சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 1 : சுவையான உணவு
அலகு 1
சுவையான உணவு
கற்றல் நோக்கங்கள்
கற்போர்
❖ உணவின் முக்கியத்துவத்தை உணர்தல்
❖ உணவின் பல்வேறு வகைகளைப் பட்டியலிடுதல்
❖ அரிசி கடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளுதல்
உணவின் முக்கியத்துவம்
பாடல் நேரம்
சாப்பிடுவேன் நல்லா சாப்பிடுவேன்!
காயும் கனியும் சாப்பிடுவேன்!
சத்துகள் பலவும் பெற்றிடவே
கீரையை நானும் சாப்பிடுவேன்!
பாங்காய் நானும் வளர்ந்திடவே
பாலும் முட்டையும் சாப்பிடுவேன்!
உடல் உறுதி பெற்றிடவே
தானியங்களைச் சாப்பிடுவேன்!
வீட்டில் சமைக்கும் உணவையே
விரும்பி நானும் சாப்பிடுவேன்!
நாம் கலந்துரையாடுவோமா!
தினமும் என்னென்ன உணவுப்பொருள்களை நீங்கள் உண்கிறீர்கள்?
நாம் உயிர் வாழ உணவு தேவை. வேலை செய்வதற்கும் விளையாடுவதற்கும் தேவையான ஆற்றலை உணவு தருகிறது.
நாம் தினந்தோறும் பல்வேறு விதமான உணவை உண்கிறோம். அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கொய்யா கேரட் வேர்க்கடலை இட்டலி, வடை, தோசை, சாப்பாடு
ஆற்றல் தரும் சில உணவுகள்
கேழ்வரகு களி சோறு சப்பாத்தி
பால் உடலுக்கு சத்தானது. இது பற்களையும் எலும்புகளையும் வலிமையாக வைத்திருக்க உதவுகிறது.
பருப்பு வகைகள், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவை நம் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
நமது உடலை நலமாக வைத்துக்கொள்ளவும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கும் கொட்டைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவுகின்றன.
கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை அவற்றிற்குரிய காய்கறிகளுடன் பொருத்துவோமா!
நம் உணவு
பால், இறைச்சி, மீன், முட்டை, பழங்கள், காய்கறிகள், பூக்கள், தானியங்கள், கொட்டைகள், எண்ணெய், நெய் போன்றவை நாம் உணவாக எடுத்துக் கொள்கிறோம்
தானியங்கள்
பருப்பு வகைகள்
முழுமையான மற்றும் உடைக்கப்பட்ட பருப்பு வகைகள்
நம் உடல் நலமாக இருக்க நீர் அவசியம். ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு குவளை நீரை நாம் கட்டாயமாகப் பருக வேண்டும்.
பின்வருவனவற்றை அடையாளம் கண்டு பழமாக இருப்பின் 1 எனவும், காய்கறியாக இருப்பின் 2 எனவும், பருப்பு வகையாக இருப்பின் 3 எனவும், தானியமாக இருப்பின் 4 எனவும், கொட்டையாக இருப்பின் 5 எனவும் குறிப்பிடவும்.
பல்வேறு உணவு வகைகள்
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும் தனித்துவமான சுவையினைக் கொண்டது. அவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களால் ஆனவை.
ஒரே வகையான பகுதிப் பொருளைப் பயன்படுத்தி நாம் பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.
கோதுமையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களுக்கு மட்டும் (✔) குறியிடுவோமா!
ஒரு நாளைக்கான உணவு
காலையில் நாம் உண்ணும் உணவு காலை உணவு, மதிய வேளையில் உண்ணும் உணவு மதிய உணவு மற்றும் இரவு வேளையில் உண்ணும் உணவு இரவு உணவு ஆகும். நாம் எந்த ஒருவேளை உணவையும் தவிர்க்கக் கூடாது. நம்மில் சிலர் சைவ உணவையும் சிலர் அசைவ உணவையும் விரும்பி உண்பர்.
பள்ளிக்குச் செல்லும் முன் நான் காலை உணவை உண்கிறேன்… நீங்கள்?
உணவைத் தவிர பிற தின்பண்டங்களை நொறுக்குத் தீனிகள் என்கிறோம். சத்தான உணவு வகைகளை நாம் நொறுக்குத் தீனிகளாகத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
கொண்டைக்கடலை / சுண்டல்
கடலைப் பருப்பு / சுண்டல்
பொரி உருண்டை
எள் உருண்டை
வேர்க்கடலை மிட்டாய்
உணவு வகையின் பெயரைச் சொல்லி எண்ணி எழுதுவோமா!
சத்தான உணவு வகைகள்
உணவுப் பொருள்களில் பல வகைகள் உண்டு. அவற்றுள் சத்தான உணவை நாம் தொடர்ந்து உண்ண வேண்டும்.
இட்டலி
கோதுமை ரொட்டி
வேர்க்கடலை மிட்டாய்
முளைகட்டிய தானியங்கள்
சில நொறுக்குத்தீனிகளை குறைந்த அளவு எப்பொழுதாவது உண்ணலாம்.
குலாப் ஜாமூன்
லட்டு
முறுக்கு
வறுவல்
நாம் விரும்பும் சில நொறுக்குத் தீனிகள் நம் உடலுக்கு நன்மை பயப்பவை அல்ல. அவற்றை நாம் தவிர்க்க வேண்டியது அவசியம்.
