தமிழ் : பருவம் 2 இயல் 3 : கல்வி கண் போன்றது
3. கல்வி கண் போன்றது
விரியூர் கிராமத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் அன்று கிராமசபைக் கூட்டம். வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பைக் கேட்ட பொன்வண்ணன், தம் கடையைப் பூட்டிவிட்டுக் கூட்டத்திற்குச் சென்றார்.
பஞ்சாயத்துத் தலைவர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். அரசின் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்துப் பேசினார். இத்திட்டத்தின்கீழ் யார் யாருக்கெல்லாம் உதவித்தொகை வந்திருக்கிறதோ அவர்களின் பெயர்களைப் படித்தார்.
பொன்வண்ணன் தம்முடைய பெயர் வருகிறதா என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், கடைசி வரை அவர் பெயர் வரவேயில்லை.
பொன்வண்ணன், தலைவரிடம் சென்றார். “ஐயா! எனக்கு ஏன் உதவித்தொகை இல்லை? நானும் பண வசதியில்லாமல் மிகவும் துன்பப்படுகிறேனே……” என்று கேட்டார்.
“யாருக்கெல்லாம் பண உதவி தேவையோ, அவர்களுக்கான கூட்டம் பற்றி உங்களுக்குத் அஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தோமே.! நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?” என்றார் தலைவர்.
“ஆமாம். போன வாரம் அஞ்சல்காரர் கொடுத்தார். படிக்கத் தெரியாததால் அப்படியே வைத்துவிட்டேன்”.
“என்னப்பா! உனக்குத்தான் படிக்கத் தெரியல, ஆனா, உம்பையன்தான் பள்ளியிலே படிக்கிறானே, அது எப்படி தெரியாமல் போகும்?”
பொன்வண்ணன் சற்றுக் குற்ற உணர்வோடு தலை குனிந்தபடி கூறினார், “ஐயா! நான் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கிறேன். எனக்கு உதவி செய்வதற்காக, அவனை அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்கச் சொல்வேன். சில சமயங்களில் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால்தானோ என்னவோ அவனுக்குச் சரியாக எழுதவும் படிக்கவுமே தெரியாமலே போய்விட்டது. அவனுடைய ஆசிரியரும் இதைப்பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்புமாறு அறிவுரையும் கூறுவார். நான்தான் தப்பு செய்துவிட்டேன். என் மகனை இப்படிப் படிக்கத் தெரியாதவனாக ஆக்கிவிட்டேன்.” என்று வருத்தத்துடன் கூறினார் பொன்வண்ணன்.
“உங்கள் அறியாமையால் இப்போது என்னவாயிற்று பார்த்தீர்களா? அரசின் உதவித் தொகையை உங்களால் பெற முடியாமல் போய்விட்டதே. கல்வி அறிவு இருந்தால்தான் நாள்தோறும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிவியல் மாற்றங்களையும் அறிந்துகொள்ள முடியும். நம்மையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். கல்வி, தொழிலுக்கு வழிகாட்டுகிறது. வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுகிறது. இப்போதாவது புரிந்து கொண்டீர்களா?”
“ஐயா! இப்ப நான் நன்கு புரிந்து கொண்டேன். நான்தான் கல்வி கற்காமல் இருந்து விட்டேன். என் மகனாவது நன்கு படித்து வாழ்வில் முன்னேறட்டும். இனி நான் என் மகனை வேலைக்காகப் பள்ளியைவிட்டு நிறுத்த மாட்டேன். இப்போதே என் மகனை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு நான் வேண்டிக்கொள்வேன்.”
புரிந்து கொண்டால் சரிதான். உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால நீங்க மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. நம் கிராமத்தினர் அனைவருமே அறியாமை நீங்கி, கல்வி குறித்த விழிப்புணர்வு பெறவேண்டும்.
கல்வியின் தேவையை எடுத்துக்கூறிய கிராம சபைத் தலைவருக்கு, நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் பொன்வண்ணன்.
உன்னை அறிந்துகொள்
பயிற்சி
வாங்க பேசலாம்
1. படிக்கத் தெரியாதவர் ஒருவர் பேருந்தில் ஊருக்குச் செல்கிறார். அவருக்கு ஏற்படும் சிக்கல்களைக் குழுவில் கலந்துரையாடுக.
• படிக்கத் தெரியாதவர் ஒருவர் தன்னுடைய ஊரிலிருந்து வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் நகரப்பேருந்து நிலையம் வருகின்றார்.
• பேருந்து நிலையத்தில் அவர் செல்ல வேண்டிய பேருந்து எது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
• மற்றவர்களிடம் அது பற்றிக் கேட்கவும் அவருக்கு மிகவும் தயக்கம்.
• எனவே, ஏதோ ஒரு பேருந்தில் ஏறிவிட்டார்.
• நடத்துனர் சில கிலோமீட்டர் தூரம் சென்றபோது பயணச்சீட்டு வழங்கும்போது எந்த ஊர் என்று கேட்டார்.
• படிக்கத் தெரியாதவர் செல்லும் ஊருக்கு அந்தப் பேருந்து செல்லாததால் இடைவழியிலேயே இறக்கிவிடப்பட்டார்.
