தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்
இலக்கணம் : இணைச்சொற்கள்
கற்கண்டு
இணைச்சொற்கள்
பூவரசன் : செல்வா, என்னாச்சு? ஏன் கவலையாக இருக்கிறாய்?
செல்வம் : எங்க வீட்டுத் தோட்டத்திலே இருந்த சின்னஞ்சிறிய பூச்செடி வாடிவதங்கியிருக்கு.
பூவரசன் : அதற்காகவா கவலைப்படுகிறாய்?
செல்வம் : ஆமாம். நான் அதை எவ்வளவு கண்ணுங்கருத்துமாகப் பார்த்துக்கொண்டேன் தெரியுமா? போனவாரம்தான் அதில அடுக்கடுக்கா வெள்ளைவெளேர்னு பூ பூத்திருந்தது.
பூவரசன் : வருந்தாதே, செல்வம். இரவுபகலாக நீ அந்தச் செடிய எப்படிக் கவனித்திருப்பாய் என்று எனக்கும் புரிகிறது. மீண்டும் அந்தச்செடி பச்சைப்பசேல்னு மாறணும் இல்லையா? நம்ம அறிவியல் ஆசிரியரிடம் கூறி இதற்குத் தீர்வு காண்போம்.
உரையாடலைப் படித்தீர்களா? தடித்த எழுத்துகளில் சில சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன அல்லவா? அவற்றைப்பற்றித்தான் நாம் இப்போது படிக்கப் போகிறோம்.
நாம் பேசும்போதும் எழுதும்போதும் இயல்பாகவே இத்தகைய சொற்களைப் பயன்படுத்துகிறோம். நன்றாகக் கவனித்தீர்களேயானால், ஒவ்வொன்றும் இரண்டிரண்டு சொற்களாக இருப்பதைக் காண்பீர்கள். எப்படி?
சிறிய + சிறிய – சின்னஞ்சிறிய
கண்ணும் + கருத்தும் – கண்ணுங்கருத்தும்
இரவு + பகல் – இரவுபகல்
பச்சை + பச்சை – பச்சைப்பசேல்
இவைபோன்று இணையாகச் சொற்கள் வருகின்றன. ஆகையால், இவற்றை இணைமொழிகள் அல்லது இணைச்சொற்கள் என்று கூறுகிறோம். இவை, தொடர்களில் வரும்போது எப்போதும் சேர்ந்தே இருக்கும். நம்முடைய சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதற்கு இவை துணைபுரிகின்றன.
இணைச்சொற்கள் மூவகையாக வருகின்றன. அவையாவன,
நேரிணை – கண்ணுங்கருத்தும், வாடிவதங்கி, ஈடும்எடுப்பும்
எதிரிணை – இரவும்பகலும் அங்கும்இங்கும், வெற்றியும் தோல்வியும்
செறியிணை – பச்சைப்பசேல், வெள்ளைவெளேர், சின்னஞ்சிறிய, அடுக்கடுக்காக
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
கீழ்க்காணும் தொடர்களில் பொருத்தமான இணைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.
(ஈடும்எடுப்புமாக, கண்ணுங்கருத்துமாக, அடுக்கடுக்காக, இன்பமும்துன்பமும், கீரியும்பாம்பும்)
1. பானைகள் அடுக்கக்காக வைக்கப்பட்டிருந்தன.
2. நேற்றுவரை கீரியும்பாம்பும் போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள்.
3. தேர்வில் கண்ணுங்கருத்துமாக படித்ததால், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன்.
4. வாழ்வில் இன்பமும் துன்பமும் உண்டு. அதனைக் கண்டு நாம் சோர்வடையக்கூடாது.
5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு ஈடும்எடுப்புமாக இருக்கும்.
ஆ. விடுபட்ட இடங்களில் உரிய எதிரிணைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
1. இன்பமும் துன்பமும் – இன்பமும் துன்பமும்
2. அன்றும் இன்றும் – அன்றும் இன்றும்
3. அங்கும் இங்கும் – அங்கும் இங்கும்
4. உயர்வும் தாழ்வும் – உயர்வும்தாழ்வும்
5. விண்ணும் மண்ணும் – விண்ணும் மண்ணும்
மொழியை ஆழ்வோம்
அ. கேட்டல்
● பள்ளி வழிபாட்டுக்கூட்டத்தில் கூறப்படும் அறிவுரைகளைக் கேட்டறிக.
