தமிழ் : பருவம் 2 இயல் 2 : எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!
2. எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!
மாமரத்திலிருந்த கிளிகள் கீச் கீச் எனக் குரலெழுப்பி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்தன. அருகிலிருந்த வைக்கோல்போரின் மீது சேவலொன்று மெதுவாகநடைபயின்று கொண்டிருந்தது. தோட்டத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த கன்றைக் கண்டு, பசு ம்மா. .. எனக் குரலெழுப்பியது, இவற்றையெல்லாம் தன் வீட்டின் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இளமாறன், தன் தாத்தாவைத் தேடிக் கீழே இறங்கிவந்தான். தாத்தாவைக் காணாததால், அவர் விடியற்காலையிலேயே வயலுக்குச் சென்றிருப்பார் என எண்ணினான்.
அப்போது, இளமாறா… இங்கே வாப்பா” என்று அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து ஒலித்தது. இதோ வர்றேம்மா” என்றவாறே இளமாறன் வீட்டிற்குள் விரைந்து ஓடினான்.
‘தாத்தாவிற்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு வாப்பா…”என்று கூறிய அம்மாவிடம், “சரிம்மா” என்ற இளமாறன், அம்மாவிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்டு வயலை நோக்கிச் சென்றான்.
வயலுக்குச் செல்லும் வழியில் பூத்திருந்த அழகிய பூக்கள் அவனைப் பார்த்துச் சிரிப்பதைப் போலிருந்தன. தன் கைகளால் அவற்றை மெல்ல வருடியபடியே சென்றான் இளமாறன். அந்தப் பூந்தோட்டத்தைத் தாண்டியதும், அடக்கத்துடன் தலைசாய்த்துக் கற்றறிந்த சான்றோர் போலக் குனிந்து நிற்கும் நெல்மணிகளைக் கண்டான். வயல்வரப்பைத் தாண்டாமல் தேங்கி நிற்கும் நீரைக் கண்டு மகிழ்ந்தான்.
கால்வாயில் பள்ளம் பார்த்துப் பாய்ந்தோடும் தண்ணீரில் தன் கால்களை நனைத்தும் கைகளால் அலைந்தும் விளையாடினான். அப்போது எழுந்த ஒலியைக் கேட்டு, அருகிலிருந்த வளையிலிருந்து நண்டுகள் எட்டிப் பார்த்தன. அவை தம் கொடுக்குகளை மேலும்கீழுமாக அசைத்து நகர்ந்ததைப் பார்த்து வியப்படைந்தான்.
சற்றுத் தொலைவில்,தாத்தா வயலில்தனியாக வேலைப்பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.”தாத்தா…..தாத்தா…” என்றழைத்தவாறே அவரருகில் சென்றான். தாத்தாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
இளமாறனின் குரல் கேட்டதும், தாத்தா திரும்பிப் பார்த்தார். “பார்த்து வாப்பா….” என்று சொல்லிக் கொண்டே அவனருகே சென்றார் தாத்தா. ஓடிவந்து தன்னைக் கட்டிக்கொண்ட பேரனை உச்சிமோந்து தூக்கி மகிழ்ந்தார். அவன் கொண்டு வந்த உணவைப் பெற்றுக் கொண்டார்.
அருகிலிருந்த வேப்பமரத்தின் நிழலில் தாத்தாவும் பேரனும் அமர்ந்தனர். தாத்தா,தன் கையாலேயே பேரனுக்கு உணவூட்டி மகிழ்ந்தார். உணவைச் சாப்பிட்டுக் கொண்டே இளமாறன் அவரிடம் பேசத் தொடங்கினான்.
‘தாத்தா, நீங்க ஏன் இவ்வளவு வயதாகியும் நிலத்தில வேலை செஞ்சு துன்பப்படறீங்க?”
