தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்
துணைப்பாடம்: தமிழ் ஒளிர் இடங்கள்
நுழையும்முன்
மனிதர்கள் புதிய புதிய இடங்களைக் காண்பதில் விருப்பம் உடையவர்கள். பழமையான நினைவுச் சின்னங்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள், வழிபாட்டு இடங்கள், கடற்கரைப் பகுதிகள், தேசியப் பூங்காக்கள் போன்ற இடங்களைக் காண்பது உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தரும். அவற்றுள் தமிழின் பெருமையை விளக்கும் இடங்கள் சிலவற்றை அறிவோம்.
அன்பு மாணவர்களே! புத்தகங்களில் பல வகை உண்டு. கதைப் புத்தகங்கள், கட்டுரைப் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் ஆகியவை நீங்கள் அறிந்தவையே. இது தமிழுடன் தொடர்புடைய இடங்கள் குறித்த கையேடு. இக்கையேடு அத்தகைய இடங்களை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன. தலைசிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
தமிழ்ப் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர்
செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழக அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ப்பல்கலைக்கழகம். இது தஞ்சாவூரில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது . வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது “தமிழ்நாடு” எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது. இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பதே இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம்.
இங்குக் கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம் ஆகிய ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ளன. இப்பல்கலைக்கழகம் தமிழ்மொழி ஆய்வுகள் செய்வது மட்டுமன்றி, சித்த மருத்துவத்துறை மூலம் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவத் தொண்டு செய்து வருகிறது. இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப்பயிற்சியை இப்பல்கலைக்கழகமே வழங்குகிறது. இங்கு மிகப்பெரிய நூலகம் ஒன்று அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்குக் கல்வி கற்று வருகின்றனர்.
உ.வே.சா நூலகம் – சென்னை
கி.பி. (பொ.ஆ.) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.
கீழ்த்திசை நூலகம் – சென்னை
இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1869ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன. கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் இடம்பெற்றுள்ளன. இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகின்றது.
கன்னிமாரா நூலகம் – சென்னை
கி.பி. (பொ .ஆ.) 1896 இல் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் தமிழ்நாட்டின் மைய நூலகம் ஆகும். இஃது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நூலகத்தில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பாதுகாக்கப்படுகிறது. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது.
வள்ளுவர் கோட்டம் – சென்னை
திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கி.பி.(பொ.ஆ.) 1973 இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டன. இது திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதி இருபத்தைந்து அடி நீளமும் இருபத்தைந்து அடி அகலமும் உடையது. தேரின் மொத்த உயரம் 128 அடி. இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு நான்கு சக்கரங்கள் தனிக்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. கடைக்கோடி இரண்டு சக்கரங்கள் பெரியனவாகவும் நடுவில் இரண்டு சக்கரங்கள் சிறியனவாகவும் உள்ளன. தேரின் மையத்தில் உள்ள எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் ஒன்றும் உள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன. அறத்துப்பால் கருநிறப் பளிங்குக் கல்லிலும் பொருட்பால் வெண்ணிறப் பளிங்குக் கல்லிலும் இன்பத்துப்பால் செந்நிறப் பளிங்குக் கல்லிலும் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் சிலை – கன்னியாகுமரி
இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து முப்பது அடி உயரப் பாறை மீது இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.(பொ.ஆ.) 1990ஆம் ஆண்டு இப்பணி தொடங்கியது. பொதுமக்கள் பார்வைக்காக 2000ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் அன்று திறந்துவைக்கப்பட்டது. பாறையிலிருந்து சிலையின் உயரம் மொத்தம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கிறது. அறத்துப்பாலின் அதிகாரங்களை உணர்த்துவது போல் பீடம் முப்பத்தெட்டு அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலை தொண்ணூற்றைந்து அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.
பீடத்தின் உட்புறத்தில் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவர் சிலை மொத்தம் ஏழாயிரம் டன் எடை கொண்டது. திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்குப் படகு வசதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். தமிழின் பெருமைமிகு அடையாளமாக இச்சிலை உயர்ந்து நிற்கிறது.
உலகத் தமிழ்ச் சங்கம் – மதுரை
மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது சுமார் எண்பத்தேழு ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மனத்தைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கி.பி. (பொ.ஆ.) 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இக்கட்டடம் கட்டப்பட்டு கி.பி. (பொ.ஆ.) 2016 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
இதனுள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கக் கூடங்கள், ஆய்வரங்கங்கள், நூலகம், பார்வையாளர் அரங்கம் ஆகியன கவினுற அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறச் சுற்றுச்சுவர்களில் 1330 குறட்பாக்களும் இடம்பெற்றுள்ளன.
