தமிழ் : பருவம் 2 இயல் 7 : திருக்குறள் கதைகள்
7. திருக்குறள் கதைகள்
பொறுமையும் பொறுப்பும்
தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், புகழ்பெற்ற அறிவியலறிஞர். இவர், பல முறை தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின்னரே மின் விளக்கைக் கண்டுபிடித்தார்.
நண்பர்களுக்கும், மற்ற அறிவியலறிஞர்களுக்கும் தம் கண்டுபிடிப்பைச் செய்துகாட்ட எடிசன் விரும்பினார். அதற்காக, நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவழைத்தார். அவரது ஆய்வகத்தின் மேல்தளத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.
எடிசன் தம் உதவியாளரை அழைத்து மின் விளக்கை மேல் தளத்திற்குக் கொண்டு வரச்சொன்னார். உதவியாளர், அதனைக் கொண்டு வரும்போது, திடீரெனக் கைதவறி விழுந்தது. ஆயினும், சற்றும் மனம் கலங்காத எடிசன், உடனே மற்றொரு மின் விளக்கை உருவாக்கினார். அதனை மீண்டும் அதே உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்து வரச் செய்தார்.
“மின் விளக்கைக் கீழே போட்டு உடைத்தவரிடம் மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? ‘என்று சிலர் எடிசனிடம் கேட்டனர். அதற்கு எடிசன், உடைந்த பொருளை மீண்டும் உருவாக்க என்னால் முடிந்தது. ஆனால், உதவியாளரின் மனத்தைக் காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? அதுமட்டுமன்று, மீண்டும் அதே பணியை அவரிடமே கொடுக்கும்போது, தமது பொறுப்பை உணர்ந்து கவனமுடன் பணிபுரிவார். அதனால்தான் அப்படிச் செய்தேன்” என்றார்.
எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமைக் குணத்தை, அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்.
குறள்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
பொறையுடைமை, குறள்.154
விளக்கம்
நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
மெய்ப்பொருள் காண்போம்.
மாட்டுவண்டி ஒன்றில், தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தார் ஒருவர். வழியில், குறுக்குப்பாதை ஒன்று வந்தது. அங்கே சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.
“தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?” என்று கேட்டார் வண்டிக்காரர். “ஓவருமே என்றான் சிறுவன்.
“போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?”
*மெதுவாகக் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம்”.
“வேகமாகச் சென்றால்…”
“அரை மணி நேரம் ஆகும்”.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டுக் குதிரை வண்டிக்காரருக்குக் கோபம், “என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?” என்று கேட்டார்.
போய்த்தான் பாருங்களேன்” என்று சிறுவன் சொன்னதும், அவர் வண்டியை வேகமாக விரட்டிச் சென்றார்.
சிறிது தூரம் போனதுமே சாலையில் அங்கங்கே கற்கள் நிறைந்து இருந்தன. அதனால், வண்டி தடுமாறிக் தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியைத் தூக்கி நிறுத்திக் கீழே சிதறிய தேங்காய்களை ஒவ்வொன்றாக எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. வண்டிக்காரருக்குச் சிறுவன் சொன்னதன் பொருள் புரிந்தது.
குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அறிவுடைமை, குறள். 423
விளக்கம்
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக்கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
குற்றமும் குறையும்
கதிரவனிடம் வேண்டாத குணமொன்று இருந்தது, அதாவது, எப்போது பார்த்தாலும் யாரைப் பற்றியாவது எதைப்பற்றியாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பான். அதனால், அவனைப் பார்த்தாலே போதும். எல்லா நண்பர்களும் ஓடத் தொடங்கிவிடுவர். தமிழ் அழகன் ஒருவன்தான் இப்போது அவனுடன் பேசுகிறான். வேறு எவரும் பேசுவதில்லை. அன்று தமிழ் அழகன் நான்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டான் கதிரவன். ஆர்வத்துடன் அவர்கள் அருகில் வந்தான்.
கதிரவனைப் பார்த்ததும் எல்லாரும் ஒதுங்கிச் செல்ல, தமிழ் அழகன் மட்டுமே தனியாக நின்றான். கதிரவனின் முகம் வாடியது.
“என்ன கதிர்? ஏன், என்னவோ போல் இருக்கிறாய்?” என்று கேட்டான் தமிழ் அழகன்.