● ஆசிரியர் மற்றும் வயதில் மூத்தோர் கூறும் கதைகளைக் கேட்டு மகிழ்க.
● தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விரிவான செய்திகள் மற்றும் உலகச் செய்திகளைக் கேட்டறிக.
ஆ. பேசுதல்
● அன்றாட வாழ்க்கைச் சூழலில் நீங்கள் காணும் சிக்கல்கள் பற்றிக் கலந்துரையாடுக.
விடை
மாணவன்-1 : என்னடா குமரா! இன்றைக்கு பள்ளிக்கு ஒன்பது மணிக்குத்தான் வந்தாய்? என்னவாயிற்று?
மாணவன்-2 : என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாங்கள் வரும் வழியில் ஒரே போக்குவரத்து நெரிசல்.
மாணவன்-1 : கொஞ்சம் சீக்கிரம் புறப்படுவதுதானே!
மாணவன்-2 : சீக்கிரம்தான் புறப்படுகிறோம். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வேகமாக வரவே இயலவில்லை .
மாணவன்-1 : நீ சொல்வதும் சரிதான். இந்தச் சிக்கல் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இப்பிரச்சனைகூட சீக்கிரம் புறப்பட்டு வந்தால் நேரத்துக்கு வந்துவிடலாம் என்ற தீர்வைத் தரும். குடிநீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு இவற்றையெல்லாம் என்ன சொல்வது?
மாணவன்-2 : ஆமாம்… ஆமாம்.
மாணவன்-1 : கொஞ்சம் மழை வந்தால் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றனர். கேட்டால் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகின்றனர்.
மாணவன்-2 : அதேபோல்தான் குடிநீரும், மழைக்காலத்தில் ஐம்பது சதவீதம் குழாய்களில் சேறும் சகதியும் கலந்து வருகிறது. கோடைக்காலத்தில் தண்ணீர் வருவதே இல்லை.
மாணவன்-1 : இந்தச்சிக்கல்கள் நமக்கு மட்டும் இல்லை. நகரவாசிகள் அனைவருக்கும் உள்ள சிக்கல்தான்.
மாணவன்-2 : இவற்றிற்குத் தீர்வு காண வேண்டுமானால் அரசாங்கம் செய்யட்டும் என்று எதிர்பார்க்காமல் பொதுமக்கள் சேர்ந்து ஆவன செய்ய வேண்டும்.
மாணவன்-1 : நாமும் நம்மால் இயன்றவரை இச்சிக்கல்கள் தீர பணிபுரிவோம் என உறுதியேற்போம்.
● உங்கள் மனம் கவர்ந்த தலைவர்களுள் ஒருவரைப்பற்றி 5 மணித்துளி பேசுக.
விடை
என்னைக் கவர்ந்த தலைவர் “ஜெய்ஹிந்த்” செண்பகராமன்.
இந்திய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துப்பாக்கி ஏந்தியபோது, “ஜெய்ஹிந்த்” என்று கோஷம் எழுப்பினார். இம்மந்திர கோஷத்தை உருவாக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான செண்பகராமன். நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த புத்தன் சந்தை என்ற ஊரில் 1891 செப்டம்பர் 15ந்தேதி செண்பகராமன் பிறந்தார். பெற்றோர் சின்னசாமி பிள்ளை , நாகம்மாள் ஆவர்.
மாணவப் பருவத்திலேயே தேசபக்தி மிகுந்தவராகத் திகழ்ந்தார். செண்பகராமனின் அறிவும் சுதந்திர வேட்கையும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வால்டர் வில்லியம் ஸ்டிரிக்லாண்ட் என்பவரைக் கவர்ந்தன. அதனால் செண்பகராமனை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றார். செண்பகராமன் அங்கு பொறியியல் கல்வியில் டாக்டர் பட்டம் பெற்றார். அங்கிருந்து கொண்டே “சர்வதேச இந்திய ஆதரவுக் குழு” என்ற அமைப்பை உருவாக்கினார்.
