தமிழ் : பருவம் 3 இயல் 5 : கணினி உலகம்
5. கணினி உலகம்
மதி, பூவிழி இருவரும் நல்ல தோழிகள். இருவரும் கோடை விடுமுறைக்கு வெளியூருக்குச் சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும்முன் இருவரும் சந்திக்கின்றனர். அப்போது….
பூவிழி : தோழி! நலமாக இருக்கிறாயா?
மதி : ஓ! நலமாக இருக்கிறேனே. விடுமுறையை எப்படிக் கழித்தாய்? எங்கேயாவது வெளியூருக்குச் சென்றாயா?
பூவிழி : ஆமாம், மதி. என் மாமாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றதால், நான் அங்குச் சென்றிருந்தேன்.
மதி : அப்படியா! சென்னையில் சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கிறதே, அங்கு நீ கண்டுகளித்த இடங்களைப் பற்றிச் சொல்லேன்.
பூவிழி : சென்னை, நம் ஊரைப்போல் இல்லை. அடுக்குமாடிக் கட்டடங்கள், மிகப்பெரிய சாலை, மெரினா கடற்கரை, விமான நிலையம், மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம், உயிர்க்காட்சிச் சாலை, பொழுதுபோக்கு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா என எல்லாம் புதுமையிலும் புதுமை ஆக இருந்தன.
மதி : அதுசரி, பூங்கா என்றால் செடி, கொடி, மரம்தானே இருக்கும். அது என்ன தகவல் தொழில் நுட்பப் பூங்கா? அதை நீ எங்குப் பார்த்தாய்?
பூவிழி : சென்னையில் தரமணி ராஜுவ்காந்தி சாலையில்தான் அந்தத் தொழில் நுட்பப் பூங்காவைப் பார்த்தேன். பதின்மூன்று அடுக்கு மாடிகளுடன் அது செயல்பட்டு வருகிறதாம்.
மதி : தொழில் நுட்பப் பூங்காவில் என்னென்ன பணிகள் நடக்கின்றன?
பூவிழி : அங்கே கணினி தகவல் தொழில் நுட்பச் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மதி : கணினி தகவல் தொழில்நுட்பமா? இப்போது எங்கு பார்த்தாலும் கணினியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். உனக்கு ஒரு செய்தி தெரியுமா? நம் பள்ளியில்கூட கையடக்கக் கணினியைப் பயன்படுத்தப் போகிறார்களாம். நாமும் அதன் செயல்பாட்டை எளிதாகக் கற்றுக்கொண்டு, கற்றல் திறனை வளர்த்துக் கொள்ளலாமாம். அதனால், கணினி பற்றி நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
பூவிழி : எனக்கும்கூட தெரிந்துகொள்ள ஆவல்தான். யாரிடம் கேட்கலாம்? அடடே, நான் மறந்துபோய்விட்டேனே, என் அத்தை அந்தத் தொழில்நுட்பப் பூங்காவில்தான் பணியாற்றுகிறார். அவர், நேற்றுத்தான் சென்னையிலிருந்து வந்தார்.வா,மதி! நாம் அவரிடமே சென்று கேட்கலாம்,
(பூவிழியும் மதியும் அத்தையைக் கண்டு தங்கள் எண்ணத்தைத் தெரியப்படுத்துகின்றன்றனர். அத்தையும் அவர்களுக்குக் கணினி பற்றி விளக்கமாகக் கூறத் தொடங்குகிறார்.)
அத்தை : கணினி என்பது, நாம் தரும் உள்ளீடுகளைப் பெற்று அதனைச் செயல்படுத்தி அதற்கேற்ற வெளியீடுகளைத் தரும் ஒரு மின்னணு சாதனம், இதனைச் சார்லஸ் பாப்பேஜ் கண்டுபிடித்தார். முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கணினி அளவில் மிகப் பெரியது. அதனை எளிதாக ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்ல இயலாது. ஆனால், இப்போதோ கையடக்க வடிவிலேகூடக் கணினிகள் உருவாக்கப்படுகின்றன.
மதி : ஆமாம், ஆமாம். நாங்கள்கூடக் கேள்விப்பட்டுள்ளோம். எங்களுக்குக் கணினியின் முதன்மையான பகுதிகள் எவை என்று சொல்லுங்களேன்.
அத்தை : மையச் செயல்பாட்டுப் பகுதி (CPU), கட்டுப்பாட்டகம் (Control unit), நினைவகம் (Memory) உள்ளீடு மற்றும் வெளியீடு (Input and output) இவைதாம் ஒரு கணினியின் முதன்மையான பகுதிகள்.
பூவிழி : அத்தை இவற்றைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
அத்தை : சொல்கிறேன். மையச் செயல்பாட்டுப்பகுதி என்பது, செய்நிரல் அடிப்படையில் கணிதச் செயல்பாடுகளை அமைக்கும், கட்டுப்பாட்டகம் என்பது, செய்திகளைத் திரளாகச் சேமித்து வைத்திருக்கும். செய்திகள்/ தகவல்களை நிலையாகச் சேமித்து வைக்கும் இடம்தான் நினைவகம். மையச் செயலகம் ஒருங்கிணைந்த உள்ளீடு, வெளியீடு கருவிகளைத் தன்னுள் பெற்றிருக்கும்.
