சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
பயிற்சி வினா விடை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
அ) பாடலிபுத்திரம்
ஆ) வல்லபி
இ) மதுரா
ஈ) காஞ்சிபுரம்
விடை: அ) பாடலிபுத்திரம்
2. ஆகம சூத்திரங்கள் எம்மொழியில் எழுதப்பட்டன?
அ) அர்த்த – மகதி பிராகிருதம்
ஆ) இந்தி
இ) சமஸ்கிருதம்
ஈ) பாலி
விடை: அ) அர்த்த – மகதி
3. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?
அ) புத்தமதம்
ஆ) சமணமதம்
இ) ஆசீவகம்
ஈ) இந்து மதம்
விடை: ஆ) சமணமதம்
4. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?
அ) வேலூர்
ஆ) காஞ்சிபுரம்
இ) சித்தன்னவாசல்
ஈ) மதுரை
விடை: அ) வேலூர்
5. கழுகுமலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?
அ) மகேந்திரவர்மன்
ஆ) பராந்தக நெடுஞ்சடையான்
இ) பராந்தக வீரநாராயண பாண்டியன்
ஈ) இரண்டாம் ஹரிஹரர்
விடை: ஆ) பராந்தக நெடுஞ்சடையான்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை …….
விடை: நேமிநாதர்
2. புத்த சரிதத்தை எழுதியவர் …… ஆவார்.
விடை: அஸ்வகோஷர்
3. …… நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு 7
வந்திருந்தார்.
விடை: ஆம்
4. பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என …… எடுத்துரைக்கிறார்.
விடை: மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம்
5. மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் …… ஆதரித்தனர்.
விடை: ஆசீவகர்களை
III. பொருத்துக
I II
1. கல்ப சூத்ரா – அ. திருத்தக்கத் தேவர்
2. சீவகசிந்தாமணி – ஆ. மதுரை
3. நேமிநாதர் – இ. நாகசேனர்
4. மிலிந்தபன்கா – ஈ. பத்ரபாகு
5. கீழக் குயில்குடி – உ. 22வது தீர்த்தங்கரர்
விடைகள்
1. கல்ப சூத்ரா – ஈ. பத்ரபாகு
2. சீவகசிந்தாமணி – அ. திருத்தக்கத் தேவர்
3. நேமிநாதர் – உ. 22வது தீர்த்தங்கரர்
4. மிலிந்தபன்கா – இ. நாகசேனர்
5. கீழக் குயில்குடி – ஆ. மதுரை
IV. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளி
1. பொருந்தாததைக் காண்க.
திருப்பருத்திக்குன்றம், கீழக்குயில்குடி, கழுகுமலை, நாகப்பட்டினம், சித்தன்னவாசல்
விடை: நாகப்பட்டினம்
2. கூற்று : பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.
காரணம் : துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை: அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
3. சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க
i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.
ii) ‘பள்ளி’ என்பது புத்தமதத்தாரின் கல்வி மையமாகும்.
iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பலவிகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து செயல்பட்டது.
அ) (i) மற்றும் (iii) சரி
ஆ) (i, ii) மற்றும் (iv) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (ii, iii) மற்றும் (iv) சரி
விடை : அ) (i) மற்றும் (iii) சரி
4. தவறான இணையைக் காண்க
1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
3. விசுத்திமக்கா – புத்தகோசா
4. புத்தர் — எண்வ கை வழிகள்
விடை: 1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்,
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
V. சரியா? தவறா?
1. 12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.
விடை: சரி
2. வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்க முறையைச் சந்திக்க நேர்ந்தது.
விடை: சரி
3. சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது.
விடை: சரி
4. நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின.
விடை: தவறு
5. சோழர்காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.
விடை: தவறு
VI. கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி
சமணத்தின் ஐம்பெரும் உறுதி மொழிகளைப் பட்டியலிடுக.
சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகள்:
1. எந்த உயிரையும் துன்புறுத்தாமலிருத்தல் – அகிம்சை
2. உண்மை – சத்யா
3. திருடாமை – அசௌர்யா
4. திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா
5. பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா
2. புத்தரின் நான்கு பேருண்மைகளைக் கூறுக?
புத்தரின் நான்கு பேருண்மைகள்:
1. வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
2. துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
3. ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்.
4. ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப் பெறலாம்.
3. திரிபிடகாவின் மூன்று பிரிவுகளை விளக்குக.
திரிபிடகாவின் மூன்று பிரிவுகள் :
* வினய பிடகா – பௌத்தத் துறவிகளுக்கான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. தூய்மையான நடத்தையைப் பெற இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
* சுத்த பிடகா – விவாதங்களைச் சான்றுகளாகக் கொண்டு பௌத்தத்தின் மூலக் கோட்பாடுகளைக் கூறுகின்றது.