முதல் உலகப்போரின்போது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கடற்படையை அழிப்பதற்காக ஜெர்மனி ஒரு நீர் மூழ்கிக் கப்பலை உருவாக்கியது. அந்தக் கப்பலின் பெயர் ‘எம்டன்’. இக்கப்பலின் என்ஜினியராகவும், இரண்டாவது கமாண்டராகவும் செண்பகராமன் நியமிக்கப்பட்டார். இக்கப்பல் சென்னை கடற்கரையில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் மக்களை மிரளச் செய்தது. முதல் உலகப்போர் முடிந்தது. ஆனால் சுதந்திரம் கிடைக்கவில்லை.செண்பகராமன் பல அயல்நாடுகளுக்குச் சென்று வந்தார். ஜவஹர்லால் நேரு ஜெர்மனிக்குச் சென்றபோது செண்பகராமன் வீட்டில் தங்கியுள்ளார். நேதாஜியுடன் நிகழ்ந்த சந்திப்பிற்குப் பிறகு இந்திய தேசிய ராணுவம்’ நேதாஜியில் உருவாக்கப்பட்டது.
முதல் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பொறுப்பேற்றார். அவருக்கும் செண்பகராமனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் ஹிட்லரின் ஆதரவாளர்களான ‘நாஜிக்கள்’ அவருடைய உணவில் மெல்ல மெல்ல விஷத்தைக் கலந்து விட்டனர். இதனால் அவர் உடல்நிலை நலிவுற்றது.அவருடைய இறுதி விருப்பம் “இந்தியா விடுதலை பெறுவதற்கு முன் தான் இறந்துவிட்டதால் அஸ்தியைப் பத்திரமாக வைத்திருந்து, தேசியக் கொடி பறக்கும் கப்பலில் நமது நாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பாதி அஸ்தியைக் கரமனை ஆற்றிலும் குமரிமுனை கடலிலும் மீதியை நாஞ்சில் நாட்டின் வளம் மிக்க வயல்களில் தூவ வேண்டும்” என்று கூறினார்.
அதன்படி இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது 1966 செப்டம்பரில் இந்தியாவின் கொடிக் கப்பலில் செண்பகராமனின் அஸ்தி கொச்சிக்குக் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆசை நிறைவேற்றப்பட்டது.
● வல்வில் ஓரியின் கொடைச் சிறப்பைப்பற்றிப் பேசுக.
விடை
அவையோர்க்கு வணக்கம்!
நான் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரியின் கொடைச் சிறப்பைப் பற்றிப் பேசவந்துள்ளேன்.
சங்க இலக்கியங்கள் கடையெழு வள்ளல்கள் பற்றிப் பாடியுள்ளன. பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி இவர்கள் எழுவரும் தங்களுடைய கொடைத்திறத்தால் பெயர் பெற்றவர்கள். அவர்களுள் ஒருவர் ஓரி.
இவர் கொல்லிமலையை ஆண்டு வந்தவர். விற்போரில் சிறந்தவர் என்பதால் வல்வில் ஓரி என்று அழைக்கப்பட்டார். இவன் புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்குக் கொடுத்த ஓரி எனப் புகழப்படுபவர். தன்னை நாடி வரும் புலவர்களுக்கும் பிறருக்கும் பொன்னையும், தேர், யானை போன்றவற்றையும் வழங்கிய வள்ளல்.
ஒருநாள் ஓரி வேட்டையாட கானகத்துக்குச் சென்றான். அப்போது பெரும்புலவர் வன்பரணர் தனது பாணர் கூட்டத்துடன் அங்கு வந்து தங்கியிருந்தார்.
அப்போது ஒரு புலி சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த யானையைத் தாக்க தயாராக இருந்தது. இதைக் கண்ட ஓரி, யானையைக் குறிவைத்து அம்பைத் தொடுத்தான். அந்த அம்பு யானையை வீழ்த்தி விட்டுப் புலியைக் கொன்று, காட்டுப் பன்றியைத் துளைத்துவிட்டு, ஒரு புற்றுக்குள் பாய்ந்தது. புற்றுக்குள் இருந்த முள்ளம் பன்றியும் அம்புக்கு இரையாயிற்று. இந்தக் காட்சியைக் கண்ட வன்பரணரும் உடன் இருந்தவர்களும் வியப்படைந்தனர். ஓரியின் இத்திறமையைப் பாடலாக்கினார் பரணர். உடனிருந்தவர்கள் இசைக்கருவிகளை இசைத்தனர்.
அவர்களுக்குத் தான் வேட்டையாடிய விலங்கின் ஊனைத் தந்து நிறைய தேனையும் வழங்கினான் ஓரி. இசைவாணர்களுக்கு யானைகளைப் பரிசிலாகக் கொடுத்தான். வெள்ளி நாரிலே நீலமணியால் செய்த குவளை மலர்களைத் தொடுத்து அவர்களுக்கு வழங்கினான் என்று சங்கப்பாடல் கூறுகிறது.
