தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு
இலக்கணம்: வழக்கு
எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.
இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும்.
இயல்பு வழக்கு
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.
1. இலக்கணமுடையது
2. இலக்கணப்போலி
3. மரூஉ
1. இலக்கணமுடையது
நிலம், மரம், வான், எழுது – ஆகிய சொற்களை நோக்குங்கள். இவை தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன. இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.
2. இலக்கணப்போலி
இல்லத்தின் முன் பகுதியை இல்முன் எனக் குறிக்க வேண்டும். ஆனால் அதனை நம் முன்னார் முன்றில் என மாற்றி வழங்கினர். கிளையின் நுனியைக் கிளைநுனி எனக் கூறாமல் நுனிக்கிளை எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்
(எ.கா.) புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்.
தெரிந்து தெளிவோம்
வாயில்–வாசல்
இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப். போலியாகும்.
வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.
3. மரூஉ
நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை. தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம். இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
(எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு
தகுதி வழக்கு
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும். தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
1. இடக்கரடக்கல்
2. மங்கலம்
3. குழூஉக்குறி
1. இடக்கரடக்கல்
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
(எ.கா.) கால் கழுவி வந்தான்.
குழந்தை வெளியே போய்விட்டது.
ஒன்றுக்குப் போய் வந்தேன்.
2. மங்கலம்
செத்தார் என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். எனவே, செத்தார் எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பட்டனர். நாம் இக்காலத்தில் இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.
(எ.கா.) ஓலை – திருமுகம்
கறுப்பு ஆடு – வெள்ளாடு
விளக்கை அணை – விளக்கைக் குளிரவை
சுடுகாடு – நன்காடு
3. குழூஉக்குறி
பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இவ்வாறு ஒரு குழுவினார் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.
(எ.கா.) பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)
தெரிந்து தெளிவோம்
இப்படியும் கூறலாம்
இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.
• நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
• மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
• பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் குழூஉக்குறி
போலி
அறம் செய விரும்பு – இஃது ஔவையார் வாக்கு.
அறன் வலியுறுத்தல் என்பது திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று.
இத்தொடர்களில் அறம், அறன் ஆகிய சொற்களில் ஓர் எழுத்து மாறியுள்ளது. ஆனால் பொருள் மாறுபடவில்லை.
இவ்வாறு சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும். போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது. போலி மூன்று வகைப்படும்.
1. முதற்போலி
2. இடைப்போலி
3. கடைப்போலி
1. முதற்போலி
பசல் – பைசல், மஞ்சு- மைஞ்சு, மயல்- மையல் ஆகிய சொற்களில் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை.
இவ்வாறு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும்.
2. இடைப்போலி
அமச்சு – அமைச்சு, இலஞ்சி – இலைஞ்சி, அரயர்- அரையர் ஆகிய சொற்களில் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை.
இவ்வாறு சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.
3. கடைப்போலி
அகம்- அகன், நிலம்- நிலன், முகம் – முகன், பந்தல்- பந்தர், சாம்பல்- சாம்பர் ஆகிய சொற்களில் இறுதியில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை.
இவ்வாறு சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும்.
அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும். லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும்.
முற்றுப்போலி
மூவகைப் போலிகள் மட்டுமன்றி வேறு ஒரு வகைப் போலியும் உண்டு. ஐந்து – அஞ்சு – இச்சொற்களை நோக்குங்கள். இதில் அஞ்சு என்னும் சொல் ஐந்து என்னும் சொல்லின் போலி வடிவமாகும். அஞ்சு என்ற சொல்லில் உள்ள எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டு இருந்தாலும் அஃது ஐந்து என்னும் பொருளையே தருகிறது.
இவ்வாறு ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
பொருத்துக.
வினா:
1. பந்தர் – முதற்போலி
2. மைஞ்சு – முற்றுப்போலி
3. அஞ்சு – இடைப்போலி
4. அரையர் – கடைப்போலி
விடை:
1. பந்தர் – கடைப்போலி
2. மைஞ்சு – முதற்போலி
3. அஞ்சு – முற்றுப்போலி
4. அரையர் – இடைப்போலி
குறு வினா
1. வழக்கு என்றால் என்ன?
முன்னோர்கள் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.
2. தகுதி வழக்கின் வகைகள் யாவை?
தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி.
3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது.
இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.
இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்: நஞ்சு. சரியான சொல்: நைந்து.
வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது.
வாழைப்பழம் மிகவும் நைந்து விட்டது.
கற்பறை கற்றபின்
1. மூவகைப் போலிகளிலும் எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளாக மாறுகின்றன என்பதை அறிந்து தொகுக்க.