“செல்லக்குட்டி, எனக்கு அவ்வளவு வயசா ஆயிடுச்சு! இங்க பாருப்பா, இந்த வயல்லே வேலை செஞ்சுதான் என் உடம்பு இன்னும் வலிமையா இருக்கு. நான் இதுவரைக்கும் நோய்நொடின்னு படுத்தது இல்லே. கண்ணு, இந்த வயலுதான் நமக்குச் சொத்து, இந்த மண்ணுல விளையற பயிர்கள்தாம் நம்மை வாழவைக்குது. நாம உண்ணுகின்ற உணவுப் பொருள்களெல்லாம் என்னைப் போல உழவர்களின் உழைப்பின் மூலமாகக் கிடைக்கிறதுதான்.
நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். அத்தனையும் விளைவிப்பது நாங்கதான். அதனால், இந்த நிலத்தைத்தான் நாம தெய்வமா வணங்கணும் செல்லக்குட்டி. இந்த நிலத்தை ஒருநாளு பார்க்கலேன்னாலும் எனக்குத் தூக்கமே வராதுப்பா. அதுமட்டுமா? இந்த நிலத்தில விளையற விளைச்சலெல்லாம் நமக்கு மட்டும் பயன்படுதுன்னு நினைக்கிறியா? அதுதான் இல்லே, நம்ம தேவைக்குப் போக விளைந்ததைப் பிறருக்கும் கொடுக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சி இருக்கு பாரு, அதுக்கு ஈடுஇணையே இல்லேப்பா.
ஆமா, தாத்தா. சரியாத்தான் சொல்றீங்க. உழவர்கள்தாம் உலகத்துக்கே அச்சாணின்னு எங்க ஆசிரியர்கூடச் சொன்னாரு.
தாத்தாவிடம் பேசிக்கொண்டே அருகிலிருந்த வெண்டைச்செடியிலிருந்து ஒரு வெண்டைக்காயைப் பறித்தான் இளமாறன். “இன்னும்கூட இரண்டு, மூணு பறிச்சுச் சாப்பிடுப்பா, பச்சையா சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுதான்” என்றார் தாத்தா.
தாத்தா, வெண்டைக்காய் சுவையாக இருக்கிறதே என்ற பேரனிடம், ஆமாம்பா. இயற்கை உரம் போட்டுத்தான் இங்க எல்லா உணவுப் பயிரையும் விளைவிக்கிறோம். அதனால, உடலுக்கும் கெடுதி இல்லே, உணவுப்பொருளும் சுவையா இருக்கும்” என்று கூறிய தாத்தாவின் கண்கள் சற்றே கலங்கியதுபோல் உணர்ந்தான் இளமாறன். “தாத்தா….தாத்தா.. என்னாச்சு? ஏன் என்னவோ போல் இருக்கிறீங்க?” “ஒண்ணுமில்லேப்பா” என்ற தாத்தா, உண்மையாகவே தம் கண்களைத் துடைத்துத்தான் கொண்டார்.
தாத்தா, நீங்க எங்கிட்டே எதையோ சொல்ல வேண்டான்னு நினைக்கிறீங்க, அப்படித்தானே, சொல்லுங்க தாத்தா என்றான் இளமாறன்.
*இம்…. அப்போதெல்லாம் நிறைய மாடுகள் இருக்கும், அவற்றின் சாணத்தை ஒன்று சேர்த்து, எருவாக்கி, நிலத்தில் போட்டு, இயற்கையா உழவு செய்தோம். தாவரங்களோட தழைகளை மண்ணிலிட்டு மட்கச் செய்து நல்ல விளைச்சல் கண்டோம். இப்படி விளையற உணவுப்பொருளைச் சாப்பிடுறவங்க நல்ல உடல்நலத்தோடும் நோய் எதிர்ப்புச்சக்தியோடும் இருந்தாங்க, ஆனால், இப்ப எல்லாம் இயற்கை உரத்தையே பார்க்க முடியலே.
தாத்தா, நம்ம மாமாவீட்டிலே மூட்டை மூட்டையா அடுக்கியிருக்கே. அவையெல்லாம் இயற்கை உரமில்லையா?