• மீண்டும் நகரப் பேருந்து நிலையத்திற்கு வந்து, பின்னர் மற்றொருவரின் உதவியுடன் தான் செல்ல வேண்டிய ஊருக்குச் சென்றார்.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ‘துன்பம்’ – இச்சொல்லின் எதிர்ச்சொல் ___________
(அ) இன்பம்
(ஆ) துயரம்
(இ) வருத்தம்
(ஈ) கவலை
விடை: அ) இன்பம்
2. ‘உதவித் தொகை’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
(அ) உதவ + தொகை
(ஆ) உதவிய + தொகை
(இ) உதவு + தொகை
(ஈ) உதவி + தொகை
விடை : ஈ) உதவி + தொகை
3. ‘யாருக்கு + எல்லாம்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________
(அ) யாருக்கு எலாம்
(ஆ) யாருக்குல்லாம்
(இ) யாருக்கல்லாம்
(ஈ) யாருக்கெல்லாம்
விடை : ஈ) யாருக்கெல்லாம்
4. வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது ___________
(அ) பணம்
(ஆ) பொய்
(இ) தீமை
(ஈ) கல்வி
விடை : ஈ) கல்வி
5. ‘தண்டோரா’ என்பதன் பொருள் தராத சொல் ___________
(அ) முரசுஅறிவித்தல்
(ஆ) தெரிவித்தல்
(இ) கூறுதல்
(ஈ) எழுதுதல்
விடை : ஈ) எழுதுதல்
வினாக்களுக்கு விடையளி
1. ‘தண்டோரா’ மூலம் என்ன செய்தி அறிவிக்கப்பட்டது?
பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராமசபைக் கூட்டம், வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.
2. பஞ்சாயத்துத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் எதனைக் குறித்துப் பேசினார்?
அரசின் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்துப் பேசினார்.
3. பொன்வண்ணனுக்கு உதவித்தொகை ஏன் கிடைக்கவில்லை?
பண உதவி தேவைக்கான கூட்டம் பற்றிய அஞ்சல் செய்தியைப் படிக்கத் தெரியாததால் கூட்டத்திற்கு வரவில்லை. அதனால் உதவித்தொகை கிடைக்கவில்லை.
அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.
1. ஆவல் – ஆசை
2. தபால் – அஞ்சல்
3. தண்டோரா – முரசறைந்து செய்தி தெரிவித்தல்
4. நெறிப்படுத்துதல் – வழிகாட்டுதல்
சரியான சொல்லால் நிரப்புக.
1. மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ________ (களந்து / கலந்து) கொள்ள வேண்டும்.
விடை : கலந்து
2. கல்வி ________ (கன் / கண்) போன்றது.
விடை : கண்
3. நான் மிதிவண்டி ________ (பளுதுபார்க்கும் / பழுதுபார்க்கும்) கடை வைத்திருக்கிறேன்.
விடை : பழுதுபார்க்கும்
4. ஆசிரியர், மாணவனைப் பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்புமாறு ________ (அரிவுரை / அறிவுரை) கூறினார்.
விடை : அறிவுரை
எதனை, எங்கே செய்வோம்?
விடை :
கல்வி கற்கச் செல்வோம் – பள்ளிக்கூடம்
பாதுகாப்பு தேடிச் செல்வோம் – காவல் நிலையம்
மருத்துவம் பார்க்கச் செல்வோம் – மருத்துவமனை
அஞ்சல்தலை வாங்கச் செல்வோம் – அஞ்சல் நிலையம்
பயணம் செய்யச் செல்வோம் – பேருந்து நிலையம்
உன்னை அறிந்துகொள்
சொல் விளையாட்டு
மயில் தோகையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.
1. சுற்றம்
2. தோற்றம்
3. மாற்றம்
4. ஏற்றம்
5. சீற்றம்
6. முற்றம்
பாடி மகிழ்வோம்
பப்பரப்பா வண்டி
பனங்காய் வண்டி
ஒத்தையடிப் பாதையிலும்
ஓரம் போகும் வண்டி
புகையில்லா வண்டி
புழுதி தரா வண்டி
எண்ணெய் இல்லா வண்டி
ஏறிக் கோடா பாண்டி
உனக்குச் சரியானவற்றை எடுத்துக்கொண்டு உயர்ந்து செல்
சிந்திக்கலாமா
வளர்மதியும் பொன்மணியும் நல்ல தோழிகள். பொன்மணி சொற்களைத் தெளிவாகவும் அழகாகவும் எழுதுவாள். வளர்மதி சொற்களைத் தெளிவில்லாமல் எழுதுவாள்.
இதனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
• அழகாகவும் தெளிவாகவும் எழுதும்போது முகத்தைப் பார்க்காமலே அவர்கள் மீது ஒரு நல்ல எண்ணம் ஏற்படும்.
• அழகான கையெழுத்து என்பது படிப்பவரைக் கவரும் ஒரு தனிக்கலை.
• அழகான கையெழுத்துள்ள மாணவருக்குத் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.
• அழகாக எழுதும்போது மனம் ஒரு நிலைப்படும்
• தெளிவான எழுத்துகள் உற்சாகத்தைக் கொடுக்கும்.
• அழகாக எழுதுவோரின் தாள்களில் ஒழுங்கு இருக்கும்.