தமிழ் : பருவம் 1 இயல் 5 : பண்படுத்தும் பழமொழிகள்
5. பண்படுத்தும் பழமொழிகள்
அமுதவாணன் தன் தாத்தாவுடன் வாரச் சந்தைக்குச் சென்றான். செல்லும் வழியில் நாய்கள் குரைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அமுதவாணன் நாய்களை விரட்ட கல்லைத் தேடினான்.
தாத்தா : அமுதவாணா, என்ன தேடுகிறாய்?
அமுதவாணன் : “நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்பதற்கேற்ப இந்த நாய்களை விரட்ட கல் கிடைக்கவில்லை தாத்தா.
தாத்தா : அந்தப் பழமொழிக்குப் பொருள் வேறு அமுதவாணா! கல்லால் செதுக்கிய சிலை தானே கோவில்களில் இருக்கிறது ! அந்தச் சிலைகளைக் கல்லாகப் பார்த்தால், இறைவன் என்ற நாயகன் தெரியமாட்டார். சிலையை நாயகனாகப் பார்த்தால், கல் தெரியாது. இதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.
அமுதவாணன் : தாத்தா, “குரைக்கின்ற நாய் கடிக்காது” என்று என் நண்பன் இன்பவாணன் நேற்று கூறினான். குரைக்கின்ற நாய் கடிக்காதா தாத்தா?
தாத்தா : அப்படி இல்லை அமுதவாணா குரைக்கின்ற நாய் என்பது தவறு. குழைகின்ற நாய் கடிக்காது என்பதே சரியானது. குழைகின்ற என்றால் நம்மோடு பழகிய நாய் நம்மைப் பார்த்து வாலை ஆட்டிக் குழைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துமே அதுதான்.
இருவரும் சந்தைக்குள் நுழைந்தனர். நுழைவாயிலில் யானை ஒன்று ஆசி வழங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அமுதவாணனுக்கும் ஆசை வந்தது.
அமுதவாணன் : தாத்தா, நானும் இந்த யானையிடம் ஆசி பெற்றுக் கொள்கிறேன். தாத்தா
தாத்தா : பெற்றுக்கொள், இதோ பத்து ரூபாய். யானையிடம் கொடு
அமுதவாணன் : தாத்தா, அன்றொரு நாள் அம்மா, அப்பாவிடம் கூறினார்களே, “யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்” என்று, அதற்குப் பொருள் என்ன தாத்தா?
தாத்தா : யானை கிடையாது அது ஆனை அதைப் பிரித்து எழுதினால் ஆ + நெய் அதாவது பசுவின் நெய். பூனை கிடையாது. அது பூநெய் அதைப் பிரித்து எழுதினால் பூ + நெய் அதாவது பூவில் ஊறும் தேன். நாம் இளமையில் பசுநெய்யை விரும்பி உண்போம் வயதான முதுமையில் தேனோடு மருந்து கலந்து உண்போம்.
இளமையில் ஆநெய், முதுமையில் பூ நெய். இதைத்தான் “ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்” என்பர். ஆனால் இன்று இதன் பொருள் மாறுபட்டு வழங்கப்படுகிறது.
இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் வாங்கினர். அமுதவாணன் தாத்தா, எனக்கு விளையாட பந்தும், மட்டையும் வாங்கித் தாருங்கள், அப்படியே பாப்பாவுக்குப் பலூன்கள் வாங்கிக் கொள்ளலாம்.
தாத்தா : வாங்கலாம் அமுதவாணா!
அமுதவாணன் : எனக்கும் சேர்த்து பலூன்கள் நிறைய வாங்கலாம் தாத்தா.
தாத்தா : போதும், ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்
அமுதவாணன் : ஆத்துல போட்டாலும் அளந்து போடணுமா?
தாத்தா : சொல்கிறேன்! சொல்கிறேன்! ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்று இப்பொழுது பயன்படுத்துகிறோம் ஆனால் இது தவறு. அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பது தான் சரி. அதாவது புரியாமல் எதையும் மனனம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புரிந்த பிறகுதான் நினைவில் கொள்ள வேண்டும்.
