்தரகர்களை நீக்குவதற்காக, தமிழக அரசு உழவர் சந்தையை அறிமுகப்படுத்தியது.
விவசாயத்திற்கான நீர்வளம்
தமிழகத்தில் வற்றாத (Perennial) நதிகள் எவையும் பாயவில்லை. வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையின் மூலம் தேவையான தண்ணீரைத் தமிழகம் பெறுகிறது. தமிழ்நாட்டில் விவசாயம் பெரும்பாலும் நிலத்தடி நீரைச் சார்ந்தே நடைபெறுகிறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
நீர்ப்பாசனம்
வேளாண் உற்பத்திக்காக நிலத்திற்கு நீர் செயற்கையாகப் பாய்ச்சப்படுவது நீர்ப்பாசனம் ஆகும்.
நீர்ப்பாசனத்தின் வகைகள்
• கிணற்று நீர்ப்பாசனம்
• கால்வாய் நீர்ப்பாசனம்
• தெளிப்பானை நீர்ப்பாசனம்
• சொட்டு நீர்ப்பாசனம்
கிணற்று நீர்ப்பாசனம்
பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் கிணற்று நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வகைப் பாசனம் மிகவும் மலிவான பாசன முறையாகும்.
கால்வாய் நீர்ப்பாசனம்
கால்வாய் நீர்ப்பாசனம் என்பது, இந்தியாவில் பின்பற்றப்படும் மிக முக்கியமான நீர்ப்பாசனமாகும். வடஇந்தியாவில் உள்ள பெரும்பாலான கால்வாய்கள் வற்றாதவை. இந்தியாவின் வடக்குச் சமவெளிகளான உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற பகுதிகளில் கால்வாய் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.
பசுமைப்புரட்சி என்பது, புதிய வகை விதைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய முறைகளைப் பயன்படுத்திப் பயிர் உற்பத்தியில் மகசூல் அதிகரிக்க கொண்டுவந்த ஒரு செயல்முறையாகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த Dr.M.S. சுவாமிநாதன் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
தெளிப்பானை நீர்ப்பாசனம்
தெளிப்பானை நீர்ப்பாசனம் என்பது மழைப்பொழிவு போன்ற நீர்ப்பாசன முறையாகும். குழாய்கள் மூலம் தெளிப்பான்கள் வழியாக நீர் மழைப்போன்று தெளிக்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம்
சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும். இம்முறையானது, நீர் மற்றும் மண்ணின் ஊட்டச்சத்துகளைச் சேமிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த நீர்ப்பாசன முறையில் நீரானது குழாய்களின் மூலம் தாவரங்களின் வேர்களில் மெதுவாகச் சொட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் மண்ணின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்புக்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும். இதனால், நீர் ஆவியாவது குறைகிறது (Minimize).
செயல்பாடு நாம் செய்வோம்.
(இழுவை இயந்திரம், தூற்றி, விவசாயி)
பின்வருவனவற்றைக் கண்டுபிடிக்க.
1. நமக்காக உணவை உற்பத்தி செய்பவர். வி —- ——— யி
2. இது உழுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இ ———- வை இ —— ——– ———- ———– ம்
3. இது வைக்கோலில் இருந்து தானியங்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தூ ——— றி
நாம் அறிந்து, கொள்வோம்.
கால்நடை வளர்ப்பு என்பது வேளாண்மையின் ஒரு பிரிவாகும். இறைச்சி, உரோமம், பால், முட்டை மற்றும் பிற பொருள்களுக்காக விலங்குகள் வளர்க்கப்படுகின்றன.
தோட்டக்கலை என்பது பழங்கள், காய்கறிகள், பூக்கள் அல்லது அலங்காரத் தாவரங்களை வளர்ப்பது பற்றிய கலை அல்லது அறிவியல் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பயிர்கள்
தமிழ்நாடு, வெவ்வேறு வேளாண் காலநிலைகள் மற்றும் மாறுபட்ட மண் வகைகளைக் கொண்டுள்ளது. இது பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருள்கள், தோட்டப் பயிர்கள், பூக்கள், மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் உற்பத்திக்கு ஏற்றதாகும். தமிழ்நாட்டில் தோட்டக்கலை வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் துறையாகும்
நெல் அதிகமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில், அரிசி மாநிலத்தின் முக்கிய உணவாகும்
அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் (கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பச்சைப் பயறு, உளுத்தம் பருப்பு மற்றும் கொள்ளுப் பயறு) ஆகியவை முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும்.
பணப்பயிர்களில் பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துகள், காபி, தேயிலை, இரப்பர், தேங்காய், எள் மற்றும் மிளகாய் ஆகியவை அடங்கும்.
மாம்பழம் மற்றும் வாழைப்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர்கள் ஆகும்.
மல்லிகை, செவ்வந்திப்பூ, சாமந்திப்பூ மற்றும் ரோஜா ஆகியவை தமிழகத்தில் வளர்க்கப்படும் முக்கிய பூ வகைகளாகும்.
காவிரி டெல்டாவில் அமைந்துள்ள ஒரு முக்கியமான வேளாண் மையம் தஞ்சாவூர் ஆகும். இது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
சிந்தனை செய்
இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
நாம் அறிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டின் பருவப் பயிர்கள்.
• நவரை
• சொர்ணவாரி
• கார்
• குருவை
• சம்பா
• தாளடி
தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
கலைச்சொற்கள்
1. Archaic : தொன்மையின
2. Minimize : குறைதல்
3. Perennial : வற்றாவளம்
மீள்பார்வை
• இந்தியா ஒரு விவசாய நாடு.
• இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாவர்.
• இந்தியாவில் பல வகையான விவசாய முறைகள் உள்ளன.
