தமிழ் : பருவம் 3 இயல் 7 : நீதிநெறி விளக்கம்
7. நீதிநெறி விளக்கம்
அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும் – நவையஞ்சி
ஈத்துணாச் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்
பூத்தலின் பூவாமை நன்று
– குமரகுருபரர்
பாடல் பொருள்
பலர் நிறைந்த அவையிலே, உடல் நடுங்கித் தம் கருத்தை எடுத்துக்கூற முடியாமல் தடுமாறுபவர் பெற்ற கல்வியும், அவையினர்முன் கல்வியறிவில்லாதவர் பேசும் பொருளற்ற ஆரவாரச் சொல்லும், செய்யத் தக்கவற்றைச் செய்யாமையால் ஏற்படும் குற்றத்துக்கு அஞ்சிப் பிறருக்குக் கொடுத்து எஞ்சியவற்றை உண்ணாதவரின் செல்வமும், வறுமையுற்றவரிடத்தே உள்ள ஈகை போன்ற இனிய பண்புகளும் உண்டாதலைவிட உண்டாகாமல் இருப்பதே நல்லது.
சொல்பொருள்
மெய் உடல், விதிர்ப்பார் – நடுங்குவார், கல்லார் – படிக்காதவர், ஆகுலச்சொல் – பொருளற்ற ஆரவாரச் சொல், நவை – குற்றம், அஞ்சி – அச்சமுற்று, நல்கூர்ந்தார் – வறுமையுற்றார், பூத்தல் – உண்டாதல்
நூல் குறிப்பு
நீதிநெறிகளை விளக்குவதற்குக் கருவியாக இருப்பதால் இந்நூல், நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. திருக்குறளில் கூறப்பெற்றுள்ள அறவுரைகள் பலவற்றையும் தொகுத்துச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர்.
வாங்க பேசலாம்
● செய்யுளின் பொருள் உணர்ந்து படித்து மகிழ்க.
● முதன்முதலில் மேடையில் பேசிய அனுபவத்தை வகுப்பில் பகிர்ந்து கொள்க.
விடை
நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும் போதுதான் முதன்முதலில் மேடையில் பேசினேன். விடுதலை நாளன்று விடுதலைக்குழைத்து தம் இன்னுயிர் ஈந்த திருப்பூர் குமரன் பற்றிப் பேசினேன்.
எனக்கு அப்போது சரளமாகப் படிக்கத் தெரியாது. என் அம்மாதான் எனக்கு மீண்டும் மீண்டும் பேச வைத்து எனக்குப் பயிற்சியளித்தார்கள். எப்படியோ பத்து நாட்களில் மனப்பாடம் செய்தேன்.
விடுதலை நாளன்று மேடையில் போய் நிற்கும்போது ஒரே பயம். என் உடல் நடுங்கிற்று. என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் வகுப்பாசிரியர் வந்தார். பயப்படாதே! நீ என்ன பேசுகிறாய் என்பது உனக்கு மட்டும்தான் தெரியும். பிறரைப் பற்றிக் கவலை கொள்ளாதே என்றும் உனக்கு நினைவிருக்கும் வரை பேசி முடித்து விடு என்றும் கூறினார்கள். ஒலி பெருக்கியின் முன் போய் நின்றேன். ஓரிரு விநாடிகள் படபடப்பாக இருந்தது.
அதற்குப் பிறகு படபடப்பு நீங்கியது. தடங்கல் இல்லாமல் பேசி முடித்துவிட்டேன். என்னை எல்லோரும் பாராட்டினர். வகுப்பாசிரியர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். என் பெற்றோர் என்னை வாரி அணைத்துக் கொண்டனர். அந்த நிமிடம் நான் எங்கோ பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னுடைய பயம் நீங்கியது. இப்போதெல்லாம் அச்சமின்றி மேடையில் பேசுகிறேன். இதற்குக் காரணமான என் வகுப்பாசிரியருக்கு நன்றி கூற வேண்டும்.
சிந்திக்கலாமா!
ஜீனத் நன்றாகப் படிப்பவள். ஆனால், வகுப்பில் ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லத்தயங்குவாள். அவள் கூச்சத்தை எவ்வாறு போக்கலாம்?
