தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி
துணைப்பாடம் : வறுமையிலும் நேர்மை
இயல் இரண்டு
துணைப்பாடம்
வறுமையிலும் நேர்மை
ஓர் ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த பணக்காரர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று, தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர்.
இளகிய உள்ளம் கொண்ட அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டா. ஆளுக்கொரு கொழுக்கட்டை கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து கொழுக்கட்டையை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள் என்றார். மாளிகைக்குத் திரும்பிய அவர், தம் வேலைக்காரர்களை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். ஆளுக்கொரு கொழுக்கட்டை கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து கொழுக்கட்டைகளைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார்.
அதுபோலவே வேலைக்காரர்கள் செய்தனர். அங்கே காத்திருந்த சிறுவர் சிறுமியர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். வேலைக்காரர்கள் கூடையினை அவர்கள் முன் வைத்தனர்.
சிறு சிறு கதைகளை உரிய ஒலிப்புடன் பொருள் விளங்கப் படித்தல்
கொழுக்கட்டையை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால் ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லாரும் எடுத்துச் சென்றது போக மீதி இருந்த சிறிய கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் பணக்காரர்.
ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்ட அந்தச் சிறுமி, தன் வீட்டிற்கு வந்தாள். அந்தக் கொழுக்கட்டையைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிட்டாள். அப்போது அதன் உள்ளிருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. அந்தத் தங்கக் காசைத் தன் தாயிடம் காட்டி, “அம்மா! இது கொழுக்கட்டைக்குள் இருந்தது; இது என்ன என்று பாருங்கள்” என்றாள் அச்சிறுமி. அதற்கு அவர், “இது தங்கக் காசு” என்று இளவேனிலிடம் கூறிவிட்டு, இது எப்படி கொழுக்கட்டைக்குள் வந்திருக்கும் என்று யோசித்தவாறே, “இந்தக் கொழுக்கட்டையை யார் கொடுத்தார்களோ அவர்களிடமே சென்று கொடுத்துவிடு” என்றார்.
“அந்தத் தங்கக்காசை எடுத்துக் கொண்டு பணக்காரரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! நான் எடுத்துச் சென்ற கொழுக்கட்டைக்குள் இந்தத் தங்கக் காசு இருந்தது, பெற்றுக் கொள்ளுங்கள்” என்றாள்.
“மகளே உன் பெயர் என்ன?” எனக் கேட்டார் பணக்காரர். தன் பெயர் இளவேனில் எனக் கூறினாள் அந்தச் சிறுமி.
“மகளே, உன் நேர்மைக்கும் பொறுமைக்கும் நல்ல பண்புகளுக்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக்காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்” என்றார் பணக்காரர்.
“நன்றி, ஐயா!” எனக் கூறிவிட்டு, துள்ளிக் குதித்தபடி ஓடிவந்த அவள், நடந்ததைத் தன் தாயிடம் சொன்னாள். அதனைக் கேட்டு அந்தத் தாயும் மகிழ்ச்சியடைந்தாள்.
நீதி : ‘நேர்மை நன்மை தரும்’
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க.
1. பசியால் வாடிய ஊர்மக்களுக்குப் பணக்காரர் எவ்வாறு உதவினார்?
விடை
பஞ்சம் காரணமாக ஊரில் உள்ளவர்கள் நல்ல உள்ளம் படைத்த ஒருவரிடம் பசியால் வாடும் தங்கள் குழந்தைகளுக்கு உதவும்படி வேண்டினர். ஊரில் பசியால் குழந்தைகள் யாரும் வாடக்கூடாது என்பதற்காகப் பணக்காரர், ஆளுக்கு ஒரு கொழுக்கட்டை கிடைக்குமாறு தன் வீட்டிற்கு வெளியே தினமும் கூடையில் தேவையான அளவு கொழுக்கட்டைகள் வைத்தார்.
2. சிறுமியின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு யாது?
விடை
கொழுக்கட்டைக் கூடையில் இருந்து இறுதியாக என்ன கிடைக்கின்றதோ அதைத்தான் தினமும் சிறுமி இளவேனில் எடுப்பாள். ஆறாம் நாள் வழக்கமான கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.
அம்மா அவளிடம் கொழுக்கட்டை கொடுத்தவர்களிடம் கொண்டுபோய் பொற்காசைக் கொடுத்தாள். உனது பொறுமைக்கும் நற்பண்புக்கும் நான் கொடுக்கும் பரிசு இது, எடுத்துச் செல் என்றார்.
சிந்தனை வினா
வறுமையிலும் நேர்மை‘ என்னும் கதையில், சிறுமியின் இடத்தில் நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?
விடை
வறுமையிலும் நேர்மை’ என்னும் இடத்தில் நான் இருந்தால், சிறுமி இளவேனில் போல தங்கக்காசைப் பணக்காரரிடமே கொடுத்திருப்பேன்.
கற்பவை கற்றபின்
1. நாம் என்னென்ன நற்பண்புகளைப் பெற்றிருக்கவேண்டும்? பட்டியலிடுக.
விடை
அன்பு, பண்பு, இரக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, மனிதநேயம், புறங்கூறாமை, உண்மை பேசுதல், இன்னாசெய்யாமை, களவாமை, சினம்கொள்ளாமை, தன்னம்பிக்கை, தன்முனைப்பு, விட்டுக் கொடுத்தல், உயிரிரக்கம் போன்ற நற்பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.
2. நேர்மையானவர் என்று நீ யாரை நினைக்கிறாய்? அவரைப்பற்றி ஐந்து மணித்துளி பேசுக.
விடை
காமராஜரை நான் நேர்மையானவராக நினைக்கின்றேன். இந்நாளில் எல்லோரும் தலைவர்கள். ஆனால், நாட்டு மக்களின் துயர் துடைத்து உயர் வாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள் மிகக்குறைவு. 14 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்தார்.
படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் தீட்டினார். இத்திட்டத்திற்கு நிதி பற்றாக்குறை என்று கூறி, எதிர்ப்புகள் வரவே இத்திட்டத்தை நிறைவேற்ற வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறிய தலைவனை இனிமேல் பார்க்க முடியுமா?
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் பெருந்தலைவர் காமராசர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த இவருடைய காலம் தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியின் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையானவராகவே வாழ்ந்தார். அதனால் அவரை மட்டுமே நேர்மையானவராகக் கருதுகின்றேன்.