இசைப்புலவர்கள் அவனை நாடி வந்தால், ‘நீங்கள் பாடுங்கள்’ என்று சொல்லமாட்டான். அவர்களுக்கு அறுசுவை உணவளித்து உறங்குவதற்கு மெத்தென்று படுக்கையைக் கொடுப்பான். பாணர்கள் பாடுவதும் இல்லை ஆடுவதும் இல்லை. அரச குமாரர்களைப் போல் கவலையின்றி இன்பம் துய்ப்பார்கள். இசைவாணர்கள் தானாகப் பாடும் போதுதான் உண்மையான இசை வெளிவரும் என்பது அவனுடைய எண்ணமாக இருந்தது.
இவ்வாறு சிறந்த கொடையாளியாகத் திகழ்ந்தான் ஓரி.
இ. படித்தல்
● செய்யுளைப் பொருள் விளங்கப் படித்துக்காட்டுக.
● பாடப்பகுதியைச் சரியான ஒலிப்புடன் பிழையின்றிப் படித்துக்காட்டுக.
ஈ. எழுதுதல்
1. சொல்லக்கேட்டு எழுதுக.
1. கண்ணுக்கு அழகு பிறருக்கு இரக்கம் காட்டல்
2. கொல்லிமலையை வல்வில் ஓரி என்ற மன்னர் ஆட்சி செய்தார்.
3. பாலன் அவ்வூர் மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தார்.
2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. பொருளுதவி – செல்வந்தர்கள் வறியவர்களுக்குப் பொருளுதவி செய்து உதவ வேண்டும்.
2. திறமைசாலி – தெனாலிராமன் திறமைசாலியாக இருந்ததனால் கிருஷ்ணதேவராயரின் அவையில் விகடகவியாக இருந்தார்.
3. நம்பிக்கை – நாம் எச்செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிக்க வேண்டும்.
4. ஆராய்ச்சி – எதனையும் ஏன்? எதற்கு? என்று ஆராய்ச்சி செய்து கூறுவது அறிவியல்.
5. வான்புகழ் – என் நண்பன், வெள்ளத்தில் அடித்துச் சென்ற சிறுவனைக் காப்பாற்றி ஒரே நாளில் வான்புகழ் பெற்றான்.பொருளுதவி
3. பொருத்தமான சொற்களைக்கொண்டு, தொடரை முழுமையாக்குக.
[பாணர், ஊர்த்தலைவர், வல்வில் ஓரி, பூவண்ணன்,பாலன்]
1. கொடைத்திறத்தில் சிறந்தவர் …………………………………….
விடை : வல்வில் ஓரி
2. மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தவர் …………………………………….
விடை : பாலன்
3. திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தவர் …………………………………….
விடை : பூவண்ணன்
4. இசைப் பாடல்களைப் பாடுபவர் …………………………………….
விடை : பாணர்
5. மூதாட்டிபோல் வேடமிட்டவர் …………………………………….
விடை : ஊர்த்தலைவர்
4. வரைபடத்தைப் புரிந்துகொள்ளுதல்
குறள்மதி, தேர்வில் பெற்ற மதிப்பெண்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள். இந்த வரைபட விவரத்திலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு விடை அறிவோம்.
1. நூறு மதிப்பெண் பெற்றுள்ள பாடம் எது? – கணக்கு
2. எந்தப் பாடத்திற்கு 90 மதிப்பெண் கிடைத்துள்ளது? – தமிழ்
3. ஒரே மதிப்பெண் கிடைத்துள்ள பாடங்கள் எவை? – தமிழ், அறிவியல்
4. குறள்மதி பெற்ற மொத்த மதிப்பெண்களைக் குறிப்பிடுக. – 455/500
5. அதிக மதிப்பெண்ணுக்கும் குறைந்த மதிப்பெண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எவ்வளவு? – 20 மதிப்பெண்கள்
மொழியோடு விளையாடு
1. சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. வல்வில் ஓரி வாரித் தரும் வள்ளல் (ள், ல், ழ்)
2. பாணரே! உம் வறுமையைப் போக்குவது என் பொறுப்பு (று, ரு)
3. களிறும் கொடையாய் நல்கும் வான் புகழ் வல்வில் ஓரி (ன், ண்/ல், ள்,ழ்)
4. மக்களுக்குப் பாலன் மீது அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது. (ர்/ற்)
5. பூவண்ணன் மூதாட்டிக்கு உணவு வாங்கிக் கொடுத்தான். (ண, ன, ந)
2. சொல்லிலிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?