இல்லப்பா. அவையெல்லாம் செயற்கை உரம். அவற்றை மண்ணில் போட்டு மண்ணைக் கெடுக்கிறோம் என்ற வருத்தம் எனக்கும் இருக்கு, செயற்கை உரங்களைத் தெளித்து உழவனுக்கு உதவியா இருக்கிற தேனீ, வண்ணத்துப்பூச்சி, மண்புழுன்னு எல்லாத்தையும் அழிச்சி, மண்ணைக் கெடுக்கிறோம்”.
தாத்தா, செயற்கை உரங்களால நிலத்துக்கு அவ்வளவு கெடுதலா?
இம். செயற்கை உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் உணவுப்பொருளை உண்பதால் நமக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன. உணவுகள் உயிர்ச்சத்துகள் இல்லாத சக்கைகளாகவும் மாறிப்போகின்றன. உடலை வாட்டும் நோயான சர்க்கரை நோய், வயது வித்தியாசம் இல்லாமல் சிறுபிள்ளைகளுக்கும் வருகிறது,
தாத்தா, அப்ப தண்ணீர் மட்டும்தான் சுத்தமா இருக்குதுன்னு சொல்லுங்க!
அடபோப்பா! செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை மண்ணில் தெளித்துத் தண்ணீர் விடுகிறோம். அந்தத் தண்ணீர், நிலத்தடி நீருடன் கலந்து அதையும் கெடுத்துவிடுகிறதே. இதுபோதாது என்று தொழிற்சாலைக் கழிவுகளை அப்படியே நிலத்தில்விட்டு, நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறோமே .
அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?
பழைய முறைப்படி நாம் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, வேளாண்மை செய்யணும்பா. அப்போதுதான் நாம் மட்டுமல்ல, எல்லாருமே நலமா இருப்பாங்க!
“தாத்தா, நீங்க சொன்னதை நான் நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன். உழவுதான் நமக்கு உயிர். அதில விளையற பயிர்கள்தாம் நம்ம எல்லாருக்கும் உணவா இருக்கு. அதனால, நம்ம உயிர் காக்கும் உணவுப்பொருளை விளைவிக்கிற இந்த நிலத்துக்கு நாம எந்தக் கெடுதலும் செய்யக்கூடாது. முடிஞ்சவரைக்கும் செயற்கை உரத்தைவிட்டுட்டு, இயற்கை உரத்தைத்தான் பயன்படுத்தணும். சரியா, தாத்தா. அப்பாக்கிட்டே மட்டுமின்றி, என் நண்பர்களுக்கும் நீங்க சொன்னதைக் கட்டாயம் எடுத்துச் சொல்வேன்”.
“நல்லது, கண்ணு. அப்படியே செய். எல்லாருக்கும் நன்மையைத் தர்ற ஒரு செய்தியைச் சொன்னா, யாரும் ஏத்துக்கொள்ளாமலா போவாங்க? மெதுவாப் புரிஞ்சுக்குவாங்க. சரி, கண்ணு, உச்சி வெயிலு வர்றதுக்குள்ளே நீ வீடுபோய்ச் சேருப்பா”.
தாத்தாவிடம் விடை பெற்று ஆழ்ந்த சிந்தனையோடு வீடு திரும்பினான் இளமாறன். வீட்டிற்குள் நுழைந்ததும் யாரிடமும் பேசாமல் அமைதியாகத் தன் அறைக்குச் சென்றான். அப்போது அங்கு வந்த அவனுடைய அப்பா, “இளமாறா, என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே? ஓ, வயலுக்குப் போயிட்டு வந்தியா? இந்த வெயிலு உனக்கு ஒத்துக்கலையோ? உங்க தாத்தாகூட நான் சொல்றதை எங்க கேட்கிறாரு? இந்தத் தள்ளாத வயசில எதுக்கு வயல்ல போய் வேலை செய்யணும்? வீட்ல இருக்கலாம்ல” என்று கூறிய அப்பாவை முறைத்த இளமாறன், “அதுசரிப்பா, நீங்க நினைக்கிறமாதிரி யாருமே வயல்வேலைக்குப் போகலன்னா என்னாகும்? எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்…! நாம என்ன பணத்தையா சாப்பிடமுடியும்?” என்றான்.