• நீர்ப்பாசனத்தில் நான்கு அடிப்படை பாசன வகைகள் உள்ளன.
• அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் ஆகியவைவை முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும்.
வினா விடை
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1) ———— என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதாகும்.
அ) நீர்ப்பாசனம்
ஆ) வேளாண்மை
இ) அகழ்வாராய்ச்சி
விடை: ஆ) வேளாண்மை
2) —————- என்பவர் உணவு அல்லது மூலப்பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கிறார்.
அ) மருத்துவர்
ஆ) ஆசிரியர்
இ) விவசாயி
விடை: இ) விவசாயி
3. ————– வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.
அ) வணிக
ஆ) கலப்புப் பொருளாதார
இ) தன்னிறைவு
விடை: ஆ) கலப்புப் பொருளாதார
4) ————– நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.
அ) மத்திய நிலத்தடி நீர் வாரியம்
ஆ) மெட்ரோ நீர் வாரியம்
இ) யூனியன் குடிநீர் வாரியம்
விடை: அ) மத்திய நிலத்தடி நீர் வாரியம்
5) தமிழகத்தில் உள்ள ————. மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
அ) கோயம்புத்தூர்
ஆ) சென்னை
இ) கடலூர்
விடை: அ) கோயம்புத்தூர்
II. பொருத்துக
1 தோட்ட வேளாண்மை – விலங்குகளை வளர்ப்பது
2 கலப்புப் பொருளாதார வேளாண்மை – பழைமையான முறை
3 வணிக வேளாண்மை – ஒற்றைப் பண பயிர்
4 கிணற்று நீர்ப்பாசனம் – குடும்ப நுகர்வு
5 தன்னிறைவு வேளாண்மை – விற்பனை நோக்கம்
விடை :
1 தோட்ட வேளாண்மை – ஒற்றைப் பண பயிர்
2 கலப்புப் பொருளாதார வேளாண்மை – விலங்குகளை வளர்ப்பது
3 வணிக வேளாண்மை – விற்பனை நோக்கம்
4 கிணற்று நீர்ப்பாசனம் – பழைமையான முறை
5 தன்னிறைவு வேளாண்மை – குடும்ப நுகர்வு
III. சரியா தவறா?
1) தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும். (விடை: சரி)
2) தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன. (விடை : தவறு)
3) சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும். (விடை: சரி)
4) தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும். விடை : தவறு)
5) மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும். (விடை: சரி)
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1. வேளாண்மை என்றால் என்ன?
வேளாண்மை என்பது சாகுபடிக்கு மண்ணை உழுதல், பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய கலை மற்றும் அறிவியல் ஆகும்.
2. விவசாயிகளைப் பற்றி எழுதுக.
• விவசாயி என்பவர், உணவு அல்லது மூலப் பொருட்களுக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார்.
• இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெழும்பு ஆவார்.
3. வேளாண்மையின் வகைகளைக் கூறுக.
• தன்னிறைவு வேளாண்மை.
• வணிக வேளாண்மை.
• தோட்ட வேளாண்மை.
• கலப்புப் பொருளாதார வேளாண்மை.
4. கிணற்று நீர்ப்பாசனம் என்றால் என்ன?
• கிண்ற்றில் கிடைக்கும் ஊற்றுநீர் மூலம் விவசாயம் செய்வதையே கிணற்றுநீர் பாசனம் என்கிறோம்.
• இது பழமையான முறையாகும்.
5. மத்திய நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்கானித்து வருகிறது.
V விரிவான விடையளிக்க.
1. கலப்புப் பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி எழுதுக.
• கலப்புப் பொருளாதார வேளாண்மை என்பது பயிர்களைப் பயிரிடுவதோடு மட்டுமில்லாமல் விலங்குகளையும் வளர்ப்பதாகும்.
• இதில் விவசாயிகள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வாய்ப்பு உள்ளது.
• தோட்ட வேளாண்மை என்பது ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப் பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவதாகும். • எ.கா: தேயிலை, காபி, இரப்பர்.
2. ஏதேனும் இரண்டு வகையான நீர்ப்பாசன முறைகளைப் பற்றி விவரி.
கால்வாய் நீர்ப்பாசனம்:
• இந்தியாவில் உள்ள சில வற்றாத கால்வாய்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பாசனம் கால்வாய் பாசனமாகும்.
•உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பீஹார் போன்ற பகுதிகளில் கால்வாய் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம்:
• சொட்டு நீர்ப்பாசனம் என்பது தாவரங்களின் வேர்களில், நீர் மெதுவாகச் சொட்டுமாறு அமைக்கப்படுவதாகும். இது நுண் பாசன முறையாகும்.
• இதனால் நீர் ஆவியாதல் குறைகிறது.
3. தமிழகத்தின் முக்கிய பயிர்களைப் பற்றி விவரி.
• நெல் தமிழகத்தின் அதிகமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில் அரிசி முக்கிய உணவுப் பொருளாகும்.
• அரிசி, மக்காச்சோளம். கம்பு, சோளம். கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன.
• பணப் பயிர்களான பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள், காபி, இரப்பர், தேயிலை, தேங்காய் எள் மற்றும் மிளகாய் போன்றவை பயிரிடப்படுகின்றன.
• மல்லிகை, செவ்வந்திப்பூ, சாமந்திப்பூ மற்றும் ரோஜா போன்ற மலர்களும் பயிரிடப்படுகின்றன.
செயல்பாடு
செயல் திட்டம்
• அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் போன்ற சில தானியங்களைச் சேகரிக்க.
• அவற்றைச் சிறிய பொட்டலங்களில் இடுக.
• ஓர் அட்டவணையில் அனைத்து பொட்டலங்களையும் பொருத்துக.