தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு
துணைப்பாடம்: கப்பலோட்டிய தமிழர்
நுழையும்முன்
தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டவரும் அறிந்த துறைமுக நகரம். அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் சிதம்பரனார். அவர் தன்னலம் துறந்த தனிப்பெரும் தொண்டர். ‘இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். நாட்டிலே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியதற்காக அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரனார். ஒரு நாள் மாலைப்பொழுது துறைமுகத்தின் அருகே உலாவச் சென்றார். பழைய நினைவுகள் எல்லாம் அவர் மனத்திலே படர்ந்தன. அக்கடற்கரையில் நின்று அவர் பேசியிருந்தால் என்ன பேசியிருப்பார்? இதோ அவர் வாயாலேயே கேட்போம்!
“தென்னாட்டுத் துறைமுகமே! முந்நூறு ஆண்டுகளாக நீயே இம்முத்துக் கரையில் முதன்மை பெற்று விளங்குகின்றாய்! முன்னாளில் வளமுற்றிருந்த கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல் நீயே என்று உணர்ந்து உன்னை வணங்குகின்றேன்; வாழ்த்துகின்றேன். ஆயினும், அக்காலத் துறைமுகத்தின் மாட்சியையும் இக்காலத்தில் காணும் காட்சியையும் நினைத்துப் பார்க்கும் பொழுது என் நெஞ்சம் குமுறுகின்றதே!
பார் அறிந்த கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி உயர்ந்து பறந்தது. கொற்கைக்கடல் முத்துவளம் கொழித்தது. பழங்குடிகளாகிய பரதவர் மரக்கல வணிகத்தால் வளம்பெற்று மாடமாளிகையில் வாழ்ந்தார்கள். இது, சென்ற காலத்தின் சிறப்பு. இன்று, மீனக்கொடி எங்கே? ஆங்கில நாட்டுக் கொடியன்றோ இங்குப் பறக்கின்றது? பரங்கியர் கப்பலன்றோ எங்கும் பறந்து திரிகின்றது? கொள்ளை இலாபம் அடைகின்ற வெள்ளையர் கப்பலில், கூலி வேலை செய்கின்றனர் நம் நாட்டு மக்கள்! சொந்த நாட்டிலே வந்தவருக்கு அடிமைசெய்து வயிறு வளர்ப்பது ஒரு வாழ்வாகுமா? வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவர் வாய்மொழியை மறக்கலாமா?
வளமார்ந்த துறைமுகமே! இந்த வசையை ஒழிப்பதற்காக இந்நகரில் சுதேசக் கப்பல் கம்பெனி ஒன்று உருவாயிற்று. பாரதநாட்டுச் செல்வரும் அறிஞரும் அந்தக் கம்பெனியில் பங்குகொண்டார்கள். பழங்காலப் பாண்டியரைப் போல் மதுரை மாநகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்துப் புலவர் பாடும் புகழ் உடையவராய் விளங்கிய பாண்டித்துரையார் அக்கம்பெனியின் தலைவர் ஆயினார். அதன் செயலாளனாக அமைந்து பணி செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது. கம்பெனியார் வாங்கிய சுதேசக் கப்பல் உன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அக்கப்பல் இங்கிருந்து கொழும்புத் துறையை நோக்கிப் புறப்பட்ட நாளில், இன்ப வெள்ளம் என் உள்ளத்திலே பொங்கி எழுந்தது; கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
வாணிக மாமணியே! அன்றுமுதல் சுதேசக் கப்பல் வாணிகம் வளர்ந்தது; வெள்ளையர் வாணிகம் தளர்ந்தது. அதுகண்டு அவர் உள்ளம் எரிந்தது. வெறுக்கத்தக்க சூழ்ச்சிகளை அன்னார் கையாளத் தலைப்பட்டனர்; சுதேசக் கம்பெனி வேலையினின்றும் நான் விலகிக்கொண்டால் நூறாயிரம் ரூபாய் கையடக்கம் தருவதாக மறைமுகமாகக் கூறினர். எனக்கு உற்ற துணையாக நின்று ஊக்கம் தந்த நண்பர்களைப் பலவாறு பயமுறுத்தினர்; இவையெல்லாம் பயனற்று ஒழிந்த நிலையிலே அடக்குமுறையைக் கையாளக் கருதி அரசாங்கத்தின் உதவியை நாடினர்.
பரங்கியர் ஆளும் துறையே! ஆங்கில அரசாங்கம் சர்வ வல்லமையுடையது என்றும், அதை அசைக்க எவராலும் ஆகாதென்றும் அப்போது பொதுமக்கள் எண்ணியிருந்தார்கள். அதனால் அடிமைத்தனம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்நாட்டு மக்களிடையே வளர்ந்தது. துரைத்தனத்தார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல், ‘சார், சார்’ என்று சலாமிட்டும், ‘புத்தி, புத்தி’ என்று வாய் பொத்திச் ‘சரி, சரி’ எனச் சம்மதித்துத் தாளம் போடும் போலி அறிஞர்கள், பட்டங்களும் பதவிகளும் பெற்று உயர்ந்தார்கள். அரசாங்கம் ஆட்டுவித்தால் அப்பதுமைகள் ஆடும்; எப்போதும், ‘அரசு வாழ்க’ என்று பாடும். இத்தகைய சூழ்நிலையிலே எழுந்தது சுதந்தர நாதம்!
வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது; காட்டுக்கனல் போல் எங்கும் பரவிற்று. சுதந்தரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன் என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றார் மராட்டிய வீரர் ஒருவர். அவரே பாரதநாடு போற்றும் பாலகங்காதர திலகர். தென்னாட்டிலே தோன்றினார் நாவீறுடைய நண்பர் பாரதியார். அவர் அஞ்சாத நெஞ்சினர். செஞ்சொற்கவிஞர்; வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்று அழகிய பாட்டிசைத்து, நாட்டிலே ஆர்வத்தைத் தட்டி எழுப்பினார்
தெரிந்து தெளிவோம்
‘சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால். செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’
– சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று.
புதுமைகண்ட துறைமுகமே! அந்நாளில் ‘வந்தேமாதரம்’ என்றால் வந்தது தொல்லை. அந்த வாசகத்தில் ஒரு வஞ்சகம் இருப்பதாக ஆங்கில அரசாங்கம் கருதிற்று. பொதுக்கூட்டங்களிலும் தொழிலாளர் கூட்டங்களிலும் நான் பேசும்பொழுது
‘வந்தே மாதர’த்தை அழுத்தமாகச் சொல்வது வழக்கம். அதைக்கேட்டு நாட்டு மக்கள் ஊக்கமுற்றார்கள்; உணர்ச்சி பெற்றார்கள். உள்ளதைச் சொன்னால் கள்ளமுடையவர் உள்ளம் எரியும் அல்லவா? எரிவுற்ற அரசாங்கம் என்னை எதிரியாகக் கருதிற்று; என் மீது பல வகையான குற்றம் சாட்டிற்று. நாட்டின் அமைதியை நான் கெடுத்தேனாம்! நல்ல முதலாளிமாருக்குத் தொல்லை கொடுத்தேனாம்! வெள்ளையர் மீது வெறுப்பை ஊட்டினேனாம்! வீரசுதந்திரம் பெற வழிகாட்டினேனாம்!
வெள்ளையர் கோர்ட்டிலே இக்குற்ற விசாரணை விறுவிறுப்பாக நடந்தது. இரட்டைத் தீவாந்தர தண்டனை எனக்கு விதிக்கப்பட்டது. அப்பீல் கோர்ட்டிலே சிறைத் தண்டனையாக மாறிற்று அத்தீர்ப்பு. ஆறாண்டு கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி செய்தேன். என் உடல் சலித்தது. ஆயினும், உள்ளம் ஒருநாளும் தளர்ந்ததில்லை; சிறைச்சாலையை தவச்சாலையாக நான் கருதினேன்; கைவருந்த மெய் வருத்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன்.
செல்வச் செழுந்துறையே! சிறைச்சாலையில் என்னைக் கண்காணித்தவர் பலர். கடும்பணி இட்டவர் பலர். அவரை நான் எந்நாளும் வெறுத்ததில்லை. ஆனால், முறைதவறி நடந்தவர்களை எதிர்த்தேன். வரைதவறிப் பேசியவர்களை வாயால் அடக்கினேன்.
ஒரு நாள் மாலைப்பொழுது; உடல் நலிந்து, உள்ளம் தளர்ந்து சிறைக்கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். அங்கே வந்தான் ஒரு ஜெயிலர்; அதிகாரத் தோரணையில் நீட்டி நிமிர்ந்து நின்றுகொண்டு எனக்குச் சில புத்திமதிகளைச் சொல்லத் தொடங்கினான். அப்போது என் மனத்தில் கோபம் பொங்கி எழுந்தது. ‘அடே மடையா! நீயா எனக்குப் புத்திமதி சொல்பவன்? மூடு வாயை! உனக்கும் உன் அப்பனுக்கும் புத்தி சொல்வேன் நான்’. உன்னுடைய கவர்னருக்கும் மன்னருக்கும் புத்தி சொல்வேன் நான் என்று வேகமுறப் பேசினேன். மானமிழந்து வாயிலிலிருந்து மறைந்தான் ஜெயிலர்.
தமிழ்ப் பெருந்துறையே! உன் தாழ்விலும் வாழ்விலும் எந்த நாளிலும் என் தமிழ்த் தாயை நான் மறந்தறியேன். இந்த நகரத்தில் வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித்துரையோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றேன். அதனால் நான் அடைந்த நன்மைக்கு ஓர் அளவில்லை. சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ ?
தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன். ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தேன். உயர்ந்த நூல்களில் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்து கொள்ளுமாறு மெய்யறிவு, மெய்யறம் என்ற சிறு நூல்களை இயற்றினேன். இவற்றை என் தமிழ்த்தாயின் திருவடிகளில் கையுறையாக வைத்தேன். சிறையில் இருந்து இயற்றிய நூல்களையும் உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு செந்தமிழ்த்தாயின் திருவருளை வேண்டுகிறேன்.
வருங்காலப் பெருவாழ்வே! காலம் கடிது சென்றது. என் சிறைவாழ்வு முடிந்தது. இந்நகரை வந்தடைந்தேன். என் அருமைக் குழந்தைகளைக் கண்டு ஆனந்தமுற்றேன். ஆயினும் என் ஆசைக்குழந்தையை – தேசக் கப்பலை இத்துறைமுகத்தில் காணாது ஆறாத் துயருற்றேன். ‘பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே’ என்று பரிதவித்தேன். ‘என்று வருமோ நற்காலம்’ என்று ஏங்கினேன். இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் சுதந்தரம் வந்தே தீரும். வீரசுதந்தர வெள்ளம் புறப்பட்டு விட்டது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் ஆகும் பாரதநாட்டிலே?
பாயக் காண்பது சுதந்திரவெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்
என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?” என்று உருக்கமாகப் பேசிக் கடற்கரையை விட்டு அகன்றார் வீர சிதம்பரனார்.
நூல் வெளி
இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர். செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர். இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும். ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
வ. உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
1. வ.உ.சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.
முன்னுரை:
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார். ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியவர் வ.உ.சிதம்பரனார். அவரின் உரை வழி, அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம்.
சுதேசக் கப்பல்:
தூத்துக்குடியில் கொற்கை துறைமுகத்தில் முத்துவாணிகத்தில் நம்மவர் சிறந்திருந்தனர். கப்பல் வணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துப் பின்னர், கப்பல்களில் ஆங்கிலக் கொடி பறந்தது. நம்மவர் கூலிகளாக அக்கப்பலில் வேலை செய்தனர். இந்நிலையை மாற்ற பாண்டித்துரையாரைத் தலைவராகக் கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். இக்கப்பல் முதன் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது.
ஆங்கிலேயரின் அடக்குமுறை:
சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத் தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரத நண்பர்களையும் பயமுறுத்தினர். அதற்கெல்லாம் கவலைப்படாமல் ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எழுப்பினார். இதனைக் கேட்ட மக்கள் விடுதலைக்கு ஆதரவாக ஊக்கம் அடைந்தனர். ஆங்கில அரசு வ.உ.சிதம்பரனாரைச் சிறையில் அடைத்தது.
வ. உ. சிதம்பரனாரின் தியாகம்
வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர்ச் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது, உள்ளம் தளரவில்லை. சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவுரை கூற “உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன்” என்றார். சிறையில் செக்கிழுத்தார். சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார். செந்தமிழும் கன்னித் தமிழும் கண்ணீரைப் போக்கியது.
தமிழ்ப்பற்றும் ஏக்கமும்:
வ.உ.சிதம்பரனார் தொல்காப்பியம், இன்னிலை கற்றுத் தன் துன்பங்களை மறந்தார். ஆங்கிலத்தில் ஆலன் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை ‘மனம் போல் வாழ்வு’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் முதலிய சிறு நூல்களைப் படைத்தார். சிறைவாழ்வு முடிந்து வ.உ.சிதம்பரனார் வெளியில் வந்த போது தன் குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்தார். ஆனால் கடற்கரையில் தன் ஆசைக்குழந்தை சுதேசக் கப்பலைக் காணாமல் வருத்தம் அடைந்தார் என்று நற்காலம் வருமோ என்று ஏங்கினார்.
முடிவுரை:
“பயக் காண்பது சுதந்திர வெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்
என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?”
என்று உருக்கமாகப் பேசி கடற்கரையை விட்டு அகன்றார் வ.உ.சிதம்பரனார்.
கற்பறை கற்றபின்
பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவராக உங்களைக் கற்பனை செய்து கொண்டு வகுப்பறையில் உரையாற்றுக.
பாரதியார்
வணக்கம் !
நான் தான் உங்கள் முறுக்கு மீசை பாரதி பேசுகின்றேன். மாணவர்களே நலமா? ஒருமுறை எனக்குப் பிடித்த பலகாரம் பற்றி ஒருவர் கேட்டார். நான் சற்றும் தயங்காமல் முறுக்கு என்றேன். அது குறித்த காரணம் இவர் கேட்டார். முறுக்கு என்றுச் சொல்லும் போது நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறி வெள்ளையர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற உணர்ச்சி பெருக்கேற்படுகின்றது. அதனால் நான் முறுக்கை வீரப்பலகாரம் என்றே அழைக்கின்றேன். இப்போதும் முறுக்கேறி இலஞ்சம், ஊழல் செய்பவரை அடக்க முறுக்கு மீசை துடிக்கின்றது.
சரி! நேரம் ஆகிவிட்டது இற்றொரு நாள் வருகின்றேன்.