கொடுக்கப்பட்ட சொற்களையும், குறிப்புகளையும் கொண்டு புதிய சொல் உருவாக்குக.
1. விடுகதை – மரத்திற்கு ஆதாரம் – விதை
2. திருநெல்வேலி – பயிர்களைப் பாதுகாக்கும் – வேலி
3. நகர்ப்புறம் – விரலின் மணிமகுடம் – நகம்
4. இமயமலை – உண்கலம் – இலை
5. உருண்டை – நமது அடிப்படைத் தேவைகளுள் ஒன்று – உடை
3. சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.
1. மதிவாணன் பலம் மிக்கவன்
காற்றடித்ததால் மரத்திலிருந்து பழம் விழுந்தது. (பழம்)
2. இந்த மரம் உயரமாக உள்ளது.
விடை
வீரபாண்டிய கட்டபொம்மன் மறம் மிகுந்தவன். (மறம்)
3. நிலா தன் கையில் வளை அணிந்திருந்தாள்.
விடை
எலி, கொசுவலையைக் கடித்துவிட்டது. (வலை )
4. சூரியனில் இருந்து ஒளி கிடைக்கிறது.
விடை
பேக்குவரத்துப் பெருக்கத்தினால் ஒலிமாசு ஏற்படுகிறது. (ஒலி)
5. பரிமளா கடையில் வெல்லம் வாங்கினார்.
விடை
தொடர்மழையால் ஆற்றில் வெள்ளம் வந்தது. (வெள்ளம்)
4. கீழ்க்காணும் குறுக்கெழுத்துப் புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடிக்க.
இடமிருந்து வலம்
1. அறிவியல் அறிஞர்கள் செய்வது
ஆராய்ச்சி
2. இரக்கம் என்ற சொல்லை இப்படியும் கூறலாம்
பரிவு
வலமிருந்து இடம்
1. உலகின் மற்றொரு பெயர்
தரணி
2. மக்களைக் காப்பவர்
வேந்தன்
3. நவதானிய வகைகளுள் ஒன்று
கம்பு
மேலிருந்து கீழ்
1. அரசரின் ஆலோசகர்
அமைச்சர்
2. கொல்லிமலை நாட்டின் அரசன்
வல்வில் ஓரி
கீழிருந்து மேல்
1. இது வந்திட பத்தும் பறக்கும்
பசி
2. விரைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்
மெதுவாக
3. இதைக் கேட்டால் மனம் மயங்கும்
இசை
5. வரிசைமாறியுள்ள தொடர்களை நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்
2. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
3. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்
4. பாலன், பூவண்ணன் இருவரும் நிருவாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
5. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
விடை
1. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
2. பாலன், பூவண்ண ன் இருவரும் நிருவாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
3. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
4. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
5. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்.
நிற்க அதற்குத் தக…
● நாட்டு உடைமைகளான பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பேன்.
● அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்வேன்.
அறிந்து கொள்வோம்
பிறநாட்டு நாணயங்களை அறிவோமா?
● இந்தியா – ரூபாய்
● அமெரிக்கா – டாலர்
● இங்கிலாந்து – பவுண்டு
மலேசியா – ரிங்கிட்
செயல் திட்டம்
● நமது நாட்டுச் சின்னங்களின் படங்களைத் தொகுத்து அவற்றைப் பற்றி எழுதித் தொகுப்பேடு உருவாக்குக.
● கடையெழு வள்ளல்களைப் பற்றிச் செய்திகளைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக.
குறிப்புச்சட்டகத்தைப் பயன்படுத்திச் சிறு சிறு கட்டுரை எழுதுதல்.
கட்டப்பட்ட உரையே கட்டுரை. குறிப்பிட்ட தலைப்பில் அமையும் செய்திகளைத் தொகுத்து, கட்டுரை எழுதுவதற்குமுன் நினைவில் கொள்ள வேண்டியவற்றை
அறிந்துகொள்வோம்.
