தமிழ் : பருவம் 2 இயல் 5 : வாலு போயி கத்தி வந்தது!
5. வாலு போயி கத்தி வந்தது!
டும்….டும்…டும்…டும்
ஒருநாள், ஓணான் ஒன்று வேலியைத் தாண்டும்போது அதன்வாலில் முள் குத்தி மாட்டிக்கொண்டது
குத்திய முள்ளை எடுத்துவிட ஊருக்குள் நுழைந்து உதவி கேட்க நினைத்தது
ஐயா, உழவரே! என் வாலில் முள் குத்திவிட்டது. கொஞ்சம் எடுத்து விடுங்களேன்
உழவர் வாலிலுள்ள முள்ளை எடுக்கும்போது வால் அறுந்துவிட்டது
ஆ! என் வால் அறுந்து விட்டதே!
ஏ… உழவரே! என் வாலைத் தருகிறாயா? இல்லை, உன் கத்தியைத் தருகிறாயா?
இந்தா! கத்தியை வைத்துக்கொள், ஆளை விடு…….
காட்டில் ஒருவர் மரம் வெட்டிக்கொண்டிருந்தார் அவரைப்பார்த்து…
ரொம்ப சிரமப்படுகிறாய். இந்தா கத்தி, இதனால் வெட்டு
மரத்தை வெட்டும்போது கத்தி உடைந்துவிட்டது
அட ! கத்தி உடைந்துவிட்டதே!
விறகு வெட்டியே… என் கத்தியைத் தருகிறாயா? இல்லை விறகைத் தருகிறாயா?
இந்தா… விறகை நீயே வைத்துக்கொள்
பிறகு, வழியில் தோசை சுடும் பாட்டியைப் பார்த்தது
பாட்டி! இந்த விறகை வைத்துக்கொள். தோசையைச் சுடு
பிறகு ஓணான், அடடா! எல்லா விறகையும் எரித்துவிட்டாயா?
இதப்பாரு பாட்டி, என் விறகைத் தருகிறாயா? இல்லை தோசையைத் தருகிறாயா?
சரி! சரி! இந்தா தோசையை எடுத்துக்கொள்
பிறகு ஓணான், மோர் விற்கும் பெண்ணை வழியில் பார்த்தது
பெண்ணே பசியா ? இந்தா, தோசையைச் சாப்பிடு.
மோர் விற்கும் பெண் தோசையைச் சாப்பிட்டு முடித்தாள்
ஓ…. தோசை முழுவதையும் சாப்பிட்டு விட்டாயா?
பெண்ணே என் தோசையைத் தருகிறாயா? இல்லை, பானையைத் தருகிறாயா?
பானையை ஓணான் பெற்றுக்கொண்டது
இந்தா … என் பானையை வைத்துக்கொள்.
வழியில் தோட்டக்காரரைப் பார்த்த ஓணான்,
தோட்டக்காரரே, தண்ணீர் எடுத்து ஊற்றுவதற்கு இந்தப்பானையை வைத்துக்கொள்…
தோட்டக்காரர் செடிகளுக்கு நீரூற்றும்போது பானை உடைந்துவிட்டது
ஆ! என் பானை உடைந்து போயிற்றே!
என் பானையைத் தருகிறாயா? இல்லை, பூவைத் தருகிறாயா?
இந்தா… பூக்களைத் தருகிறேன், எடுத்துக்கொள்
வழியில் மேளம் வாசிக்கும் பெண்ணை ஓணான் பார்த்தது
இந்தா.. பெண்ணே ! பூக்களைத் வைத்துக்கொள், அழகாக இருப்பாய்.
அந்தப் பெண் பூக்களைத் தலையில் வைக்கும்போது, அவை உதிர்ந்தன
அடடே! என் பூக்கள் உதிர்ந்து போயிற்றே
பெண்ணே! பூக்களைத் தருகிறாயா? இல்லை, மேளத்தைத் தருகிறாயா?
அந்தப் பெண் பயந்தவாறு
சரி சரி இந்த மேளத்தை வைத்துக்கொள்…
ஓணான் அந்த மேளத்தை அடித்தவாறே மகிழ்ச்சியோடு பாடியது
வாலு போயி கத்தி வந்தது டும்….டும்…டும்…டும்
கத்தி போயி விறகு வந்தது டும்… டும்… டும்…டும்
விறகு போயி தோசை வந்தது டும்…டும்… டும்…டும்
தோசை போயி பானை வந்தது டும்…டும்…டும்…டும்
பானை போயி பூவு வந்தது டும்…டும்…டும்…டும்
பூவு போயி மேளம் வந்தது டும்…டும்…டும்…டும்
நீதிக் கருத்து: துன்பம் வரும் வேளையில் மனம் சோர்வு அடையக்கூடாது.