மொழியை ஆழ்வோம்
கேட்க.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பேச்சின் ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுக.
1. தேசியம் காத்த செம்மல் : முத்துராமலிங்கத்தேவர்
வணக்கம்!
தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்கத் தேவர் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். கேளுங்கள்.
முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். இதனால், அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது. மேலும், வாய்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது. முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார். நேதாஜியுடன் முத்துராமலிங்கத் தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார், அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று 06.9.1939 இல் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.
விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார் 1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார். மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டணை பெற்றார். உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்.
தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்கத் தேவர் போல உழைப்போம்! உயர்வோம்! நன்றி!
2. கப்பலோட்டிய தமிழர் : வ.உ.சிதம்பரனார்.
வணக்கம்!
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். கேளுங்கள்.
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார். ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியவர் வ.உ.சிதம்பரனார். தூத்துக்குடியில் கொற்கை துறைமுகத்தில் முத்து வாணிகத்தில் நம்மவர் சிறந்திருந்தனர். கப்பல் வணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துப் பின்னர், கப்பல்களில் ஆங்கிலக் கொடி பறந்தது. நம்மவர் கூலிகளாக அக்கப்பலில் வேலை செய்தனர். இந்நிலையை மாற்ற பாண்டித்துரையாரைத் தலைவராகக் கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். இக்கப்பல் முதன் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது. சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத்தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரத நண்பர்களையும் பயமுறுத்தினர். அதற்கெல்லாம் கவலைப்படாமல் ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எழுப்பினார். இதனைக் கேட்ட மக்கள் விடுதலைக்கு ஆதரவாக ஊக்கம் அடைந்தனர்.
ஆங்கில அரசு வ.உ.சிதம்பரனாரைச் சிறையில் அடைத்தது. வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர்ச் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது, உள்ளம் தளரவில்லை . சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவுரை கூற ‘உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன் என்றார். சிறையில் செக்கிழுத்தார். சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார். செந்தமிழும் கன்னித் தமிழும் கண்ணீரைப் போக்கியது.அவரைப்போல நாட்டுக்காக உழைப்போம் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி!
அறிந்து பயன்படுத்துவோம்.
ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.
அவை 1. எழுவாய், 2. பயனிலை, 3. செயப்படுபொருள்
எழுவாய்
ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.
சான்று:
நீலன் பாடத்தைப் படித்தான்.
பாரி யார்?
புலி ஒரு விலங்கு
பயனிலை
ஒரு தொடரில் வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.
சான்று:
கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
கரிகாலன் யார்?
கரிகாலன் ஒரு மன்னன்.
செயப்படுபொருள்
யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.
சான்று:
நான் கவிதையைப். படித்தேன்.
என் புத்தகத்தை எடுத்தது யார்?
நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.
பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க
1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக் கொடி பறந்தது.
4. திருக்குறளை எழுதியவர் யார்?
5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.
எழுவாய்
வீரர்கள்
பொதுமக்கள்
பாண்டியனுடைய
திருக்குறளை
கபிலர்
பயனிலை
காத்தனர்
தீயிட்டு எரித்தனர்
மீனக்கொடி பறந்தது
யார்?
குறிஞ்சிப்பாட்டை
செயப்படுபொருள்
நாட்டைக்
அந்நியத் துணிகளைத்
கொற்கைத் துறைமுகத்திலே
எழுதியவர்
எழுதிய புலவர்
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.
1. கண்ணன் பாடம் படித்தான்.
2. மேரி ஓவியம் வரைந்தாள்.
3. நான் கவிதை எழுதினேன்.
4. விதை விருட்சமாக வளர்ந்தது.
5. ஆசிரியர் செய்யுளைக் கற்பித்தார்.
கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
நான் விரும்பும் தலைவர் – பெரியார்
முன்னுரை:
ஏன்? எப்படி? எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும். அதன் தந்தை பெரியார். வெண்தாடி வேந்தர், பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பெரியார் நான் விரும்பும் தலைவர் ஆவார்.
இளமை:
ஈரோடு நகரில் 1879 இல் பெரியார் பிறந்தார். தொடக்கக் கல்வியுடன் தம் படிப்பை நிறுத்திக் கொண்டு தம் தந்தையின் வணிகத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
வைக்கம் வீரர்:
கேரளத்தில் வைக்கம் என்னும் ஊரில் தலை விரித்தாடிய தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அதனால் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம்:
பெரியார் காங்கிரசிலிருந்து விலகி 1925 இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். இந்த இயக்கத்தின் வாயிலாக சாதி ஏற்றத்தாழ்வு போக்குதல், தீண்டாமை ஒழித்தல், மூடநம்பிக்கை ஒழித்தல், பெண்ணுரிமை நிலைநாட்டுதல் ஆகும்.
பெரியார் சீரமைத்த எழுத்துகள்:
‘ஐ’ என்பதை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதை ‘அவ்’ எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.
பெண்ணுரிமை போற்றியவர்:
பெண்ணுரிமை, பெண் கல்வி, சொத்துரிமை, அரசுப்பணி, மறுமணம் ஆகியவற்றிற்காகப் பெரியார் போராடினார். பெண்கள் மாநாடுகள் பல நடத்தி பெண்களை விழிப்படையச் செய்தார். 13.11.1938 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ராவுக்குப் பெரியார் பட்டம் கொடுக்கப்பட்டது.
கவரக் காரணம்:
❖ சிக்கனம் மற்றும் எளிமையான வாழ்கை.
❖ சுயமரியாதை போற்றல்.
❖ பெண்ணுரிமை பேசுதல்.
❖ சாதி, மத ஏற்றத்தாழ்வுகளைக் களைதல்.
❖ கல்வியில் புரட்சி
– ஆகிய காரணங்களால் பெரியாரை விரும்புகின்றேன்.
முடிவுரை:
தொண்டு செய்து பழுத்த பழமான பெரியாரைப் போற்றுவோம். அவரின் வழி நடப்போம்.
மொழியோடு விளையாடு
இடைச்சொல் ‘கு’ சேர்த்து எழுதுக.
எ.கா: வீடு சென்றான் – வீடு+கு+சென்றான். – வீட்டுக்குச் சென்றான்.
1. மாடு புல் கொடுத்தார். – மாடு+கு+புல் கொடுத்தார். – மாட்டுக்குப் புல் கொடுத்தார்.
2. பாட்டு பொருள் எழுது. – பாட்டு+கு+பொருள் எழுது. – பாட்டுக்குப் பொருள் எழுது.
3. செடி பாய்ந்த நீர். – செடி+கு+பாய்ந்த நீர் – செடிக்குப் பாய்ந்த நீர்
4. முல்லை தேர் தந்தான் பாரி. – முல்லை+கு+தேர் தந்தான் பாரி. – முல்லைக்குத் தேர் தந்தான் பாரி.
5. சுவர் சாந்து பூசினாள். – சுவர்+கு+சாந்து பூசினாள். – சுவருக்குச் சாந்து பூசினாள்.
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை எழுதுக.
அகம் என முடியும் சொற்களை எழுதுக.
நூலகம், குறளகம், நகலகம், அச்சகம், துறைமுகம், தமிழகம்.
கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.
1. திருக்குறள் ங பால்களைக் கொண்டது.
2. எனது வயது கக.
3. நான் படிக்கும் வகுப்பு எ
4. தமிழ் இலக்கணம் ரு வகைப்படும்.
5. திருக்குறளில் கஙங அதிகாரங்கள் உள்ளன.
6. இந்தியா ககூசஎ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.
விடை :
1. மூதறிஞர் – இராஜாஜி
2. வீரமங்கை – வேலுநாச்சியார்
3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் – கட்டபொம்மன்
4. வெள்ளையரை எதிர்த்த தீரன் – சின்னமலை
5. கொடிகாத்தவர் – திருப்பூர் குமரன்
6. எளிமையின் இலக்கணம் – கக்கன்
7. தில்லையாடியின் பெருமை – வள்ளியம்மை
8. கப்பலோட்டிய தமிழர் – சிதம்பரனார்
9. பாட்டுக்கொரு புலவன் – பாரதியார்
10. விருதுப்பட்டி வீரர் – காமராசர்
11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி – நாகம்மை
12. மணியாட்சியின் தியாகி – வாஞ்சிநாதன்
நிற்க அதற்குத் தக…
என் பொறுப்புகள் ….
1. விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறுகளை அறிந்து போற்றுவேன்.
2. தலைவர்களின் அரிய பண்புகளை உணர்ந்து பின்பற்றுவேன்
கலைச்சொல் அறிவோம்
1. கதைப்பாடல் – Ballad
2. துணிவு – Courage
3. தியாகம் – Sacrifice
4. அரசியல் மேதை – Political Genius
5. பேச்சாற்றல் – Elocution
6. ஒற்றுமை – Unity
7. முழக்கம் – Slogan
8. சமத்துவம் – Equality
இணையத்தில் காண்க
வ.உ. சிதம்பரனார் வாழ்க்கைக் குறிப்புகளை இணையத்தில் தேடி எழுதுக.