தமிழ் : பருவம் 1 இயல் 8 : விடியும் வேளை
8. விடியும் வேளை
மன்னவனூர் ஓர் அழகான மலைக்கிராமம், இனிய காலை வேளை, மழைபெய்து ஓய்ந்திருந்தது, சாலையில் அங்கும் இங்குமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. மரங்களின் கிளைகளிலும் இலைகளிலும் நீர்த்திவலைகள் தெரிந்தன. பஞ்சுப்பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள், வளைந்து நெளிந்து மிதந்தபடிச் சென்றன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளில், சிலுசிலுப்பான காற்று கூடவே எழுந்தது.
பனைஓலை வேய்ந்த குடிசையில், நெற்றியில் வட்டநிலா போலச் சிவப்பாக குங்குமப் பொட்டு வைத்த அம்மா அறிவுமதி, விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தாள். கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகரிசிச்சோறு கொதித்துக் கொண்டிருந்தது. கொடியடுப்பில் மஞ்சளாகப் பருப்பு,மணம்மிக்க பூண்டுடன் வெந்து கொண்டிருந்தது.
வதக்கிய பசுமையான பிரண்டைத் துவையலை அம்மியில் அரைத்துக் கொண்டே, அடுப்பையும் கவனித்துக் கொண்டிருந்தாள் அறிவுமதி.
மரங்களும் செடிகளும் சூழ்ந்த இடத்தில், பசுங்கன்றென ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர் பிள்ளைகள் இனியனும், இனியாவும். அன்பு பொங்க, தன் பிள்ளைகளை அழைத்தாள் அம்மா. பள்ளிக்குச் செல்ல தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர் பிள்ளைகள்.
பசுஞ்சாணம் மெழுகிய தரையில் மனைப்பலகையில் அமர்ந்து துளிரான தலைவாழை இலையை விரித்து, நீர் தெளித்து, அதில் சுடச்சுட வரகரிசிச் சோறிட்டு, ஆவிபறக்கும் பருப்புக் கடையலை ஊற்றினாள் அம்மா. துணையாகத் தொட்டுச்சுவைக்கச் சுள்ளென்ற பிரண்டைத் துவையலும் வைத்தாள்.
நாக்கு சப்புக்கொட்ட பிள்ளைகள் விரும்பி உண்டனர். பின்னர், தாயிடம் விடைபெற்றுப் பள்ளிக்குத் துள்ளிக்குதித்து ஓடினர்.
வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயலில், வேலை செய்து கொண்டிருந்த கணவனுக்கு உணவளிக்க, கலயத்தில் சோறுடன் அம்பென விரைந்தாள் அறிவுமதி. இனிமையான காலைப்பொழுது இப்படியாகக் கழிந்தது.
எளிய வருணனைச் சொற்களைப் பயன்படுத்திச் சிறுசிறு உரைப்பகுதிகளைப் படித்தல், தமக்கான நடையில் எழுதுதல்
வாங்க பேசலாம்
● மன்னவனூர் கிராம வருணனையை உன் சொந்த நடையில் கூறுக.
விடை
மன்னவனூர் ஓரு அழகான மலைக்கிராமம். எங்குப் பார்த்தாலும் பச்சை பட்டு உடுத்தியது போல் பச்சைப்சேலேன காட்சியளிக்கும். பஞ்சுப் பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள் வளைந்து நெளிந்து சொல்லும் பாதைகள். பனைஓலை வேய்ந்த குடிசைகள், மரங்களும் செடிகளும் சூழ்ந்த இடத்தில் பசுங்கன்றென ஓடியாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் இதுப் போன்ற காட்சிகள் மன்னவனூர் கிராமத்தில் நாம் காணலாம்.
● உமது ஊரின் மாலை நேரக் காட்சிகளை வருணித்துக் கூறுக.
