தமிழ் : பருவம் 3 இயல் 2 : மாசில்லாத உலகம் படைப்போம்
2. மாசில்லாத உலகம் படைப்போம்
ஆசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். அவரது கைகளில் ஓர் அழைப்பிதழ் இருந்தது. அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் மாணவர்களின் முகத்தில் பளிச்சிட்டது.
மெல்ல எழுந்த முகிலன், “அது என்ன அழைப்பிதழ் ஐயா? என்று கேட்டான்.
மாணவர்களே! நமது மாவட்டக் கல்வித்துறை சார்பில் அறிவியல் திருவிழா நடைபெறவுள்ளது. உங்களுடைய புதுமையான படைப்புகளை அவ்விழாவில் காட்சிப்படுத்தலாம்.சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் உண்டு. நம் பள்ளிமாணவர்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு இது!”என்றபடி கையிலுள்ள அழைப்பிதழை முகிலனிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார் ஆசிரியர்.முகிலன் படிப்பதை ஆர்வமுடன் கேட்ட மாணவர்கள், ‘நாம் என்னென்ன மாதிரியெல்லாம் உருவாக்கலாம்’ என்று சிந்திக்கத் தொடங்கினர்.
அரியலூர் மாவட்டக் கல்வித் துறை நடத்தும் மாபெரும் அறிவியல் திருவிழா 2020
நாள் : 28.02.2020
மாணவச் செல்வங்களின் திறமையை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு! உங்கள் அறிவியல் ஆர்வத்தினை, ஆய்வுச் சிந்தனையைப் படைப்புகளாக மாற்றிடுங்கள்! பரிசுகளை வென்றிடுங்கள்!
தலைப்பு
மாசில்லாத உலகம்
மகிழ்வான உலகம்!
குறிப்பு
ஆய்வுகள் மாணவர்தம் சொந்த முயற்சியாகவும் இதுவரை வெளிவராத புதிய முன்னெடுப்பாகவும் அமைதல் வேண்டும்.
எதிர்கால அறிவியல் அறிஞர்களுக்கு
வாழ்த்துகள்!
இவண்,
அரியலூர் கல்வி மாவட்டம்
அவர்களின் முகக்குறிப்பை உணர்ந்த ஆசிரியர்,”வழக்கமான ஆய்வுகள் போல் அல்லாமல், புதுமையாக முயற்சி செய்யுங்கள். பரிசு பெறுவதனைவிட, உங்களுடைய மாறுபட்ட சிந்தனைக்கு முன்னுரிமை தாருங்கள். அதனையே செயல்படுத்துங்கள்” என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.
நாள்கள் நகர்ந்தன. அறிவியல் விழா நாளன்று ….
விழா அரங்கின் வாசலில் நெடிதுயர்ந்து நின்றது ஓர் உருவம். முழுவதும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட மின்னணுக் கழிவுகளால் அவ்வுருவம் செய்யப்பட்டிருந்தது. பழுதான கணினிகளின் பகுதிப் பொருள்கள் ஓர் அரக்கனின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் மார்புப் பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது. தோள்பட்டையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. அரக்கன் பேசுவதுபோல அவ்வுருவம் பேசத் தொடங்கியது.
“அன்புக்குரியவர்களே!
நான் யாரென்று தெரிகிறதா? நீங்கள் பயன்படுத்தித் தூக்கி எறிந்த மின்னணுப் பொருள்களின் கழிவுகளால் உருவாக்கப்பட்டவன்தான் நான். இப்போது உங்கள்முன் பேசுகிறேன். நீர், நிலம், காற்று, ஒலி போன்றவற்றில் ஏற்படும் பல்வேறு மாசுகளைப் பற்றி, நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவையெல்லாம் மனிதர்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தருகின்றன. அவைபோலவே, சற்றும் குறையாத பாதிப்புகள் என்னாலும் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒவ்வொரு நாளும் உங்களால் தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் நிலத்தையும், சுற்றுச் சூழலையும் பெரிதும் சீர்கேட்டுக்கு உள்ளாக்குகின்றன. இவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எங்களை முறையாக வகைப்படுத்தி, மறுசுழற்சி செய்வதொன்றே இச்சிக்கலுக்குத் தீர்வாகும். அதனை வலியுறுத்தவே ஓர் அரக்கனின் வடிவில் நான் வந்துள்ளேன்.
எனவே, மின்னணுப் பொருள்களைத் தேவைக்குப் பயன்படுத்துங்கள். கண்ட இடங்களில் எங்களைத் தூக்கி எறிந்திடாமல், முறையாக மறு சுழற்சிக்கு உட்படுத்துங்கள். அப்போதுதான் நாம் எந்தத் துன்பமும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்திடமுடியும்.