விடை
ஜீனத்தின் கூச்சத்தைப் போக்க அவள் அடிக்கடி வகுப்பில் பேச வேண்டும். வகுப்பில் நடைபெறும் செயல்பாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். பள்ளியில் காலையில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்களில் ‘திருக்குறள்’, ‘இன்றைய சிந்தனைக்கு போன்ற ஏதாவது ஒன்றைப் பற்றி பேச வேண்டும். இவ்வாறு பல முறை பேசும்போது அவளுடைய கூச்சம் போய்விடும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘நவை’என்னும் சொல்லின் பொருள்
அ) அச்சம்
ஆ) மகிழ்ச்சி
இ) வருத்தம்
ஈ) குற்றம்
[விடை : ஈ) குற்றம்]
2. ‘அவையஞ்சி’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அவைய + அஞ்சி
ஆ) அவை + அஞ்சி
இ) அவை + யஞ்சி
ஈ) அவ் + அஞ்சி
[விடை : ஆ) அவை + அஞ்சி]
3. ‘இன்னலம்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இன் + னலம்
ஆ) இன் + நலம்
இ) இனிமை + நலம்
ஈ) இனிய + நலம்
[விடை : இ) இனிமை + நலம்]
4. ‘கல்லார்’ – இச்சொல்லின் எதிர்ச்சொல்
அ) படிக்காதவர்
ஆ) கற்றார்
இ) அருளில்லாதவர்
ஈ) அன்பில்லாதவர்
[விடை : ஆ) கற்றார்]
வினாக்களுக்கு விடையளிக்க
1. கல்வி கற்றவரின் இயல்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
விடை
பலர் நிறைந்த அவையிலே உடல் நடுங்காமல் தம் கருத்தை தடுமாறாமல் எடுத்துக் கூறவேண்டும்.
2. பொருளற்ற சொற்களை அவையினர்முன் பேசுபவர் யார்?
விடை
பொருளற்ற சொற்களை அவையினர் முன் பேசுபவர் கல்வியறிவில்லாதவர் ஆவர்.
3. பூத்தலின் பூவாமை நன்று என்று நீதிநெறி விளக்கம் எவற்றைக் குறிப்பிடுகிறது?
விடை
● அவைக்கு அஞ்சி தம் கருத்தை எடுத்துக் கூற முடியாமல் தடுமாறுபவர் கல்வி.
● கல்வியறிவில்லாதவர் பேசம் பொருளற்ற ஆரவாரச் சொல்.
● செய்யத்தக்கவற்றைச் செய்யாமையால் ஏற்படும் குற்றத்துக்கு அஞ்சிப் பிறருக்குக் கொடுத்து எஞ்சியவற்றை உண்ணாதவரின் செல்வம்.
● வறுமையுற்றவரிடத்தே உள்ள ஈகை போன்ற இனிய பண்புகள் – ஆகியவற்றை நீதிநெறி விளக்கம் பூத்தலின் பூவாமை நன்று என்று குறிப்பிடுகிறது.
முதல் எழுத்து ஒன்றிவரும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
1. அவையஞ்சி – அவையஞ்சா
2. பூத்தலின் – பூவாமை
3. கல்வியும் – கல்லார்
மொழியோடு விளையாடு
குறிப்புகளைப் படி. சொல்லிலிருந்தே சொல்லைக் கண்டுபிடி.
இணைந்து செய்வோம்
சங்குச் சக்கரத்தைச் சுழற்றிக் கல்வியின் சொற்றொடர்களை முறையாக எழுதுக.
1. கல்வி கண் போன்றது
2. கல்விக்கு நிகர் ஏதுமில்லை
3. கல்வியே அழியாச் செல்வம்
அறிந்து கொள்வோம்
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டா தவன்நல் மரம்
பாடற்பொருளை ஆசிரியரிடம் கேட்டு அறிந்து கொள்க.
பாடலின் பொருள் :
காட்டினுள்ளே நிற்கின்ற அந்த மரங்கள் நல்ல மரங்கள் ஆகா கற்றோர் சபையின் நடுவே கையில் கொடுத்த ஏட்டை படிக்க முடியாமல் நின்றவனும் ஒருவன் கருத்தின் அடையாளத்தை தெரிந்துகொள்ள முடியாதவனும் (ஆகிய இவர்களே) சிறந்த மரங்களுக்குச் சமம் ஆவார். இதன் மூலம் கல்வியறிவில்லாதவனும், பிறர் கருத்தின் குறிப்பை உணரமுடியாதவனும் மரங்களுக்கு சமமாகும்.
செயல் திட்டம்
நாளிதழ்கள் மற்றும் சிறுவர்மலர் இதழ்களில் வெளிவரும் கல்விதொடர்பான செய்திகளைத் தொகுக்க (தேவையான கால இடைவெளி தருக.)