தமிழ் : பருவம் 1 இயல் 7 : வெற்றி வேற்கை
7. வெற்றி வேற்கை
உதவியால் பெறும் நன்மை
தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி, ஆள்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழலாகும்மே
– அதிவீரராமபாண்டியர்
பொருள் அறிவோம்
பழைமையான ஆலமரத்திலுள்ள சிறு பழத்தின் ஒரு விதையானது தெளிந்த நீருள்ள குளத்தின் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாகும். அந்தச் சிறிய விதை, பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கும்பொழுது, அம்மரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப் படை, காலாட்படை ஆகியவற்றோடு மன்னனும் மற்றவர்களும் தங்க முடியும். அதுபோல, நீங்கள் செய்யும் உதவி சிறியதாக இருப்பினும், அது மற்றவர்களுக்கு மிகப்பெரிய பயனைத் தரும்.
வாங்க பேசலாம்
● பாடலின் பொருளை உமது சொந்த நடையில் கூறுக
● உனக்கு உனது நண்பன் செய்த சிறிய உதவி, அந்த நேரத்தில் பெரியதாக இருந்த அனுபவத்தைப் பற்றிப் பேசு.
சிந்திக்கலாமா!
● சிறு சிறு உதவிகளைப் பிறருக்குச் செய்வது பற்றி உனது கருத்து என்ன? வகுப்பில் கலந்துரையாடுக.
விடை
கமலன் : ராமு! சிறு சிறு உதவிகளைப் பிறருக்குச் செய்வது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
மாறன் : கட்டாயம் நாம் அவற்றை நாம் செய்ய வேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?
கமலன் : செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
மாறன் : சரி, அப்படி நீ செய்யும் போது உன் மனநிலை எப்படியிருக்கும்?
கமலன் : அப்படி உதவி செய்யும் போது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும். ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல மனதில் தோன்றும். உனக்கு எப்படியிருக்கும்?
மாறன் : ராமு எனக்கும் அதே மனநிலைதான் இருக்கும். நமக்குள் பல ஒற்றுமை இருக்கிறதே!
கமலன் : நமக்கு மட்டுமல்ல, நம்மைப்போல உதவி செய்கின்ற அனைவருக்குள்ளும் இதே ஒற்றுமையிருக்கும். இப்படி உதவி செய்கிறவர்களால்தான் இன்றளவும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மாறன் : ஆமாம், ராஜா! சரியாகச் சொன்னாய். மனிதர்கள் மனிதருக்கு உதவி செய்வதுதான் மானுடத்தின் மாண்பு. ஆனால் இதைப் புரிந்து எல்லோரும் நடந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.
கமலன் : ஆமாம்பா சரியாக சொல்கிறாய். நாம் செய்கிற சிறிய உதவிகூட பலருக்குப் பேருதவியாக அமைந்து விடுகிறது.
மாறன் : நாம் இருவரும் இணைந்து செயல்பட நான் விரும்புகிறேன். நீ என்ன நினைக்கிறாய்?
கமலன் : நல்லது செய்ய இணைவது தப்பேயில்லை நண்பா- இணைவோம் – செயல்படுவோம் – நன்றி நண்பா!
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. தெண்ணீர் இச்சொல்லின் பொருள்
அ) கலங்கிய நீர்
ஆ) இளநீர்
இ) தெளிந்த நீர்
ஈ) வெந்நீர்
[விடை : இ) தெளிந்த நீர்]
2. ஆல் இச்சொல்லின் பொருள்
அ) வேலமரம்
ஆ) ஆலமரம்
இ அரசமரம்
ஈ) வேப்பமரம்
[விடை ஆ) ஆலமரம்]
3. கயம் இச்சொல்லின் பொருள்
அ) நீர் நிலை
ஆ) பயம்
இ) வானிலை
ஈ) பருவநிலை
[விடை : அ) நீர் நிலை]
4. புரவி இச்சொல்லின் பொருள்
அ) யானை
ஆ) பூனை
இ) ஆள்
ஈ) குதிரை
[விடை : ஈ) குதிரை]
5. பெரும்படை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெருமை + படை
ஆ) பெரும் + படை
இ) பெரு + படை
ஈ) பெரிய + படை
[விடை : அ) பெருமை + படை]
6. நிழல் + ஆகும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நிழல் ஆகும்
ஆ) நிழலாகும்
இ) நிழல்லாகும்
ஈ) நிழலாஆகும்
[விடை : ஆ) நிழலாகும்]
வினாக்களுக்கு விடையளி
1. ஆலமரத்தின் விதை எவ்வாறு இருக்கும் என்று அதிவீரராமபாண்டியர் குறிப்பிடுகிறார்?
