சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர்
அலகு 2
நீர்
கற்றல் நோக்கங்கள்
கற்போர்
❖ நீரின் பல்வேறு பயன்பாட்டிளைப் பட்டியலிடுதல்
❖ நீரினைப் பயன்படுத்தி சிறுசிறு சோதனைகள் செய்தல்
❖ நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்தல்
நம் வாழ்வில் நீர்
நாம் கலந்துரையாடுவோமா!
நம் அன்றாட வாழ்வில் நீரினைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பல்வேறு செயல்களைப் படத்தை உற்றுநோக்கி பேசுவோமா!
குளித்தல்
பருகுதல்
சமைத்தல்
துவைத்தல்
நம் அன்றாட வாழ்வில் பல்வேறு செயல்களைச் செய்ய நீரைப் பயன்படுத்துகிறோம். உடலை நலமாக வைத்துக் கொள்வதற்கு நீரைப் பருகுகிறோம். குளிப்பதற்கு, சமைப்பதற்கு துணி துவைப்பதற்கு, தாவரங்களை வளர்ப்பதற்கு நீரைப் பயன்படுத்துகிறோம். நீர் இல்லாமல் நாம் உயிர்வாழ இயலாது. ஆகையால் நீரை கவனமுடன் பயன்படுத்தவும்.
சொற்களஞ்சியம்: குளித்தல், பருகுதல், துவைத்தல், வளர்த்தல், சமைத்தல், ஊற்றுதல், பல் துலக்குதல்.
எலுமிச்சை சாறு தயாரித்தல்
எலுமிச்சையை இரண்டு துண்டுகளாக வெட்டி குவளையில் அதன் சாறைப் பிழிய வேண்டும். அதனுடன் சர்க்கரையும் சிறிது உப்பும் சேர்த்து நீரினை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
செயல்களை அதற்குரிய பொருள்களுடன் இணைப்போமா!
ஆசிரியருக்கான குறிப்பு: எலுமிச்சை சாறு தயாரித்தலை வகுப்பறையில் செய்து காட்டவும்.
நீர்,எங்கெங்கும் நீர்
பாடல் நேரம்
மழை
மழையே! மழையே! வா வா வா!
மாதம் மும்முறை வா வா வா!
பச்சைப் பயிர்கள் யாவுமே
பாரினில் தழைக்க வா வா வா!
தரணியில் வாழும் உயிர்களுக்கும்
தாகம் தணித்திட வா வா வா!
ஏரி, குளம், கிணறு, ஆறு போன்றவற்றிற்கு மழையே முக்கிய ஆதார வளமாகும். அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ நீர் அவசியம். மீன், தவளை, வாத்து மற்றும் பல தாவரங்களும் நீரில் வாழ்கின்றன.
தூய மற்றும் பாதுகாப்பான குடிநீரைத் தயாரிக்கும் படிநிலைகள்
● நீரைப் பாத்திரத்தில் சேகரித்தல்
● வடிகட்டுதல்
● கொதிக்க வைத்தல்
● தட்டு கொண்டு மூடுதல்
● குளிர்வித்தல்
எண்ணிப் பார்த்து எழுதுவோமா!
நீர் வேடிக்கைகள்
ஒரு கிண்ணத்தில் பணிக்கட்டியை எடுத்துக்கொண்டு பத்து நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பனிக்கட்டியில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை உற்று நோக்கவும். பனிக்கட்டி மெதுவாக உருகி நீராக மாறுகிறது. நீங்கள் இதனைத்தொட்டுப் பார்த்து உணரலாம்.
உணவு நிறமூட்டிகளைப் பயன்படுத்தி பல வண்ணங்களில் நீரைத் தயாரிப்போமா!
கொடுக்கப்பட்ட பானையில் நீரை நிரப்ப எத்தனை குவளை நீர்தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிந்து எழுதுவோமா?
ஆசிரியருக்கான குறிப்பு:
நீரைப் பயன்படுத்தி செய்யும் வேடிக்கை விளையாட்டுகளை வகுப்பறையில் செய்து காட்டவும்.
நீர் சேமிப்பு
சின்னப் பாப்பா சிரித்திடு!
விழிப்பாய் நீயும் இருந்திடு!
வீட்டில் பயன்படுத்திய நீரையே
தோட்டத்திற்கு நீயும் பாய்ச்சிடு!
வீணாகும் தெருக்குழாய் நீரையே
பொறுப்பாய் நீயும் நிறுத்திடு!
உன் சின்னச் சின்னக் கையாலே
நீரைச் சிக்கனமாய் பயன்படுத்திடு!
நீரைச் சேமிப்பதில் மேற்கொள்ள வேண்டிய நல்ல பழக்கங்கள்
துணி துவைக்கும்போது குழாய் நீரினை நிறுத்திவைக்க வேண்டும்.
தாவரங்களுக்குக் காலையில் நீர் ஊற்றுதல் வேண்டும்.
நாம் நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நமக்குப் போதுமான அளவு நீர் இல்லையெனில் நம் வாழ்வு மிகவும் சிரமமாக இருக்கும்.
நீர் வீணாகும் இடங்களைக் (x) குறியிட்டுக் காட்டுவோமா!
மதிப்பீடு
நீர் வீணாக்கப்படுவதை வெளிப்படுத்தும் படங்களை (x) குறியிட்டுக் காட்டுக.
தன் மதிப்பீடு
❖ நீரின் பயன்களை நான் அறிவேன்
❖ அன்றாட வாழ்வில் நீரை கவனமாக பயன்படுத்துவேன்
❖ நீரினைப் பயன்படுத்தி சில எளிய சோதனைகளை என்னால் செய்ய முடியும்