Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 3

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 3

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு

துணைப்பாடம் : கங்கை கொண்ட சோழபுரம்

இயல் இரண்டு

துணைப்பாடம்

கங்கை கொண்ட சோழபுரம்

கயலினி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். ஏன்? இந்த விடுமுறை நாள்களை அவள் மகிழ்வுடன் கழிக்கப் போகிறாள் அல்லவா! அதனால்தான். அன்பு தரும் ஆசைப் பாட்டியின் ஊருக்குப் புறப்படத் தயாராகிவிட்டாள். வாருங்கள், குழந்தைகளே! நாமும் அவள் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வோம்.

சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில்தான் உள்ளது, அந்த ஊர். தன் தாயுடன் பேருந்தில் ஏறிச் சன்னலோரம் அமர்ந்து கொண்ட அவளுக்கு வாயெல்லாம் ஒரே பாட்டுத்தான்.

ஆறு சட்டம் நூறு பண்ணி

ஐம்பத்தாறு ரயில் வண்டி

கங்கை கொண்டான் மண்ணெடுத்து

கிண்ணுது பார் ரயில் வண்டி

அவள் பாட்டி சொல்லிக் கொடுத்த நாட்டுப்புறப் பாட்டுத்தான் அது. இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே, அவள் எங்கே செல்கிறாள் என்று? ஆமாம், அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரத்திற்குத்தான் அவள் செல்கிறாள். அவள் பாட்டி, இந்த விடுமுறையில் சில இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தாள். அதுதான் கயலினியின் துள்ளலுக்குக் காரணம். ஊர் வந்ததும் அவள் பாட்டி அவர்களை வரவேற்க பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.

பாட்டியைக் கண்டதும் ஓடிச்சென்று ஆரத் தழுவிக் கொண்டாள் கயலினி. “பாட்டி… பாட்டி,நீங்க தொலைபேசியில சொல்லிக் கொடுத்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுல கங்கை கொண்டான் மண்ணெடுத்து என்று வருதுல அப்படினா என்ன பாட்டி?” எனக்கேட்டாள்.” ஓ ஓ… அதுவா! சோழர்கள் காலத்துல தமிழ்நாட்டை ஆண்ட முதலாம் இராசேந்திர சோழன் என்னும் மன்னன் வட நாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்தான். அதன் அடையாளமாகத்தான் அவனைக் கங்கை கொண்டான் என்று சொல்கிறோம், அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காகத் தான் உருவாக்கிய புதிய நகரத்திற்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயரும் வைத்து விட்டான்” என்று பதிலளித்தாள் பாட்டி.

● வெற்றித் திருநகரான கங்கை கொண்ட சோழபுரம் ‘கங்காபுரி’ என்றும் ‘கங்காபுரம்’ என்றும் புலவர் பெருமக்களால் போற்றப் பெற்றுள்ளது.

● ‘கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்காக புரிபரந்த கற்பம்’ என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்

“ஓ! அப்படியா? நம் ஊருக்கு இப்படித்தான் பெயர் வந்ததா? ” சரி, பாட்டி. எங்கேயோ அழைத்துச் செல்கிறேன் என்றீர்களே, போகலாமா?” என்றாள் கயலினி. முதலில் சாப்பிட்டு ஒய்வெடு. பிறகு போகலாம்” என்ற பாட்டி அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டும், ‘பாட்டி…’ என்று இழுத்தாள் கயலினி.” சரி…சரி.. நான்புரிந்து கொண்டேன் வா போகலாம்” என்று பாட்டி கூற இருவரும் சோழ நாட்டுக்கு வளம் சேர்த்த சோழ கங்கத்தை அடைந்தனர். ‘இதுதான் சோழ கங்கம். பார்த்தாயா இதன் அழகை!’ என்று பாட்டி சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் கயலினி, “பாட்டி, இது என்ன பொன்னேரினு எழுதியிருக்கு? நீங்க சோழ கங்கம்னு சொல்றீங்க?” எனக் கேட்டாள்.

“ஆமாம், சோழ கங்கப் பேரேரிதான் இன்று பொன்னேரினு பெயர் மாறியிருக்கு. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இதனால் பாசன வசதி பெற்று உழவுத்தொழில் தழைத்தோங்கியது” என்றாள் பாட்டி,

மலைகளும் குன்றுகளும் இல்லாத சமவெளியில் பதினாறு கல் தொலைவுவரை வலிமையான உயரமான கரைகளைக் கட்டி, நீண்ட கால்வாய் வெட்டித் தண்ணீரைப் பள்ளத்தாக்கிலிருந்து மேட்டிற்குக் கொண்டு வந்து, ஏரியில் தேக்கி வைத்ததைக் கற்பனையில்கூட எண்ணிப் பார்க்கவே கயலினிக்குக் கடினமாகத் தோன்றியது. “பாட்டி, இது அவ்வளவு எளிமையான செயலன்று” என்று சோழர்களின் நீர்ப்பாசன முறையை எண்ணி வியப்புற்றாள்.