(பேசிக்கொண்டே இருவரும் வீட்டை அடைந்தனர்)
படிக்கும் பகுதியில் இடம்பெறும் பழமொழிகளை அறிதல்
அமுதவாணன் : உங்களுடன் சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சி தாத்தா.
வாங்க பேசலாம்
● பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பழமொழிகளைக் கூறி அவற்றின் பொருளை உம் சொந்த நடையில் கூறுக.
● பாடப்பகுதியை உரிய உச்சரிப்புடன் படித்துப் பழகுக.
● உமக்குத் தெரிந்த பழமொழிகளையும் அவை உணர்த்தும் பொருளையும் வகுப்பில் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்க
விடை
(i) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை , முயற்சி, வெற்றி ஆகிய 16 செல்வங்களை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று பொருள்.
(ii) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறக்கலாமா?
மண்குதிரையில் ஆற்றைக் கடந்தால் உடமேன மண் கரைந்து, ஆற்றில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
(iii) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தால், அவர்களுக்குத் திருமணம் செய்ய சீர் போன்றவற்றைச் செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆகி விடுவான்.
(iv) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
விருந்துக்குச் சென்றால் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ணக்கூடாது.
(v) வீட்டுக்கு வீடு வாசப்படி
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும்.
சிந்திக்கலாமா!
பழமொழிகளின் பொருள் மாறுபட்டு வழங்கப் படுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
விடை
பழமொழிகளின் பொருள் மாறுபட்டு வழங்கப்படுவதற்குக் காரணம், பழமொழிகள் என்பது வாய்மொழி இலக்கியம். இது ஏட்டில் எழுதப்படாததே முதன்மையான காரணம் ஆகும். வாய்மொழி வழியாகவே கேட்டுக் கேட்டுச் சொல்வதால் ஓசையும் எழுத்தும் மாறுபட்டுப் போகிறது. சமுதாய மாற்றமும் ஒரு காரணமாகும். சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும் பொழுது புரிதல்களும் மாறுபடுகிறது. தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்கின்றனர்.
மொழி வழக்கும் ஒரு காரணம். வட்டாரங்கள் தோறும் வட்டாரமொழி மாறுபடுவதால் பழமொழிகள் திரிந்து விடுகின்றன. அர்த்தமும் மாறுபாடு அடைகிறது. அர்த்தங்களை யாரும் அலசி ஆராய்ந்து பார்க்காததால் அப்படியே நிலைத்து விடுகின்றன. இன்று பழமொழிகள் அதிக பயன்பாட்டிற்குள் வராததும் ஒரு காரணம் ஆகும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. அமுதவாணன், தன் தாத்தாவுடன் சென்ற இடம்
அ) கடைத்தெரு
ஆ) பக்கத்து ஊர்
இ) வாரச்சந்தை
ஈ) திருவிழா
[விடை : இ) வாரச்சந்தை]
2. யானைக்கொரு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) யானை + கொரு
ஆ) யானை + ஒரு
இ யானைக்கு + ஒரு
ஈ) யானைக் + கொரு
[விடை : இ யானைக்கு + ஒரு]
3. பழச்சாறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பழம் + சாறு
ஆ) பழச் + சாறு
இ) பழ + ச்சாறு
ஈ) பழ + சாறு
[விடை : அ) பழம் + சாறு]
4. நாய் ——–
அ) குரைக்கும்
ஆ) குறைக்கும்
இ) குலைக்கும்
ஈ) கொலைக்கும்
[விடை : அ) குரைக்கும்]
5. ஆசி இச்சொல்லின் பொருள்
அ) புகழ்ந்து
ஆ) மகிழ்ந்து
இ) இகழ்ந்து
ஈ) வாழ்த்து
[விடை : ஈ) வாழ்த்து]
6. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
அ) வாரம் + சந்தை = வாரச்சந்தை
ஆ) பழைமை + மொழி = பழமொழி
வினாக்களுக்கு விடையளிக்க.
1 . அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?
விடை
அமுதவாணன் யானையிடம் ஆசி வாங்கினான்.
