தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை
உரைநடை : புதுவை வளர்த்த தமிழ்
இயல் மூன்று
உரைநடை
புதுவை வளர்த்த தமிழ்
யாழினியும் அவள் தந்தையும் புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரங்கத்தைச் சுற்றிப் பார்க்கின்றனர். யாழினி, தன் தந்தையுடன் உரையாடிக் கொண்டே வருகிறாள்.
யாழினி : அங்கிருந்த படத்தைச் சுட்டிக்காட்டி அப்பா, இவர் பாரதிதாசன் அல்லவா? எங்கள் பாடநூலில் இவருடைய படத்தைப் பார்த்திருக்கிறேன்.
அப்பா : ஆமாம். சரியாகச் சொன்னாய், யாழினி! இவரைப் புரட்சிக்கவிஞர், பாவேந்தர் எனச் சிறப்பித்துக் கூறுவர். இவர், புதுவைக்குப் புகழ்சேர்த்த புதுமைக் கவிஞர். தமிழாசிரியராகப் பணிசெய்து, தமிழ் அறிஞர்கள் பலரை உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.
யாழினி : அப்பா, இவருடைய இயற்பெயர் பாரதிதாசன் இல்லை, அவராக வைத்துக்கொண்ட பேர் என்று எங்கள் ஆசிரியர்கூடக் கூறினாரே!
அப்பா : ஆமாம், யாழினி. ஆசிரியர் கூறுவதை நீ நன்கு உற்றுக் கவனித்திருக்கிறாய். பாராட்டுகள். பாரதிதாசனுக்கு அவர் பெற்றோர் இட்ட பெயர் கனகசுப்புரத்தினம், இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டிருந்தார். பாரதியார்முன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலைப் பாடிக்காட்டினார். பாரதியார் மீது அன்பும் பாசமும், பற்றும் உடையவர். அதனால்தான், தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக்கொண்டார்.
யாழினி : அருமை, அருமை, அப்பா, எனக்கோர் ஐயம். பாரதியார், புதுச்சேரியைச் சேர்ந்தவர் இல்லையா?
அப்பா : இல்லையம்மா. பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தவர். ஆனால், விடுதலைப் போராட்டக் காலத்தில் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் புதுவையில் தங்கி இருந்துள்ளார். இங்கு இருக்கும்போதுதான் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு ஆகிய முப்பெருங் காவியங்களைப் படைத்தளித்தார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில், அவர் கவிதை எழுதுவதுபோன்ற சிலையை இங்கு வைத்திருக்கிறார்கள்.
யாழினி : இப்போது புரிந்துகொண்டேன். பாரதிதாசனுக்குப் புரட்சிக்கவி என்ற பட்டம் வழங்கியதாகக் கூறினீர்களே? அவருக்கு யார் கொடுத்தார்கள், அப்பா?
அப்பா : தந்தை பெரியார்தாம் ‘புரட்சிக்கவி’ என்ற பட்டத்தைப் பாரதிதாசனுக்குக் கொடுத்தார். தமிழின் சிறப்பை, பொதுவுடைமையை, பெண்ணின் பெருமையைப் பாடியவர் பாரதிதாசன்.
யாழினி : அப்பா, பாரதிதாசனின் பாடலொன்றைச் சொல்லுங்களேன்.
அப்பா : சொல்கிறேன், யாழினி. “தமிழுக்கும் அமுதென்று பேர்… அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடித் தமிழ்மீது தாம் கொண்டிருக்கும் பற்றை வெளிப்படுத்தினார். அதுமட்டுமன்று, இயற்கை, பெண்விடுதலை போன்ற பல கருத்துகளை முன்வைத்து நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய பாடல்களைப் பாரதிதாசன் கவிதைகள் என்னும் பெயரில் வெளியிட்டுள்ளனர்.
யாழினி : அப்பா, இங்கே பாருங்களேன். இந்தப் புத்தகத்தின் பெயர் ‘இருண்ட வீடு’ என்றிருக்கிறது.
அப்பா : இந்தப் புத்தகம்கூடப் பாரதிதாசன் எழுதியதுதான். ‘குடும்பவிளக்கு’ என்னும் நூலில் கல்வியின் உயர்வைச் சொன்னவர், இருண்ட வீட்டில் கல்லாமையின் இழிவைக் கூறுகிறார்.
யாழினி : அப்பா, இங்கே பல நூல்களில் அவர் பெயர் இருக்கிறதே!
