தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு
உரைநடை: ஒப்புரவு நெறி
நுழையும்முன்
மனிதர்கள் தனித்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். சமுதாயமாகக் கூடி வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழப்பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம் உதவுவதே சிறந்த பண்பாகும். அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும். அதனைப் பற்றிய சிந்தனைகளை அறிவோம்.
இந்த மானுடப் பிறவி தற்செயலாகவோ விபத்தின் காரணமாகவோ அமைந்தது அன்று. இஃது ஓர் அரிய வாய்ப்பு. ஒரே ஒரு தடவை மட்டுமே வழங்கப் பெறும் வாய்ப்பு. இந்தப் பிறவியை மதித்துப் போற்றிப் பயன் கொள்ளுதல் கடமை. அதனால் எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பது அல்ல, எப்படி வாழ்ந்தோம் என்பதே கேள்வி. வாழ்ந்த காலம் எந்தமுத்திரையைப் பெற்றது? வாழ்ந்த காலம் ஏதாவது அடையாளங்களைப் பெற்றதா? நம் பெயர் காலந்தோறும் பேசப்படுமா என்றெல்லாம் சிந்திப்பவர்கள் வாழும்நெறி பற்றிக் கவலைப்படுவார்கள்; குறிக்கோளுடன் வாழத்தலைப்படுவார்கள்.
வாழ்வின் குறிக்கோள்
வாழ்க்கை குறிக்கோள் உடையது. அக்குறிக்கோள் எது? தாம் வாழ்வதா? தாம் வாழ்தல் என்பது சாதனம் ஆதலால், தாம் வாழ்தல் என்பது எளிய ஒன்று. இயற்கையே கூட வாழ்வித்துவிடும். நல்ல சமூக அமைப்பும் அரசும் தோன்றிவிட்டால் தாம் வாழ்தல் என்பது எளிது. வாழ்க்கை, தொண்டினையே குறிக்கோளாக உடையது. இந்தக் குறிக்கோளுடன்தான் ஒப்புரவு நெறியைத் திருக்குறள் அறிமுகப்படுத்துகிறது. திருக்குறள் நெறியில் மக்கள் ஒருவருக்கொருவர் கடமைகளைச் செய்வதற்கு உரியவர்கள். உரிமைகளைப் பெறுவதற்கும் உரியவர்கள். ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி.
வாழ்வும் ஒப்புரவும்
ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது. தரத்தைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது. உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும்கூட உதவி செய்யலாமே! சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான். அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவி செய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.
ஒப்புரவின் இயல்பு
ஒப்புரவில் பெறுபவர் அந்நியர் அல்லர்; உறவினர். கடமையும் உரிமையும் உடையவர். ஒப்புரவுநெறி சார்ந்த வாழ்க்கையில் வள்ளல்கள் இல்லை. வாங்குபவரும் இல்லை. ஒப்புரவுநெறி சார்ந்த வாழ்க்கையில் உடைமைச்சார்பு இறுக்கமான தனியுடைமையாக இல்லாமல் அறநெறி சார்ந்த குறிக்கோளுடைய உடைமையாக அமையும். ஒப்புரவில் ஈதல் – ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உறவு இல்லை . ஒப்புரவுநெறி சார்ந்த வாழ்க்கை உரிமையும் கடமையும் உடைய வாழ்வு முறையாக அமைவதால் கடமைகள் உரிமைகளை வழங்குகின்றன.
பொருள்ஈட்டலும் ஒப்புரவும்
பொருள் ஈட்டலிலும் அந்தப் பொருளை நுகர்தலிலும் அறிவியல் பாங்கு தேவை. அயலவர் உண்ணாது இருக்கும்போது நாம் மட்டும் உண்பது நெறியும் அன்று; முறையும் அன்று. அதுமட்டுமல்ல, பாதுகாப்பும் அன்று. அயலவன் விழித்து எழுந்தால் நமது நிலை பாதிக்கும். ஆதலால் வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும். இம்முறையை அப்பரடிகள் எடுத்துக் கூறினார். அண்ணல் காந்தியடிகள் வழிமொழிந்தார். பாவேந்தர் பாரதிதாசனும் உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய் என்றார். செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை .
பொருளீட்டல் தான்மட்டும் வாழ்வதற்காக என்பது அறிவியல் கருத்து அன்று. பொருளீட்டும் வாழ்க்கையேகூடச் சமூக வாழ்க்கைதான். மற்றவர்களுக்கு வழங்கி, மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கு உரிய கரு. இரப்பார்க்கு இல்லென்று இயைவது கரத்தல் அறிவியல் அன்று; அறமும் அன்று. செய்வது செய்து பொருள் ஈட்டி இரப்பார் துன்பத்தை மாற்றுவதே சமூகத்தின் பொது நிலை. பொருள் ஈட்டல், சேர்த்தல், பாதுகாத்தல் மனித வாழ்க்கையில் நடைபெறும் ஒரு பணி – இல்லை – ஒரு போராட்டம். பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம். அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.
வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு. பொருள் தேடல் வாழ்க்கையின் லட்சியம் அன்று. பொருள் வாழ்க்கையின் கருவியே. நல்ல அறிவும் பண்பும் உடையவர்களுக்குப் பணம் பணியாள். ஆனால், இவை இல்லாதவர்க்கோ மோசமான எசமானன். வாழ்க்கையை உணர்ந்து கொள்ளச் செல்வம் மட்டுமன்றி வறுமையும்கூடத் துணை செய்யும். பொருளும் தேவை; அதைத் துய்க்கத் திறனும் தேவை. பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி பெறலாம். செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்குச் சமம்.
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே
என்கிறது புறநானூறு.
ஒப்புரவின் பயன்
ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது. அதைத் தடுப்பார் யாருமில்லை. ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன்மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம். பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல. மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை ஒன்றே காணப்பெறுகிறது. நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் பயன்படுத்தத் தக்கவையாகவே அமைந்துள்ளன. ஆயினும் ஊருணி, பயன்மரம், மருந்துமரம் ஆகியன மனிதர்கள் தம் படைப்பாற்றலைக் கொண்டு படைத்தவை என்பதை நினைவில் கொள்க!
ஒப்புரவும் கடமையும்
ஊருணியை அகழ்ந்தவன் மனிதன். அந்த ஊருணியில் தண்ணீரைக் கொணர்ந்து தேக்கியது யார்? மனிதர்தாம். ஊருணியை அமைத்துத் தண்ணீரைத் தேக்கும் கடமை பொறுப்புணர்வுடன் -கூட்டுப் பொறுப்புடன் செய்யப் பெற்றால்தான் ஊருணியில் தண்ணீர் நிறையும். பலரும் எடுத்துக் குடிக்கலாம். பயன்தரும் மரங்களை வளர்த்தால்தான் கனிகள் கிடைக்கும். தின்று அனுபவிக்கலாம்.
தெரிந்து தெளிவோம்
ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள். 215)
உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (குறள். 216)
நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பழமரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.
இங்கும் மனிதனின் படைப்பைத் தொடர்ந்துதான் நுகர்வு வருகிறது. ஒப்புரவு வருகிறது. அதேபோல மருந்துமரங்களையும் நட்டு வளர்த்தால்தான் பயன்படுத்த முடியும். ஆதலால் ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது உழைப்பு. கூட்டு உழைப்பு. பொருள்களைப் படைக்கும் கடமைகள் நிகழாத வரையில் ஒப்புரவு வாழ்வு மலராது. கடமைகள் இயற்றப் பெறாமல் ஒப்புரவு தோன்றாது. ஒரோவழி தோன்றினாலும் நிலைத்து நில்லாது. கடமைகளில், பொருள் செய்தலில் ஒவ்வொருவரும் கூட்டு உழைப்பில் ஈடுபட்டால்தான் ஒப்புரவுநெறி தோன்றும்; வளரும்; நிலைத்து நிற்கும்.