* அபிதம்ம பிடகா – நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு குறித்து விளக்குவதாகும்.
4. சித்தன்னவாசலின் முக்கியத்துவத்தை வெளிக் கொணர்க.
சித்தன்னவாசலின் முக்கியத்துவம்:
* சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது.
* ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையான குகையும், மற்றொரு முனையில் குடைவரைக் கோவிலும் உள்ளன.
* தரையில் 17 சமணப்படுக்கைகள் அமைந்துள்ளன. இந்த கல்துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்கள் என நம்பப்படுகிறது. –
* கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ளது.
* அறிவர் கோவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டது. இக்குகைக்கோவிலில் காணப்படும் சுவரோவியங்கள் புகழ்பெற்ற அஜந்தா சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன.
VII. விரிவான விடையளி
1. சமணம், பௌத்தம் பற்றி அறிய உதவும் சான்றுகளை வரிசைப்படுத்துக.
சமணம், பௌத்தம் பற்றி அறிய உதவும் சான்றுகள்:
சமணம்:
* மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன.
* மகாவீரர் இயற்கை எய்திய 200 ஆண்டுகளுக்குப் பின்னர் சமண அறிஞர்கள் ஒரு பேரவையைக் கூட்டி தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர் (முதல் சமண பேரவைக் கூட்டம் – பாடலிபுத்திரம்).
* கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வல்லபியில் கூட்டப்பட்ட இரண்டாம் பேரவை கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது. காலப்போக்கில் கற்றறிந்த பல சமணத் துறவிகள் (அதிக வயதும் ஆழமான ஞானமும் கொண்டவர்கள்) சமயம் சார்ந்த பல்வேறு தலைப்புகளிலான உரைகளைத் தொகுத்தனர்.
* ஏறத்தாழ கி.பி. 500இல் சமண ஆச்சாரியார்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த முடிவு செய்தனர். ஏனெனில் சமண இலக்கியங்களை மனனம் செய்வது மிகச் சிரமமானது என உணர்ந்தனர்.
* சமண இலக்கியங்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1) ஆகம சூத்திரங்கள் 2) ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் (12 நூல்கள், 84 நூல்கள்).
பௌத்தம்:
* புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது.
* ஏறத்தாழ கி.மு. 80ல் அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.
* திரிபிடகா பௌத்த பொது விதிகள். அது மூன்று கூடைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
* வினய பிடகா, சுத்த பிடகா, அபிதம்ம பிடகா ஆகியவை மூன்று பிரிவுகளாகும்.
* ஜாதகங்கள் மற்றும் புத்த வம்சா ஆகியவை பொது விதிகளைப் பற்றிக் கூறுபவை. பாலி மொழியில் எழுதப்பட்ட பொது விதிகள் அல்லாத நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது (மிலிந்த பன்கா, மகா வம்சம், தீபவம்சம், விசுத்திமக்கா (புத்தகோசா).
2. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சமணம், பௌத்தம், சார்ந்த ஆதார எச்சங்களை விளக்கமாய் பட்டியலிடுக
சமணம் சார்ந்தது:
* சமணர்கள் கர்நாடகாவிலிருந்து கொங்குப் பகுதிக்கும், காவேரி கழிமுகப்பகுதிக்கும், புதுக்கோட்டைப் பகுதிக்கும், இறுதியில் பாண்டிய நாட்டுக்குள்ளும் இடம் பெயர்ந்தனர் என்பதற்குத் தெளிவான சான்று உள்ளது.
* சித்தன்னவாசல் குகைக்கோவில் (நிலத்திலிருந்து 70 மீ உயரம், 17 சமணப்படுக்கைகள், தமிழ்-பிராமிக் கல்வெட்டு, சுவரோவியங்கள்).
* காஞ்சிபுரம் – திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் (திருப்பருத்திக்குன்றம்), சந்திரபிரபாகோவில். (பல்லவர் கால கட்டடக் கலைப்பாணி, சுவரோவியங்கள், பல கிராமங்களில் சமணம் குறித்த தடயங்கள்)
* கழுகுமலை சமண குடைவரைக் கோவில் (எட்டாம் நூற்றாண்டு, பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையன். பஞ்சவர் படுக்கை).
* வேலூர், திருமலை மற்றும் மதுரை ஆகிய இடங்களிலும் சமணக் கோவில்கள் காணப்படுகின்றன.
பௌத்தம் சார்ந்தது:
* தமிழகத்தில் பௌத்தம் பரவியதற்குச் சான்றாக பாண்டிய நாட்டில் சில நினைவுச் சின்னங்கள் உள்ளன.
* குகைகளில் காணப்படும் 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சின்னங்கள் பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது.
