தமிழ் : பருவம் 3 இயல் 1 : உலா வரும் செயற்கைக்கோள்
1. உலா வரும் செயற்கைக்கோள்
பட்டுக் குழந்தைகள் வாருங்கள்
பறவைக் கப்பல் பாருங்கள்
விட்டுச் சிறகை விரித்தபடி
விண்ணில் பறக்குது பாருங்கள்
உலகைச் சுற்றி வந்திடுமே
உயர உயரப் பறந்திடுமே
எல்லை இல்லா நற்பயனை
எவர்க்கும் தந்து விளங்கிடுமே
விண்வெளி ஆய்வு செய்திடவே
விண்ணில் சீறிப் பாய்ந்திடுமே
மண்ணிலுள்ள வளத்தை யெல்லாம்
உண்மை யாகச் சொல்லிடுமே
தகவல் தொடர்பில் உதவிடுமே
தன்னிச்சை யாக இயங்கிடுமே
தட்பவெப்ப நிலை யாவும்
தக்க நேரத்தில் சொல்லிடுமே
அருகில் சுற்றும் கோள்களையும்
அளவாய் நிழற்படம் எடுத்திடுமே
உருவில் சிறிய இடங்களையும்
ஒவ்வொன் றாகக் காட்டிடுமே
கனிமவளமும் கடல் வளமும்
கணக்காய்க் குறித்துக் காட்டிடுமே
மனித உயிரைக் காப்பதற்கே
புயல் மழை வருவதை உணர்த்திடுமே
இதுவரை சொன்னது எதையென்று
இன்னுங் கூடத் தெரியலையா?
அதுதான் உலாவரும் செயற்கைக்கோள்
அறிந்தே மகிழ்ச்சி கொள்வோமே!
பொருள் அறிவோம்
‘வானில் உலா வரும் செயற்கைக்கோளைப் பற்றி இப்பாடல் கூறுகிறது, உலகைச் சுற்றிவரும் இச்செயற்கைக்கோள், நமக்கு அளவில்லாத பயன்களை வழங்குகிறது. மண்ணிலுள்ள வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது. தகவல் தொடர்புக்கு உதவுகிறது. வானிலை குறித்த தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. வானில் சுழலும் கோள்களை நிழற்படம் எடுத்து, நமக்கு அனுப்புகிறது. கனிம வளத்தையும் கடல்வளத்தையும் குறிப்பிடுவதோடு ஆழிப்பேரலை (சுனாமி) போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து, மனித உயிர்களையும் காக்கிறது.
ஓசை நயமும் கருத்தும் மிக்க பாடல்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்.
வாங்க பேசலாம்
● பாடலை ஓசைநயத்துடன் பாடுக.
● செயற்கைக்கோள்களின் வகைகளை அறிந்துகொண்டு வந்து பேசுக.
விடை
அவையோர்க்கு வணக்கம் !
மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாகச் செயற்கைக்கோள் இருக்கிறது.
செயற்கைக்கோள்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இராணுவக் கண்காணிப்பு, உளவு வேலைகள், பூமியைக் கண்காணிக்கும் வேலைகள், வானியல் பற்றிய பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள், தகவல் பரிமாற்றம் ஆகிய எல்லாவற்றிற்கும் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் வகைகள் :
● தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்
● புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள்
● வானிலை செயற்கைக்கோள்கள்
● பயோ செயற்கைக்கோள்கள்
● சோதனை செயற்கைக்கோள்கள்
● இடங்காட்டி செயற்கைக்கோள்கள்
● அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு செயற்கைக்கோள்கள் போன்றவையாகும்.
சிந்திக்கலாமா!
செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்?
விடை
● செயற்கைக்கோள் கண்டுபிடிக்காமல் இருந்தால் உலகில் எந்த வளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது.
● தகவல் தொடர்பு இருந்திருக்காது.
● பிற கோள்களைப் பற்றி அறிந்திருக்க இயலாது.
● புயல் மழை வருவதை அறிந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது.
● காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாது.
● மண்வளம் கனிம வளம் பற்றி அறிய முடியாது.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா!
1. மண்ணிலுள்ள – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மண்ணி + லுள்ள
ஆ) மண்ணில் + உள்ள
இ) மண் + உள்ள
ஈ) மண்ணில் + உள்ளே
[விடை : ஆ) மண்ணில் + உள்ள]
2. நிழற்படம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) நிழள் + படம்
ஆ) நிழை + படம்
இ) நிழல் + படம்
ஈ) நிலை + படம்
[விடை : இ) நிழல் + படம்]
3. உண்மை என்ற சொல்லின் பொருள்
அ) பொய்
ஆ) தவறு
இ) சரி
ஈ) மெய்
[விடை : ஈ) மெய்]
4. நற்பயன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நல்ல + பயன்
ஆ) நன்மை + பயன்
இ) நல் + பயன்
ஈ) நற் + பயன்
[விடை : ஆ) நன்மை + பயன்]
5. அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ) பக்கத்தில்
ஆ) எதிரில்
இ) அண்மையில்
ஈ) தொலைவில்
[விடை : ஈ) தொலைவில்]
வினாக்களுக்கு விடையளிக்க
1. ‘பறவைக் கப்பல்‘ எனக் குறிப்பிடப்படுவது எது?
விடை
பறவைக் கப்பல் எனக் குறிப்பிடப்படுவது செயற்கைக்கோள்கள்.
2. செயற்கைக்கோளினால் விளையும் பயன்களுள் இரண்டைக் குறிப்பிடுக.
விடை
மண்வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து மனித உயிர்களைக் காக்கிறது.
இணைந்து செய்வோம்
இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் அமைந்துள்ள சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
விடை
பட்டு – விட்டு
விண்வெளி – விண்ணில்
மண்ணிலுள்ள – உண்மை
அருகில் – உருவில்
கனிம வளம் – மனித
இதுவரை – அதுதான்
ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
விடை
வந்திடுமே – பறந்திடுமே
வாருங்கள் – பாருங்கள்
சொல்லிடுமே – உதவி
எடுத்திடுமே – காட்டிடுமே
காட்டிடுமே – உணர்திடுமே
பாடலை நிறைவு செய்வோம்
பஞ்சு போன்ற மேகமே
பார்க்க நெஞ்சு மகிழுமே
காற்று வீசும் மேகமே
கலைந்தே அசைந்து செல்லுமே
மக்கள் உள்ளம் மகிழுமே
மழையாய் வரும் மேகமே!
வண்ணம் தீட்டி மகிழ்வோம்
சொல் உருவாக்கலாமா!
கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால், செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்.
தகவல்
கோள்கள்
மழை
வெப்பம்
கனிமம்
அறிந்து கொள்வோம்
இந்தியா, வானில் செலுத்திய செயற்கைக்கோள்களுக்கு ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் வானவியலிலும் கணிதவியலிலும் சிறந்து விளங்கியவர்கள்.
செயல் திட்டம்
நம் நாட்டில் இதுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் பெயர்களை எழுதி வருக.