மதி : கணினியின் அமைப்பைத் தெளிவாகக் கூறினீர்கள். அதன் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்.
அத்தை : நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கணினியை இயக்க உதவும். அதைப்பற்றி நான் விளக்குவதைவிடக் கணினியை உங்கள்முன் இயக்கிக்காட்டும்போது இன்னும் எளிதாகப் புரியும். ஆனால், இங்குக் கணினி இல்லாததால், அதில் பயன்படும் கருவிகள், செயலிகள் பற்றி அறிந்து கொள்வோம்.
பூவிழி : புரிகிறது அத்தை. கணினியில் உள்ளீடு, வெளியீடு கருவிகள் உள்ளன என்று கூறினீர்களே, அவைபற்றிச் சொல்லுங்களேன்.
அத்தை : சொல்கிறேன் பூவிழி. விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse) போன்றவை உள்ளீட்டுக் கருவிகள். காட்சித்திரை (Monitor), கணினிஅச்சுப்பொறி (Printer) போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.
மதி : தரவு (Data), பதிவேற்றம், பதிவிறக்கம் (Download) என்று கூறுகிறார்களே, அப்படி என்றால் என்ன?
அத்தை : கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள். நாம் கணினிக்குக் கொடுக்கும் தகவல்கள்தாம் தரவுகள் (Data). தரவுகள் பதிவு செய்வதைப் பதிவேற்றம் (upload) எனவும், தகவல் பெறுவதைப் பதிவிறக்கம் (Download) எனவும் அழைக்கிறோம்.
மதி : நன்றாக விளக்கினீர்கள். வலைத்தளம் (Website) பற்றியும் சொல்லுங்களேன்.
அத்தை : கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் ஆகும். இதன்மூலம் எந்தவொரு நாட்டு நிகழ்வுகளையும் நாம் நேரடியாகக் காண முடியும்.
பூவிழி : வியப்பாக உள்ளது அத்தை, இணையம் மூலமாகக் கடிதமும் எழுதலாம் என்று கூறுகிறார்களே, அப்படி என்றால் என்ன?
அத்தை : ஓ! மின்னஞ்சல் (Email ID)
மதி : இப்போதெல்லாம் புலனம் (Whatsapp)
அத்தை : நீங்கள் கூறியவற்றை வலைத்தளச் செயலிகள் (Webapps) என்று அழைப்பர். இவற்றைச் செயலி உருவாக்கம் (Play store) சென்று, நம் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உருவாக்கி, நம் கருத்துகளைப் பதிவிடலாம் அல்லது பெறலாம்.
பூவிழி : மிக்க நன்றி, அத்தை. எங்களுக்குக் கணினிபற்றி நன்கு அறிமுகப்படுத்தினீர்கள். நாங்கள் அறிந்துகொண்டதை எல்லாருக்கும் எடுத்துச் சொல்வோம்.
அத்தை : உங்கள் இருவருக்கும் தேடல் பண்பு உள்ளது. புதிய செய்திகளை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகிறீர்கள். ஆகையால், உங்கள் அறிவை நாள்தோறும் வளப்படுத்திக் கொள்ள மறந்துவிடாதீர்கள். உங்களோடு உரையாடியதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
மதி : எங்களுக்கும் மகிழ்ச்சி. போய் வருகிறோம் நன்றி என்று சொல்லிவிட்டு இருவரும் வீட்டுக்குச் சென்றனர்
திறன்: சொற்களஞ்சியப் பெருக்கமும் சொல்லாட்சித் திறனும்
வாங்க பேசலாம்
கணினியின் திரைபோன்று செய்து கணினியைப் பற்றிப்பேசுக.
விடை
கணினி நம் உலகைச் சுருக்கி உள்ளங்கையில் கொடுத்துவிட்டது. கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது.
கணினியின் உள்ளீடு , வெளியீடு கருவிகள் உள்ளன. விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள். காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.
நாம் கணினிக்குக் கொடுக்கும் தகவல்தாம் தரவுகள் (Data). தரவுகள் பதிவு செய்வதைப் பதிவேற்றம் எனவும் தகவல் பெறுவதைப் பதிவிறக்கம் எனவும் அழைக்கிறோம்
கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது. கணினிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய மின்னஞ்சல் பயன்படுகிறது.
இப்போது புலனம், முகநூல் சுட்டுரை ஆகியவற்றின் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவற்றை நாம் ஆக்கப் பயன்களுக்கு மட்டும் செயல்படுத்துவோம்.
சிந்திக்கலாமா!
அழகன், புத்தகத்தில் மட்டுமே படிக்கமுடியும் என்கிறான். அவன் நண்பனோ கணினியிலும் படிக்கலாம் என்கிறான். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
விடை
அழகன் புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுவது தவறான கூற்றாகும். அவன் நண்பன் கணினியிலும் படிக்கலாம் என்று கூறுவது சரியானதாகும்.