இருவரும் பேசிக்கொண்டே கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்தனர். கோவிலைப் பார்த்ததும் “இதுவும் தஞ்சைப் பெரிய கோவில் போன்ற அமைப்பிலேயே உள்ளதே”? வியப்புடன் கேட்டாள் கயலினி. “ஆமாம், இருந்தாலும் இக்கோவில் இராசேந்திரனின் தந்தை இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலைவிட உயரம் குறைவானதுதான் என்றாள் பாட்டி.

“அது என்ன பாட்டி? ‘என்று கோவிலின் விமானத்தைப் பார்த்துக் கேட்டாள் கயலினி… அதற்கு பாட்டி “அதுதான் விமானம். அங்கே பார், விமானத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள மிகப்பெரிய வட்ட வடிவக்கல். அது 34 அடி குறுக்களவு கொண்டது. மேலும், இது ஒரே கல்லால் அமைக்கப்பெற்ற விமானம் ‘ என்று கூறிக் கயலினியை வியப்படையச் செய்தாள் பாட்டி.

“பாட்டி, அதோ பாருங்கள் நந்தி! இது கல்லால் செதுக்கப்பட்டதுதானே”? என்று கூறிக்கொண்டே ஓடிப்போய் அதனைத் தொட்டுப்பார்த்தாள் கயலினி.

“இல்லை, இல்லை. இது முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டது” என்று உரைத்தாள் பாட்டி. அழகு மிளிர்ந்த இச்சிலையைக் கண்டபடி உள்ளே சென்றாள் கயலினி.

‘என்ன பாட்டி, கோவிலின் வாயில் இவ்வளவு உயரத்தில் உள்ளதே!’ என்றாள் கயலினி. “ஆமாம். எல்லாக் கோவிலின் வாயில்களைக்காட்டிலும் தரைமட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் இருப்பதே இதன் சிறப்பு” என்று கூறிய பாட்டி, கயலினியை உள்ளே அழைத்துச் சென்றாள்.

படியைக் கடந்து ஏறியதும் வாயிற்காவலர் சிலைகளைக் கண்டு களித்தாள் கயலினி.. அவற்றைப் பார்த்ததும் அவளுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு பொங்கியது.

தூண்களிலும் கோவில்களிலும் இருந்த சிற்பக்கலைகளைக் கண்டு களித்தாள் கயலினி. கோவிலின் வடக்குப் பக்க நுழைவாயிலின் இருபக்கங்களிலும் உள்ள கலைச்செல்வி மற்றும் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி ஆகிய சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை என்பதைப் பாட்டி மூலம் அறிந்து கொண்டாள்.

“பாட்டி, இங்கே பாருங்க, சிங்கம் வடிவத்திலிருக்கும் இந்தச்சிற்பத்தின்வயிற்றிலே ஒரு வாயில் இருக்கிறதே’ என்றாள் கயலினி”, அதற்குப் பாட்டி, “அதுதான் சிங்க முகக் கிணறு ‘என்றாள். “என்னது? சிங்கத்தின் வயிற்றுக்குள் கிணறா?” என்று தன் இரு கைகளையும் கன்னத்தில் வைத்தபடி சோழர்களின் கலையை எண்ணி வியந்தாள். தமிழர்களின் கலைத் திறமையை கண்டு உள்ளம் மகிழ்ந்த அவள், அக்கலைக்கூடத்தைவிட்டு வரவே மனமில்லாமல் பாட்டியுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

இந்தியச் சிற்ப வரலாற்றில் கங்கை கொண்ட சோழபுரச் சிற்பங்கள் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளன. கலையழகும் புதுப்பொலிவும் கொண்ட சிற்பக் கூடமாகவே கங்கை கொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னமாகக் கங்கை கொண்ட சோழபுரத்தை அறிவித்துள்ளது நமக்கெல்லாம் பெருமைதானே!

என்ன, குழந்தைகளே, கயலினியோடு நாமும் அருமையும் பெருமையும் மிக்க கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டோமே! இப்போது, உங்களுக்கும் மகிழ்ச்சிதானே. நாம் மீண்டும் சந்திப்போமா?

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க,

1. முதலாம் இராசேந்திர சோழனை ஏன் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்?

விடை

முதலாம் இராசேந்திர சோழன் வட நாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்ததன் அடையாளமாகத்தான் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்.

2. சிங்கமுகக் கிணறு – குறிப்பு எழுதுக.

விடை

சிங்க வடிவத்தில் சிங்கமுகக் கிணறு அமைந்திருக்கும். இந்தச் சிற்பத்தின் வயிற்றில் ஒரு வாயில் இருக்கும்.

3. சோழ கங்கப் பேரேரிக்கு நீர் எங்கிருந்து வருகிறது?

விடை

மலைகளும் குன்றுகளும் இல்லாத சமவெளியில் பதினாறு கல் தொலைவு வரை வலிமையான உயரமான கரைகளைக் கட்டி, நீண்ட கால்வாய் வெட்டித் தண்ணீரைப் பள்ளத்தாக்கிலிருந்து மேட்டிற்குக் கொண்டு வந்து, ஏரியில் தேக்கி வைத்தனர். சோழ கங்கப் பேரேரி இன்றி பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

4. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலுள்ள வாயில்களின் பெயர்களைக் கூறுக.

விடை

● தெற்குப் பக்க நுழைவாயில்

● வடக்குப் பக்க நுழைவாயில்.

சிந்தனை வினா

ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் என்ன ஆகும்கருத்துகளைக் குழுவில் பகிர்ந்து கொள்க.

விடை

மாணவன் 1 : ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் மழைநீரைத் தேக்கி வைக்க முடியாது.

மாணவன் 2 : நிலத்தடி நீரின்றி மக்கள் துன்பப்படுவர்.

மாணவன் 3 : விவசாயத்திற்குப் போதுமான நீர் கிடைக்காது.

மாணவன் 1 : நீர்நிலைகள் மண் மூடிய நிலையில் உள்ளதால், மழைக்காலங்களில் வரும் மழைநீர் சிறிதளவே தேங்கும். உபரிநீர் வீணாகக் கடலில் கலந்துவிடும்.

மாணவன் 2 : கோடைக்காலங்களில் நீர்நிலைகளைத் தூர்வாரி நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டும்.

கற்பவை கற்றபின்

● காலம் வென்ற கங்கை கொண்ட சோழபுரம் என்ற பாடப் பகுதியைச் சரியான ஒலிப்போடும் நிறுத்தக்குறிகளோடும் படித்துக்காட்டுக.

● கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அக்கோவிலிலுள்ள சிற்பங்களின் சிறப்புகளைப் பற்றியும் வகுப்பறையில் கலந்துரையாடுக.

விடை

கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அக்கோவிலிலுள்ள சிற்பங்களின் சிறப்புகளைப் பற்றியும் வகுப்பறையில் கலந்துரையாடுக. கலந்துரையாடுதல் (சிற்பங்களின் சிறப்புகள்)

மாணவன் 1 : நீ சென்று வந்த கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பற்றிக் கூறுகிறாயா?

மாணவன் 2 : கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தஞ்சைப் பெரிய கோவில் போன்ற அமைப்பில் உள்ளது. ஆனால் அக்கோயிலைவிட உயரம் குறைவானது.

மாணவன் 1 : அப்படியா?

மாணவன் 2 : ஆமாம். அதற்கடுத்து செங்கற்களால் கட்டப்பட்ட நந்திச்சிலை இருந்தது. இக்கோவிலின் வாயில், தரைமட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் இருப்பது தனிச்சிறப்பாகும். அது மட்டுமா? தூண்களிலும் கோவில்களிலும் அழகான சிற்பங்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தின.

மாணவன் 3 : நான்கூட இக்கோவிலுக்கு ஒருமுறை சென்றுள்ளேன். கோவிலின் வடக்குப் பக்க நுழைவாயிலின் இருபக்கங்களிலும் உள்ள கலைச் செல்வி மற்றும் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி ஆகிய சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை என்று என் அப்பா கூறியுள்ளார்.

மாணவன் 2 : இக்கோவிலில் சிங்க முகக் கிணறு ஒன்று உள்ளது.

மாணவன் 1 : சிங்க முகக் கிணறா? அது என்ன? மாணவன் 2 : கிணறு சிங்கம் வடிவத்திலிருக்கும். இந்தச் சிற்பத்தின் வயிற்றிலே ஒரு வாயில் இருக்கும். சிங்க வடிவத்தில் இருப்பதால் சிங்கமுகக் கிணறு என்ற பெயர் பெற்றது.

மாணவன் 1 : சோழர்களின் சிற்பக்கலைக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். இந்தியச் சிற்ப வரலாற்றில் கங்கை கொண்ட சோழபுரச் சிற்பங்கள் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளன. கங்கை கொண்ட சோழபுரம் சிற்பக்கூடமாக அமைந்துள்ளது. இச்சிறப்புகளால் கங்கை கொண்ட சோழபுரத்தை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.

மாணவன் 1 : இது நம் தமிழகத்திற்கே பெருமையன்றோ ?

மாணவர்கள் : ஆமாம். பெருமைதான்.

● நீங்கள் கண்டுகளித்த சுற்றுலா இடங்களின் சிறப்புகளைப் பட்டியலிடுக.

விடை

பிச்சாவரத்தில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அலையாத்தி காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடாகும்.

சிறுசிறு தீவுக்கூட்டங்கள், படகுக் குழாம், எழில்மிகு கடற்கரை, மாங்குரோவ் செடிகளைக் கொண்ட காடுகளின் ஊடே படகுப் பயணம் இவை மிகவும் சிறப்பானது.

கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள கால்வாய்களையும் காடுகளையும் பார்வையிட படகு மூலம் சென்று பார்த்தேன்.

இங்கு உயர்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் அதி நவீன தொலைநோக்கிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியைப் பார்த்தேன்.

இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து வியந்து போனேன். பிச்சாவரம் பார்க்கப் பார்க்க ஆனந்ததை அள்ளித் தந்தது.

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *