தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி
பாடல் : தமிழின் இனிமை
இயல் ஒன்று
மொழி
கற்றல் நோக்கங்கள்
❖ செய்யுளைப் பிழையின்றிச் சரியான ஒலிப்புடன் படித்தல்.
❖ தன் கருத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்த முயலுதல்.
❖ இரண்டு கருத்துகளை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பேசும் திறன் பெறுதல்
❖ மரபு என்பதன் பொருளை உணர்ந்து போற்றுதல்.
❖ மரபின் பல்வேறு வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
பாடல்
தமிழின் இனிமை!
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
சொல்பொருள்
கனி – பழம்
கழை – கரும்பு
நனி – மிகுதி
நல்கிய – வழங்கிய
பாடல் பொருள்
கனியின் சுளையில் உள்ள சுவையும், முற்றிய கரும்புச் சாற்றின் சுவையும், மலரிலிருந்து எடுக்கப்பட்ட தேனின் சுவையும், காய்ச்சிய பாகின் சுவையும், சிறந்த பசு தந்த பாலின் சுவையும், தென்னை மரத்திலிருந்து பெறப்பட்ட குளிர்ந்த இளநீரின் சுவையும் இனிமையானவை. ஆனால், தமிழ் இத்தகைய சுவைகளையும்விட உயர்ந்தது. தமிழோ என் உயிர் போன்றது என்கிறார் பாரதிதாசன்.
ஆசிரியர் குறிப்பு
இப்பாடலைப் பாடியவர் பாரதிதாசன். புதுச்சேரியில் பிறந்த இவர், பாரதியாரின் மீது கொண்ட பற்றினால், கனக சுப்பு ரத்தினம் என்ற தம் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டார். இவர் பாடிய இப்பாடல், பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூலின் முதல் தொகுப்பில், தமிழின் இனிமை என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. ‘கழை‘ இச்சொல் உணர்த்தும் சரியான பொருள்
அ) கரும்பு
இ) கருப்பு
ஆ) கறும்பு
ஈ) கறுப்பு
[விடை : அ) கரும்பு]
2. கனியிடை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கனி + யிடை
ஆ) கணி + யிடை
இ) கனி + இடை
ஈ) கணி + இடை
[விடை : இ) கனி + இடை]
3. பனி + மலர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பனிம்மலர்
ஆ) பனிமலர்
இ) பன்மலர்
ஈ) பணிமலர்
[விடை : ஆ) பனிமலர்]
ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) கழையிடை – கழை + இடை
ஆ) என்னுயிர் – என் + உயிர்
இ. பெட்டியிலுள்ள சொற்களைப் பொருத்தி மகிழ்க.
1. பால் – பசு
2. சாறு – கரும்பு
3. இளநீர் – தென்னை
4. பாகு – வெல்லம்
ஈ. இப்பாடலில் வரும் ஒரே ஓசையுடைய சொற்களை எடுத்து எழுதுக
விடை
கனியிடை, கழையிடை, பாகிடை, பாலும், தேனும், நீரும், சுவையும்.
உ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் உள்ள சொற்களை எடுத்து எழுதுக
விடை
கனியிடை, பனிமலர், நனிபசு, இனியன, எனினும் தென்னை , என்னுயிர், என்பேன்.
ஊ. பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
கனிச்சுவை, கழைச்சாறு, பனிமலர், தேன், பாகு, நனிபசு, பால், தென்னை , குளிரிளநீர்.
எ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. பாரதிதாசன் எவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்?
விடை
● பலாச்சுளை
● கரும்புச்சாறு
● தேன்
● பாகு
● பசுவின் பால்
● இளநீர்
2. பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?
விடை
பாரதிதாசன் தமிழே என் உயிர் என்கிறார்.
ஏ. சிந்தனை வினா
பாரதிதாசன் சிலவற்றை இனியன என்று கூறுகிறார். உனக்கு எவையெல்லாம் இனிமையானவை? ஏன்?
விடை
● மாம்பழம், கற்கண்டு, தேன், வாழை, நுங்கு ஆகியவை எல்லாம் எனக்கு இனிமையானவை.
● ஏனென்றால் இவை அனைத்தும் இயற்கையில் இனிமை தருவன. உடல் நலத்திற்கும் ஏற்றதாலும் இனியனவாகக் குறிப்பிடுகின்றேன்.
கற்பவை கற்றபின்
• பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.
• பாடலை உரிய ஓசையுடன் பாடுக.
• பாரதிதாசன் தமிழை உயிர் என்கிறார். உங்களுக்குத் தமிழ் எது போன்றது? கலந்துரையாடுக.
• மொழி தொடர்பான பாடல்கள் மற்றும் கவிதைகளைப் படித்து மகிழ்க.