தமிழ் : பருவம் 2 இயல் 8 : பசுவுக்குக் கிடைத்த நீதி
8. பசுவுக்குக் கிடைத்த நீதி
(நாடகம்)
முன்கதைச் சுருக்கம்
சோழமன்னர்களுள் ஒருவன் மனுநீதி முறைமை தவறாது ஆட்சி புரிவதையே தன் நோக்கமாகக் கொண்டவன். ஆயினும், அவன் ஆட்சிக்காலத்தில் வாயில்லாப் பசுவுக்கு ஏற்பட்டது ஒரு பேரிழப்பு, அதற்குக் காரணமானவன் வேறுயாருமல்லன், அரசனின் மகனே. இப்போது, அரசன் என்ன செய்வான்? தன் மகன் என்று அவனைக்காப்பாற்றுவானா? அல்லது தன்கன்றை இழந்து வாடும் அந்தப் பசுவுக்கு உரிய நீதியை வழங்குவானா? வாருங்கள் தெரிந்துகொள்ள அரங்கத்துக்குள் நுழைவோம்.
காட்சி – 1
இடம் : அரசவை மண்டபம்
காலம் : நண்பகல்
உறுப்பினர்கள் : அரசர் மனுநீதிச் சோழர், அமைச்சர் பெருமக்கள்
(அவையில் மன்னரும் அமைச்சர் பெருமக்களும் வீற்றிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த தச்சர் ஒருவர், மன்னரை வணங்கிப் பணிகிறார். இனி….)
அரசர் : வாருங்கள், தச்சரே, நேற்று உம்மிடம் ஒரு வேலையைக் கொடுத்தேனே, முடித்துவிட்டீரா?
தச்சர் : ஓ, முடித்துவிட்டேன் மன்னா. நீங்கள் நேரிலேயே வந்து பார்வையிடலாம் மன்னா,
அரசர் : அப்படியா? மிக்க மகிழ்ச்சி, அமைச்சர் பெருமக்களே, ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது உலகோர் அறிந்த செய்தி. அதுமட்டுமா? நம் சோழர் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு செய்தி, நீதி தவறாத ஆட்சிமுறை அல்லவா? அதனால்தான், என் ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தேன். அதற்காக நான் ஏற்படுத்திய ஓர் அமைப்பே ஆராய்ச்சிமணி. அதைத்தான் இந்தத் தச்சர் சிறப்பாகச் செய்து முடித்துள்ளார்.
அமைச்சர் : ஆராய்ச்சி மணியா? : மணியா? அது எதற்கு மன்னா? அதைக்கொண்டு நீங்கள் எப்படி நீதி வழங்குவீர்கள்?
அரசர் : சொல்கிறேன், அமைச்சரே. நம் நம் அரண்மனை வாயிலிலே கோவில் மணிபோல் பெரியதொரு மணியைக் கட்டச் செய்துள்ளேன். குடிமக்கள், தங்களுக்கு ஏற்படும் குறைகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள இந்த ஆராய்ச்சிமணியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமைச்சர் : அரசே, இதிலென்ன புதுமை? நீங்கள்தாம் எந்தக் குறையும் மக்களுக்கு வைப்பதில்லையே.
அரசர் : நீங்கள்சொல்வது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், தங்கள் குறைகளை வெளிப்படையாகச் சொல்வதற்குச் சிலர் தயங்கலாம் அல்லவா? மேலும், இந்த ஆராய்ச்சிமணியின்நோக்கமே, உடனுக்குடன் நீதி வழங்குவதில்தான் உள்ளது. அதுமட்டுமா? குடிமக்கள் எப்போது ஆராய்ச்சிமணியை ஒலித்தாலும், அவர்கள் முன் நானே ஓடோடிச் சென்று நிற்பேன். அவர்களின் மனக்குறையையும் உடனடியாகத் தீர்த்துவைப்பேன்,
அமைச்சர்கள் : ஆஹா, நீங்கள்தாம் சிறந்த மன்னர். இந்நிலவுலகம் உள்ளவரை உங்கள் புகழ் ஓங்கும்.
(அரசவை கலைகிறது. சில மாதங்களாக ஆராய்ச்சிமணியின் ஓசையை அரசர் கேட்கவேயில்லை. இந்நிலையில் ஒருநாள் வழக்கம்போல் அமைச்சர்கள் சூழ மன்னர் அமர்ந்திருக்கிறார். அப்போது, ஆராய்ச்சிமணி ஒலிக்கத் தொடங்குகிறது. இனி….)
காட்சி – 2
இடம் : அரசவை
காலம் : மாலை
உறுப்பினர்கள் : அரசர், அமைச்சர் பெருமக்கள், அரண்மனைக் காவலாளி
காவலாளி : மன்னா …… மன்னா ……..
(என்றழைத்தவாறே பதற்றத்துடன் ஓடி வருகிறான், அரண்மனைக் காவலாளி.)
அரசர் : என்ன ஆயிற்று? ஏன் இப்படி மூச்சிரைக்க ஓடிவருகிறாய்? பதறாமல் சொல்.
