தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆராய்ந்திடவேண்டும்
6. ஆராய்ந்திட வேண்டும்
‘அடடே! வா, மாணிக்கம். என்ன, இன்றைக்குக் காலையிலேயே வந்து விட்டாயே…!”
“ஆமாம், தாத்தா! நேற்று நீங்கள் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் வேறு கதை கேட்கும் ஆவலில் காலையிலேயே வந்துவிட்டேன்.
சரி, மாணிக்கம் இன்று அருமையான கதையொன்று சொல்கிறேன் கேள்.
மன்னர் ஒருவர் தம் குதிரையில் ஏறி அமர்ந்தபடி, ஒரு கிராமத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டி, மன்னர் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
மன்னரைப் போலவே அவரது குதிரையும் இரக்கக் குணம் கொண்டதாகக் காணப்பட்டது.
அக்குதிரையானது சுற்றும் முற்றும் பார்த்தபடியே மன்னரைச் சுமந்துகொண்டு வந்து கொண்டிருந்தது.
அப்போது, நாய் ஒன்று காலில் அடிபட்ட காரணத்தால் நடக்க முடியாமல் நொண்டி, நொண்டி சென்று கொண்டிருப்பதைக் குதிரை பார்த்தது. உடனே அந்த நாய்க்கு உதவி செய்திட வேண்டுமென்று மனத்தில் நினைத்தது.
அதனால், தன் கனைப்பொலியின் மூலம் மன்னரை அழைத்தது குதிரை. “அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு, அது எங்குச் செல்லவேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது,
‘குதிரையே! என்னைப் போலவே நீயும் இரக்கத்துடன் செயல்படுகிறாய்! அந்த நாய்க்கு உதவுவதில் உனக்கு இருக்கின்ற மகிழ்ச்சியைப் போன்றே எனக்கும் இருக்கின்றது” என்றார் மன்னர். உடனே தம் பின்னால் வந்துகொண்டிருந்த காவலர்களிடம் அந்த நாயைத் தூக்கித் தாம் அமர்ந்திருக்கும் இடத்தின் முன்னே வைத்திடுமாறு கூறினார்.
காவலர்களும் அந்த நாயைக் குதிரையின்மீது ஏற்றி மன்னர் முன்னே அமர வைத்தனர்.
மன்னர் முன்னே அமர்ந்து குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்த அந்த நாயானது, மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
குதிரையின் மீது மன்னர் வருவதைக் கண்ட கிராமத்து மக்களெல்லாம் அவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்தார்கள். அதனைக் கவனித்த நாயோ இந்த மக்களெல்லாம் என்னைப் பார்த்துத்தான் வணங்குகின்றார்கள். என் அருகில் இருக்கும் மன்னர், என்னைச் சுமந்துகொண்டிருக்கும் குதிரை இவர்களைவிடவும் நானே சிறந்தவனாகவும், உயர்ந்தவனாகவும் இருக்கின்றேன். இந்த மக்கள் எல்லாம் என்னை வணங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றபோது எனக்கு அளவுக்கு மீறிய உற்சாகம் வருகின்றதே! என்ற மகிழ்ச்சியில் தன்னையே மறந்தது அந்த நாய். மறு நிமிடம் அது தன் தலையைத் தூக்கியபடி ‘லொள்’, ‘லொள்’ என்று குரைத்தது.
நாயின் செயலைக் குதிரை கவனித்தது. ‘நாயே! அமைதியாக இருந்துகொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால், எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்யமுடியாது” என்றது குதிரை.
” குதிரையே! இந்தக் கிராமத்து மக்கள் என்னை வணங்குகின்ற காட்சியைப் பார்த்ததும் உனக்கு என்மீது பொறாமை ஏற்பட்டுவிட்டது. அதனால்தான், நீ என்னை மட்டம் தட்டுகிறாய்” என்றது நாய்.
‘நாயே ! குடிமக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து வணங்கவில்லை. அவர்கள் மன்னரைப் பார்த்து வணங்குகிறார்கள். மன்னர் முன்னே இருக்கின்ற நீ, அதையெல்லாம் பார்த்துவிட்டு உனக்குக்கிடைத்தமரியாதையாக நினைத்துக்கொண்டு உற்சாகமடைந்துவிட்டாய். இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்து அமைதியாக இரு” என்றது குதிரை.