விடை
மாலை நேரத்தில் சூரியன் தன் சிவந்த கதிர்களை வீசிக்கொண்டிருந்தான். அந்தக் கதிர்கள் குளத்து நீரில் படவே, குளத்து நீர் தகதகவெனதங்கம் போல் மிளிர்ந்தன. சூரியனை மறைக்க கருமேகங்கள் படையெடுத்து வந்தன. சூரியனும் தன் கதிர்களை மறைத்துக் கொண்டிருந்தான். பறவைகள் தங்கள் இருப்பிடம் தேடி பறந்த வண்ணமாய் இருந்தன. பறவைகளின் கூச்சல் பழைய இசைகளை எழுப்பின.
வண்டுகள் ரீங்காரமிட்டு பறந்தன. இளந்தென்றல் வீசிக்கொண்டிருந்தன. மக்களும் மாக்களும் தம் இருப்பிடங்களை நோக்கி நகர ஆரம்பித்தன. நிலவும் கண்ணில் பட தொடங்கியது. ஊரே அமைதி காத்தது. மலைகள் கரு நிறத்தில் தோன்ற ஆரம்பித்தது. மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள் தென்றலின் போக்கிற்கு ஏற்ப நடனமாடின. இப்படியாக இனிய இரவும் வந்து சேர்ந்தது.
● பாடப்பகுதியை வாய்விட்டுச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.
சிந்திக்கலாமா!
1. படத்திலுள்ள எந்தக் கிராமத்தில் நீ வாழ விரும்புகிறாய்? ஏன்?
விடை
இவற்றில் பசுமையான கிராமத்தில் வாழ விரும்புகிறேன்.
நம் முன்னோர்கள் பசுமையான கிராமத்தில் வாழ்ந்ததனால், இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர். பருவமாற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தனர். சுத்தமான காற்றையே சுவாசித்தனர். இயற்கையை மிகவும் நேசித்தனர். இயற்கையும் அவர்களை நேசித்தது. கூட்டு வாழ்வு வாழ்ந்தனர். இல்லங்களிலும், ஊர்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவின. சத்தான உணவுகளையே உண்டனர். இயற்கை உரங்களையே பயன்படுத்தினர். மரங்களையும் செடி கொடிகளையும் அதிகம் வளர்த்தனர். இத்தகைய கிராமத்தில் வாழவே நான் விரும்புகிறேன்.
2. உனது ஊரைச் சுத்தமாக்க என்ன செய்யலாம்? திட்டமிடுக.
விடை
எனது ஊரைச் சுத்தமாக்க மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை முதலில் கொடுக்க வேண்டும். சுத்தத்தின் மேன்மையை உணர்த்த வேண்டும். சுத்தம் உள்ள இடத்தில் தான் சுகம் இருக்கும் என்பதைக் கடைப்பிடிக்க வழி வகை செய்ய வேண்டும். தெருக்கள் தோறும் குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும். அதிலேயே குப்பைகளைப் போட அறிவுறுத்த வேண்டும். மக்களை ஊரை நேசிக்கச்செய்தாலே ஊர் சுத்தமாகி விடும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான பலூன்களை எடுத்துப் பொருத்துக.
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. சாலையெங்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) சாலை + யெங்கும்
ஆ) சாலை + எங்கும்
இ) சால + எங்கும்
ஈ) சால + யெங்கும்
[விடை : ஆ) சாலை + எங்கும்]
2. சுண்டியிழுக்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………………..
அ) சுண்டி + யிழுக்கும்
ஆ) சுண் + டியிழுக்கும்
இ) சுண்டு + இழுக்கும்
ஈ) சுண்டி + இழுக்கும்
[விடை : ஈ) சுண்டி + இழுக்கும்]
3. ஓடி + ஆடி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) ஓடிஆடி
ஆ) ஓடியோடி
இ) ஓடியாடி
ஈ) ஓடியாடி
[விடை : இ) ஓடியாடி]
4. காலை + பொழுது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) காலை பொழுது
ஆ) கால்பொழுது
இ) காலைப்பொழுது
ஈ) காலப்பொழுது
[விடை : இ) காலைப்பொழுது]
5. வரகு + அரிசி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வரகரிசி
ஆ) வரகு அரிசி
இ) வரக்கரிசி
ஈ) வரகுகரிசி
[விடை : அ) வரகரிசி]
6. உணவு + அளிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) உணவு அளிக்க
ஆ) உணவளிக்க
இ) உணவுவளிக்க
ஈ) உணவ்வளிக்க
[விடை : ஆ) உணவளிக்க]
வினாக்களுக்கு விடையளி
1. அழகிய மலைக்கிராமத்தின் பெயர் என்ன?