இளமாறனின் பேச்சில் வெளிப்பட்ட உண்மை, தம்மைச் சுடுவதுபோல் உணர்ந்த அப்பா, ஒன்றும் பேசாமல் வயலை நோக்கி நடந்தார்.
வாங்க பேசலாம்
● “பணத்தையா சாப்பிடமுடியும்?” என்ற இளமாறனுக்கு நீங்களாக இருந்தால் என்ன விடை சொல்வீர்கள்?
விடை
நான் கூறும் விடை :
பணத்தைச் சாப்பிட முடியாது. ஆனால் விவசாயத்தை மேம்படுத்த முடியும். உழவுத்தொழில் சிறப்பதற்கான பணியைச் செய்வேன். வீட்டில் கால்நடைகளை வளர்த்து இயற்கை உரத்தைப் பயன்படுத்துவேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிமொழியேற்பேன்.
சிந்திக்கலாமா?
● நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில் உலகம் என்னவாகும்?
விடை
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும், உழவுத்தொழிலே சிறந்தது. அத்தகைய உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நம் அனைவருக்கும் உண்ண உணவு இருக்காது. உணவுக்குப் பதிலாக காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளுக்கும் மாத்திரையை விழுங்கி உயிர் வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘பாய்ந்தோடும்‘ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பாய் + தோடும்
ஆ) பயந்து + ஓடும்.
இ) பாய்ந்து + ஓடும்
ஈ) பாய் + ஓடும்
[விடை : இ) பாய்ந்து + ஓடும்]
2. காலை + பொழுது இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது
அ) காலைப்பொழுது
ஆ) காலைபொழுது
இ) காலபொழுது
ஈ) காலப்பொழுது
[விடை : அ) காலைப்பொழுது]
3. பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?.
அ) மலை
ஆ) காடு
இ) நெகிழி
ஈ) நிலம்
[விடை : இ) நெகிழி]
4. குனிந்து- இச்சொல் குறிக்கும் பொருள்
அ) வியந்து
ஆ) விரைந்து
இ) துணிந்து
ஈ) வளைந்து
[விடை : ஈ) வளைந்து]
5. தன்+ உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.
அ) தன்னுடைய
ஆ) தன்உடைய
இ) தன்னுடைய
ஈ) தன்உடையை
[விடை : அ) தன்னுடைய]
வினாக்களுக்கு விடையளிக்க
1. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை
● நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன.
● உணவுகள் உயிர்ச்சத்தின்றி இருக்கின்றன.
● மண் வளம் அழிக்கப்படுகிறது.
2. நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன?
விடை
நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் எனப் பலவகையான உணவுப் பொருள்களை நிலம் கொடுப்பதால், நிலத்தைத் தெய்வமாக வணங்க வேண்டும்.
3. ‘எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்‘ என இளமாறன் ஏன் கூறினான்?
விடை
இளமாறன் தன் தாத்தா கூறியவற்றைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அப்பா ”வயலுக்குச் சென்று வந்தாயா? உன் தாத்தாவை வயலுக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் அவர் எங்கே கேட்கிறார்?” என்று கூறினார்.
சொந்த நடையில் கூறுக
உமக்குப் பிடித்த காய்கள், பழங்கள் எவை? ஏன்?
விடை
எனக்குப் பிடித்த காய்கள், பழங்கள் : கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய், முள்ளங்கி, காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூசணிக்காய், எல்லா வகையான கீரைகள், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், பப்பாளிப்பழம் ஆகிய அனைத்தும் எனக்குப் பிடித்தவை.
இவற்றை உண்பதற்கான தனித்தனிக் காரணங்கள் ஏதும் இல்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் தனித்தனி மருத்துவக்குணம் உள்ளது.
பொதுவாகக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பதால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. உயிர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும்.
