தமிழ் : பருவம் 3 இயல் 8 : உறவுமுறைக் கடிதம்
8. உறவுமுறைக் கடிதம்
எண். 4, தில்லை நகர்,
கடலூர்.
20.03.2020
அன்புள்ள இளவேனில்,
நான் நலம், நீயும் அப்படித்தானே? உன்னோடு சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஆசை, என்னவென்று அறிந்தால் நீயும் மகிழ்ச்சி அடையவாய். என் பள்ளியில் “பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது, உள்ளரங்கு விளையாட்டுகளும் வெளியரங்கு விளையாட்டுகளுமாய்க் களைகட்டியது விழா. நாம் எத்தனை விளையாட்டில் வேண்டுமென்றாலும் பங்கு பெறலாம்.
நான் பாண்டிஆட்டம், கபடி முதலிய வெளிவிளையாட்டுகளிலும் தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி முதலிய உள்விளையாட்டுகளிலும் கலந்துகொண்டேன். உடலுக்கு மட்டுமன்று; அறிவுக்கும் ஆற்றல் தரும் விளையாட்டுகள் நம் தமிழக விளையாட்டுகள், பாண்டி ஆட்டம் ஒருமுக திறன், கூர்மைப் பண்பு, குதிதிறன் ஆகியவற்றைத் தருகிறது.
“பலிஞ்சடுகுடு, சடுகுடு, சடுகுடு”
ஊசி ஊசி கம்மந்தட்டு, ஊட்டப் பிரிச்சிக் கட்டு, காசுக்கு ரெண்டு தட்டு,
கருணைக் கிழங்குடா, தோலை உரியடா,
தொண்டையில வையடா..வையடா..வையடா
என்று பாடியபடி நாங்கள் ஆடிய கபடி, பார்வையாளரையும் மகிழ்ச்சிப்படுத்தியது. ‘பாடலோடு ஆடல்” தெரியும். பாடலோடு விளையாட்டு எங்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
பிற்பகலில் நான் பல்லாங்குழி ஆடினேன். என் சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல்மிகு விளையாட்டு அது. இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்க்குக் கொடுக்கும் நற்பண்பை உணர்த்துகிறது. தாயவிளையாட்டில் என் கண்கள் தாயத்தின் மீதே இருந்தன. விழும் புள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏறுவதும் இறங்குவதுமாய்….. அப்பப்பா….. என் ஆர்வத்தைத் தூண்டியது. ஏற்றத்திற்கான நல்ல வழிகளையும், இறக்கத்திற்கான தீய வழிகளையும் தெரிந்து கொண்டேன். வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறிந்துகொள்ளும் சரியான விளையாட்டு அது.
“கல்லாட்டம்”, ஐந்தாங்கல் போன்ற விளையாட்டுகள் சீனா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளையாடப்படுகின்றன. தூக்கிப்போட்டு விளையாடும்போது ”கவனச் சிதறல்’ வராமல் ஒருமுகப்படுத்தி வெற்றி பெறுதல் பயிற்சி ஆகிறது. அடுத்த கல்லில் விரல்படாது எடுத்து ஆடுகையில், விரலின் பங்கோடு எண்ணமும் சரியாகப் பங்காற்றுகிறது. கைகளுக்கு வலிமை சேர்க்கிறது.
‘கரும்பு தின்னக் கூலியா?’ என்று சொல்வார்களே அதுபோல், எனக்கு விருப்பமான விளையாட்டுகளை எல்லாம் ஆசை தீர விளையாடினேன். அந்த நாள் முழுவதும் சோலையில் சுற்றும் தேனீபோல மகிழ்வுடன் விளையாடினேன். என்னோடு நீயில்லாதது மட்டும் சிறு வருத்தம் நீயும் உன் பள்ளியில் கொண்டாடப் போகும் இதுபோன்ற விழாவில் கலந்துகொண்டு இன்புற வேண்டும். நம் பாரம்பரிய விளையாட்டுகள் பெருமையின் அடையாளம் மட்டுமன்று நன்மையின் விளைநிலமும் ஆகும். இக்கடிதம் குறித்து உன் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
குறள்செல்வி
உறை மேல் முகவரி:
தி. இளவேனில்
எண். 2/10, கீழ மாசி வீதி,
மதுரை.
வாங்க பேசலாம்
● உறவுமுறைக் கடிதத்தில் உள்ள செய்திகளை சொந்த நடையில் கூறுக.
விடை
பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா’ பற்றிய செய்திகள்.
பாண்டி ஆட்டம், கபடி முதலிய வெளி விளையாட்டுகளும் தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி முதலிய உள் விளையாட்டுகளும் நம் பாரம்பரிய விளையாட்டுகளாகும். இவை உடலுக்கும் அறிவுக்கும் ஆற்றல் தரும்.
பாண்டி ஆட்டம் ஒருமுகத்திறன், கூர்மைப் பண்பு, குதிதிறன் ஆகியவற்றைத் தருகிறது. பல்லாங்குழி சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல் மிக்கது. இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்க்குக் கொடுக்கும் நற்பண்பை உணர்த்தும்.
தாய விளையாட்டின் போது ஏற்றத்திற்கான நல்ல வழிகளையும் இறக்கத்திற்கான தீய வழிகளையும் தெரிந்து கொள்ளலாம். வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறிந்து கொள்ளும் சரியான விளையாட்டு ஆகும்.