அறிந்து கொள்வோம்
உலக கதைசொல்லல் நாள் – மார்ச் 20
பயிற்சி
வாங்க பேசலாம்
* ‘டும் .. டும் .. டும் .. டும்..’ படக்கதையை உமது சொந்த நடையில் கூறுக.
• ஓணான் ஒன்று வேலியைத் தாண்டும்போது அதன் வாலில் முள் குத்திவிட்டது. அதனை எடுத்துவிடுமாறு உழவரிடம் வேண்டியது. உழவர் முள்ளை எடுக்கும்போது அதன் வால் அறுந்துவிட்டதால் கத்தியை ஓணான் பெற்றுக்கொண்டது.
• காட்டில் மரம் வெட்டியைப் பார்த்துக் கத்தியைக் கொடுத்தது. மரம் வெட்டி கத்தியை ஒடித்ததால் அதற்காக விறகுகளைப் பெற்றுக்கொண்டது.
• வழியில் தோசை சுடும் பாட்டியிடம் விறகுகளைக் கொடுத்துவிட்டு தோசையைப் பெற்றுச் சென்றது.
• தோசையை மோர் விற்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மோரைப் பெற்றுச் சென்றது.
• மோர் பானையை தோட்டக்காரரிடம் கொடுத்துவிட்டு, பூக்களைப் பெற்றுச் சென்றது.
• பூவை மேளம் வாசிக்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மேளத்தைப் பெற்றுச் சென்று மகிழ்வுடன் ஆடிப் பாடியது.
• வார இதழ்களில் வரும் படக்கதையைப் படித்த அனுபவம் உண்டா ? ஆம் எனில், அக்கதையைப் பற்றி கூறுக.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. விறகெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) விறகு + எல்லாம்
ஆ) விறகு + கெல்லாம்
இ) விற + கெல்லாம்
ஈ) விறகு + எலாம்
விடை : அ) விறகு + எல்லாம்
2. ‘படம் + கதை’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) படம்கதை
ஆ) படக்கதை
இ) படகதை
ஈ) படகாதை
விடை : ஆ) படக்கதை
3. – இப்படத்திற்கு உரிய சொல்லைக் கண்டறிக.
அ) ஓனான்
ஆ) ஓநான்
இ) ஓணான்
ஈ) ஓணன்
விடை : இ) ஓணான்
4. தோசை – இச்சொல்லின் ஒலிப்புடன் தொடர்பில்லாத சொல் எது?
அ) ஆசை
ஆ) மேசை
இ) பூசை
ஈ) இசை
விடை : ஈ) இசை
வினாக்களுக்கு விடையளி
1. ஓணான் எதற்காக மருத்துவரிடம் சென்றது?
ஓணான் மருத்துவரிடம் செல்லவில்லை.
2. தோட்டக்காரன் ஓணானிடம் என்ன கூறினான்?
தோட்டக்காரனிடம் ஓணான் இந்தப் பானையை வைத்துக்கொள் என்று கூறியது.
3. கதையில் ஓணான் பெற்று வந்த பொருள்களைக் கூறுக.
கத்தி, விறகு, தோசை, பானை, பூக்கள், மேளம் போன்ற பொருள்களை ஓணான் பெற்று வந்தது.
4. படக்கதையிலிருந்து நீ அறிந்து கொண்ட கருத்து யாது?
துன்பம் வரும் வேளையில் மனச்சோர்வு அடையக்கூடாது. ஒன்றுபோனால் மற்றொன்று வரும்.
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக
ஊர் கூடி என்னை இழுத்தால்தான் நான் அசைந்து வருவேன். நான் யார்?
விடை : தேர்
இடிஇடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது. அது என்ன?
விடை : பட்டாசு
நிழல் தருவனே காய் தருவேன் பழம் தருவேன். நான் யார்?
விடை : மரம்
‘கலை’ என்ற சொல்லில் முதல் எழுத்து
‘படம்’ என்ற சொல்லில் இடை எழுத்து
‘மடல்’ என்ற சொல்லில் இறுதி எழுத்து.
நான் யார்?
விடை : கடல்
சொல் விளையாட்டு
ஒரு சொல்லில் உள்ள ஏதாவது ஓர் எழுத்தைக்கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி மகிழ்க.
இதே போன்று ஒட்டகம், குருவி, சிங்கம், கவிதை போன்ற சொற்களைத் தொடக்கமாக வைத்துச் சொற்களை உருவாக்குக.
ஒட்டகம் → கதிரவன் → வந்தன → தங்கம் → கழுகு
குருவி → விளக்கு → மிளகு → மின்னல் → கனவு
சிங்கம் → சிரிப்பு → குப்பை → குளம் → அளவு
கவிதை → கரம் → ரம்பம் → பட்டம் → குடம்
அறிந்து கொள்வோம்
உலக கதைசொல்லல் நாள் – மார்ச் 20