சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 1 : கோட்டைகளும் அரண்மனைகளும்
அலகு 1
கோட்டைகளும் அரண்மனைகளும்
![](https://www.brainkart.in/media/tamimg45/72wXVNx.jpg)
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
❖ தமிழ்நாட்டின் கோட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வர்.
❖ தமிழ்நாட்டிலுள்ள அரண்மனைகளைப் பற்றி அறிந்து கொள்வர்.
❖ தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் மற்றும் அரண்மனைகளின் வரலாற்றைப் பற்றி விவரிப்பர்.
![](https://www.brainkart.in/media/tamimg45/jplERjp.jpg)
அறிமுகம்
தமிழகத்தை மன்னர் பலர் சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களுள் சேர, சோழ, பாண்டியர், பல்லவர், நாயக்கர் முதலியோர் குறிப்பிட்ட தக்கவர்கள் ஆவர்.
சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் ஆகியோர் தமிழகத்தில் அற்புதமான கோட்டைகளையும், அரண்மனைகளையும் உருவாக்கினர். டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் போன்ற அயல்நாட்டினரும் நமது நாட்டிற்குள் நுழைந்து கோட்டைகளைக் கட்டியுள்ளனர்.
கோட்டை
அந்தக் காலக் கட்டடக்கலையின் நினைவுச்சின்னங்கள் அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் பிற வரலாற்று இடங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. தற்பொழுது, சில அரண்மனைகளும் கோட்டைகளும் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. அவை, தமிழகச் சுற்றுலாவின் முக்கிய இடங்களாக விளங்குகின்றன.
![](https://www.brainkart.in/media/tamimg45/JZQR9Dr.jpg)
வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
தமிழ்நாட்டின் கோட்டைகளில், வேலூர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக கருதப்படுகிறது. இது ஆழமான மற்றும் அகலமான அகழியால்(Moat) சூழப்பட்டுள்ளது. இந்த அகழி, ஆயிரக்கணக்கான முதலைகளைக் கொண்டிருந்ததால் படையெடுப்பவர்கள் (Raiders) இதனைக் கடக்க அஞ்சினர்.
வேலூர்க் கோட்டை இராணுவக் கட்டடக்கலைக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இது இரட்டைக் கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற கோபுரங்கள், உட்புற கோபுரங்களைவிடத் தாழ்வாக உள்ளன. 1799ஆம் ஆண்டில், திப்பு சுல்தானின் குடும்பம் ஆங்கிலேயர்களால் இங்குச்சிறை வைக்கப்பட்டது. 1806ஆம் ஆண்டில் வேலூர்க் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது
.
வேலூர்க் கோட்டை
![](https://www.brainkart.in/media/tamimg45/DwGgvTQ.jpg)
வேலூர்க் கோட்டைக்குள் புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன.
நாம் அறிந்து கொள்வோம்
வேலூர்க் கோட்டையின் உள்ளே முக்கியமான ஐந்து மஹால்கள் காணப்படுகின்றன. அவையாவன:
• ஹைதர் மஹால்
• திப்பு மஹால்
• பேகம் மஹால்
• கண்டி மஹால்
• பாதுஷா மஹால்
![](https://www.brainkart.in/media/tamimg45/ONuRemh.jpg)
திண்டுக்கல் கோட்டை
தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள திண்டுக்கல் கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டை திண்டுக்கல் மலைக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது 18ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
மைசூர் அரசின் படையெடுப்பில் இருந்து தங்கள் நாட்டைக் காக்கும் பொருட்டு,மதுரை நாயக்கர்களால் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது. தற்போது இக்கோட்டையை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது.
கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் கோட்டை, இரட்டைச் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது.
![](https://www.brainkart.in/media/tamimg45/IVupaoP.jpg)
செயல்பாடு நாம் செய்வோம்.
பின்வரும் படங்களுக்குப் பெயரிடுக.
![](https://www.brainkart.in/media/tamimg45/o4fc9Nz.jpg)
(அரசர், அரசி, இளவரசர், இளவரசி)
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை ஆகும். புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது. இக்கோட்டையினுள் மாநிலத் தலைமைச் செயலகம் செயல்படுகிறது.