கல்லாட்டம், ஐந்தாங்கல் ஆகிய விளையாட்டுகள் சீனா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளையாடப்படுகிறது. கற்களைத் தூக்கிப் போட்டு விளையாடும் போது ‘கவனச் சிதறல்’ வராமல் மனம் ஒருமுகப்படுகிறது. அடுத்த கல்லில் விரல் படாது எடுத்து ஆடுகையில் விரலின் பங்கோடு எண்ணமும் சரியாகப் பங்காற்றுகிறது. கைகளுக்கு வலிமை சேர்க்கிறது.
தமிழக விளையாட்டுகள் நம் உடல் வலிமையையும் உள்ள வலிமையையும் கூட்டுகிறது என்பதை அனைவரும் அறிவோம்.
சிந்திக்கலாமா!
● நவீன் தான் நினைப்பதையெல்லாம் தன் மாமாவிடம் சொல்ல நினைப்பான். ஆனால், அலைபேசியில் பேசும்போது அத்தனையும் மறந்துவிடுவான்.
● குழலி, தான் பேச நினைப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கடிதத்தில் எழுதித் தன் அக்காவுக்கு அனுப்புவாள்.
விடை
குழலி, தான் பேச நினைப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கடிதத்தல் எழுதித் தன் அக்காவுக்கு அனுப்புவாள். இச்சூழல்தான் சிறந்தது.
ஒருநாளில் நாம் பலவிதமான நிகழ்வுகளைக் காண்கிறோம். அவற்றைக் காணும் போது நம் மனம் அவற்றைப் பற்றிச் சிந்திக்கும். எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்வது என்பது இயலாது. அதற்குக் குழலி செய்வதுதான் சிறந்தது.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. நற்பண்பு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நல்ல + பண்பு
ஆ) நற் + பண்பு
இ) நல் + பண்பு
ஈ) நன்மை + பண்பு
[விடை : ஈ) நன்மை + பண்பு]
2. பின்வருவனவற்றுள் எது உள்ளரங்க விளையாட்டு இல்லை?
அ) தாயம்
ஆ) ஐந்தாங்கல்
இ) பல்லாங்குழி
ஈ) கபடி
[விடை : ஈ) கபடி]
3. பாரம்பரியம் – இச்சொல்லுக்குரிய பொருளைத் தராத சொல்
அ) அண்மைக்காலம்
ஆ) தொன்றுதொட்டு
இ) தலைமுறை
ஈ) பரம்பரை
[விடை : அ) அண்மைக்காலம்]
வினாக்களுக்கு விடையளி
1. தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகள் எவை?
விடை
பாண்டி ஆட்டம், கபடி, தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி ஆகியவை தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகும்.
2. உள்ளரங்க விளையாட்டுகளின் பெயர்களை எழுதுக.
விடை
தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி ஆகியவை உள்ளரங்கு விளையாட்டுகளாகும்.
3. கடிதத்தில் இடம்பெற்றுள்ள பழமொழியின் பொருள் யாது?
விடை
கரும்பு தின்னக் கூலியா?
நாம் விரும்பியதைச் செய்வதற்கு நமக்கு யாரும் கூலி கொடுக்க வேண்டியதில்லை. நாமாகவே அச்செயலை சிறப்பாக செய்வோம்.
மொழியோடு விளையாடு
உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைக் கட்டத்தில் கண்டறிந்து எழுதுக.
விடை
1. கிளித்தட்டு
2. பம்பரம்
3. பல்லாங்குழி
4. சடுகுடு
5. அம்மானை
6. தாயம்
7. ஆடுபுலி
8. கோலி
9. ஐந்தாங்களல்
10. கிட்டிபுள்
கலையும், கைவண்ணமும்
இராக்கெட் செய்வோம்! செடிக்கு நீர் ஊற்றுவோம்!
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெறுவன. சங்க காலத்தில் இளையரும் முதியவரும் பலவகையான விளையாட்டுகளிலும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டனர். அவற்றுள் ஒன்று, ஏறு தழுவதல், முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், கூரிய கொம்புகளை உடைய காளைகளை அடக்குவதனை வீர விளையாட்டாகக் கருதினர்.
1. ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன யாவை?
விடை
விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவனவாகும்.
2. ஏறு தழுவுதல் என்றால் என்ன?
விடை
காளைகளை அடக்கும் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் எனப்படும்.
3. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள எதிர்ச்சொற்களை எழுதுக.
விடை
இளையவர் × முதியவர்
4. ஏறு தழுவுதல் எந்த நிலத்துடன் தொடர்புடையது?
விடை
ஏறு தழுவுதல் முல்லை நிலத்துடன் தொடர்புடையது.
5. நிரப்புக. ஏறு தழுவுதல் என்பது வெளியரங்க விளையாட்டு, (உள்ளரங்க/ வெளியரங்க)
அறிந்து கொள்வோம்
கடிதத்தில் அனுப்புநர், பெறுநர் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இல்லையெனில் அனுப்பியவர்க்கே திரும்பி வந்துவிடும்.
செயல் திட்டம்
எவையேனும் பத்து விளையாட்டுகளின் பெயர்களையும் அவற்றிற்குரிய படங்களையும் திரட்டிப் படத்தொகுப்பை உருவாக்குக.