‘ஆமாம் தமிழ். என்னைப் பார்த்தாலே எல்லாரும் ஓடிப்போறாங்களே….” என்றான் கதிரவன்.
‘எல்லாம் யாரால? உன்னாலதானே!’ என்றான் தமிழ் அழகன்.
“நான் என்ன தப்பு பண்ணினேன்? பிறர்கிட்ட உள்ள குற்றம் குறையைத்தானே பேசினேன்” என்றான் கதிரவன்,
கதிர், குற்றம்குறை யார்கிட்டேதான் இல்லை. உன்னோட குறை என்னன்னு உனக்குத் தெரியுமா? நீ பிறரைப் புறம் பேசறதுதான் உன்னோட குறை, உன்னோட நாக்கை அடக்கு. எல்லாரும் உன்கிட்ட பேசுவாங்க’என்றான் தமிழ் அழகன் .
கதிரவன் தன்னைத் திருத்திக் கொண்டான். எல்லாரும் அவனுடன் மெள்ள மெள்ளப் பேசத் தொடங்கினர்.
குறள்
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
அடக்கமுடைமை, குறள்.127
விளக்கம்
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்க வேண்டும். காக்கத் தவறினால், சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
அழகு
கந்தனின் உருவமே, “கோபம் கோபம் கோபம்” என்றாகிப் போனது, கந்தனை யாராவது விசாரித்தால், ‘எப்பவும் கோபத்தோடே ‘உர்’ ருன்னு அலைவானே அவனைத்தானே கேட்கிறீங்க” என்று மாணவர்கள் எளிதாகச் சொல்லிவிடுவர். அதனால், அவனிடம் நெருங்கிப் பழகவும் மாணவர்கள் பயந்தனர்.
கந்தன் ஒருநாள் அவன் நண்பனான நன்மாறனிடம் பேசிக் கொண்டிருந்தான். “நீயெல்லாம் சும்மா ஜம்முனு அழகா இருக்கியே! நான் மட்டும் ஏன் முகமெல்லாம் கறுத்துப்போய் இப்படி இருக்கேன்” என்றான்.
நன்மாறன் சிரித்தான். “நீ தினமும் உன்னோட முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறியா?” என்று கேட்டான்.
“தினமும் பார்க்கிறேன்”
“இன்னும் உனக்குக் காரணம் புரியலையா?”
“புரியலை”
“கந்தா, நெருப்பில் வாடிய பூக்கள் தம்மோட அழகை எல்லாம் இழக்கும், அதுபோலத்தான் உன்கிட்ட மாறாம இருக்கிற கோபத்தால உன் முகம் அழகையெல்லாம் இழந்திருக்கு. பொடி வைத்தாற்போல் சொன்னான் நன்மாறன்.
நன்மாறன் சொன்னதில் உண்மை இருக்கவே,
தன் கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தத் தொடங்கினான் கந்தன், ஒரு மாத காலம் கடுமையான விரதம்போல் காத்தான். அன்று கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். அஃது எத்துணை அழகாக இருந்தது தெரியுமா?
குறள்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
– வெகுளாமை, குறள். 305
விளக்கம்
ஒருவன் தன்னைத் தானே காக்க விரும்பினால் சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காத்துக்கொள்ளாவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.
வாங்க பேசலாம்
● நாவைக் காக்காவிட்டால் ஏற்படும் துன்பம் குறித்துப் பேசுக.
விடை
பேச்சைக் குறைத்து, கேட்பதை அதிகரிக்க வேண்டும். தெரிந்ததைப் பேசு. தெளிவாகப் பேசாமல் இருந்தால் நல்லது’ என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. நுணல் என்றால் தவளை என்பது பொருள். பேச்சுத் தன்மை, பகுத்தறிவு இவை இரண்டும் இல்லாத ஜீவராசி தவளை. அது தன்னுடைய சப்தத்தினால், தன் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்கிறது.
தீயினால் சுட்ட புண் உடம்பில் தழும்பு இருந்தாலும், உள்ளத்தில் ஆறி விடும். நாவினால் தீயச் சொல் கூறிச் சுடும் புண், என்றுமே ஆறாது. சொல்லினால் ஆக்கமும், அழிவும் ஏற்படும். கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். நாவை அடக்காமல், சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும்.
இப்படி – நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும்கூட உருவாக்கலாம். விளையாட்டாகப் பேசியது வினையாக முடிவதும் உண்டு.