அகரமுதலி பார்த்துப் பொருளறிக.
மாசு – அழுக்கு, குற்றம், மாறுபாடு
வேளாண்மை – உழவு
சொற்களை இணைத்துத் தொடரை நீட்டித்து எழுதுக.
படித்தேன்
நான் படித்தேன்
நான் நேற்று படித்தேன்
நான் நேற்று பாடம் படித்தேன்
நான் நேற்று தமிழ்ப்பாடம் படித்தேன்
வரைந்தாள்
கமலா வரைந்தாள்
கமலா படம் வரைந்தாள்
கமலா கிருஷ்ணர் படம் வரைந்தாள்
கமலா அழகாக கிருஷ்ணர் படம் வரைந்தாள்
நிறுத்தக் குறியீடுக
1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்
விடை
நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.
2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது
விடை
‘வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.
3. ஆகா பயிர் அழகாக உள்ளதே
விடை
ஆகா, பயிர் அழகாக உள்ளதே!
4. அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது
விடை
அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?
புதிய சொற்களை உருவாக்கலாமா?
விடை
பல், ஊர், பால், வாய், நாடு, பாடு, ஏடு,
தலை, காலை, கலை, கண், காண், ஊண்,
பார், காய், தண், வாள், வாடு, தடு, காடு,
ஓடு,நாய்,நார், நாள், நாகம், காகம்,
பாகம், பாகல், வாள், ஊற்று, காற்று, பற்று.
படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.
விடை :
ஒரு வீட்டுக்கு இரண்டு வாசற்படி. அது என்ன? மூக்கு
விடை :
பெட்டியை திறந்தால் வெள்ளை முத்துகள் அது என்ன? வெண்டைக்காய்
அகர வரிசைப்படுத்துக
தேன், தாளம், தௌவை, துடுப்பு, தென்னை, தையல், தோழமை, தீ, தூய்மை, தொகை, திட்டம், தளிர்
விடை
தளிர், தாளம், திட்டம், தீ, துடுப்பு, தூய்மை, தென்னை, தேன், தையல், தொகை, தோழமை, தௌவை
சொல்லக்கேட்டு எழுதுக
1. இயற்கை வேளாண்மை
2. உயிர்ச்சத்துகள்
3. செயற்கை உரங்கள்
4. நெல் மணிகள்
5. நண்டுகள்
கலையும் கைவண்ணமும்
வண்ணம் தீட்டுவோமா!
செயல் திட்டம்
● உங்கள் வீட்டில் உருவாகும் காய்கறிக்கழிவுகளையும் மட்கும் குப்பைகளையும் பயன்படுத்தி, இயற்கை உரம் தயார் செய்க. அந்த உரத்தை வீட்டிலோ பள்ளியிலோ உள்ள தாவரங்களுக்குப் பயன்படுத்துக.
குழுவாக விளையாடலாமா?
❖ படத்தில் உள்ளதுபோல் அட்டைகளைத் தயார் செய்து கொள்க.
❖ முதல் அட்டையை அசையாமல் இருக்குமாறு வைத்துக்கொள்க.
❖ இரண்டாவது அட்டை மட்டும் சுழலுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். மேல் பக்கமாகக் கடிகார முள் போன்று செய்துவைத்துக் கொள்க.
❖ மாணவர் ஒருவரை அழைத்து, முதல் அட்டையிலிருந்து ஏதாவது ஒரு படத்தின் பெயரைக் கூறச் சொல்லவேண்டும், அந்த மாணவரையே இரண்டாவது அட்டையையும் சுழற்றச் சொல்ல வேண்டும். கடிகார முள்ளிற்கு நேராக முதல் அட்டையில் கூறிய படத்திற்குப் பொருத்தமான படம் வந்தால் அவர் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் அடுத்தடுத்த சுற்றுக்கு வாய்ப்பு வழங்கியும் விளையாட்டைத் தொடரலாம்.
அறிந்து கொள்வோம்
திருக்குறள்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
– உழவு, குறள் 1033