புத்தகத்தில் படிக்கலாம், ஆனால் புத்தகத்தில் மட்டுமே படிக்கமுடியும் என்று கூறவியலாது. ஏனெனில் கணினியின் மூலமாகவும் படிக்கலாம்.
கணினி நமக்குத் தேவையான அனைத்து கருத்துகளையும் நொடியில் தேடித் தந்து விடுகிறது. அதனால் கணினியில் படிப்பதும் எளிதானது என்பது என் கருத்து.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி
அ) தொலைக்காட்சி
ஆ) கணினி
இ) கைப்பேசி
ஈ) மடிக்கணினி
[விடை : ஆ) கணினி]
2. இப்போதெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இப்போது + எல்லாம்
ஆ) இப்போ + எல்லாம்
இ) இப்போதே + எல்லாம்
ஈ) இப்போ + வெல்லாம்
[விடை : அ) இப்போது + எல்லாம்]
3. நினைவகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை
அ) நினை + வகம்
ஆ) நினை + அகம்
இ) நினைவு + வகம்
ஈ) நினைவு + அகம்
[விடை : ஈ) நினைவு + அகம்]
4. மின் + அஞ்சல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மின்அஞ்சல்
ஆ) மின்னஞ்சல்
இ) மினஅஞ்சல்
ஈ) மினஞ்சல்
[விடை : ஆ) மின்னஞ்சல்]
5. பதிவேற்றம் – இச்சொல்லின் பொருள்
அ) தகவல் ஆராய்தல்
ஆ) தகவல் வரிசைப்படுத்துதல்
இ) தகவல் பதிவுசெய்தல்
ஈ) தகவல் பெறுதல்
[விடை : ஈ) தகவல் பெறுதல்]
வினாக்களுக்கு விடையளிக்க.
1. சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் யாவை?
விடை
அடுக்குமாடிக் கட்டங்கள், மிகப்பெரிய சாலை, மெரினா கடற்கரை, விமான நிலையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உயிர்க்காட்சிச் சாலை, பொழுதுபோக்கு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஆகியவ ைசென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் ஆகும்.
2. கணினியின் முதன்மைப் பகுதிகளை எழுதுக.
விடை
கணினியின் முதன்மைப் பகுதிகள் :
● மையச் செயல்பாட்டுப்பகுதி (CPU)
● கட்டுப்பாட்டகம் (Control Unit)
● நினைவகம் (Memory)
● உள்ளீடு மற்றும் வெளியீடு (Input and output)
3. இணையம் என்றால் என்ன?
விடை
கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது.
4. மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?
விடை
கணினிகளுக்கு இடையே இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றமே மின்னஞ்சல். இது தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுகிறது.
குறிப்புகளைப் படித்துச் சொற்களைத் தேர்ந்தெடுப்போமா?
காட்சிகளைக் காண்பது – திரை
செய்தியைக் குறிக்கும் வேறு பெயர் – தரவு
படங்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது – புலனம்
கணினியின் தொடர்ச்சியான வலை அமைப்பு – வலைத்தளம்
தகவல்களைப் பதிவு செய்தல் – பதிவேற்றம்
மொழியோடு விளையாடு
கை என்னும் சொல்லை முதலெழுத்தாகக் கொண்டு பல சொற்களை உருவாக்கலாமா?
கைத்தடி, கையுறை
செயல் திட்டம்
❖ கணினியில் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.
❖ நாளிதழ், வார இதழ்களில் வெளியாகும் கணினி பற்றிய செய்திகளைப் படங்களுடன் உன் குறிப்பேட்டில் ஒட்டி மகிழ்க.
விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிக் கடிதத்தை முழுமையாக்குவோம்
திருநெல்வேலி
15-1-2020
அன்புள்ள அத்தை,
நாங்கள் அனைவரும் நலம் அதுபோல உங்கள் அனைவரின் நலம் அறிய ஆவல். அடுத்த வாரம் எங்கள் ஊரில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. அதில் பல்வேறு புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும். அறிவு வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு நூல்களை ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். கண்காட்சியில் கலந்து கொள்ள கதிரையும் கோமதியையும் அனுப்பினால் நாங்கள் அனைவரும் சேர்ந்து சென்று பார்த்து மகிழ்வோம். பல புத்தகங்களை வாங்கிப் பயன் பெறுவோம்.
எனவே அவர்கள் இருவரை யும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
தங்கள் அன்புள்ள
தமிழ்
உள்நாட்டு அஞ்சல் அட்டை
பெறுநர் முகவரி
மு. முத்து
எண். 15, கம்பர் தெரு,
பிள்ளையார் கோவில் தெரு,
அமைந்தகரை
சென்னை – 600029
அனுப்புநர் முகவரி
ப. தமிழ்
எண், 15, அண்ணா தெரு
திருநெல்வேலி
அஞ்சல் குறியீட்டு எண்