![](https://www.brainkart.in/media/tamimg45/QPPOjZA.jpg)
நாம் அறிந்து கொள்வோம்.
• திருமயம் கோட்டை அதன் அழகு மற்றும் கட்டடக்கலைக்காக புகழ் பெற்றது. இது தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது.
• திருமயம் கோட்டை மிகப்பெரிய பாறைக் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது
• இது ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
![](https://www.brainkart.in/media/tamimg45/TsD2nl1.jpg)
டச்சுக்காரர்களால் வணிக நோக்கங்களுக்காகக் கட்டப்பட்ட அற்புதமான கோட்டை சதுரங்கப்பட்டினம் கோட்டை ஆகும். இது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.
![](https://www.brainkart.in/media/tamimg45/H2evF7J.jpg)
செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை தமிழ்நாட்டின் அழகான கோட்டைகளில் ஒன்றாகும். இந்தக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று மலைக்குன்றுகளின் மேலே கட்டப்பட்டுள்ளது. 13 கி.மீ நீளமுள்ள கோட்டைச் சுவர்கள் மூன்று மலைக்குன்றுகளையும் இணைக்கின்றன. இக்கோட்டை 800 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி 80 அடி அகலம் கொண்ட அகழி உள்ளது.
செஞ்சிக் கோட்டை பல சிறப்பு அமைவுகளைக் கொண்டுள்ளது. அவை: திருமண மண்டபம், கோவில்கள், ஆனைக்குளம், களஞ்சியங்கள் மற்றும் கண்காணிப்புக் கோபுரம்.
![](https://www.brainkart.in/media/tamimg45/0DqLykg.jpg)
தரங்கம்பாடி கோட்டை
![](https://www.brainkart.in/media/tamimg45/r1wDuuC.jpg)
தரங்கம்பாடி கோட்டை
டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படும் தரங்கம்பாடி கோட்டை, தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் (Tranquebar) வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது.
இந்தக் கோட்டை சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. கோட்டையின் மையப் பகுதியில் நான்கு குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத் தூண் குவிமாடங்களின் முழு எடையும் தாங்குகிறது.
தமிழ்நாடு பல இடங்களில் பெரிய அரண்மனைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில அரண்மனைகள் இங்கே விவரிக்கப்படுகின்றன.
திருமலை நாயக்கர் அரண்மனை
கம்பீரமான திருமலை நாயக்கர் அரண்மனை, நாயக்கர் அரச மரபால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலைநயம்மிக்க அரண்மனை ஆகும். இது தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற அரண்மனைகளுள் ஒன்றாகும். திருமலை நாயக்கர் அரண்மனை மதுரை நகரில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்குகின்றது .
இந்த அரண்மனையின் சிறப்பம்சம் மாபெரும் தூண்கள் ஆகும். இந்த அரண்மனை தொல்பொருள் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. அரண்மனையின் முக்கிய இடங்கள் முற்றமும், நடன மண்டபமும் ஆகும்.
திருமலை நாயக்கர் அரண்மனை
![](https://www.brainkart.in/media/tamimg45/SOCfUcn.jpg)
நாம் அறிந்து கொள்வோம்.
நாயக்கர் அரச மரபைச் சேர்ந்த இராணி மங்கம்மாளின் கோடைக்கால இல்லமாகத் தமுக்கம் அரண்மனைத் திகழ்ந்தது. இது மதுரையில் அமைந்துள்ளது.
![](https://www.brainkart.in/media/tamimg45/OcwK3Xd.jpg)
செயல்பாடு
நாம் செய்வோம்.
பின்வரும் பொருள்களை அவற்றின் பெயர்களுடன் இணைத்துக்கட்டுக.
![](https://www.brainkart.in/media/tamimg45/JcTKp0V.jpg)
ஊட்டியில் உள்ள பர்ன்கில்சு அரண்மனை மைசூர் அரசர்களின் கோடைக்கால அரண்மனையாகத் திகழ்ந்தது.