‘குதிரையே! உனக்கு என்மீது கொண்டுள்ள பொறாமையானது நன்றாக முற்றிவிட்டது. அதனால்தான் எனக்கொரு போலியான விளக்கத்தைக் கொடுக்கின்றாய்! இந்த விளக்கத்தைக் கேட்க நான் தயாராக இல்லை!” என்றபடி மேலும் சத்தமாகக் குரைத்தது அந்த நாய்.
மன்னரின் அருகில் வந்துகொண்டிருந்த காவலர்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினார்கள். அங்கிருந்து நொண்டியபடியே ஓடிய நாய், சற்றுத் தொலைவில்போய் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது.
தான் இல்லாதபோதும், குடிமக்கள் எல்லாரும் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த நாய்க்கு அப்போதுதான் உண்மை புரிந்தது, தன்னுடைய தவற்றினை நினைத்து வருந்தியது. நாம் ஆராயாமல் முடிவெடுத்தோம். அதனால்தான் நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது என்று எண்ணியது.
“ஆராய்ந்திடாமல் முடிவெடுத்தால் என்ன நடக்கும் என்பதை இக்கதைமூலம் புரிந்துகொண்டாயா, மாணிக்கம்? ‘ என்றார் தாத்தா. “ஓ! நன்றாகப் புரிந்துகொண்டேன்’ என்றான் மாணிக்கம்.
என்ன, குழந்தைகளே! இனி, நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். சரிதானே!
வாங்க பேசலாம்
● கதையை உம் சொந்த நடையில் கூறுக.
விடை
மன்னர் ஒருவர் தம் நாட்டு மக்களின் நிலையை அறிய குதிரையில் பயணம் செய்தார். குதிரையும் மன்னரைப் போன்று இரக்கக் குணம் கொண்டது. அக்குதிரை சாலையை நோட்டமிட்டுக் கொண்டே சென்றது.
அப்போது காலில் அடிபட்ட நாய் ஒன்று நடக்க முடியாமல் நொண்டி நொண்டி வருவதைப் பார்த்தது. மன்னரின் அனுமதி பெற்று அந்த நாயை மன்னருக்கு முன் அமரச் செய்தது. மன்னர் முன்னே அமர்ந்து குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்த அந்த நாயானது மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
குதிரையின் மீது அமர்ந்து வரும் மன்னரைப் பார்த்து மக்கள் அனைவரும் வணக்கம் தெரிவித்தனர். நாய், குதிரையையும் மன்னரையும் வணங்காமல் மக்கள் தன்னை வணங்குவதாக எண்ணி மகிழ்ச்சியில் தன்னை மறந்தது. தன் தலையைத் தூக்கியபடி ‘லொள் லொள்’ என்று குரைத்தது.
நாயின் இச்செயலைக் கண்ட குதிரை “நாயே, அமைதியாக இருந்து கொள்! நீE குரைத்துக் கொண்டே வந்தால் எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை. நாய், “மக்கள் என்னை வணங்குவது உனக்குப் பொறாமையாக உள்ளது. அதனால்தான் என்னை மட்டம் தட்டுகிறாய்” என்றது.
குதிரை, நாயிடம் “அவர்கள் மன்னருக்குத்தான் மரியாதை கொடுக்கின்றனர். உனக்கு இல்லை” என்று கூறியது. ஆனால் நாய் அதனை ஏற்கவில்லை. குதிரையின் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாமல் மேலும் சத்தமாகக் குரைத்தது.
மன்னரின் அருகில் வந்து கொண்டிருந்த காவலர்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினர். அங்கிருந்து சென்ற நாய் சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது. தான் இல்லாத போதும் மக்கள் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். இக்காட்சியைப் பார்த்தபோது நாய்க்கு உண்மை புரிந்தது. தன் தவற்றினை உணர்ந்தது. ஆராயாமல் முடிவு எடுத்ததை எண்ணி வருந்தியது.
● ஆராய்ந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளைக் கூறுக.
விடை
நாம் செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். அவையே நன்மைகளைத் தரும்.