உலகத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் அமைப்பான சங்கத்தமிழ்க் காட்சிக்கூடம் தனிக்கட்டடத்தில் இயங்கி வருகிறது. தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணக் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள காட்சிக்கூடத்தில் வள்ளல்கள், புலவர்கள் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் உள்ளன. தொல்காப்பியர், ஔவையார், கபிலர் ஆகியோரின் முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இதன் சுற்றுச் சுவர்களில் சங்க இலக்கியக் காட்சிகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மூன்றாம் தமிழ்ச்சங்கம் அமைந்த மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடமும் சங்கத்தமிழ்க் காட்சிக்கூடமும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன.
சிற்பக் கலைக்கூடம் – பூம்புகார்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார். இந்நகரைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும் பட்டினப்பாலையிலும் இடம்பெற்றுள்ளன. இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பின்னர் ஏற்பட்ட கடல்கோளினால் பூம்புகார் நகரம் அழிந்துவிட்டது. இந்நகரத்தின் பெருமையை உலகறியச் செய்ய கி.பி.(பொ.ஆ.) 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.
கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல்மன்றம் ஆகியன அமைந்துள்ளன. இலஞ்சிமன்றத்திலும் பாவைமன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும் தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன.
இக்கையேட்டில் நாம் கண்ட பகுதிகள் அனைத்தும் தமிழின் பெருமையை உலகறியச் செய்ய நிறுவப்பட்டவை ஆகும். இவற்றைக் காணும் பொழுது தமிழரின் வாழ்வையும் தமிழ்மொழியின் சிறப்பையும் அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று பார்வையிடுவதும் அவற்றைப் பாதுகாப்பதும் தமிழராகிய நம்முடைய கடமை ஆகும்.
கேள்விகள் மற்றும் பதில்கள்
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால். சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?
சரசுவதி மகால் நூலகம்
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் இது தான். இந்தியாவில் உள்ள பழமையான நூலகம் இது. கி.பி.1122 ஆம் ஆண்டு முதல் இந்த நூலகம் இயங்கி வருகின்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஓலைச் சுவடிகள் கையெழுத்துப் படிகள் இங்கு உள்ளன.
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம் இது. 1981ல் தமிழுக்காகத் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகம். வானத்தில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாடு என்ற பெயர் தெரியும் படி கட்டடங்கள் இருக்கின்றன. 5 புலங்களும் 25 துறைகளும் இங்கு உள்ளன.
உ.வே.சா. நூலகம்
இது உ.வே.சா. நூலகம். இங்கு 2128 ஓலைச் சுவடிகள் மற்றும் 2041 தமிழ்நூல்களும் உள்ளன.அடுத்தது கன்னிமாரா நூலகம் 1896 ல் இது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மைய நூலகம் இது. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.
வள்ளுவர் கோட்டம்
இது தான் சென்னை வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் சிலை
இது தான் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. தமிழக அரசு இதனை நிறுவியது. வள்ளுவர் சிலை 133 அடி உரத்தில் உள்ளது. சிலையின் எடை ஏழாயிரம் டன் எடை கொண்டது. தமிழரின் அடையாளம் இது.
பூம்புகார் சிற்பக் கலைக்கூடம்
இது தான் பூம்புகார் சிற்பக் கலைக்கூடம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் சோழர்களின் தலை நகரம். இக் கூடம் எழுநிலை மாடம் கொண்டது. கண்ணகியின் வரலாறை விளக்கும் 49 சிற்பத்தொகுதிகள் இடமபெற்றுள்ளது. இப்படி பல சிறப்புகள் கொண்ட இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
கற்பவை கற்றபின்
1. உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக.
எங்கள் ஈரோட்டில் பெரியார் – அண்ணா நினைவகம், தொல்லாய்வுக் கூடம், பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, மிகப்பெரிய ஜவுளிச் சந்தை ஆகியவை உள்ளன. தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்திய அனைத்துப்பொருட்களும் நூல்களும் புகைப்படங்களும் நினைவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழமையைப் பறைசாற்றும் கல்வெட்டுகள், தொல்பொருட்கள் பாதுகாப்பிடமாக வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள தொல்லாய்வுக் கூடத்தில் உள்ளன. பழமைமிக்க நீர்த்தேக்கம் பவானிசாகர்.
2. நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
நான் கண்டுகளித்த இடம் குற்றாலம். வேனிற் காலத்தில் குற்றாலத்தில் வீசும் காற்று, மூலிகைகளின் அருங்குணங்களை இழுத்து வரும் காட்டாற்று நீர் அருவியாக மூலிகை நீராகப் பொழியும். தீராத நோய் கூட குற்றால அருவியில் குளித்தால் நீங்குமாம்.