தமிழ் : பருவம் 2 இயல் 4 : திருக்குறள் கதைகள்
4. திருக்குறள் கதைகள்
சரியான தீர்ப்பு
முன்பொரு காலத்தில் மரியாதைராமன் என்பவர் வாழ்ந்து வந்த ஊரில் வளவன் என்பவன் மளிகைக் கடை வைத்து வாணிகம் செய்து வந்தான்.
வளவன் பணம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவன். யாருக்கும் கொடுத்து உதவமாட்டான். அரசுக்கும் முறையாக வரி செலுத்துவதில்லை .
இந்நிலையில், மரியாதைராமன் அவ்வூரின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மரியாதைராமன் வளவனின் இளம்வயது நண்பன். அதனால், நீதிபதி தனது நண்பன் என, வளவன் ஊர் முழுவதும் கூறிவந்தான். முறையாக வரி செலுத்தாதவர்களின் பட்டியல் நீதிபதியிடம் ஒருநாள் வழங்கப்பட்டது. நீதிபதியின் ஆட்கள் வளவனை அழைத்துச் சென்றனர். நீதிபதி தனது நண்பனாயிற்றே, தனக்குத் தண்டனை தரமாட்டார் என எண்ணியவாறே மகிழ்ச்சியாகச் சென்றான் வளவன். வளவனின் நண்பன் என்பதால் மரியாதைராமனும் எப்படித் தீர்ப்பு வழங்குவாரோ என அவரது பண்பையும் நேர்மையையும் மக்கள் சந்தேகப்பட்டனர். ஆனால், மரியாதைராமன், நண்பனாக இருந்தாலும் தவறு செய்தவன் என்பதால், முறைப்படி அவனுடைய பொருள்களை அரசாங்கக் கருவூலத்தில் சேர்த்திடச் செய்தார். மேலும், வளவனுக்கு ஆறுமாதக் கடுங்கால் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.
எவ்விதச் சார்பும் இன்றி நடுவு நிலைமையோடு தீர்ப்பு வழங்கிய மரியாதைராமனை அனைவரும் பாராட்டினர்.
குறள்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
நடுவுநிலைமை, குறள் 114
விளக்கம்
ஒருவர் நடுவுநிலைமை உடையவர், இல்லாதவர் என்பது அவருக்குப்பின் நிலைத்து நிற்கும் புகழாலும் பழியாலும் அறியப்படும்.
காலத்தே பயிர் செய்
முன்னொரு காலத்தில் மலைச்சாமி என்ற ஏழை விவசாயி, இலந்தைக்குட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவனுக்கென்று சொந்தநிலம் ஏதும் கிடையாது. ஆனால், விவசாயம்தான் சோறு போடும் என்பதை ஆணித்தரமாக நம்பினான். அதே ஊரில் வசித்துவரும் மாதையன் என்ற செல்வந்தனின் நிலத்தைக் குத்தகைக்குக் கேட்டான். அச்செல்வந்தனும் சில நிபந்தனைகளுடன் தன் நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிப்பதாகக் கூறினான். அதனை ஒப்புக்கொண்ட விவசாயி செல்வந்தனின் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினான். அச்செல்வந்தன் விவசாயியின் உழைப்பைச் சுரண்டுவதிலேயே குறிக்கோளாய் இருந்தான். இருந்தபோதிலும் மலைச்சாமி நேர்மையானவனாகவும், புத்திசாலியாகவும் இருந்ததால் செல்வந்தனிடம் ஏமாறவில்லை.
ஒருமுறை செல்வந்தன் விவசாயியிடம் குத்தகைக்கு ஈடாக “மண்ணுக்கு மேலே விளைபவை எனக்கு, மண்ணுக்குக் கீழே விளைபவை உனக்கு” என்று கட்டளையிட்டான். புத்திக்கூர்மையுடன் விவசாயி நிலக்கடலை பயிரிட்டதால் விவசாயிக்கே இலாபம் கிட்டியது. ஏமாற்றமடைந்த செல்வந்தன் அடுத்தமுறை விவசாயியை ஏமாற்ற எண்ணி நிபந்தனையை மாற்றினான். இம்முறை “மண்ணுக்குக் கீழே விளைபவை எனக்கு,மண்ணுக்கு மேலே விளைபவை உனக்கு” என்றான். ஆராய்ந்த விவசாயி இம்முறை நெல் பயிரிட்டான். இம்முறையும் விவசாயிக்கே இலாபம், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான் செல்வந்தன். அதனால் எவ்விடத்து எதை, எப்படி, எக்காலத்தில் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்தால் உலகையே வென்று விடலாம்.