மனித சமூகம் நாவைக் காத்தல் வேண்டும். அதனைக் காக்காவிட்டால், குற்றமான சொற்களைச் சொல்லி துன்பம் அடைவர். கதையில் ஒன்றைத் தெரிவு செய்து நண்பர்களுடன் இணைந்து நாடகமாக நடித்துக் காட்டுக. மாணவர்களே தாங்களாகவே செய்ய வேண்டும்.
● கதையில் ஒன்றைத் தெரிவு செய்து நண்பர்களுடன் இணைந்து நாடகமாக நடித்துக் காட்டுக.
சிந்திக்கலாமா!
அனுவும், பானுவும் சாலையைக் கடக்க, நின்று கொண்டு இருந்தனர். அப்போது மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அனு சாலையைக் கடக்கத் தொடங்கினாள். பானு, பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே கடக்க வேண்டும். பொறுமையாக இரு என்றாள். எது சரியான செயல்?
விடை
பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். பச்சை விளக்கு ஒளிரும்போது சாலையில் பிற திசைகளிலிருந்து வண்டிகள் வராது. ஆகையால் பானு கூறியதே சரியானது. சாலைவிதிகளைப் பின்பற்றுவதே சிறந்தது.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘பொறை‘ என்பதன் பொருள்
அ) முழுமை
ஆ) வளமை
இ) பொறுமை
ஈ) பெருமை
[விடை : இ) பொறுமை]
2. நிறையுடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நிறை + யுடைமை
ஆ) நிறை + உடைமை
இ) நிறைய + உடைமை
ஈ) நிறையும் + உடைமை
[விடை : ஆ) நிறை + உடைமை]
3. ‘மெய் + பொருள்‘ – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) மெய்பொருள்
ஆ) மெய்யானபொருள்
இ) மெய்ப்பொருள்
ஈ) மெய்யாய்ப்பொருள்
[விடை : இ) மெய்ப்பொருள்]
4. வெகுளாமை – இச்சொல்லின் பொருள்
அ) அன்பு இல்லாமை
ஆ) பொறாமை கொள்ளாமை
இ) சினம் கொள்ளாமை
ஈ) பொறுமை இல்லாமை
[விடை : இ) சினம் கொள்ளாமை]
5. போற்றி ஒழுகப்படும் பண்பு
அ) சினம்
ஆ) பொறையுடைமை
இ) அடக்கமில்லாமை
ஈ) அறிவில்லாமை
[விடை : ஆ) பொறையுடைமை]
வினாவிற்கு விடையளிக்க
1. பொறையுடைமை எப்போது போற்றப்படும்?
விடை
நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். அப்போது பொறையுடைமை போற்றப்படும்.
2. மெய்ப்பொருள் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறக் காரணம் என்ன?
விடை
எப்பொருளையார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே, எடுத்துக் கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறுகிறார்.
3. நாவைக் காக்காவிடில் ஏற்படும் துன்பம் என்ன?
விடை
நாவைக் காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
4. சினம் எப்போது ஒருவரை அழிக்கும்?
விடை
ஒருவன் தன்னைத்தானே காக்க விரும்பினால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு காத்துக் கொள்ளாவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.
5. நீங்கள் படித்த திருக்குறள் கதைகளுள் உங்களுக்குப் பிடித்த கதை எது? ஏன்?
விடை
எனக்குப் பிடித்த கதை ‘பொறுமையும் பொறுப்பும்’.
இக்கதை மூலம் பொறுமையின் சிறப்பை உணர முடிகிறது. எடிசன் தன் பணியாளரிடம் பொறுமையாக செயல்பட்டு, பணியாளருக்குப் பொறுப்பாக இருப்பதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார். அதனால் இக்கதை எனக்குப் பிடிக்கும்.
பொருத்துக
1. பொறை – சொல் குற்றம்
2. மெய்ப்பொருள் – துன்பப்படுவர்
3. காவாக்கால் – பொறுமை
4. சோகாப்பர் – காக்காவிட்டால்
5. சொல்லிழுக்கு – உண்மைப்பொருள்
விடை
1. பொறை – பொறுமை
2. மெய்ப்பொருள் – உண்மைப்பொருள்
3. காவாக்கால் – காக்காவிட்டால்
4. சோகாப்பர் – துன்பப்படுவர்
5. சொல்லிழுக்கு – சொல்குற்றம்
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடரை நிரப்புக.