● நம்மால் ஆராய்ந்து செயல்படும்போது, பிழைகளைத் தவிர்க்க முடியும்.
● நம்மால் துன்பத்திலிருந்து விடுபட இயலும்.
● நாம் எல்லோராலும் பாராட்டப்படுவோம்.
● பிறரைச் சார்ந்து இல்லாமல் தனித்துவமாக நம்மால் இயங்க முடியும்.
● நல்லது கெட்டதைப் பகுத்தறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.
● நாம் தலைமைத் தாங்கிச் செயலாற்ற முடியும்.
● மன்னரைப் போன்று நமக்கு மரியாதை கிடைக்கும்.
சிந்திக்கலாமா!
நீ செய்யாத செயலுக்கு உனக்கு ஒருவர் நன்றி கூறினால் அல்லது பரிசு அளித்தால் அவ்வேளையில் நீ என்ன செய்வாய்?
விடை
ஒருவர் எனக்கு நன்றி கூறியதற்கு எதிர் நன்றி கூறிவிட்டு நான் அச்செயலைச் செய்யவில்லை என்று அவரிடம் உண்மையைக் கூறுவேன். அவர் ஏதேனும் பரிசு அளித்தால் ‘பரவாயில்லை வேண்டாம்’ என்று சொல்லி விடுவேன்.
வினாக்களுக்கு விடையளிக்க
1. குதிரை ஏன் நாய்க்கு உதவி செய்ய நினைத்தது?
விடை
காலில் அடிபட்டதால் நாய் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தது. அதனால் குதிரை நாய்க்கு உதவி செய்தது.
2. காவலர்கள், குதிரைமீது இருந்த நாயை ஏன் கீழே இறக்கிவிட்டனர்?
விடை
நாய், குதிரையின் மேலே அமர்ந்துகொண்டு குதிரையிடம் விவாதம் செய்து கொண்டு சத்தமாகக் குரைத்தது. ஆதலால் காவலர்கள் நாயைக் கீழே இறக்கிவிட்டனர்.
சொல்லக் கேட்டு எழுதுக.
குதிரை, இரக்கம், நிலைமை, பேராசை, குடிமக்கள்
நிறுத்தக் குறியீடுக
அரசே அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா என்று கேட்டது
விடை
“அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக் கொண்டு, அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது.
ஒரே சொல் இரண்டுமுறை அடுத்தடுத்து வருமாறு சொற்றொடர் அமைத்து எழுதுக
(எ.கா.) நாய் ஒன்று நொண்டி, நொண்டி நடந்தது
1. தத்தித் தத்தி = குழந்தை தத்தித் தத்தி நடந்தது.
2. எழுதி எழுதி = கந்தன் எழுதி எழுதி பார்த்தான்.
3. திரும்பித் திரும்பி = குழந்தை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றது.
4. குனிந்து குனிந்து = குனிந்து குனிந்து புத்தகத்தை எடுத்து அடுக்கியதால் முதுகு மிகவும் வலிக்கிறது என்றான் கந்தன்.
குறிப்பைப் படி! விடையைக் கொடு!
1. பேச உதவுவது வாய்
படுக்க விரிப்பது பாய்
கனிக்கு முந்தையது காய்
காவல் காப்பது.. நாய்
2. வரியில் ஒன்று சுங்கம்
கனிமத்தில் ஒன்று தங்கம்
நாடுகளுள் ஒன்று வங்கம்
தமிழுக்கு மூன்று சங்கம் ?
3. உழவுக்கு உதவுவது ஏர்
ஊர் கூடி இழுப்பது தேர்
மரத்திற்கு தேவை வேர்
நல்லதை உன்னிடம் சேர்?
அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக
1. போலி – ஒன்றைப்போல இருத்தல்
2. பொறாமை – காழ்ப்பு
3. சவாரி – பயணம்
4. வருந்தியது – துன்பம்மடைந்தது
5. மரியாதை – நேர்மையான ஒழுக்கம்
சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக.