![](https://www.brainkart.in/media/tamimg45/ubzNNfm.jpg)
தஞ்சாவூர் மராத்திய அரண்மனை
தஞ்சாவூர் மராத்திய அரண்மனை என்பது தஞ்சாவூர் அரண்மனை என்று பரவலாக அனைவராலும் அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மராத்திய அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் நாயக்கர் அரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது தஞ்சாவூர் மராத்தியரின் அதிகாரப்பூர்வ இல்லமாகத் திகழ்ந்தது.
தஞ்சாவூர் அரண்மனை வளாகம் ஒரு சுற்றுலாத்தலமாகும். இது, மூன்று தனித்தனி பார்வையிடங்களைக் கொண்டுள்ளது: அரண்மனை,கலைக்கூடம் மற்றும் கையெழுத்துப் பிரதி (Manuscript) நூலகம் (சரஸ்வதி மஹால்).
![](https://www.brainkart.in/media/tamimg45/AQa5shJ.jpg)
நாம் அறிந்து கொள்வோம்.
சரஸ்வதி மஹால் இந்தியாவின் பழைமையான வரலாற்று நூலகங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சரஸ்வதி மஹால் ஓர் அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது. இந்த நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், மராத்தி மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் உள்ளன.
![](https://www.brainkart.in/media/tamimg45/shoqLnn.jpg)
பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள அழகான வரலாற்று நினைவுச்சின்னமாகும். இது கல்குளம் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது
பத்மநாபபுரம் அரண்மனை கேரள கட்டடக்கலையைக் கொண்டு மரத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது கலை மற்றும் கைவினைத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
பத்மநாபபுரம் அரண்மனைகன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இராஜமாதா அரண்மனை, சபை, தெற்கு அரண்மனை போன்ற பல்வேறு பார்வையிடங்கள் உள்ளன.
![](https://www.brainkart.in/media/tamimg45/kIkToaY.jpg)
மீள்பார்வை
• அரண்மனைகளும் கோட்டைகளும் தமிழகச் சுற்றுலாவின் முக்கிய இடங்கள் ஆகும்.
• வேலூர்க் கோட்டை, இராணுவக் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
• திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய இடங்கள் முற்றமும், நடன மண்டபமும் ஆகும்.
கலைச்சொற்கள்
Manuscript : கையெழுத்துப் பிரதி
Raiders : படையெடுப்பவர்கள்
Moat : அகழி
வினா விடை
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1) ——————— கோட்டை விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.
அ) உதயகிரி
ஆ) வேலூர்
இ) செஞ்சி
விடை : ஆ) வேலூர்
2) திருமலை நாயக்கர் அரண்மனை —————– யில் அமைந்துள்ளது.
அ) சேலம்
ஆ) திருமலை
இ) மதுரை
விடை : இ) மதுரை
3) உலகின் இடைக்கால கையெழுத்துப் பிரதி நூலகங்களில்———————- மஹால் ஒன்றாகும்.
அ) சரஸ்வதி
ஆ) லட்சுமி
இ) துர்கா
விடை : அ) சரஸ்வதி
4) பத்மநாபபுரம் அரண்மனை ——————– யில் அமைந்துள்ளது.
அ) ஊட்டி
ஆ) கன்னியாகுமரி
இ) சென்னை
விடை : ஆ) கன்னியாகுமரி
5) ————————– கோட்டை, டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
அ) திண்டுக்கல்
ஆ) செஞ்சி
இ) தரங்கம்பாடி
விடை : இ) தரங்கம்பாடி
II. பொருத்துக
1 செஞ்சிக் கோட்டை புதுக்கோட்டை
2 டேனிஷ் கோட்டை – சென்னை
3 தமுக்கம் அரண்மனை – விழுப்புரம்
4 திருமயம் கோட்டை – மதுரை
5 புனித ஜார்ஜ் கோட்டை – தரங்கம்பாடி
விடை :
1 செஞ்சிக் கோட்டை விழுப்புரம்
2 டேனிஷ் கோட்டை – தரங்கம்பாடி
3 தமுக்கம் அரண்மனை – மதுரை
4 திருமயம் கோட்டை – புதுக்கோட்டை
5 புனித ஜார்ஜ் கோட்டை – சென்னை
III. சரியா தவறா?
1) தமிழகம் மன்னர் பலரால் குறிப்பாக சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. (விடை : சரி)
2) வேலூர்க் கோட்டையில் ஐந்து மஹால்கள் உள்ளன. (விடை : சரி)
3) திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது. (விடை : சரி)
4) ஊமையன் கோட்டை என்பது செஞ்சிக் கோட்டையின் மற்றொரு பெயராகும். (விடை : தவறு)
5) பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. (விடை : சரி)
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1) தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள் யாவை?