காவலாளி : : மன்னா, இதுவரை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. அதனால்தான் எப்படிச் சொல்வது என்று தயங்குகிறேன்.
அரசர் : என்ன ஆனாலும் பரவாயில்லை. சொல்ல வந்த செய்தியைத் தயங்காமல் உடனே சொல்.
காவலாளி : மன்னா, அதுவந்து அதுவந்து. நம் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சிமணி ….
அரசர் : என்ன? ஆராய்ச்சிமணியை யாராவது அடிக்கிறார்களா? இவ்வளவு மாதங்களாக யாருக்கும் எந்தக் குறையும் இல்லையென்று நினைத்தேனே. பரவாயில்லை. இதோ நானே வருகிறேன்.
(அரசர் அரண்மனை வாயிலுக்கு விரைய அமைச்சர்களும் பின்தொடர்ந்து செல்கின்றனர்.)
அரசர் : ஐயகோ, என்ன ஆயிற்று? பசுவொன்று ஆராய்ச்சிமணியை அடித்துக் கொண்டிருக்கிறதே? என் ஆட்சியில் வாயில்லாத பசுவுக்குக் குறை நேர்ந்ததா? இதை நான் எங்ஙனம் பொறுத்துக்கொள்வேன்? அதன் கண்களில் வழியும் கண்ணீரைப் பாருங்கள். தாங்கமுடியாத துயரத்தில் அது துன்பப்படுவதுபோல் இருக்கிறதே? ஐந்தறிவு விலங்குகளின் துயர் நீக்க மறுத்தான் என்று இந்த வியனுலகம் என்னைப்பழிக்குமோ? இனிஎன்வாழ்நாளெல்லாம் பழிச்சொல்லைச் சுமந்து திரிவேனோ? எனக்கொன்றும் விளங்கவில்லையே, கதறும் அந்தப் பசுவின் கண்ணீரைத் துடைக்க இதோ புறப்பட்டான் இந்த மன்னன் என்று பிறர் அறியட்டும். யாரங்கே? உடனே சென்று அந்தப் பசுவுக்கு ஏற்பட்ட இன்னலை அறிந்து வாருங்கள்.
காவலாளிகள் : உத்தரவு மன்னா. இதோ சென்று விரைவில் செய்தியுடன் மீள்கிறோம்.
(அரசனின் மகன், தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும்போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறக்கிறது. தன் கன்றைக் காணாது தேடியலைந்த பசு, அதன் இறந்த உடலைக் கண்டு கண்ணீர் விடுகிறது. அதன் ஆற்றொணாத் துயரே ஆராய்ச்சிமணி வடிவில் ஒலிக்கத் தொடங்கியது.
காட்சி – 3
இடம் : அரசவை
காலம் : காலை
உறுப்பினர்கள் : அரசர், அமைச்சர் பெருமக்கள்
அமைச்சர் : மன்னா தங்கள் முடிவை அருள்கூர்ந்து மாற்றிக்கொள்ளுங்கள்.
அரசர் : என்ன சொல்கிறீர் அமைச்சரே? மண்ணுயிர் காக்கும் மன்னன், நீதி வழங்கும் நெறிமுறையாளன் என்று மக்கள் என்னைப் போற்றுகிறார்களே, அதற்கு இழுக்கு நேரிட ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன், பசுவின் கதறலுக்குச் செவிசாய்க்காக் கொடியோன் என்னும் அவச்சொல்லுக்கு நான் ஆளாக விரும்பவில்லை. கண்ணுக்கு கண். பல்லுக்குப் பல் என்பதுதான் நான் எடுத்த முடிவு. இதில் எந்த மாற்றமும் இல்லை.
அமைச்சர்: மன்னா, சற்றுப்பொறுங்கள். உங்களுக்கு இருப்பதோ ஒரேஒரு மகன். பசுவின் கன்றை அவன் வேண்டுமென்றே கொல்லவில்லையே, அவன் அறியாமல் செய்த தவறுதானே அது? அதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டுமா?
அரசர் : ஆம். அதுதான் சரி. கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற அந்த பசுவின் முகம் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? அதன் கண்ணில் வழியும் கண்ணீர்,”நீயும் ஒருமன்னனா? உனக்கு மகன் எப்படியோ அப்படியே எனக்கு என் கன்று அல்லவா? அந்தச் சின்னஞ்சிறு கன்று என்ன பாவம் செய்தது? அதன் உயிரைப் போக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? கன்றை இழந்து தவிக்கும் எனக்கு யார் ஆறுதல் தருவார்? இனி என் வாழ்நாளெல்லாம் வீண்தானோ என்று என்னைக் கேட்பதுபோல் இருக்கிறதே, ஆகவே, நான் எடுத்த முடிவிலிருந்து சற்றும் பின்வாங்கமாட்டேன்.