குறள்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
காலமறிதல், குறள் 484
விளக்கம்
செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் அது கைகூடும்
அன்பெனும் அருங்குணம்
அழகிய ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் பறவைகளும் விலங்குகளும் வாழ்ந்து வந்தன. அங்கு இருந்த கரடி மட்டும் சேட்டைகள் பல செய்து வாழ்ந்தது. பறவையின் கூட்டை எட்டிப் பார்க்கும். குஞ்சுகள் என்றும் பாராமல் “இதோ உங்களைத் தூக்கி எறிகிறேன் பாருங்கள்” என்று கூட்டைப் பிய்த்து எறியும். குரங்குகள் வந்தால் தங்கவே இடம் தராமல் துரத்தி விட்டுவிடும். சில சமயங்களில் குட்டிக் குரங்குகளின் தலையில் குட்டு வைக்கும். அவை தலை வீங்கி அழுவதைப் பார்த்து சிரிக்கும். இவ்வாறு யாரிடமும் அன்புகாட்டாமல் வெறுப்புடனே நடந்து கொள்ளும். அதனால் பறவைகளும் குரங்குகளும் வேறு மரத்திற்கே சென்றுவிட்டன. ஒரு முறை வேடன் ஒருவன் விரித்து வைத்திருந்த வலையில் எதிர்பாராமல் கரடி சிக்கிக்கொண்டது. அது காடே அதிரும் வகையில் சத்தமிட்டு அலறியது. வேடன் விரித்த வலையிலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கதறியது. ஆனால், ஒருவரையும் காணோம். தான் யாரிடமும் அன்பு காட்டாமல் இருந்ததுதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதை உணர்ந்து ஓவென அழுதது. இவ்வேளையில் கரடியின் சத்தம் கேட்டு வந்த பறவைகள், வேடனைக் கொத்திக் கொத்தித் துரத்தின. குரங்குகள் வலையைப் பிய்த்துக் காப்பாற்றின. அன்றுமுதல் கரடி எல்லாரிடமும் அன்பு செலுத்தத் தொடங்கியது.
குறள்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் அன்புடைமை, குறள் 77
விளக்கம்
எலும்பு இல்லாத உயிரை வெயில் காய்ந்து வருத்தும். அதுபோல அன்பு இல்லாத உயிர்களை அறம் வருத்தும்.
கல்வியே நமது செல்வம்
ஓர் ஊரில் முத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். சொந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கடினமாக உழைத்துச் செல்வந்தராக உயர்ந்தார். அவருக்குப் புகழினி, மதியழகன் என்ற இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவருக்கும் கல்விக்கு முதன்மை அளிக்காமல், தொழிலில் ஈடுபடுத்த எண்ணினார். ஆனால், தந்தையின் ஆலோசனையையும் மீறி கல்லூரி வரை இருவரும் படித்து முடித்தனர். முத்தனுக்குக் கல்வியின் மேல் பெரிய ஈடுபாடோ, விருப்பமோ கிடையாது. ஆகவே, சரியாகக் கல்வி கற்காத முத்தனை அவரது வியாபாரக் கூட்டாளிகள் ஏமாற்றி விட்டனர். இதனால் வீடு, வயல், ஆடுமாடுகள் எனச் செல்வத்தை இழந்து ஒருவேளை உணவுக்கே துன்பப்படும் நிலைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் ஆளாகினர்.
முத்தனின் பிள்ளைகள் இருவரும் இனியும் தாமதிக்கக் கூடாது என எண்ணிப் பல நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பித்தனர். உரிய கல்வித்தகுதி பெற்றிருந்ததால், இருவருக்கும் நல்ல வேலை கிடைத்தது.
சில நாள்களிலேயே குடும்பத்தின் வறுமை நீங்கியது. முத்தன் கல்வியின் சிறப்பினை உணர்ந்து தமது கருத்தினை மாற்றிக்கொண்டார்.