• பத்மநாபபுரம் அரண்மனை.
• தஞ்சாவூர் மராத்திய அரண்மனை.
• திருமலைநாயக்கர் அரண்மனை.
• வேலூர் கோட்டை.
• செஞ்சிக் கோட்டை.
• தரங்கம்பாடி கோட்டை.
• திண்டுக்கல் கோட்டை.
2) தரங்கம்பாடி கோட்டையைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
• வங்காள விரிகுடாவின் கரையில் தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் அமைந்துள்ளது.
• சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டது.
• கோட்டையின் மையப்பகுதியில் நான்கு குவிமாடங்கள் உள்ளன.
3) செஞ்சிக் கோட்டையின் சில சிறப்பு அமைவுகள் யாவை?
• திருமண மண்டபம்,
• கோவில்கள்,
• ஆனைக்குளம்,
• களஞ்சியங்கள் மற்றும்
• கண்கானிப்புக் கோபுரம்.
4) திருமலை நாயக்கர் அரண்மனை குறித்துச் சிறு குறிப்பு வரைக.
• மதுரை நகரில் அமைந்துள்ளது.
• நாயக்கர் அரச மரபால 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
• தொல்பொருள் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது.
• தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்
5) தஞ்சாவூர் மராத்திய அரண்மனையைக் கட்டியவர் யார்? அதன் சிறப்பமைவுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
தஞ்சாவூர் மராத்திய அரண்மனை, தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.
சிறப்பமைவுகள்:
இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.
இதில் அரண்மனை, கலைக்கூடம் மற்றும் கையெழுத்துப் பிரதி நூலகம் (சரஸ்வதி மஹால்) ஆகிய மூன்றும் அமைந்துள்ளன.
V விரிவான விடையளிக்க.
1) வேலூர்க் கோட்டையின் கட்டமைப்பை விவரி.
• 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.
• ஆழமான மற்றும் அகலமான அகழியால் சூழப்பட்டுள்ளது. • இராணுவக் கட்டடக் கலைக்கு சிறந்த ஒர் எடுத்துக்காட்டாகும்.
• இரட்டைக் கோட்டைகளாக உருவாக்கப்பட்டது.
• வெளிப்புறக் கோபுரங்கள், உட்புறக் கோபுரங்களைவிட தாழ்வாக உள்ளன.
• 1806 ஆம் ஆண்டில் வேலூர் கோட்டையில் ஆங்கியலருக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது.
2) திண்டுக்கல் கோட்டை பற்றி விரிவாக எழுதுக.
• திண்டுக்கல் கோட்டை 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
• இது மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது.
• இதை இந்திய தொல் பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது.
• இது கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் கோட்டை இரட்டைச் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது
3) பத்மநாபபுரம் அரண்மனையின் கட்டடக்கலையையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் விவரிக்க.
• பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகான வரலாற்று சின்னமாகும்.
• கேரள கட்டடக் கலையைக் கொண்டு மரத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
• கலை மற்றும் கைவினைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
• திருவாங்கூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட அழகான அரண்மனை.
• இராஜமாதா அரண்மனை, சபை, தெற்கு அரண்மனை போன்ற பல பிரிவுகள் உள்ளன.
செயல்பாடு
செயல் திட்டம்
ஏதேனும் ஒரு கோட்டை அல்லது அரண்மனையின் மாதிரியை உருவாக்குக.
செயல்பாடு
பின்வரும் படங்களுக்கு பெயரிடுக.
(அரசர், அரசி, இளவரசர், இளவரசி)
![](https://www.brainkart.in/media/tamimg45/Xsfo2EW.jpg)
செயல்பாடு
![](https://www.brainkart.in/media/tamimg45/iMjMXvP.jpg)
(வில் மற்றும் அம்பு )
வான்
சிம்மாசனம்
கேடயம்
கிரீடம்