தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு
கவிதைப்பேழை: அறம் என்னும் கதிர்
நுழையும்முன்
இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும். இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும். அறநெறிகளை இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் ஒன்றனை அறிவோம்.
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்*
– முனைப்பாடியார்
சொல்லும் பொருளும்
வித்து – விதை
ஈன – பெற
நிலன் – நிலம்
களை – வேண்டாத செடி
பைங்கூழ் – பசுமையான பயிர்
வன்சொல் – கடுஞ்சொல்
பாடலின் பொருள்
இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.
நூல் வெளி
முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகள் எப்போதும் ——— ப் பேசினார்.
அ) வன்சொற்களை
ஆ) அரசியலை
இ) கதைகளை
ஈ) வாய்மையை
[விடை : ஈ. வாய்மையை]
2. ‘இன்சொல்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது —
அ) இனிய + சொல்
ஆ) இன்மை + சொல்
இ) இனிமை + சொல்
ஈ) இன் + சொல்
[விடை : இ. இனிமை + சொல்]
3. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ——-
அ) அற கதிர்
ஆ) அறுகதிர்
இ) அறக்கதிர்
ஈ) அறம்கதிர்
[விடை : இ. அறக்கதிர்]
4. ‘இளமை ‘ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ——-.
அ) முதுமை
ஆ) புதுமை
இ) தனிமை
ஈ) இனிமை
[விடை : அ. முதுமை]
பொருத்துக.
வினா
1. விளைநிலம் – உண்மை
2. விதை – இன்சொல்
3. களை – ஈகை
4. உரம் – வன்சொல்
விடை
1. விளைநிலம் – இன்சொல்
2. விதை – ஈகை
3. களை – வன்சொல்
4. உரம் – உண்மை
குறுவினா
1. அறக்கதிர் விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
அறக்கதிர் விளைய உண்மையை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்.
2. நீக்கவேண்டிய களை என்று அறநெறிச் சாரம் எதனைக் குறிப்பிடுகின்றது?
நீக்கவேண்டிய களை என்று வன்சொல்லை அறநெறிச் சாரம் குறிப்பிடுகின்றது.
சிறுவினா
1. இளம்வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?
❖ இன்சொல்லை விளை நிலமாகக் கொள்ள வேண்டும்.
❖ அதில் ஈகை என்னும் பண்பை விதையாகக் கொண்டு விதைக்க வேண்டும்.
❖ வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்.
❖ உண்மை பேசுதல் என்னும் எருவினை இடுதல் வேண்டும்.
❖ அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.
❖ அப்போது தான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும்.
– இளம்வயதில் இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகின்றார்.
சிந்தனை வினா
1. இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?
அன்பு, இன்சொல் பேசுதல், உண்மை பேசுதல், களவாமை, புறங்கூறாமை, எளிமை, சிக்கனம், மனஉறுதி, கோபம் கொள்ளாமை, நேர்மை ஆகியன இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகளாகக் கருதுகின்றேன்.
கற்பவை கற்றபின்
பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களைத் தொகுத்துக் கூறுக
வாழ்க வளமுடன், வணக்கம், நலமா, அன்புடையவரே, சகோதரரே, நன்று, அருமை, இனிமை, பாராட்டு, வாழ்த்துகள், வெற்றி உமதே, முயற்சி திருவினையாக்கும் ஆகியன பிறருடன் பேசும் போது நான் பயன்படுத்தும் இன்சொற்கள்.
2. உன் அன்னை பயன்படுத்திய இன்சொல்லால் நீ மகிழ்ந்த நிகழ்வு ஒன்றைக் கூறுக.
ஒரு முறை நான் தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன். என் நண்பர்கள், அப்பா, ஆசிரியர் எனப்பலரும் என்னைத் திட்டினார்கள். ஆனால் என் அன்னை மட்டும், தோல்வியே வெற்றியின் முதல் படி. இப்போது நீ பெற்றிருப்பது தோல்வியன்று, வெற்றியின் முதல் படி கவலைப்படாதே என்றார். அவ்வினிமைச் சொல் என்னை ஊக்கப்படுத்தியது.