நிறைவாக
நாம் இன்று வாழ்வது உண்மை. நமக்கு வாய்த்திருக்கும் வாய்ப்புகளும் அருமையானவை. ஏன் காலம் கடத்த வேண்டும்? இன்று நன்று, நாளை நன்று என்று எண்ணிக் காலத்தைப் பாழடிப்பானேன்? இன்றே வாழத் தொடங்குவோம். வாழத் தொடங்கியதன் முதற்படியாகக் குறிக்கோளைத் தெளிவாகச் சிந்தித்து முடிவு செய்வோம். இந்தப் புவியை நடத்தும் பொறுப்பை ஏற்போம். பொதுமையில் இந்தப் புவியை நடத்துவோம். பொதுவில் நடத்துவோம். உலகம் உண்ண உண்போம். உலகம் உடுத்த உடுத்துவோம். எங்கு உலகம் தங்கியிருக்கிறதோ அங்கேயே நாமும் தங்குவோம். மண்ணகத்தில் விண்ணகம் காண்போம்.
நூல் வெளி
மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் – வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர். திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார்.
ஒப்புரவு நெறி என்னும் தலைப்பில் அடிகளார் கூறியுள்ள கருத்துகள் நம் பாடப் பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது ——-நெறி.
அ) தனியுடமை
ஆ) பொதுவுடமை
இ) பொருளுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
[விடை : ஆ. பொதுவுடமை]
2. செல்வத்தின் பயன் ——– வாழ்வு.
அ) ஆடம்பர
ஆ) நீண்ட
இ) ஒப்புரவு
ஈ) நோயற்ற
[விடை : இ. ஒப்புரவு]
3. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ——– என்றும் கூறுவர்.
அ) மருந்து
ஆ) மருத்துவர்
இ) மருத்துவமனை
ஈ) மாத்திரை
[விடை : அ. மருந்து]
4. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன்
ஈ) கண்ணதாசன்
[விடை : ஆ. பாரதிதாசன்]
எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
வினா
1. எளிது – புரவலர்
2. ஈதல் – அரிது
3. அந்நியர் – ஏற்றல்
4. இரவலர் – உறவினர்
விடை
1. எளிது – அரிது
2. ஈதல் – ஏற்றல்
3. அந்நியர் – உறவினர்
4. இரவலர் – புரவலர்
தொடர்களில் அமைத்து எழுதுக.
1. குறிக்கோள் ——-
விடை: வாழ்க்கை குறிக்கோள் உடையது.
2. கடமைகள்——-
விடை: ஒரு குடிமகனாக நம் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம்.
3. வாழ்நாள் ——
விடை: வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் குன்றக்குடி அடிகளார்
4. சிந்தித்து ———–
விடை: ஒரு செயல் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.
குறு வினா
1. பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?
பொருளீட்டுவதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.
2. பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.
சிறு வினா
1. ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?
❖ ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.
❖ தரத்தைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது, உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே!
❖ சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான்.
❖ அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவிசெய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.
2. ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?
❖ ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது, அதைத் தடுப்பார் யாருமில்லை.
❖ ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன்மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம்.
❖ பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல.
❖ மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை ஒன்றே காணப்பெறுகிறது.
❖ நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் பயன்படுத்தலாம்.
சிந்தனை வினா
ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்கும் வேறுபாடு யாது?
உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைத்து, உதவி செய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு. இல்லை என்று கேட்போருக்கு நாமே அவருக்குத் தேவையானதைக் கொடுப்பது உதவி செய்தல். ஒப்புரவில் பெறுபவர் உறவினர். உதவி செய்தலில் பெறுபவர் ஏழைகள் அனைவரும்.
கற்பவை கற்றபின்
பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி வந்து வகுப்பறையில் பகிர்க.
❖ பாரி, திருமுடிக்காரி, வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி, அதியமான் நெடுமானஞ்சி ஆகிய கடை எழுவள்ளல்கள் பிறருக்காவே தம்வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவர்கள்.
❖ சீதக்காதி ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர்.
❖ காந்தியடிகள் நம் நாட்டு மக்களுக்காவே வாழ்ந்தவர்.
❖ அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர்.
❖ அன்னை தெரஸா தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்காகவே வாழ்ந்தவர்.