விடை
அழகிய மலைக்கிராமத்தின் பெயர் மன்னவனூர் ஆகும்.
2. கிராமத்தில் உனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளை எழுதுக.
விடை
மழை பெய்து ஓய்ந்திருந்தது, சாலையெங்கும் தண்ணீர் நிறைந்திருந்தது. மரங்கள் நனைந்து கிளைகள் இலைகள் முழுக்க நீர்த்திவலைகள் தெரிந்தன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள்.
3. பிள்ளைகள் காலை உணவாக என்ன உண்டார்கள்?
விடை
பிள்ளைகள் காலை உணவாக, வரகரிசிச் சோறும் பருப்புக் கடையலும் பிரண்டைத் துவையலும் சாப்பிட்டனர்.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக
எ.கா: பச்சைப்பசேல் என்ற வயல்வெளி
விடை
சிலுசிலுப்பான காற்று கூடவே எழுந்தது.
வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயல்
கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென
வரகரிசிக்சோறு கொதித்துக் கொண்டிருந்தது.
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
சிறு தானிய உணவுகளே நம் உடல்நலத்திற்கு ஏற்றவை. குதிரை வாலி அரிசி, தினை, வரகரசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு, பல உணவு வகைகளை மண் பானைகளில் சமைத்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்த பிறகுதான், அடுத்தவேளை உணவை நாம் உண்ண வேண்டும். இதைத்தான் நம் முன்னோர்கள், “பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளை உண்ணத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
சிறு தானிய உணவுகளை உண்போம்!
வளமான வாழ்வைப் பெறுவோம்!
1. எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?
விடை
சிறுதானிய உணவுகளே நமக்கு ஏற்புடையது.
2. சிறு தானியங்களுள் எவையேனும் நான்கு எழுதுக.
விடை
தினை, வரகரசி, கேழ்வரகு, கம்பு.
3. துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது. ஏன்?
விடை
துரித உணவு வகைகள் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைவதால் அவைகளை உண்ணக் கூடாது.
கலையும் கைவண்ணமும்
தேவையான பொருட்கள்;
வெள்ளை வரைபட அட்டை, சிறிதளவு மணல், பசை, கரிக்கோல், வண்ணப் பொடி
செய்யும் முறை
வெள்ளை வரைபட அட்டையில் உனக்குப் பிடித்த படத்தினை வரைந்து கொள். வரைந்த பகுதிக்குள் மட்டும் பசையினைத் தடவு. தடவிய பசை காய்வதற்குள் மணலைத் தூவு. நன்றாகக் காய்ந்த பின் அட்டையைக் கவிழ்த்துவிட்டு, பிறகு திருப்பினால் அழகிய மணல் ஓவியம் கிடைக்கும். தேவையான இடத்தில் வண்ணப் பொடிகளைத் தூவி மேலும் அழகுப்படுத்து. இதனை வாழ்த்து அட்டையாகவும் பயன்படுத்தலாம்.
அறிந்து கொள்வோம்
● இரண்டு சொற்கள் ஒரே கருத்தினை வலுப்படுத்துவது நேரிணை.
எ.கா:
சீரும் சிறப்புமாக, ஓங்கி உயர்ந்த.
● இரண்டு எதிர்ச்சொற்கள் எதிரெதிர் கருத்தினைவலுப்படுத்துவது எதிரிணை.
எ.கா:
இரவு பகல், மேடு பள்ளம்
செயல் திட்டம்
● சிறுதானியங்கள், நவதானியங்கள் ஆகியவற்றைச் சேகரித்து, ஒட்டி அதன் பெயரை எழுதிப் படத்தொகுப்பு தயார் செய்க