தமிழ் : பருவம் 2 இயல் 4 : நன்னெறி
4. நன்னெறி
இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே – பொன்செய்
அதிர்வளையாய் பொங்கா(து) அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்கும் கடல்
– சிவப்பிரகாச சுவாமிகள்
சொல் பொருள்
இன்சொல் – இனிமையான சொல், இருநீர் வியனுலகம் கடலால் சூழப்பட்ட பரந்த உலகம், வன்சொல் – கடுமையான சொல், அதிர்வளை – ஒலிக்கின்ற வளையல், அழல் கதிர் – கதிரவனின் வெப்பக் கதிர்கள், தண்ணென் கதிர் – குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி
பாடல் பொருள்
பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்பதைப் புரிந்து செயல்படுக.
நூல் குறிப்பு
நீதிநூல்களுள் ஒன்று நன்னெறி. இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினார். நாற்பது நேரிசை வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வோர் உவமைமூலம், ஒவ்வொரு நீதிக்கருத்தை விளக்குவது, இந்நூலின் சிறப்பாகும்.
வாங்க பேசலாம்
● பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ்க.
● உன்னிடம் பிறர் எப்படிப் பேச வேண்டும் என எண்ணுகிறாய்? ஏன்?
விடை
என்னிடம் பிறர் இன்சொல் பேச வேண்டும் என்று எண்ணுகிறேன்.
ஏனெனில் நாம் பேசும் இன்சொற்களால் அனைவரும் மகிழ்வர். பிறர் நம்மிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று எண்ணுகிறோமா அதேபோல் நாமும் பிறரிடம் பேசவேண்டும்.
சிந்திக்கலாமா!
இன்சொற்களைப் பேசுவதால் நன்மையே விளையும் என்பதைப் பிறருக்கு எப்படி உணர்த்தலாம்?
விடை
பிறர் மனதைப் புண்படுத்தாத சொற்களே இன்சொற்கள். நாம் எதிர்நோக்குபவர்களில் புதியவர், சிறியவர், பெரியவர், நண்பர், உறவினர் என எவராக இருந்தாலும் இனிமையாகப் பேசுதல் சிறப்பு. நலம் விசாரித்தல், உபசரித்தல் போன்றவையும் இன்சொல்லாகும்.
இன்சொல் பேசுவதனால் ஏற்படும் நன்மைகளை உணர்த்தும் கதைகளை, நிகழ்வுகளை நாம் பிறருக்குக் கூறலாம்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இன் + சொல்
ஆ) இனிமை + சொல்
இ) இன்மை + சொல்
ஈ) இனிய + சொல்
[விடை : ஆ) இனிமை + சொல்]
2. “அதிர்கின்ற வளை’ இச்சொற்களில்அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள்
அ) உடைகின்ற
ஆ) ஒலிக்கின்ற
இ) ஒளிர்கின்ற
ஈ) வளைகின்ற
[விடை : ஆ) ஒலிக்கின்ற]
3. வியனுலகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வியன் + உலகம்
ஆ) வியல் + உலகம்
இ) விய + உலகம்
ஈ) வியன் + னுலகம்
[விடை : அ) வியன் + உலகம்]
வினாக்களுக்கு விடையளிக்க
1. உலகம் எப்போது மகிழும்? – நன்னெறிப் பாடல்மூலம் உணர்த்துக.
விடை
உலகம் மக்கள் பேசும் இன்சொற்களைக் கேட்டு மகிழும்.
2. கடலின் அலைகள் எப்போது பொங்கி எழும்?
விடை
குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளியைக் கண்டு கடலின் அலைகள் பொங்கி எழும்.
பொருத்துக
1. இன்சொல் – கதிரவனின் ஒளி
2. வன்சொல் – நிலவின் ஒளி
3. அழல்கதிர் – கடுஞ்சொல்
4. தண்ணென் கதிர் – இனிய சொல்
விடை
1. இன்சொல் – இனிய சொல்
2. வன்சொல் – கடுஞ்சொல்
3. அழல்கதிர் – கதிரவனின் ஒளி
4. தண்ணென் கதிர் – நிலவின் ஒளி
குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக
1. நமது தாய்நாட்டின் திருப்பெயர்
விடை : இந்தியா
2. அரசனின் வேறு பெயர்
விடை : மன்னன்
3. உடைமையை இப்படியும் சொல்லலாம்.
விடை : சொத்து
4. மணத்திற்குப் பெயர் பெற்ற பூ இது
விடை : மல்லி
வட்டத்தில் எழுதிய எழுத்துகளைக் கீழே உள்ள கட்டத்தில் எழுதுக
இப்படிப் பேசினால் எல்லாருக்கும் பிடிக்கும்
விடை : இன்சொல்
சிறு வட்டத்தில் உள்ள எழுத்தை முதலாகக் கொண்டு சொல் உருவாக்குக
குடை
குறை
குவி
குதி
குட்டை
குரங்கு
குளி
குவியல்
குடம்
குறைவு
அறிந்து கொள்வோம்
திருக்குறள்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
– இனியவை கூறல், குறள் 100
செயல்திட்டம்
இனியவை கூறல் என்னும் திருக்குறள் அதிகாரத்திலுள்ள குறட்பாக்களை எழுதி வருக.
விடை
1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
2. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
3. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
7. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
8. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
9. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
10. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.