“மாசில்லாத உலகம் படைப்போம்! மகிழ்வான வாழ்வு பெறுவோம்!”
என்று தங்குதடையின்றிப் பேசிக்கொண்டிருந்தது அவ்வுருவம்.
அரங்கினுள் நுழைந்த அனைவரும், மிகப்பெரிய அந்த அரக்க உருவத்தைப் பார்த்து வியந்தபடியும், அது கூறிய கருத்துகளைக் கேட்டுச் சிந்தித்தபடியும் சென்றனர். அந்த ஆண்டிற்கான சிறந்த அறிவியல் படைப்புக்குரிய விருது, முகிலனது பள்ளிக்கே கிடைத்தது.
மாணவர்களும் ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் முகிலனின் புதுமையான படைப்பைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
கணினியில் உரைகள், வசனங்கள், முழக்கத் தொடர்கள் கேட்டல்
வாங்க பேசலாம்
நீர் எதனால் மாசடைகிறது? நீர் மாசு ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம்? குழுவில் கலந்துரையாடுக.
விடை
மாணவன் 1 : இன்று விடுமுறைதானே? நீ என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டாய்?
மாணவன் 2 : இன்று விடுமுறைதான். எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர்க்
கால்வாயைச் சுத்தம் செய்கிறார்கள். அதற்கு என் அண்ணன் செல்வதற்காக விடியற்காலையில் எழுந்தான். நானும் அவனுடனேயே எழுந்துவிட்டேன்.
மாணவன் 1 : உன்னுடைய அண்ணன் கல்லூரியில் தானே படிக்கின்றார்? நீ…?
மாணவன் 2 : என் அண்ண னுடைய கல்லூரியில் ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றதாம். அதில் அவரவர்கள் வாழும் பகுதியில் உள்ள கால்வாய்களை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மாணவன் 1 : அட! இதுகூட நல்ல சிந்தனையாக உள்ளதே. இதெல்லாம் செய்து என்ன பயன்? தொழிற்சாலைக் கழிவுகளாலும் வீட்டுக் கழிவுகளாலும் தூயநீர் ஓடிய ஆறுகளில் இன்று கழிவுநீர் ஓடுகிறது.
மாணவன் 2 : நீ கூறுவது முற்றிலும் சரியே. தேவையற்ற வேதிக்கழிவுகளைச் சாக்கடையில் கலக்க விடுகிறோம். இந்நீரானது நேரே கடலில் சென்று கலந்துவிடுகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்களும் அழிக்கப்படுகின்றன. கடல் வாழ் உயிரினமான மீன்களை மக்கள் விரும்பி உண்கின்றனர். அவர்களுக்கு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கழிவுநீர் கடலில் செல்லாமல் இருக்க ஆங்காங்கு மரங்களை நட்டு அவற்றிற்கு அந்நீர் போய் சேரும்படி செய்யலாம்.
மாணவன் 1 : தொழிற்சாலைக் கழிவுகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளையும் வைத்து மழைநீர் வீணாகக் கடலில் கலக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
மாணவன் 2 : ஆமாம். இவ்வாறு செய்தால் நீர்வளமும் பாதுகாக்கப்படும்.
சிந்திக்கலாமா!
உன் பள்ளியில் நடைபெறப்போகும் அறிவியல் கண்காட்சிக்காக நீ புதுமையாகச் செய்ய விரும்புவது என்ன?
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘மாசு‘ – என்னும் பொருள் தராத சொல்
அ) தூய்மை
ஆ) தூய்மையின்மை
இ) அழுக்கு
ஈ) கசடு
[விடை : அ) தூய்மை]
2. ‘மாசு + இல்லாத – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) மாசிலாத
ஆ) மாசில்லாத
இ) மாசி இல்லாத
ஈ) மாசு இல்லாத
[விடை : ஆ) மாசில்லாத]
3. ”அவ்வுருவம்‘ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
அ) அவ் + வுருவம்
ஆ) அந்த + உருவம்
இ) அ + உருவம்
ஈ) அவ் + உருவம்
[விடை : இ) அ + உருவம்]
4. ‘நெடிதுயர்ந்து‘ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
அ) நெடிது + உயர்ந்து
ஆ) நெடி + துயர்ந்து
இ) நெடிது + துயர்ந்து
ஈ) நெடிது + யர்ந்து
[விடை : அ) நெடிது + உயர்ந்து]
5. ‘குறையாத’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் –
அ) நிறையாத
ஆ) குறைபாடுடைய
இ) குற்றமுடைய
ஈ) முடிக்கப்படாத
[விடை : அ) நிறையாத]
வினாக்களுக்கு விடையளிக்க
1. ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் என்ன செய்தி இருந்தது?
விடை
ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் ‘அறிவியல் திருவிழா’ பற்றிய செய்தி இருந்தது.
