தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு
இலக்கணம் : இணைப்புச்சொற்கள்
கற்கண்டு
இணைப்புச்சொற்கள்
செழியன் : இளந்தமிழா, நாளை வெளியூர் செல்வதாகக் கூறினாயே? மறந்துவிட்டாயா? உன்னுடன் யாரெல்லாம் வருகிறார்கள்?
இளந்தமிழ் : மறக்கவில்லை, செழியா! நாளை நான் மட்டும்தான் செல்வதாக இருக்கிறேன். அதனால், என்னுடன் யாரும் வரவில்லை.
செழியன் : அப்படியானால் நீ கவனமாக இருக்கவேண்டும் அல்லவா?
இளந்தமிழ் : நான் ஏற்கெனவே சென்ற இடம்தான். ஆதலால், அச்சம் ஒன்றும் இல்லை.
செழியன் : அது சரி, இளந்தமிழ். மறுநாளே வந்துவிடுவாயா அல்லது வருவதற்கு நாளாகுமா?
இளந்தமிழ் : நான் திரும்பி வருவதற்கு இரண்டு நாளாகும். ஆகையால், தேவையான உடைகளைக் கொண்டு செல்கிறேன்.
செழியன் : ஏனெனில், இந்த வார இறுதியில், நமக்கு மட்டைப்பந்து போட்டி இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன். நீ கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். ஆகவே, மறந்துவிடாதே நண்பா!
குழந்தைகளே! மேற்கண்ட உரையாடலைப் படித்தீர்களா? உங்களிடம் வழக்கம்போல ஒரு வினா கேட்கலாமா? நீங்கள் படித்த உரையாடலில் எத்தனை இணைப்புச் சொற்கள் உள்ளன? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். அட, மீண்டும் உரையாடலைப் படிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
நாம் கண்டுபிடித்த இணைப்புச் சொற்களைப் பட்டியலிடலாமா?
மட்டும், அதனால், அப்படியானால், ஆதலால், அல்லது, ஆகையால், ஏனெனில், ஆகவே
படித்தீர்களா? இவைபோன்றஇணைப்புச்சொற்கள், நாம் பேசும் பேச்சில் இயல்பாகவே இடம்பெறுகின்றன. இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திப் பேசவும் எழுதவும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. நாம் தங்குதடையின்றிப் பேசவும் எழுதவும் இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன.
தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர். தொடர்களில் பயன்படும் சில இணைப்புச்சொற்கள் பின்வருமாறு:
அதனால், அப்படியானால், அல்லது, அவ்வாறெனில், ஆனால், ஆகையால், ஆகவே, ஆதலால், ஆயினும், இருந்தபோதும், உம், எனவே, எனில், ஏனெனில், எவ்வாறெனில்
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. ‘அதனால்‘ என்பது
அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) உரிச்சொல்
ஈ) இணைப்புச்சொல்
[விடை : ஈ) இணைப்புச்சொல்]
2. கருமேகங்கள் வானில் திரண்டன ………………..மழைபெய்யவில்லை .இத்தொடருக்குப் பொருத்தமான இணைப்புச்சொல்
அ) எனவே
ஆ) ஆகையால்
இ) ஏனெனில்
ஈ) ஆயினும்
[விடை : ஈ) ஆயினும்]
3. கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான் ………… அவன் நண்பன் மிதிவண்டியே போதும் என்றான்.
அ) அதனால்
ஆ) ஆதலால்
இ) இருந்தபோதிலும்
ஈ) ஆனால்
[விடை : ஈ) ஆனால்]
ஆ. கீழ்க்காணும் தொடர்களை இணைத்து எழுதுக.
1. நான் விளையாடச் சென்றேன். கண்ணன் விளையாடச் சென்றான். (உம்)
நானும் கண்ணனும் விளையாடச் சென்றோம்.
2. வள்ளி எழுதி முடித்துவிட்டாள். எழிலி எழுதவில்லை . (ஆனால்)
விடை
வள்ளி எழுதி முடித்துவிட்டாள். ஆனால் எழிலி எழுதவில்லை.
3. பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. (அதனால்)
விடை
பெருமழை பெய்தது. அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
4. முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு உடல்நலமில்லை. (ஏனெனில்)
விடை
முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. ஏனெனில் அவனுக்கு உடல்நலமில்லை.
5. அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். (ஆகவே)
விடை
அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. ஆகவே கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும்.