மண்னர், குதிறைச் சவாரி, உர்சாகம், சிறந்தவண், மக்கலெள்ளாம், கனைப்பொளி, இறக்கக் குணம், கிராமங்கல்,
விடை
1. மண்னர் – மன்னர்
2. குதிறைச் சவாரி – குதிரைச் சவாரி
3. உர்சாகம் – உற்சாகம்
4. சிறந்தவண் – சிறந்தவன்
5. மக்கலெள்ளாம் – மக்களெல்லாம்
6. கனைப்பொளி – கனைப்பொலி
7. இறக்கக் குணம் – இரக்கக் குணம்
8. கிராமங்கல் – கிராமங்கள்
கலையும் கைவண்ணமும்
பயன்படுத்திய காகிதத்தில், உறை தயாரிக்கலாமா?
தேவையான பொருள்கள்
பயன்படுத்திய தாள்கள், பசை
விலங்குகளுக்குரிய ஒலிப்புகளை வட்டமிடுக.
அறிந்துகொள்வோம்.
தமிழில் மூவினம்
த – வல்லினம்
மி – மெல்லினம்
ழ் – இடையினம்
தமிழும் மூன்றும்
முத்தமிழ் – இயல், இசை, நாடகம்
முச்சங்கம் – முதல், இடை, கடை
முக்காலம் – இறப்பு, நிகழ்வு, எதிர்வு
முப்பொருள் – அறம்,பொருள், இன்பம்
மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை
செயல் திட்டம்
பிறர் பாராட்டுவதற்குரிய நல்ல செயல்கள் எவையெவை என உன் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதி வருக.
விடை
1. விடியற்காலையில் துயிலெழுதல்.
2. தினமும் இறைவனை வழிபடுதல்
3. பள்ளிக்கு நேரத்திற்குச் செல்லுதல்.
4. வாரம் ஒருமுறை நகம் வெட்டுதல்.
5. தலைமுடியைச் சீராக வெட்டுதல்.
6. பிறருக்கு உதவி செய்தல்.
7. அன்புடன் திகழுதல்.
8. பெரியோரை மதித்தல்
9. இனிமையாகப் பேசுதல்
10. பணிவுடன் இருத்தல்.
11. ஒழுக்கத்தைக் கடைபிடித்தல்.
12. வாய்மையைப் போற்றுதல்.
13. அடக்கமாக இருத்தல்.
முக்காலம் அறிவோமா?
நடந்து கொண்டிருக்கும் செயல் நிகழ்காலம்
நடந்துமுடிந்த செயல் இறந்தகாலம்
நடக்கப்போகும் செயல் எதிர்காலம்
கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் போல் எழுதுக.
எடுத்துக்காட்டு
நான் உணவு —— (உண்) – நான் உணவு உண்டேன் (இறந்தகாலம்)
நான் உணவு உண்கிறேன் (நிகழ்காலம்)
நான் உணவு உண்பேன் (எதிர்காலம்)
1. இளவரசி பூ தொடுத்தாள் இளவரசி பூ தொடுகின்றாள் இளவரசி பூ தொடுப்பாள்
2. ஆடு புல் மேய்ந்தது ஆடு புல் மேய்கின்றது ஆடு புல் மேயும்
3. நாங்கள் படம் வரைந்தோம் நாங்கள் படம் வரைகின்றோம் நாங்கள் படம் வரைவோம்
4. கதிர் போட்டியில் வென்றான் கதிர் போட்டியில் வெல்கின்றான் கதிர் போட்டியில் வெல்வான்
5. மயில்கள் நடனம் ஆடின மயில்கள் நடனம் ஆடுகின்றன மயில்கள் நடனம் ஆடும்
அட்டவணையில் விடுபட்ட இடங்களை நிரப்புக.
படங்களுக்குப் பொருத்தமான காலங்களைப் பயன்படுத்தித் தொடர் எழுதுக.
விடை
மரத்திலிருந்து தென்னை ஓலைகளும் தேங்காய்களும் விழுந்திருந்தன
விமானத்தில் பயணிகள் ஏற செல்கின்றனர்
சிறுவன் ஓடுகின்றான்
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுகிறார்
சிறுமி மிதிவண்டி ஓட்டுகிறாள்
தாத்தா செய்தித்தாள் படிக்கிறார்.
பேருந்து செல்கின்றது
சிறுவன் கதவை திறக்கின்றான்