குறள்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
கல்வி, குறள் 400
விளக்கம்
ஒருவருடைய நிலைத்த செல்வம் என்பது அவர் கற்ற கல்வியே ஆகும். அதனைத் தவிர வேறு எந்த செல்வமும் நீடித்து இருக்காது.
உண்மையான அணிகலன்கள்
முதியவர் ஒருவர் ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். பக்கத்து ஊருக்குச் செல்வதற்காக அவ்வழியே செல்வந்தர் ஒருவர் வந்தார். அவர் அந்த முதியவரைப் பார்த்து, “என்னையா இவ்வழியே போனால் பருத்தியூர் போய்ச் சேரலாமா?” என்றார். ஓங்கிய குரலில் ஆணவத்துடன் அதற்கு அந்த முதியவர் எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார். முணுமுணுத்துக் கொண்டே அந்தச் செல்வந்தர் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார். சற்றுநேரத்தில் மற்றொருவர் ஏராளமான ஆபரணங்கள் அணிந்துகொண்டு அங்கு வந்தார். அவர், “என்ன முதியவரே, இந்த வழியே யாரேனும் சற்றுநேரத்திற்கு முன் போனார்களா?” என்று கேட்டார். அதற்கு முதியவர் எனக்குத் தெரியாது என்று அமர்ந்தபடியே பதில் கூறினார். எனக்கு ஊரில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது தெரியுமா? நான் கேட்கும்போது எழுந்து பதில் கூறமாட்டாயா?” என்று முதியவரைக் கடிந்து கொண்டு சென்றார் அவர்.
மூன்றாவதாக இளைஞன் ஒருவன் அவ்வழியே வந்து முதியவரிடம் “ஐயா, வணக்கம். நான் வழி தவறி இங்கே வந்துவிட்டேன். எனக்குப் பருத்தியூர் செல்வதற்கு அருள்கூர்ந்து வழி கூறுங்கள்” என்றான். முதியவரும் உரிய வழியைக் கூறினார். “ஐயா, தங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா?” என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு அந்த முதியவர், “வேண்டா ” என மறுத்துக் கூறினார். பின்னர், இதுவரை அங்கு நடந்ததைக் கூறி, “தம்பி, நாம் எவ்வளவுதான் செல்வச்செழிப்புடன் இருந்தாலும் பணிவுடைமையே நமக்குச் சிறந்த பண்பு” என்று கூறி, அந்த இளைஞனை வாழ்த்தி அனுப்பினார்.
குறள்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
இனியவை கூறல், குறள் 95
விளக்கம்
பணிவு உடையவராகவும் இனிமையான சொற்கள் பேசுபவராகவும் இருப்பதே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன். மற்றவையெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகா.
ஆசிரியர் குறிப்பு
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் இயற்றிய இந்நூல், எக்காலத்துக்கும் ஏற்ற அறவுரைக் கருத்துகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகள் உள்ளன. 133 அதிகாரங்களும் அதிகாரத்திற்குப் பத்துக் குறளென 1330 குறட்பாக்களும் உள்ளன. ஒவ்வொரு குறட்பாவும் ஈரடியால் ஆகிய வெண்பாவாகும்.
பாடி மகிழ்வோம்
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது.
கொக்கு நெட்ட கொக்கு
நெட்ட கொக்கு இட்ட
முட்ட கட்ட முட்ட
இலந்தப் பழத்திற்கு ஆசப்பட்ட கொழந்த
வாழப்பழம் தின்றது.
குழு விளையாட்டு
ஞாலம் அறம் அணி என்பு கேடில் எலும்பு உலகம் அணிகலன் அழிவில்லாத தருமம்
மேற்கண்ட சொற்களை ஓர் அட்டையிலும் அவற்றிற்குரிய பொருள்களை வேறு அட்டையிலும் எழுதி வைத்துக் கொள்க. மாணவர்களை இரு குழுவாகப் பிரிக்க. ஒரு குழு அட்டையில் எழுதிய சொற்களைக் கூற, மற்றொரு குழு அவற்றிற்குரிய சரியான பொருளைக் கூறவேண்டும்.
இதே போல் குழுக்களை மாற்றிச் சொற்களைக் கூறச்செய்து, அவற்றின் பொருளைக் கூறச்செய்க.
சரியாகச் செய்யும் குழுவைக் கைகளைத் தட்டி பாராட்டச் செய்க. இதுபோன்று தொடர்ந்து புதிய சொற்களை வைத்து விளையாடச் செய்க.
பயிற்சி
வாங்க பேசலாம்
· உமக்குப் பிடித்த திருக்குறள் கதையை உமது சொந்த நடையில் கூறுக.
ஓர் ஊரில் முத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். தன்னுடைய சொந்த உழைப்பால் செல்வந்தராக உயர்ந்தவர். அவர்களுக்கு புகழினி, மதியழகன் என்று இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகள் இருவருக்கும் கல்வியை முதன்மைப்படுத்தாது தன்னுடைய தொழிலில் அவர்களை ஈடுபடுத்த எண்ணினார். ஆனால், தந்தையின் ஆலோசனையும் மீறி கல்லூரி வரை இருவரும் படித்து முடித்தனர்.
முத்தனுக்கு கல்வி அறிவு போதுமானதாக இல்லாததால் அவனுடைய வியாபாரக் கூட்டாளிகள் அவனை ஏமாற்றிவிட்டனர். இதனால் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் இழந்து, உணவுக்கே துன்பப்படும் நிலைக்குக் குடும்பம் ஆளாகியது. முத்தனின் குழந்தைகள் இதை அறிந்து பல நிறுவனங்களில் வேலை தேடினர். உரிய கல்வித் தகுதி இருந்ததால் நல்ல வேலை கிடைக்கப்பெற்று குடும்பத்தின் வறுமை நிலையை மாற்றினர். முத்தன் அப்பொழுதுதான் கல்வியின் சிறப்பை அறிந்து கொண்டான். ஏனெனில்,
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. குறள் – 400
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ஞாலம் – இச்சொல்லுடன் பொருந்தாத சொல் __________.
அ) உலகம்
ஆ) வையகம்
இ) புவி
ஈ) மலை
விடை : ஈ) மலை
2. கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது __________.
அ) அறம்
ஆ) தீமை
இ) கொடை
ஈ) ஈகை
விடை : ஆ) தீமை
3. ‘என்பு’ இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல் ___________.
அ) முகம்
ஆ) எலும்பு
இ) கை
ஈ) கால்
விடை : ஆ) எலும்பு
4. ‘நல்ல + செயல்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________.
அ) நல்லசெயல்
ஆ) நல்செயல்
இ) நற்செயல்
ஈ) நல்லச்செயல்
விடை : இ) நற்செயல்
5. “இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) இனிமை + சொல்
ஆ) இன் + சொல்
இ) இன்மை + சொல்
ஈ) இனிமை + செல்
விடை : அ) இனிமை + சொல்
குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
என்பி
அன்பி
பணிவுடையன்
அணியல்ல
முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுக
இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு ஆதல்
பிற மற்றுப் அணியல்ல.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
தகவிலர் தக்கார் அவரவர் என்பது
படும் எச்சத்தாற் காணப்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
பாடி மகிழ்வோம்
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது.
கொக்கு நெட்ட கொக்கு
நெட்ட கொக்கு இட்ட
முட்ட கட்ட முட்ட
இலந்தப் பழத்திற்கு ஆசப்பட்ட கொழந்த
வாழப்பழம் தின்றது.
குழு விளையாட்டு
ஞாலம் அறம் அணி என்பு கேடில் எலும்பு உலகம் அணிகலன் அழிவில்லாத தருமம்
மேற்கண்ட சொற்களை ஓர் அட்டையிலும் அவற்றிற்குரிய பொருள்களை வேறு அட்டையிலும் எழுதி வைத்துக் கொள்க. மாணவர்களை இரு குழுவாகப் பிரிக்க. ஒரு குழு அட்டையில் எழுதிய சொற்களைக் கூற, மற்றொரு குழு அவற்றிற்குரிய சரியான பொருளைக் கூறவேண்டும்.
இதே போல் குழுக்களை மாற்றிச் சொற்களைக் கூறச்செய்து, அவற்றின் பொருளைக் கூறச்செய்க.
சரியாகச் செய்யும் குழுவைக் கைகளைத் தட்டி பாராட்டச் செய்க. இதுபோன்று தொடர்ந்து புதிய சொற்களை வைத்து விளையாடச் செய்க.
செயல் திட்டம்
திருக்குறள் ஓலைச்சுவடி உருவாக்கி, அதில் பத்துக் குறள்களை எழுதி வருக.