இ. கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருத்தமான இணைப்புச்சொற்களை இணைத்து எழுதுக.
(ஆனால், அதனால், ஏனெனில், ஆகையால், எனவே, ஆகவே, பிற)
அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ஆனால், சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. ஏனெனில், அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. ஆகையால், அதனைக் கண்டு பிற விலங்குகள் அஞ்சின. எனவே, அது தனியாகக் குகையில் வசித்தது. ஆனால் அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. அதனால் குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் பிற விலங்குகள் அஞ்சியோடின. ஏனெனில், அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா?
ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. இணைப்புச் சொற்கள் எதற்குப் பயன்படுகின்றன?
விடை
தங்கு தடையின்றிப் பேசவும், எழுதவும் இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன.
2. இணைப்புச்சொற்களுள் நான்கு எழுதுக.
விடை
● அதனால்
● ஆகையால்
● அப்படியானால்
● ஆதலால்
3. இணைப்புச்சொற்களைப் பயன்படுத்தி,எவையேனும் இரண்டு தொடர்களை எழுதுக.
விடை
● கண்ணன் வந்துவிடுகிறேன் என்றான். ஆனால், இன்னும் வரவில்லை.
● நான் தாய்நாட்டிலேயே பணியாற்ற விரும்புகிறேன். ஆகையால், வெளிநாடு செல்லமாட்டேன்.
மொழியை ஆழ்வோம்
அ. கேட்டல்
● நாள்தோறும் வழிபாட்டுக்கூடத்தில் சொல்லப்படும் திருக்குறளைக் கேட்டறிக.
● வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் கட்டடக்கலைகள் பற்றிய செய்திகளைக் கேட்டு அறிந்துகொள்க.
ஆ. பேசுதல்
● நீங்கள் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்து 5 மணித்துளி பேசுக.
விடை
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் :
அனைவருக்கும் வணக்கம்!
நான் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் மதுரை. இம்மதுரை தூங்கா நகர், கோவில் நகர், தமிழர் நாகரிகத் தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்சு, தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் சிறப்பிக்கப் பெறுகிறது.
மதுரை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது மீனாட்சியம்மன் கோவில். இக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் எனக் காட்சிப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மதுரை நகரின் நடுவில் அமைந்து மதுரைக்கே அழகூட்டுகிறது. இராமர், லட்சுமணர், இந்திரன், தேவர்கள் போன்றவர்களால் வழிபடப்பட்ட பெருமைக்குரியது. மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பகுளம் உள்ளது. இக்குளத்திலிருந்து திருமலை நாயக்கர் மகாலுக்குச் செல்வதற்குச் சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது.
திருமலை நாயக்கர் மகால் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இது கலைநயத்தில் ‘தாஜ்மகால்’ போன்றது. அந்த மகாலில் மிகச்சிறந்த ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அமைந்துள்ள தூணின் உயரம் 82 அடி, சுற்றளவு 19 அடி ஆகும்.
அடுத்ததாக நாங்கள் பார்த்தது காந்தி மியூசியம். இவ்விடம் இராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்த இடம் ஆகும். இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய ஆடைகள், கடைசியாக அவர் அணிந்திருந்த உடை ஆகியவை இடம்பெற்றுள்ளன. நல்ல நூலகம் ஒன்றும் அமைந்துள்ளது.
மதுரைக்கு அருகே திருப்பரங்குன்றம் சென்றோம். இது ஒரு குகைக் கோவில். ஒரே கல்லில் குடைந்த கோவில் ஆகும். மதுரையில் இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன.
● நற்பண்புகள் கொண்ட சான்றோர் ஒருவரைப்பற்றி 5 மணித்துளி பேசுக.
விடை
அனைவருக்கும் காலை வணக்கம்!
நான் பாலம் என்ற அமைப்பை நடத்திவரும் ‘பாலம் கல்யாணசுந்தரம்’ அவர்களைப் பற்றிக் கூறவிருக்கிறேன்.
இவர் திருநெல்வேலி மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940ஆம் ஆண்டில் பிறந்தவர். தமிழ்மீது பற்றுக் கொண்டவர். கல்லூரியில் வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினாலும் அவர் தமிழையே படித்தவர்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவர் முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காகச் செலவிட்டுத் தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் உணவு பரிமாறுபவராக வேலை பார்த்தவர். அவர் ஈட்டிய மொத்த வருவாயைக் கொடுத்து வரலாறு படைத்தவர்.
