தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை
செய்யுள் : அறநெறிச்சாரம்
இயல் மூன்று
செய்யுள்
மனிதம்/ஆளுமை
கற்றல் நோக்கங்கள்
❖ குறித்துப் புரிந்துகொள்ளுதல்
❖ மனிதநேயச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுதல்
❖ உயிரிரக்கப் பண்பை மதித்துப் போற்றுதல்
❖ புதுவை வளர்த்த தமிழ் ஆளுமைகளை அறிந்துகொள்ளுதல்
❖ மரபுத்தொடர்களின் பொருள்களை அறிந்து பயன்படுத்துதல்
அறநெறிச்சாரம்
தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
ஆய பொழுதாற்றும் ஆற்றலும்- காய்விடத்து
வேற்றுமை கொண்டுஆடா மெய்ம்மையும் இம்மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை
– முனைப்பாடியார்
சொல் பொருள்
காய்விடத்து – வெறுப்பவரிடத்து
சாற்றுங்கால் – கூறுமிடத்து
சால – மிகவும்
தலை – முதன்மை
பாடல் பொருள்
குற்றம் ஏற்படாமல் பேசுதல், துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல், தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை ஆகிய இவை மூன்றும் மிக உயர்ந்த பண்புகளாகும்.
நூல் குறிப்பு
அறநெறிக் கருத்துகளைக் கொண்டு, வெண்பா வடிவில் இயற்றப்பெற்ற நூல், அறநெறிச்சாரம். இப்பாடல்கள் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகளைப் பெற்று விளங்குகின்றன. இந்நூலை எழுதியவர், முனைப்பாடியார்.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!
1. ‘சொல்லாடல்‘ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) சொல் + லாடல்
ஆ) சொல + ஆடல்
இ) சொல் + ஆடல்
ஈ) சொல்லா + ஆடல்
[விடை : இ) சொல் + ஆடல்]
2. ‘பொழுதாற்றும்‘- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொழு + தாற்றும்
ஆ) பொழுது + ஆற்றும்
இ) பொழு + ஆற்றும்
ஈ) பொழுது + தூற்றும்
[விடை : ஆ) பொழுது + ஆற்றும்]
3. வேற்றுமை-இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
அ) பிரிவு
ஆ) வேறுபாடு
இ) பாகுபாடு
ஈ) ஒற்றுமை
[விடை : ஈ) ஒற்றுமை]
ஆ. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
விடை
தூயவாய் ஆய
வேற்றுமை சாற்றுங்கால்
இ. எதிர்ச்சொல் எழுதுக.
1. துன்பம் x இன்பம்
2. வேற்றுமை x ஒற்றுமை
3. மெய்ம்மை x பொய்ம்மை
ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. நாம் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு யாது?
விடை
நாம் பேசும்போது குற்றம் ஏற்படாமல் பேசுவதைக் கடைபிடிக்க வேண்டும்.
2. மிக உயர்ந்த பண்புகளாக அறநெறிச்சாரம் குறிப்பிடுவதை எழுதுக.
விடை
உயர்ந்த பண்புகள் :
● குற்றம் ஏற்படாமல் பேசுதல்.
● துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல்.
● தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை.
உ. சிந்தனை வினா
உன் நண்பர் உன்னை விட்டுப் புதிய நண்பர்களுடன் பழகுவதாகக் கருதுகிறாய். இந்நிலையில், அவருக்குச் சிறு துன்பம் ஏற்படுகிறது. இப்போது உன் நிலை என்ன?
1. அவர் என் நண்பர் இல்லை, அவருக்குத் துன்பம் வந்தால் நான் ஏன் கவலைப்பட வேண்டும்?
2. அவருக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஏன் உதவ வேண்டும்?
3. அவர் என்னை வெறுத்தாலும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
விடை
3. அவர் என்னை வெறுத்தாலும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
கற்பவை கற்றபின்
● சொற்குற்றத்தால் ஏற்படும் துன்பங்களைப் பிறர்க்கு எடுத்துக் கூறுக.
விடை
அவையோர்க்கு வணக்கம்! நான் சொற்குற்றத்தால் ஏற்படும் குற்றங்கள் பற்றிக் கூற வந்துள்ளேன்.
நாம் நம் ஐம்புலன்களில் எதை அடக்குகிறோமோ இல்லையோ நாவைக் கட்டாயமாக அடக்க வேண்டும். அவ்வாறு அடக்காவிட்டால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. நுணல் என்றால் தவளை என்பது பொருள். பேச்சுத் தன்மை, பகுத்தறிவு இவை இரண்டும் இல்லாத ஜீவராசி தவளை. அது தன்னுடைய சப்தத்தினால், தன் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்கிறது.
தீயினால் சுட்ட புண் உடம்பில் தழும்பு இருந்தாலும், உள்ளத்தில் ஆறி விடும். நாவினால் தீயச் சொல் கூறிச் சுடும் புண், என்றுமே ஆறாது. சொல்லினால் ஆக்கமும், அழிவும் ஏற்படும். கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். நாவை அடக்காமல், சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும். இப்படி நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும்கூட உருவாக்கலாம். விளையாட்டாகப் பேசியது – வினையாக முடிவதும் உண்டு
.நாம் நாவைக் காத்தல் வேண்டும். அதனைக் காக்காவிட்டால், குற்றமான சொற்களைச் சொல்லி துன்பம் அடைவர்.
● பாடலின் பொருள் புரிந்து சரியான ஒலிப்புடன் படித்துக்காட்டுக.
● பாடலை அடிபிறழாமல் எழுதுக.