1. ஆய்வகம் ……………………. இருந்தது. (மேல் தளத்தில்/ மேல் தலத்தில்)
விடை : மேல் தளத்தில்
2. வழியில் …………………… ஒன்று வந்தது. (குருக்குப்பாதை/ குறுக்குப்பாதை)
விடை : குறுக்குப்பாதை
3. உனக்குக் காரணம் ……………. (புறியவில்லையா/ புரியவில்லையா)
விடை : புரியவில்லையா
4. எடிசன் மின் …………….. உருவாக்கினார். (விளக்கு/ விலக்கு)
விடை : விளக்கு
5. குற்றம் ……………. யாரிடம் இல்லை (குரை/ குறை)
விடை : குறை
சொல்லக் கேட்டு எழுதுக.
1. மெய்ப்பொருள்
2. பொறையுடைமை
3. சோகாப்பர்
4. நிறையுடைமை
மொழியோடு விளையாடு
பொருத்தமான வினாச் சொல்லை எடுத்து வினாத் தொடரை முழுமையாக்குக.
1. உன்னுடைய ஊரின் பெயர் என்ன?
2. உனக்குப் பிடித்த வண்ணம் எது?
3. நீ பள்ளிக்கு எப்படி வருகிறாய்?
4. உன்னுடைய நண்பன் யார்?
5. கோடை விடுமுறைக்கு எங்கு சென்றாய்?
6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் யாது?
7. குறில் எழுத்துகள் யாவை?
8. சாருமதி யாருடைய வீட்டிற்குச் சென்றாள்?
நமக்குத் தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுப்போமா?
விடை
1. அன்பு
2. அடக்கம்
3. ஒழுக்கம்
4. ஈகை
5. வாய்மை
6. செய்ந்நன்றி
கலையும் கைவண்ணமும்
சூரியகாந்திக்கு வண்ணமிடுவோமா?
இதழ்களுக்கு மஞ்சள் தூள், விதைகளுக்கு உலர்ந்த தேயிலைத்தூள்… பயன்படுத்தி அழகாக்குக.
அறிந்து கொள்வோம்
1. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
2. திருக்குறள் அகர எழுத்தில் தொடங்கி னகர எழுத்தில் முடிகிறது.
3. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம்,குவளை.
செயல் திட்டம்
நீங்கள் நன்கு அறிந்த திருக்குறளுக்கு உம் சொந்த நடையில் கதை எழுதி வருக.
விடை
கல்வியே நமது செல்வம்
ஓர் ஊரில் முத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். சொந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கடினமாக உழைத்துச் செல்வந்தராக உயர்ந்தார். அவருக்குப் புகழினி, மதியழகன் என்ற இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவருக்கும் கல்விக்கு முதன்மை அளிக்காமல், தொழிலில் ஈடுபடுத்த எண்ணினார்.
ஆனால், தந்தையின் ஆலோசனையையும் மீறி கல்லூரி வரை இருவரும் படித்து முடித்தனர். முத்தனுக்குக் கல்வியின் மேல் பெரிய ஈடுபாடோ, விருப்பமோ கிடையாது. ஆகவே, சரியாகக் கல்வி கற்காத முத்தனை அவரது வியாபாரக் கூட்டாளிகள் ஏமாற்றி விட்டனர்.
இதனால் வீடு, வயல், ஆடு, மாடுகள் எனச் செல்வத்தை இழந்து ஒருவேளை உணவுக்கே துன்பப்படும் நிலைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் ஆளாகினர்.
முத்தனின் பிள்ளைகள் இருவரும் இனியும் தாமதிக்கக் கூடாது என எண்ணிப் பல நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பித்தனர். உரிய கல்வித்தகுதி பெற்றிருந்ததால், இருவருக்கும் நல்ல வேலை கிடைத்தது.
சில நாள்களிலேயே குடும்பத்தின் வறுமை நீங்கியது. முத்தன் கல்வியின் சிறப்பினை உணர்ந்து தமது கருத்தினை மாற்றிக்கொண்டார்.
குறள் : கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விளக்கம் :
ஒருவருடைய நிலைத்த செல்வம் என்பது அவர் கற்ற கல்வியே ஆகும். அதனைத் தவிர வேறு எந்த செல்வமும் நீடித்து இருக்காது.
Useful web hi