2. ‘ஆநெய்‘ பூ நெய்‘ ஆகியன எவற்றைக் குறிக்கின்றன?
விடை
ஆநெய் என்பது பசுவின் நெய்யினையும், பூநெய் என்பது பூவில் ஊறும் தேனையும் குறிக்கின்றன.
3. “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” – இப்பழமொழியின் பொருளைச் சொந்த நடையில் கூறுக.
விடை
அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பதுதான் சரியான வாக்கியம். அதாவது புரியாமல் எதையும் மனப்பாடம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புரிந்து கொண்டு கற்க வேண்டும்.
பழமொழியை நிறைவு செய்க
1. யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
2. குரைக்கின்ற நாய் கடிக்காது
3. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
4. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
5. ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்03
படித்தும், பாடியும் மகிழ்க!
அச்சம் இல்லாதவன் தானே!
அம்பலம் ஏறுவான் தேனே!
ஆவும் தென்னையும் தானே!
ஐந்தே வருடம் பலன் தரும் மானே!
எஃகு போல தானே!
உறுதியாய் இரு தேனே!
மூத்தோர் சொல் தானே!
பழமொழிகள் ஆகும் மானே!
படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக்க.
1. சிறுதுளி பெருவெள்ளம்.
2. யானைக்கும் அடி சறுக்கும்.
3. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
விடை : 3. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
முதலெழுத்து மாற்றினால் வேறுசொல்
1. படிக்க நீயும் விரும்பு
பாறையை உடைப்பது இரும்பு
சுவைத்தால் இனிக்கும் கரும்பு
பூ மலரும் முன்பு அரும்பு
2. கையின் மறுபெயர் கரம்
வயலுக்கு இடுவது உரம்
பூக்களைத் தொடுத்தால் சரம்
புன்னை என்பது மரம்
3. நீர் இறைத்திடுவது ஏற்றம்
புயலோ இயற்கை சீற்றம்
தவறு இழைப்பது குற்றம்
வீட்டின் உள்ளே தேற்றம்
அறிந்து கொள்வோம்
முன்னோர்கள் தங்கள் அனுபவத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கக் கூறிய மொழிகளே முதுமொழிகள் அல்லது பழமொழிகள் ஆகும்.
செயல் திட்டம்
ஐந்து பழமொழிகளை எழுதி, அவை இன்று உணர்த்தும் பொருளையும் அதன் உண்மையான பொருளையும் எழுதி வருக.
விடை
1. கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை?
பொருள் : கழுதைக்குக் கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள் : கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்துப் படுத்தால் கற்பூர வாசனை தெரியுமாம்
என்பதே சரியான விளக்கம்.
2. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். :
பொருள் : மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள் : ஊரான் வீட்டுப் பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியைப் பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயிற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாகத் தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.
3. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள் : ஆயிரம் மக்களைக் கொன்றவன் பாதி வைத்தியன்.
உண்மையான பொருள் : ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன் ஆவான். நோயைப் போக்க ஆயிரம் வேரைக் கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.
4. களவும் கற்று மற.
பொருள் : தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்றுக் கொண்டு, மறந்து விட வேண்டும்.
உண்மையான பொருள் : ‘களவும், கத்தும் மற’ களவு – திருடுதல் ; கத்து – பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதே உண்மையான பொருளாகும்.
5. பந்திக்கு முந்து- படைக்குப் பிந்து
பொருள் : பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாகக் கிடைக்காது. போருக்குச் செல்பவன் படைக்குப் பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால் உயிருக்கு ஆபத்து வராது.
உண்மையான பொருள் : பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கிச் செல்கிறதோ, அது போல, போரில் எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணைப் பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய்ப் பாயும். இது போருக்குப் போகும் வில் வீரருக்காகச் சொல்லியது.
இணைத்து மகிழ்வோம்
விடை
1. Talk less work more – குறைவாகப் பேசு அதிகம் வேலை செய்
2. No pain no gain – உழைப்பின்றி ஊதியமில்லை
3. Good council has no price – நல்ல அறிவுரை விலை மதிப்பற்றது
4. