தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி
துணைப்பாடம் : என்ன சத்தம்
இயல் ஒன்று
துணைப்பாடம்
என்ன சத்தம்…
அன்று ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான்.
ஆடுகள் காட்டின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. செழியன் ஒருமரத்தடியில்அமர்ந்து காட்டின் அழகை இரசித்துக் கொண்டிருந்தான். அந்த மரத்தின் மேலிருந்த குரங்குகள் அலப்பும் ஓசை அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அதனால், அவன் வேறு ஒரு மரத்தடிக்குச் சென்று அமர்ந்தான். அங்கிருந்த மரங்களில் அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடின. அம்மரத்திலிருந்த குயில் ஒன்று குக்கூ குக்கூ…. எனக் கூவியது. குயிலின் ஓசை செழியனின் செவிக்கு இனிமையாக இருந்தது. அப்படியே படுத்துச் சிறிது நேரம் ஓய்வெடுத்தான். திடீரென ஆடுகள் மே….மே..எனக் கத்தும் சத்தம் கேட்கவே, செழியன் பதற்றத்துடன் எழுந்து என்னவென்று கவனித்தான். அருகில் பச்சைப் புதரருகே நரி ஒன்று ஆடுகளைக் கொன்று தின்ன, நேரம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே ஒரு குச்சியை வளைத்து வில்லாக்கி நரியை நோக்கி அம்பை எய்தான். அம்பு பட்டுக் காயமடைந்த நரி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டது.
செழியன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாட்டியுடன் வீட்டிற்குக் கிளம்பினான். தூரத்தில் எங்கோ சிங்கம் முழங்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் காடே பரபரப்பாகி விட்டது. பறவைகள் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டு இங்குமங்கும் பறந்தன. யானை பிளிறியது; ஆந்தை அலறியது; கீரிப்பிள்ளையும் செடிகளின் மறைவிலிருந்து ஓடியது; மயில் அகவியது; பாம்பும் தன் புற்றிலிருந்து வெளியே வந்து சீறியது; குதிரை கனைத்தது.
இவற்றை எல்லாம் கேட்ட செழியனுக்குப் பயத்தால் நாக்கு வறண்டது. தான் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தான். பாட்டியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் கம்பங்கொல்லையில் வண்டுகள் முரலும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. ஊருக்கு அருகே வந்த பிறகுதான் செழியனுக்குப் பயம் சற்றுக் குறைந்தது. செழியன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்ததுமே அவனைக் கண்ட மகிழ்ச்சியில் தொழுவத்திலிருந்த பசு கத்தியது. செழியன் ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்துவிட்டுத் தன் அம்மாவிடம் சென்று, காட்டில் தான் கண்ட நரியைப் பற்றியும் சிங்கம், யானை இவற்றின் சத்தத்தைப் பற்றியும் மிகுந்த பரபரப்போடு கூறினான். அம்மா செழியனின் துணிவைப் பாராட்டினார்.
வாழைத் தோட்டத்திலிருந்த தண்ணீர்த் தொட்டியில் செழியன் குளித்துவிட்டு வந்தான். அம்மா கொடுத்த முறுக்கைத் தின்றான். அப்போது தங்கை பூவிழி பால் பருகிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, செழியனையும், பூவிழியையும், பாட்டியையும் சாப்பிட வாருங்கள் என்று அம்மா அழைத்தார். அம்மாவின் குரலைக் கேட்டதும் இருவரும் சென்று கொடுத்த உணவை உண்டனர்.
பின்னர், தூங்கப் போகும் முன் பாட்டி கதை கூறினார். இருவரும் கதையை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். எலியும் எலிக் குஞ்சும் கீச் …கீச் என்று சத்தமிட்டன.
எலியின் இந்த சத்தம், பாட்டியின் கதைக்குப் பின்னணி சேர்ப்பதுபோல் இருந்தது.நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்தான். அங்கே பூனை ஒன்று சீறுவதைக் கண்டு நாய் குரைத்த காரணம் அறிந்தான். இரண்டையும் அருகிலிருந்த தென்னந் தோப்பின் பக்கம் விரட்டிவிட்டு வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டான். பாட்டியும், தங்கையும் முன்பே தூங்கிவிட்டனர்.
கொய்யாத் தோப்பிலிருந்த மரத்தின் மேலிருந்து கொக்கரக்கோ கொக்கரக்கோ…என சேவல் ஒன்று கூவும் ஓசையைக் கேட்டுக் கண் விழித்தான் செழியன்.
கா….கா….. எனக் காகமும் தன் பங்குக்குக் கரைந்தது.
செழியன் உற்சாகமாகத் துள்ளியெழுந்து அன்றைய நாளின் கடமைகளை மகிழ்ச்சியாகச் செய்ய ஆரம்பித்தான். தன் அனுபவங்களைத் தன் நண்பர்களோடு பகிரப் போகும் ஆவலுடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றான்.
பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் ஒலிப்பு முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென முன்னோர் கூறிய மரபினைத் தொன்று தொட்டுப் பின்பற்றி வருகிறோம்.
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க.
1. செழியன் ஆடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் செல்லக் காரணம் என்ன?
விடை
ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு ஓட்டிச் சென்றான்.
2. செழியன் செய்தவற்றை உமது சொந்த நடையில் கூறுக.
விடை
● காட்டில் ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து இயற்கை அழகை இரசித்துக் கொண்டு இருந்தான்.
● திடீரென ஆடுகள் கத்தத் தொடங்கின. செழியன் எழுந்து சென்று பார்த்தான்.
● புதர் அருகே நரி ஒன்று ஆடுகளைக் கொன்று தின்ன நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது.
● செழியன் அருகில் இருந்த குச்சியை வில்லாக்கி நரியை நோக்கி அம்பை எய்தான்.
● அம்பு பட்டுக் காயமடைந்த நரி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டது.
சிந்தனை வினா.
1. நம்மைப்போல் விலங்குகளுக்கும் பேசும் திறன் கிடைத்தால் எப்படி இருக்கும்? காட்டில் வாழும் விலங்குகள் பேசுவதுபோல் ஓர் உரையாடல் எழுதிக்காட்டுக.
விடை
மான் : சிங்கம் வருது. எல்லாரும் ஓடுங்க ஓடுங்க.
முயல் : என்ன மான் அக்கா சொல்றீங்க?
மான் : அடடா! உண்மையைத்தான் சொல்றேன். ஒளிஞ்சுக்கோ!
முயல் : சரி மான் அக்கா.
சிங்கம் : எல்லாரும் எங்க ஓடுறீங்க? நில்லுங்க, ஏய்! நில்லுங்க.
மான் : நிக்க மாட்டோம்! நீ எங்களை தின்னுடுவ.
சிங்கம் : அட நில்லுமா, உங்கள் எதுவும் பண்ணமாட்டேன்.
மான் : அய்யோ! நீ இப்படி எத்தனை முறை சொல்லி எங்க இனத்தையே அழிச்சுட்டே (என்று சொல்லி ஓடியது).
2. நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகள் ஏதேனும் ஆபத்து நேர்வதற்கு முன்பு ஏன் ஒலியெழுப்புகிறது என எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
விடை
சிந்தித்தது உண்டு. ஒருநாள் எங்கள் வீட்டு நாய் நடு இரவில் மிகவும் குரைத்தது. அப்போது தான் திருடன் வந்ததை அறிந்தோம்.
கற்பவை கற்றபின்
1. ‘என்ன சத்தம்‘ என்ற பகுதியைச் சரியான உச்சரிப்புடன் நிறுத்தக்குறிகளுக்கு ஏற்பப் படித்துக் காட்டுக.
2. செழியனின் செயல்கள்பற்றி உங்களுடைய கருத்து என்ன? குழுவில் பகிர்ந்து கொள்க.
விடை
செழியனின் வீரமும், கருணை உள்ளமும் பாராட்டுக்குரியது.
3. ஞாயிறு விடுமுறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
விடை
ஞாயிறு விடுமுறையில் எங்கள் தாத்தாவின் கிராமத்திற்குச் சென்றோம். அங்கு வயலில் நாற்று நட்டேன். களை பறித்தேன்.
4. உமக்குத் தெரிந்த கதை ஒன்றை வகுப்பறையில் கூறுக.
விடை
நேரம் தவறாமை
சந்திரன் ஒரு பள்ளி பருவ மாணவன் ஒருநாள் கா… கா…. என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது. அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சந்திரன் அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது.
அடுத்த நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சந்திரன் தன்னிடம் இருந்த நிலக்கடலையைக் காகத்தின் முன் வீசினான்.
காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சந்திரன் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சந்திரனும் காகமும் நண்பர்களானார்கள். சந்திரன் சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.
சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சந்திரன் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை , பேசத் தெரியாது, எழுதத் தெரியாது. ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சந்திரன் வியந்தான்.
தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சந்திரனை அனைவரும் பாராட்டினார்கள்.
5. இப்பாடப்பகுதிக்கு ஏற்ற தலைப்பினைக் குழுவில் கலந்துரையாடித் தெரிவு செய்க.
விடை
மாணவன் 1 : இப்பாடப் பகுதிக்கு ஓசை என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.
மாணவன் 2 : இப்பாடப் பகுதிக்கு விலங்கு உலகம் என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.
மாணவன் 3 : இப்பாடப் பகுதிக்குச் செழியனின் வீரம் என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.