* வீரசோழியம் (11 ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்), புத்தரின் செப்புச் சிலைகள் (13 ஆம் நூற்றாண்டு, நாகப்பட்டினம்) ஆகியவை பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன.
* தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் (சேலம் மாவட்டம்) இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றன. சூடாமணி விகாரை நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டது.
* மணிமேகமலை (சீத்தலை சாத்தனார்), மத்தவிலாச பிரகாசனம் (மகேந்திர வர்மன்) ஆகியவை ஆவணங்களாகும்.
* பௌத்த விகாரை (காவிரிப்பூம்பட்டின அகழ்வாய்வு), 1.03 மீட்டர் உயர புத்தர் சிலை (பத்மாசனகோலம், திருநாட்டியட்டாங்குடி, திருவாரூர் மாவட்டம்) ஆகியவையும் பௌத்தம் சார்ந்த ஆதார எச்சங்கள்.
3. ஆசீவகத்தத்துவத்தின் சாரம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம் குறித்து விவாதிக்க.
ஆசீவகத் தத்துவம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம்
ஆசீவகத் தத்துவம்:
* ஆசீவகர்கள் வினைப்பயன், மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
* ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தைக் கடைப்பிடித்தனர்.
* அவர்களுடைய தத்துவம் வேதப்பாடல்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் பண்டைய சமஸ்கிருதத் தொகுப்புகள், சமண பௌத்த சமயங்களுக்கு முந்தைய கால ஆய்வுகள் முதலியவற்றில் காணக்கிடைக்கின்றது.
தமிழகத்தில் ஆசீவகம் தோன்றுதல் :
* மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடஇந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. தென்னிந்தியாவில் பரவியிருந்தது.
* தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட்டது.
* பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆட்சிக்கால கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
* இதுபோன்ற இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் பாலாற்றின் பகுதிகளில் (கர்நாடகா மற்றும் தமிழ்நாடு – வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்) 14ஆம் நூற்றாண்டு வரை ஆசீவகம் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது.
VIII. உயர் சிந்தனை வினா
1. அவைதீக மதங்களுக்கும் வேதமதத்திற்கும் உள்ள பொதுவான அம்சங்களையும் வேறுபாடுகளையும் அலசி ஆராய்க.
அவைதீக மதங்கள் மற்றும் வேதமதம்:
* அவைதீக மதங்களின் நிறுவனர்களானமகாவீரரும் புத்தரும் தங்கள் அறபோதனைகளை வேத மதத்தின் பலிகொடுக்கும் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக வைத்தனர்.
* அவர்களின் போதனைகள் பாதுகாக்கப்பட்டு, பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளின் மூலமாகப் பின்வந்த சந்ததிகளிடம் கையளிக்கப்பட்டன.
* பெண்கள் பணியாளர்களாக (யக்சிகள்) அனுமதிக்கப்பட்டனர். அவைதீக மதமான சமணத்தில் பெண்களும் துறவறம் பூண அனுமதி கொடுக்கப்பட்டது. பெண்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதற்கு ஊக்கமளித்தது.
* அரச வாழ்வு, துறவு வாழ்வு ஆகிய இரண்டுமே தவறு என பௌத்தம் கூறியது. புத்தர் இடைப்பட்ட வழியை (எண்வகை வழிகள்) கண்டறிந்தார். மகாவீரர் ஐம்பெரும் உறுதி மொழிகளைக்கண்டறிந்தார். இப்படிப்பட்ட வழிகள் வேத மதத்தில் கண்டறியப்படவில்லை.
2. ஏன் இத்தகைய அவைதீக மதங்கள் இந்தியாவின் முக்கிய மதங்களாய் உருவெடுக்க முடியவில்லை ?
அவைதீக மதங்கள் இந்தியாவின் முக்கிய மதங்களாய் உருவெடுக்க முடியவில்லை
ஏனெனில்.
* பக்தி இயக்க காலம் முதல் பக்தி இயக்கப் பெரியோர்கள் அவைதீக மதங்களை எதிர்த்தனர். அவை அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கின.
* முக்கிய மதங்கள் சாமானிய மக்களின் மொழிகளுக்கு தங்களை மாற்றிக் கொண்டன.
* பல்லவர் காலம் முதலாகவே அவைதீக மதமான பௌத்தம் சைவ. வைணவச் சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.
* கோசலா மகாவீரருடன் ஆறாண்டுகள் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.
* மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவைதீக மதமான ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆகியோர் ஆட்சிக் கால கிராம சமூகத்தினர் சிறப்பு வரிகளை ஆசீவகர் மீது விதித்தனர்.
IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)
மாணவர்கள் மாவட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று எங்கெல்லாம் பௌத்தம், சமணம் சார்ந்த எச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவோ அவற்றைப் பார்வையிட்டு வரலாம்