அப்பா : ஆமாம் யாழினி. அத்தனையும் பாவேந்தர் பாடியதுதாம். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, தமிழியக்கம், குறிஞ்சித்திட்டு, புரட்சிக்கவி, இசையமுது….. என 72 நூல்களுக்கு மேல் பாடி, தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். பாரதிதாசன்.
யாழினி : அப்பா, அங்கே பாருங்கள். பக்கத்து வீட்டு பூங்குழலி!
அப்பா : அடடே, வாம்மா, பூங்குழலி. எங்கே இந்தப்பக்கம்?
பூங்குழலி : வணக்கம் மாமா. பள்ளி நாடகத்தில் நடிப்பதற்காகப் பாரதிதாசனின் ‘பிசிராந்தையார்’ நூலைத் தேடிப் படிக்க வந்தேன்.
யாழினி : அப்பா, பாரதிதாசன் நாடகங்கள்கூட எழுதி இருக்கிறாரா?
அப்பா : ஆம். 33 நாடகங்களுக்குமேல் எழுதியுள்ளார். பூங்குழலி வாசிக்க விரும்பும் ‘பிசிராந்தையார்’ நாடக நூல் “சாகித்திய அகாதெமி” விருது பெற்றுள்ளது.
யாழினி : முத்தமிழிலும் வல்ல நம் பாவேந்தரின் நூல்களை இனிமேல் நானும் படிக்கப் போகிறேன், அப்பா.
அப்பா : புதுவை தந்த பாவேந்தர் பாரதிதாசன் பெயரால், தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பு செய்கிறது.
யாழினி : மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் மட்டுமின்றி, வேறு யாரேனும் தமிழ்ச் சான்றோர்கள் புதுவையில் உள்ளனரா, அப்பா?
அப்பா : பலர் இருக்கின்றனர். அவர்களுள் வாணிதாசன், புதுவை சிவம், தமிழ்ஒளி, பிரபஞ்சன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்..
பூங்குழலி : வாணிதாசனைப்பற்றிச் சொல்லுங்கள் மாமா.
அப்பா : தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் அறிந்தவர் வாணிதாசன். ரமி என்று புனைபெயரில் எழுதிய இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் எத்திராசலு என்கின்ற அரங்கசாமி.
யாழினி : அவரின் படைப்புகளைப் பற்றிக் கூறுங்கள் அப்பா.
அப்பா : பாரதிதாசன் நடத்திய தமிழ் வகுப்பில் அவரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் கவிஞர் வாணிதாசனும், புதுவை சிவமும் ஆவர். பாரதியாரின் பிறந்த நாள் அன்று, “பாரதிநாள் இன்றடா பாட்டிசைத்து ஆடடா” என்று வாணிதாசன் பாடிய பாடல், அவருக்கு முதற்பரிசைப் பெற்றுத் தந்தது.
பூங்குழலி : அப்படியென்றால், வாணிதாசனுக்கும் புதுவை சிவத்திற்கும் கவிதை எழுதக் கற்றுத் தந்தவர் பாரதிதாசனா மாமா?
அப்பா : ஆமாம். யாப்பு இலக்கணம் பயின்றதோடு, புலவர் தேர்வு எழுதியும் இருவரும் தேர்ச்சி பெற்றனர். பாவேந்தரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்ட இருவருமே பல்வேறு நூல்களை எழுதியுள்ளனர். வாணிதாசனின் ‘கொடி முல்லை’ என்னும் நூல் சிறப்பு பெற்றது.
யாழினி : புதுச்சேரி அரசு இவர்களைப் பெருமைப்படுத்தியுள்ளதா, அப்பா?
அப்பா : ஆமாம்.புதுச்சேரி அரசு இவர்கள் இருவரின் நூற்றாண்டு விழாக்களையும்மிகச் சிறப்பாக நடத்தியது. மேலும், ஆண்டுதோறும் பிறந்தநாள் விழாக்களையும் நடத்தி வருகிறது. தமிழக அரசு, பாவேந்தர் விருதினை இவர்கள் இருவருக்கும் வழங்கிச் சிறப்பித்தது.
யாழினி : அப்பா, தமிழ்ஒளியைப் பற்றிச் சொல்லுங்களேன்.
அப்பா : ஓ! சொல்கிறேனே. “சீறி அடித்துச் சுழன்ற அலைகளில் சிக்கிய ஒரு படகாய் தடுமாறி இளைத்து மடிந்த மகாகவி தன்சரிதம் உரைப்பேன்”என்று பாரதியாரைப் பற்றிப் பாடியவர், கவிஞர் தமிழ்ஒளி.