அமைச்சர் : அரசே, மீண்டும் தங்களைப் பணிந்து வலியுறுத்துகிறேன். உங்கள் மகனைக் கொல்லும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
அரசர் : போதும், அமைச்சரே. நிறுத்துங்கள். இனி, யார் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். பசுவின் கன்றைத் துடிக்க, துடிக்கத் தேர்க்காலிலிட்டுக் கொன்ற என் மகனை அதே தேர்க்காலிலிட்டுக் கொல்லத்தான் போகிறேன். அந்தப் பசு அடைந்த துயரத்தை நானும் அடையவேண்டும். இதுதான் அந்தப்பசுவுக்கு நான் அளிக்கும் தீர்ப்பு. இந்தச் சோழப் பரம்பரை என்னால் தலைகுனியக் கூடாது. பல காலங்கள் தோன்றி மறைந்தாலும், நீதி தவறா மனுநீதிச் சோழன் என்று என்னைப் பலரும் நினைவுகூர்தல் வேண்டும். யாரங்கே? தேரைப் பூட்டி, வாயிலில் கொண்டு வந்து நிறுத்து. இழுத்து வா, என் மகனை. இப்போதே அவனைத் தேர்க்காலிலிட்டு நீதியை நிலைநாட்டுகிறேன்.
(தவறிழைத்தவன் தன் மகனே யானாலும், குற்றம் குற்றமே என்று எண்ணியதோடல்லாமல், அந்தத் தவற்றுக்குச் சரியான தண்டனையும் வழங்கிப் பசுவின் துயர் துடைத்து, வரலாற்றில் அழியா இடம்பெற்றான் மனுநீதிச் சோழன்.)
(திரை விழுகிறது.)
வாங்க பேசலாம்
● நீங்கள் மனுநீதிச் சோழனாக இருந்தால், பசுவின் துயரத்தை எப்படிப் போக்குவீர்கள்?
விடை
நான் மனுநீதிச் சோழனாக இருந்தால் கன்றை இழந்த பசுவை அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பேன். அப்பசு, கன்றை இழந்த கவலையின்றி இருக்க நிறைய பசுக்களையும் கன்றுகளையும் சேர்த்து வளர்ப்பேன்.
சிந்திக்கலாமா!
வீட்டிற்குப் போகும் வழியில் ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சிலர் துன்புறுத்துகின்றனர். அவர்கள் செய்தது சரியா அந்தச் செயலை நீங்கள் எப்படித் தடுப்பீர்கள்?
விடை
அவர்கள் செய்தது சரியன்று.
சிறுவர்களிடம் “நீங்கள் செய்யும் செயல் தவறானது. நாம் உயிர்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்,” என்று கூறி அச்சிறுவர்கள் ஓணானைத் துன்புறுத்துவதைத் தடுப்பேன்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. இன்னல்–இச்சொல்லிற்குரிய பொருள்
அ) மகிழ்ச்சி
ஆ) நேர்மை
இ) துன்பம்
ஈ) இரக்கம்
[விடை : இ) துன்பம்துன்பம்]
2. அரசவை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அரச + அவை
ஆ) அர + அவை
இ) அரசு + அவை
ஈ) அரச + வை
[விடை : இ) அரசு + அவை]
3. மண்ணுயிர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மண் + ணுயிர்
ஆ) மண் + உயிர்
இ) மண்ண + உயிர்
ஈ) மண்ணு + உயிர்
[விடை : ஆ) மண் + உயிர்]
வினாவிற்கு விடையளிக்க
1. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சி மணியை அமைத்ததற்கான காரணம் என்ன?
விடை
மனுநீதிச் சோழன் தனது ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தான். அதனால் ஆராய்ச்சி மணியை அமைத்தான்.
2. பசு ஆராய்ச்சி மணியை அடித்தது ஏன்?
விடை
அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும் போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்துவிட்டது. அதனால் துயருற்ற பசு ஆராய்ச்சி மணியை அடித்தது.
3. பசுவின் துயரை மன்னன் எவ்வாறு போக்கினான்?
விடை
பசுவின் துயரைப் போக்க எண்ணிய மன்னன், தன் மகனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைப் போக்கினான்.
அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக
ஆற்றொணா, வியனுலகம், செவி சாய்த்தல், கொடியோன், பரம்பரை
விடை
1. ஆற்றொணா – தாங்க முடியாத
2. வியனுலகம் – பரந்த உலகம்
3. செவி சாய்த்தல் – கேட்க விரும்புதல்
4. கொடியோன் – துன்புறுத்துபவன்
5. பரம்பரை – தொன்றுதொட்டு
சொல்லக் கேட்டு எழுதுக
1. அரங்கம்
2. ஆராய்ச்சி மணி
3. மனக்குறை
4. நிலவுலகம்
5. வாழ்நாள்
சொல் உருவாக்குக
விடை
இனிமை
மாலை
தீ
மகன்
பெண்
உண்மை
மான்
கலையும் கைவண்ணமும்
வண்ணம் தீட்டி மகிழ்வோம்
அறிந்து கொள்வோம்!
மாநகரம், மாமலை, மாமதுரை, மாமுனி, மாதவம் என்று ஒன்றை சிறப்பித்து கூறுவதற்கு மா என்ற சொல் வழக்கத்தில் உள்ளது.
செயல் திட்டம்
நீ வாழும் சூழலில் காணும் பறவைகள் விலங்குகள் பற்றிய செய்திகளைத் திரட்டிப் படத்தொகுப்பு ஒன்றை உருவாக்குக.