பிஸ்கட்டுகள்
மைதா ரொட்டி
பனிக் கூழ் (ஐஸ்கிரீம்)
மைதா நூடுல்ஸ்
மென்பானங்கள்
சாக்லேட்டுகள்
நம்மில் பலருக்கு இனிப்புத் தின்பண்டங்கள் மிகவும் பிடிக்கும். இனிப்புகள் வெல்லத்தாலும் சர்க்கரையாலும் தயாரிக்கப்படுகின்றன. வெல்லத்தால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளே உடல் நலத்திற்கு உகந்தவை.
பருப்புப் பாயசம்
எள் உருண்டை
அதிரசம்
வேர்க்கடலை உருண்டை
பால் பாயசம்
ரசகுல்லா
ரவா லட்டு
ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவும் முளைகட்டிய தானியங்களும் சத்துமிக்கவை.
இட்டலி
அரிசி உப்பு உருண்டை
பிட்டு
இடியாப்பம்
முளைகட்டிய தானியங்கள்
நாம் செய்வோமா!
பச்சைப்பயறை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். நீரை வடிகட்டி, பயறை சுத்தமான துணியில்கட்டி வைக்கவேண்டும். மறுநாள் தானியங்களில் ஏற்படும் மாற்றத்தை உற்று நோக்கவும்.
சில தாவரங்களின் இலைகள் உணவாகப் பயன்படுகின்றன. அந்த இலைகளைக் கீரைகள் என்கிறோம். நாம் வாரத்திற்கு இரு முறையாவது கீரைகளை உண்ண வேண்டும்.
முருங்கைக் கீரை
மணித்தக்காளிக் கீரை
பொன்னாங்கண்ணிக் கீரை
நாம் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருள்களை வட்டமிடவும்.
உணவு உண்ணும் முறைகள்
● உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் கை கழுவுதல் வேண்டும்
● அனைவரும் சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் வேண்டும்
● உணவு உண்ணும் போது பேசக்கூடாது
● உணவை நன்றாக மென்று உட்கொள்ளுதல் வேண்டும்
● உணவைச் சிந்தாமல் உட்கொள்ளுதல்
● உணவு உண்ணும் போது தொலைக்காட்சி பார்ப்பதையும் அலைபேசி பயன்படுத்துவதையும் தவிர்த்தல் வேண்டும்
● அதிக உணவு உடல் நலனுக்கு கேடு
● ஒவ்வொரு முறை உணவு உண்ட பிறகும் வாய் கொப்பளித்தல் வேண்டும்
● உணவை வீணாக்கக்கூடாது
● உண்பதற்கும் சமைப்பதற்கும் முன் காய்கறிகள், பழங்களை கழுவிப் பயன்படுத்துதல் வேண்டும்.
● கெட்டுப்போன உணவு நோயை உண்டாக்கும். எனவே அதனைத் தவிர்த்தல் வேண்டும்.
● மூடப்படாத உணவில் தூசிகள், கிருமிகள் இருப்பதால் அதனைத் தவிர்த்தல் வேண்டும்.
வட்டங்களில் செய்யக்கூடிய செயல்களுக்குப் பச்சை வண்ணமும் செய்யக்கூடாத செயல்களுக்குச் சிவப்பு வண்ணமும் இடுவோமா!
அரிசி கடந்து வந்த பாதை
விவசாயி நிலத்தை உழுவதிலிருந்து அரிசியின் பயணம் ஆரம்பமாகிறது. படங்களை உற்று நோக்கி எத்தளை நிலைகளைச் சுடந்து உணவு நம் தட்டிற்கு வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வோமா! நாம் எப்போதும் உணவிற்கும் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உரிய மரியாதையை அனிக்க வேண்டும். நீங்கள் உணவு உண்ணும் முன்பு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நெற்பயிரின் வளர்ச்சி நிலைகள்
● ஏர் உழுதல்
● விதை விதைத்தல்
● நாற்று பிடுங்குதல்
● நாற்று நடுதல்
● கதிர் அறுத்தல்
● கதிர் அடித்தல்
● தூற்றுதல்
● உலர்த்துதல்
● சேமித்தல்
● நெல் அரைத்தல்
● சமைத்தல்
● சாப்பிடுதல்
விவசாயக் காட்சி– ஐந்து வித்தியாசங்களைக் கண்டுபிடி.
மதிப்பீடு
1. நாம் உண்ணக்கூடிய பூக்களை மட்டும் வட்டமிடுக.
2. உணவுப் பொருள்களை அவற்றின் முக்கியப் பகுதிப்பொருளுடன் கோடிட்டு இணைக்க.
3. பொருத்தமற்றதைக் கண்டறிந்து வட்டமிடுக.
4. தவறான செயலை அதற்குரிய சரியான செயலுடன் கோடிட்டு இணைக்க
தன் மதிப்பீடு
❖ எனக்கு உணவின் முக்கியத்துவம் பற்றித் தெரியும்
❖ என்னால் உணவின் பல்வேறு வகைகளைப் பட்டியலிட முடியும்
❖ எனக்கு அரிசி கடந்து வந்த பாதையைப் பற்றித் தெரியும்