விடை
ஆலமரத்தின் விதை தெரிந்த நீர் கொண்ட குளத்தின் சிறிய மீனின் முட்டையை விடவும் சிறியதாக இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்.
2. ஆலமரத்தின் நிழலில் தங்கும் படைகள் யாவை?
விடை
ஆலமரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை போன்ற படைகள் தங்கும்.
3. இப்பாடலின் பொருள் எதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது?
விடை
இப்பாடலின் பொருள் பிறருக்குச் செய்யும் உதவியுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக.
1. ஆகா என்ன சுகம் தெரியுமா
விடை
ஆகா! என்ன சுகம் தெரியுமா!
2. என்னைக் கட்டிப் போடுகிறார்கள்
விடை
என்னைக் கட்டிப் போடுகிறார்கள்.
3. ஆகா இது என்ன பிரமாதம்
விடை
ஆகா! இது என்ன பிரமாதம்!
4. நான் என்ன வேலை செய்ய வேண்டும்
விடை
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?
5. காய்கறிக்கடையில் தேவையான தக்காளி கத்தரி புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்
விடை
காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி, கத்தரி, புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.
மொழியோடு விளையாடு
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
எ.கா வயலில் மேய்வது – ஆடு
அழகாய் நடனம் – ஆடு
விடை
1. மாதத்தின் மறுபெயர் – திங்கள்
நிலவைக் குறிப்பது – திங்கள்
2. வகுப்பில் பாடம் – படி
மாடி செல்ல உதவும் – படி
3. வளைந்து ஓடுவது – ஆறு
6 – இந்த எண்ணின் பெயர் – ஆறு
4. பூக்களைத் தொடுத்தால் – மாலை
அந்தி சாயும் பொழுது — மாலை
5. சோற்றின் மறுபெயர் – அன்னம்
அழகிய பறவை – அன்னம்
கலையும், கைவண்ணமும்
கரிக்கோல் சீவிய துகள்களைக் கொண்டு படங்களை உருவாக்குவோம்.
எ.கா:
இணைந்து செய்வோமா
கூடையில் இருக்கும் சொற்களுள் முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து முதல் பழத்தில் எழுதுக. இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து இரண்டாம் பழத்தில் எழுதுக.
சிலந்தி
சிலை
சிந்தனை
தம்பி
தட்டு
தலை
தவளை
பானை
பூனை
யானை
நுண்ணியதே
வண்ணம்
தண்ணிர்
அறிந்து கொள்வோம்
மீன்களில் 22,000 வகையான மீன்கள் உள்ளன. இவற்றுள் மிகச் சிறியது கோபி வகையைச் சார்ந்தது. இதன் நீளம் 1:3 மில்லி மீட்டர், மிகப் பெரிய மீன் திமிங்கலச் சுறா. இதன் நீளம் 18 மீட்டர்.
செயல் திட்டம்
செய்தித்தாளில் பிறருக்கு உதவியதாக வரும் செய்திகளைச் சேகரித்துக் கீழே உள்ள செய்தித் துணுக்கு கட்டத்தில் ஒட்டுக.
இணைப்புச் சொற்களை அறிவோமா?
இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் சொற்கள் இணைப்புச் சொற்கள் ஆகும்.
சில இணைப்புச் சொற்களையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் அறிவோம்.
அதனால், ஆகவே, ஆனால், எனினும், ஆகையால், எனவே போன்றவை.
1. பருவ மழை பெய்தது அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
2. காற்று பலமாக வீசியது ஆகவே மரங்கள் வேரோடு சாய்ந்தன.
3. அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் ஆனால் வரவில்லை.
4. பூக்கள் அழகாகப் பூத்திருந்தன எனினும் பறிக்க மனமில்லை.
5. நான் தாய்நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன் ஆகையால் வெளிநாடு செல்லமாட்டேன்.
6. தினமும் காலையில் எழுந்து நன்றாகப் படித்தேன் எனவே நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.
பயிற்சி
ஆகவே, எனவே, ஆகையால், ஆனால் ஆகிய இணைப்புச் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.
விடை
1. அரசுத் தேர்வுகள் கடினமாக இருக்கும் ஆகவே விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டும்.
2. தீண்டாமை தீயைப் போன்றது எனவே அதனை உலகைவிட்டே ஓட்டுவது நம் கடமை.
3. நான் நல்லவனாக வாழ விரும்புகிறேன், ஆகையால் தீயோரிடம் நட்பு பாராட்ட மாட்டேன்.
4. காந்தியடிகள் லண்டனில் படித்தார் ஆனால் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து போகவில்லை