● கட்டுரை எழுதுவதற்குரிய தலைப்பு
● தலைப்பு சார்ந்த செய்திகளைத் திரட்டுதல்
● கட்டுரையை விளக்கும் குறிப்புச்சட்டகம் உருவாக்குதல்
● முன்னுரை,பொருளுரை, முடிவுரை என அமைதல்
● பொருளுரையில் சிறு சிறு உள்தலைப்புகள் இடுதல்
● பொருத்தமான பழமொழி, மேற்கோள், உவமை, சான்றோர் கூற்று, பாடல் பயன்படுத்துதல்
● சொற்களுக்கிடையே இடைவெளி, நிறுத்தக்குறிகள் பயன்படுத்துதல்
● சிறு சிறு பத்தியாகப் பிரித்தல், வரிசைப்படுத்துதல்
● கையெழுத்துத் தெளிவு, அழகு, சுருக்கமாக விளக்குதல்
● குறித்த அளவுக்குள் கட்டுரை எழுதுதல்
குறிப்புச் சட்டகம் என்பது, கட்டுரையில் இடம்பெறும் செய்திகளைச் சிறு சிறு தலைப்புகளில் விளக்குவதாகும். அந்தத் தலைப்புகளைக் கொண்டே, கட்டுரையை விரிவாக எழுதிட இயலும். கட்டுரையின் முழுப்பொருளையும் விளக்குவதாகக் குறிப்புச்சட்டகம் அமையும்.
கீழே மாதிரிக்காக ஒரு குறிப்புச்சட்டகம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு, கட்டுரையை விரித்து எழுதும் முறையை அறிந்து கொள்க.
கல்வியின் சிறப்பு
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
கல்வியின் தேவை
கல்வியின் சிறப்பு
கல்வியால் உயர்ந்தவர்கள்
கல்வியால் விளையும் பயன்
முடிவுரை
இதுபோன்று, நீங்கள் எழுத விரும்பும் கட்டுரைக்குக் குறிப்புச் சட்டகம் உருவாக்கிக் கட்டுரை எழுத முயலும்.
கற்பவை கற்றபின்
● நீங்கள் படிக்கும் நூல்களிலிருந்து இணைமொழிகளைத் தொகுக்க.
விடை
இணைமொழிகள்
1. வாலும்தோலும்
2. கண்ணும்காதும்
3. கண்ணும்கருத்தும்
4. கையும்களவும்
5. குறுக்கும்மறுக்கும்
6. இரவும்பகலும்
7. கீழும்மேலும்
8. நன்மைதீமை
9. வினாவிடை
10. விருப்புவெறுப்பு
● இணைமொழிகளைப் பயன்படுத்தி, சிறு உரையாடல் எழுதுக.
விடை
உரையாடல் :
அம்மா : முருகா! நான் கடைக்குப் போய்விட்டு வருகிறேன். நீங்க கிண்டலும் கேலியும் பண்றேன்னு சண்டை போடாதீங்க.
முருகன் : நாங்க சண்டையெல்லாம் போடமாட்டோம் நீ போய்விட்டு ஆர அமர வாம்மா.அம்மா : சரி சரி! வீட்டைத் திறந்து விட்டுட்டு வீடு வீடாய்ப் போகாதீங்க.
முருகன் : ஓடியாடி விளையாடக் கூடாது. பேசக்கூடாது. என்னம்மா சொல்றீங்க.
அம்மா : இதெல்லாம் தங்குதடையின்றிப் பேசு. படிக்கச் சொன்னா மட்டும் படிக்காதே!
முருகன் : அக்கம்பக்கத்தில் பேசாதே என்று சொன்னீங்க, பேசறதே இல்லை. விளையாட போவதும் இல்லை.
அம்மா : சரி சரி! பத்திரமாக இரு.
முருகன் : நீ பத்திரமா போய்விட்டு வாம்மா! மழைக்காலம் சாலையெல்லாம் பல்லாங்குழி போல் மேடும் பள்ளமுமாய் உள்ளது.
அம்மா : சரி சரி!
● இணைமொழிகள் வருமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
விடை
(i) ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைப் பார்க்க கூட்டங்கூட்டமாய் மக்கள் வந்தனர்.
(ii) தஞ்சை பெரியகோவில் தலைமுறை தலைமுறையாய் நின்று தமிழரின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.
(iii) மழையில்லாமல் பயிர்கள் வாடி வதங்கி உள்ளன.
(iv) குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும்.
(v) நாளும்கிழமையும் எவருக்காகவும் காத்திருக்காது.