2. அறிவியல் விழாவில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை ஆசிரியர் எவ்வாறு ஊக்கப்படுத்தினார்?
விடை
“வழக்கமான ஆய்வுகள் போல் அல்லாமல், புதுமையாக முயற்சி செய்யுங்கள். பரிசு பெறுவதனைவிட, உங்களுடைய மாறுபட்ட சிந்தனைக்கு முன்னுரிமை தாருங்கள். அதனையே செயல்படுத்துங்கள்” இவ்வாறு மாணவர்களை ஆசிரியர் ஊக்கப்படுத்தினார்.
3. அறிவியல் விழாவில் காணப்பட்ட நெடிதுயர்ந்த உருவத்தை எப்படி உருவாக்கினர்?
விடை
● விழா அரங்கின் வாசலில் நெடிதுயர்ந்து நின்ற உருவம் முழுவதும்பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட மின்னணுக் கழிவுகளால் செய்யப்பட்டிருந்தது.
● பழுதான கணினிகளின் பகுதிப் பொருள்கள் ஓர் அரக்கனின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் மார்புப் பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது.
● தோள்பட்டையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. அரக்கன் பேசுவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது.
4. சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றன?
விடை
ஒவ்வொரு நாளும் உங்களால் தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் நிலத்தையும் சுற்றுச்சூழலையும் பெரிதும் சீர்கேட்டுக்கு உள்ளாக்குகின்றன.
5. நாம் பயன்படுத்திய மின்பொருள்களை என்ன செய்யவேண்டும்?
விடை
● நாம் பயன்படுத்திய மின்னணுப் பொருள்களைத் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.
● கண்ட இடங்களில் தூக்கி எறிந்திடாமல் முறையாக மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
பாடுவோம் விடை கூறுவோம்
சொல்லு,சொல்லு! நீயும் சொல்லு!
எதுசரி? எது தவறு?
மேலே பார்! கீழே பார்!
அங்கே பார்! இங்கே பார்!
சொல்லு, சொல்லு!
நீயும் சொல்லு!
எது சரி? எது தவறு?
1. கண்ட இடத்தில் குப்பையைக் கொட்டுவது – தவறு
2. குப்பையைக் குப்பைத்தொட்டியில் போடுவது – சரி
3. பயன்படுத்தாதபோதும் மின்விளக்கை எரிய விடுவது – தவறு
4. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது – சரி
5. சாலையின் ஓரமாக நடந்து செல்வது – சரி
6. பறவை, விலங்குகளைத் துன்புறுத்துவது – தவறு
தொடர் இரண்டு; விடை ஒன்று கண்டுபிடிப்போமா?
1. காலைக்குப் பின்னால் வரும்; கழுத்தில் வந்து விழும்
விடை : மாலை
2. ஆடையுமாகும்; அறிவையும் தரும்
விடை : நூல்
மொழியோடு விளையாடு
ஒரு சொல்லுக்கு இருபொருள் எழுதுக.
கலையும் கை வண்ணமும்
காகிதக் குவளை செய்வோமா!
செய்முறை
தேவையான பொருள்: பயன்படுத்திய தாள் ஒன்று.
இயற்கையைக் காப்போம்
வாடி வதங்கிய மரங்கள், வண்ணம் இழந்த இலைகள், காய்ந்து கருகிய பூக்கள், வறண்ட பூமி; வற்றிக் கிடக்கும் ஆறு; வெண்பஞ்சு மேகம்; பசுமை இழந்து பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் வயல்வெளிகள்; என்னவாயிற்று? அவற்றின் அழகெல்லாம் எங்கே போயிற்று? அதோ, ஒரு வீட்டின் அருகே தண்ணீர்க் குழாய். அதில் சொட்டுச் சொட்டாக நீர். அதனை நிரப்பிக்கொள்ள எத்தனை குடங்கள் வரிசையாக வரிசையாக. அப்பப்பா! இந்தச் சொட்டு நீர் நாளையும் வருமா? வினாக்குறியுடன் சிறுமி.
இந்த உரைப்பகுதிக்குப் பொருத்தமாக வாசகங்கள் எழுதுக.
நீரைச் சேமிப்போம்; நீடுழி வாழ்வோம்
விடை
நீரின்றி அமையாது இவ்வுலகம்.
மழை நீரை சேமிப்போம்!
நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம்!
மழை நீர் நம் ஒவ்வொருவரின் உயிர்நீர்!
செயல் திட்டம்
உங்கள் பள்ளியில் நடைபெற உள்ள ஆண்டுவிழா,இலக்கியமன்ற விழா போன்றவற்றுள் ஏதேனும் ஒரு விழாவுக்கு அழைப்பிதழ் உருவாக்குக.