இவரைப் போன்று உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த எவரும் செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 6.5 மில்லியன் டாலர் (இந்தியப் பணம் 30 கோடி) பரிசாகப் பெற்றவர். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியவர்.
குடும்பப்பங்காகக் கிடைத்த ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்தைத் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து மகிழ்வுற்றவர். ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்து கொள்ள ஏழு ஆண்டுகள் நடைபாதைவாசியாக வாழ்ந்தவர்.
தனக்கென வாழாமல் பிறருக்கென வாழும் அவரைப் போற்றுவோம். அவரைப் போல நாமும் நற்பண்புகளுடன் வாழ்வோம் என்று உறுதியேற்போம்.
இ. படித்தல்
● திருக்குறளைப் பொருள் விளங்கப் படித்துக்காட்டுக.
● புத்தகப் பூங்கொத்தில் விளையாட்டுகள் தொடர்பான கதைகளைப் படித்துக்காட்டுக.
ஈ. எழுதுதல்
1. சொல்லக் கேட்டு எழுதுக.
1. பண்பு உடையவராக வாழ்தல் நல்வழியாகும்.
2. திருக்குறள் உலகப்பொதுமறை என்றழைக்கப்படுகிறது.
3. கங்கை கொண்ட சோழபுரம் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.
2. தொடரில் அமைத்து எழுதுக.
1. வெற்றி – குமரன் மல்யுத்த போட்டியில் முதல் பரிசு பெற்று வெற்றி வாகை சூடினான்.
2. நாகரிகம் – தனக்கென்று தனித்த நாகரிகமும் பண்பாடும் உடையது தமிழ் மரபு.
3. உழவுத்தொழில் – கண்ணன் தன் விடாமுயற்சியால் உழவுத்தொழிலில் வளம் பெருக்கினான்.
4. கலையழகு – கண்ணன் வரைந்த ஓவியம் கலையழகின் மொத்த உருவமாகும்.
3. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக,
அரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை படைத்திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான். புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப்பெற்றான். நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படை. போர்க்களத்தில் வீறுகொண்டு செம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப்படையே ஆகும். வலிமை சான்ற அழகிய யானை, பட்டத்து யானை என்று பெயர் பெற்றது. உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும் உடைய யானையே அப்பதவிக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1. நால்வகைப் படைகள் யாவை?
விடை
தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை.
2. நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது எது?
விடை
நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படை.
3. மாற்றார் என்னும் சொல்லின் பொருள் யாது?
விடை
மாற்றார் என்னும் சொல்லின் பொருள் பகைநாட்டரசர் (பகைவர்).
4. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும்.
5. காலாட்படை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
விடை
கால் + ஆள் + படை.
4. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. மக்களுக்கு உரிய பண்பில்லாதவர் மரத்தைப் போன்றவர் என வள்ளுவர் கூறுகிறார்.
2. கங்கை கொண்ட சோழபுரம் கங்காபுரி என்று புலவர்களால் போற்றப்பட்டது.
3. கம்பைக் குறிக்கும் வீரக்கலை சிலம்பாட்டம் ஆகும்.
5. பிறமொழிச் சொற்களையும் பேச்சுத்தமிழையும் நீக்கிச் சரியாக எழுதுக.
1. டுமாரோ ஈவினிங் என் ஸிஸ்டர் ஊருக்குப் போவா.
நாளை மாலை என் தங்கை ஊருக்குச் செல்வாள்.
2. ஷேர் ஆட்டோவில பைவ் பாசுஞ்சர்ஸ் இருக்காங்க.
விடை : பகிர் தானியங்கியில் ஐந்து பயணிகள் இருக்கிறார்கள்.
3. என் வீட்டில் வாசிங் மிஷின் ரிப்பேராக இருக்கு.
விடை : என் வீட்டில் சலவை இயந்திரம் பழுதாகி இருக்கிறது.
6. பொருத்துக,
7. பாடலை நிறைவு செய்க
திருவிழாவாம் திருவிழா
எங்கள் ஊர்த் திருவிழா
ஊர் கூடும் திருவிழா
உறியடிக்கும் திருவிழா
விடை
பெண்கள் கூடும் திருவிழா
கும்மியடிக்கும் திருவிழா
கரகமாடும் திருவிழா
கொண்டாடும் திருவிழா.
8. கீழ்க்காணும் குறட்பாக்களிலுள்ள சொற்களைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்துக.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு,
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு
விடை
உயிர் எழுத்து இடம்பெறாத சொற்கள்
● நயனொடு
● நன்றி
● புரிந்த
● பயனுடையார்
● பண்புபா
● ராட்டும்
● குடிப்பிறத்தல்
● வழக்கு
மெய் எழுத்து இடம்பெறாத சொற்கள்
● உலகு
● நயனொடு
நிறுத்தக்குறிகளை அறிந்து கொள்வோம்
காற்புள்ளி ( , )
ஒரு தொடரில் பல பொருள்கள் அடுக்கி வரும்போது குறிக்கப்படுவது.
மா, பலா, வாழை ஆகியவற்றை முக்கனி என்பர்.
அரைப்புள்ளி ( ; )
ஓர் எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வரும்போது, ஒவ்வொரு பயனிலையின் இறுதியிலும் குறிக்கப்படுவது.
(எ.கா.) காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை.
முற்றுப்புள்ளி ( . )
ஒரு தொடர் முடிவு பெற்றதனை உணர்த்துவதற்காகக் குறிக்கப்படுவது.
(எ.கா.) எனக்கு மட்டைப்பந்து விளையாடப் பிடிக்கும்,
வினாக்குறி ( ? )
ஒரு தொடர் வினாப்பொருளைத் தரும்போது,? குறிக்கப்படுவது.
(எ.கா.) அப்பா என்னால் பறக்க முடியாதா?
உணர்ச்சிக்குறி ( ! )
ஒரு தொடர் உணர்ச்சியை வெளிப்படுத்துமானால் குறிக்கப்படுவது.
(எ.கா.) என்னே! கங்கை கொண்ட சோழபுரக் கோவிலின் அழகு!
ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ‘ )
ஒரு தொடரில் நூல் பெயர், கட்டுரை பெயர், பழமொழி முதலியன வந்தால் குறிக்கப்படுவது,
(எ.கா.) பிரபஞ்சனின் படைப்புகளுள் ‘வானம் வசப்படும்” என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.
இரட்டை மேற்கோள் குறி (“ “ )
ஒரு தொடரில் ஒருவர் கூறியதை நேர்கூற்றாகக் கூறும்போதும், ஒரு தொடரை மேற்கோளாகப் பயன்படுத்தும் போதும் குறிக்கப்படுவது.
(எ.கா.) “கண்வனப்பு கண்ணோட்டம்” என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது.
மொழியோடு விளையாடு
1. சுழலட்டையைப் பயன்படுத்திக் குறிப்புகளுக்கு விடை எழுதுக.
1. உடலுறுப்புகளுள் ஒன்று கண்
2. உப்புநீர் அதிகம் உள்ள இடம் கடல்
3 . அழியாத செல்வம் கல்வி
4. பொருள்கள் வாங்கும் இடம் கடை
5. சமையலுக்குப் பயன்படுவது கடுகு
6. வீடு கட்டப் பயன்படுவது கல்
7. ஓவியம் என்பது கலை
8. பாரதியார் இயற்றியவை கவிதை
2. நீக்குவோம்! சேர்ப்போம்!
1. விதையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.
2. சபையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.
3. விலையில் ஓரெழுத்தை நீக்கி, வேறொர் எழுத்தைச் சேர்க்க.கரம்
4. ஆசையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.
5. கடையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க,
நிற்க அதற்குத் தக…
● பிற உயிரினங்களின் மீது அன்பு காட்டுவேன்.
● விளையாட்டு, உடலுக்கும் மனத்திற்கும் நல்லது என அறிந்துகொண்டேன்.
● நீர்த்தேக்கங்கள், வேளாண்மைக்கு உயிர் என்பதைப் புரிந்துகொண்டேன்.
அறிந்து கொள்வோம்
பண்பு
● தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
செயல் திட்டம்
தமிழர் கலைகள் குறித்துச் செய்தித்தாளில் படங்களையும் செய்திகளையும் தொகுத்து வருக.
கற்பவை கற்றபின்
● புத்தகப் பூங்கொத்து கதையொன்றில் இடம்பெற்றிருக்கும் இணைப்புச்சொற்களைக் கண்டறிக.
● வீட்டிலோ பள்ளியிலோ பிறர் பேசும்போது, என்னென்ன இணைப்புச்சொற்களைப் பயன்படுத்துகின்றனர்? அவற்றைப் பட்டியலிடுக.