யாழினி : இவரின் இயற்பெயரே தமிழ்ஒளியா, அப்பா?
அப்பா : இல்லையில்லை. இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர், விஜயரங்கம். இவரும் பாரதிதாசனின் மாணவர்தாம். தமிழ்ஒளி என்னும் பெயரில் இவர், தம்மைக் கவிஞராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
யாழினி : இவரது படைப்புகள் பற்றிச் சொல்லுங்கள், அப்பா.
அப்பா : மாணவப் பருவத்திலேயே இவரது தமிழ்ப்பணி தொடங்கிற்று எனலாம். இவரது முற்போக்கான கருத்துகள், பாடலில் எதிரொலித்தன. கல்லூரிக் காலத்தில், ‘சிற்பியின் கனவு’ என்னும் மேடை நாடகத்தைப் படைத்துள்ளார். இந்த நாடகம்தான் பின்னாளில் ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் நடித்தவர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
யாழினி : வேறு என்னென்ன நூல்களை எழுதியுள்ளார், அப்பா?
அப்பா : வீராயி, கவிஞனின்காதல், நிலைபெற்றசிலை என்னும் குறுங்காவியங்களைப் படைத்துள்ளார். இந்நூல்களைப் பற்றிய திறனாய்வு, சென்னை வானொலியிலும் திருச்சி வானொலியிலும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமின்றிக் கவிதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல்கள் முதலியவற்றையும் படைத்துள்ளார். இவரது ‘விதியோ, வீணையோ’ என்னும் காவியம், சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றிய இசை நாடகமாகக் கூறப்படுகிறது.
பூங்குழலி : இவரது பாடல்கள் பாடநூல்களில்கூட இடம்பெற்றுள்ளதாக என் தந்தை கூறியுள்ளார், மாமா.
அப்பா : ஆமாம், பூங்குழலி. இவரது ‘முன்னும் –பின்னும்’, ‘அணுவின் ஆற்றல்’ ஆகிய இரண்டு பாடல்கள்தாம் அவை. அவை மட்டுமல்ல, இவரது மாதவி காவியம்’ என்னும் நூல், கல்லூரிப் பாடநூலாகவும் வைக்கப்பட்டது இவருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
பூங்குழலி : மாமா, இலக்கியங்கள் படைத்தவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இலக்கண நூல்கள் எழுதிய சான்றோர்களும் புதுவையில் இருந்தார்களா?
அப்பா : ஓ! இருந்தார்களே! தமிழில் பிழையின்றி எழுதுவது குறித்த நூல்களைப் படைத்தவர், இலக்கணச் சுடர் இரா. திருமுருகன். இவர், தனித்தமிழ்ப் பற்றால் சுப்பிரமணியன் என்ற தம் பெயரைத் ‘திருமுருகன்’ என்று மாற்றி அமைத்துக் கொண்டார்.
பூங்குழலி : உடற்கொடை ஈந்தாரே அவரா மாமா?
அப்பா : ஆமாம். அவர்தாம். நூறு சொல்வதெழுதுதல், 17 தமிழ்ப்பாடநூல்கள், ஆய்வு நூல்கள், வரலாற்று நூல்கள், பாவலர் பண்ணை, என் தமிழ் இயக்கம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம. லெனின் தங்கப்பாவும் இணைந்து நடத்திய ‘தெளிதமிழ்’ இதழ் இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
யாழினி : அப்பா கேட்கவே மகிழ்வாக இருக்கிறது.
பூங்குழலி : மாமா, அண்மையில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனும் புதுவையில் தோன்றியவர் என்று கேள்விப்பட்டேன், உண்மையா?
அப்பா : ஆமாம். இவரும் புதுவைக்காரர்தாம். இவர், தம் எழுத்தால் தாய்நாட்டைப் போற்றச் செய்தவர்; உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர்; எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘வானம் வசப்படும்’ என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும், இவரது உடல், புதுவை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது என்பது தமிழுக்குக் கிடைத்த சிறப்பாகும்.
யாழினி : அப்பப்பா! புதுவை படைப்பாளிகள் பலர் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனரே! இவர்கள், தமிழால் இமயம்போல் உயர்ந்து நிற்பவர்கள்.
பூங்குழலி : ஆமாம்,யாழினி.முத்தமிழ் போற்றும் நம் முன்னோர்களை வணங்குவதோடு அவர்களின் நூல்களையும் நாம் தேடித் தேடிப் படிப்போம்.
அப்பா : உங்கள் எண்ணம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களின் ஆர்வம் எப்போதும் நல்ல வழிகாட்டியாக அமையும். மேலும், புதுவையில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி வேறொரு நாளில் பேசுவோம்.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. ‘குயில்பாட்டு‘ நூலை எழுதியவர் யார்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) புதுவை சிவம்
[விடை : அ) பாரதியார்]
2. ‘தமிழுக்கு அமுதென்று பேர்‘ எனப் பாடியவர்
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) பிரபஞ்சன்
[விடை : அ) பாரதிதாசன்]
3. “பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆடடா‘ எனப் பாடியவர்
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) திருமுருகன்
[விடை : ஆ) வாணிதாசன்]
4. பாட்டிசைத்து – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பாட்டு + இசைத்து
ஆ) பாடல் + இசைத்து
இ) பா + இசைத்து
ஈ) பாட + இசைத்து
[விடை : அ) பாட்டு + இசைத்து]
5. மூன்று + தமிழ் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) மூன்றுதமிழ்
ஆ) முத்துத்தமிழ்
இ) முதுதமிழ்
ஈ) முத்தமிழ்
[விடை : ஈ) முத்தமிழ்]
ஆ. பொருத்துக
1. பாரதிதாசன் – கொடி முல்லை
2. தமிழ் ஒளி – பாஞ்சாலி சபதம்
3. பாரதியார் – பாவலர் பண்ணை
4. வாணிதாசன் – மாதவி காவியம்
5. திருமுருகன் – இருண்ட வீடு
விடை
1. பாரதிதாசன் – இருண்ட வீடு
2. தமிழ் ஒளி – மாதவி காவியம்
3. பாரதியார் – பாஞ்சாலி சபதம்
4. வாணிதாசன் – கொடி முல்லை
5. திருமுருகன் – பாவலர் பண்ணை
இ. வினாக்களுக்கு விடையளிக்க
1. பாரதியார் படைத்த முப்பெருங் காவியங்கள் யாவை?
விடை
● பாஞ்சாலி சபதம்
● குயில் பாட்டு
● கண்ணன் பாட்டு.
2. பாரதிதாசன் – பெயர்க் காரணம் தருக.
விடை
பாரதிதாசன், பாரதியார் மீது அன்பும், பாசமும், பற்றும் உடையவர். அதனால்தான் கனகசுப்புரத்தினம் என்ற தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்டார்.
3. பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் எது?
விடை
பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ‘வானம் வசப்படும்’ என்ற நூல் ஆகும்.
4. பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் யாவர்?
விடை
பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் ;
● வாணிதாசன்
● புதுவை சிவம்.
5. தமிழ்ஒளியின் படைப்புகளை எழுதுக.
விடை
வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை, கவிதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல்கள் முதலியன தமிழ் ஒளியின் படைப்புகளாகும்.
சிந்தனை வினா
தமிழின் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் எவ்வாறெல்லாம் தொண்டாற்றியுள்ளனர்?
விடை
தமிழ் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் தொண்டாற்றிய விதம் ;
தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் மிகுந்த பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமது சுதேசமித்திரன் நாளிதழில் எழுதினார். இதன் மூலம் தமிழை மீட்சி பெறச் செய்தார்.
பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடினார். தமிழைத் தன் உயிர் என்று பாடினார். இசையமுது, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு போன்ற பல நூல்களை எழுதி தமிழை வளர்த்தார்.
தமிழில் பெரும்புலமை பெற்ற செய்குத்தம்பி பாவலர் பல அரிய தமிழ் நூல்களை எழுதி தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்.
அழ. வள்ளியப்பாகுழந்தைக் கவிஞர் என்ற பாராட்டுகுரியவர். சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தபோது தம் தமிழ்ப் பணியைத் தொடங்கினார். பிறகு வங்கிப் பணிக்குச் சென்றார். வங்கிப் பணியில் இருந்தாலும் அவருடைய தமிழ்ப்பணியை விடாமல் பலநூல்களை இயற்றித் தமிழுக்குத் தொண்டாற்றினார்.
இவ்வாறு எத்தனையோ கவிஞர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். பிறநாட்டு அறிஞர்களும் தமிழை வளர்த்துள்ளனர்.
கற்பவை கற்றபின்
● நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்திச் சரியான ஒலிப்புடன் படித்துக்காட்டுக.
● தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய புதுவை படைப்பாளிகளைப் பற்றிய செய்திகளைத் திரட்டுக.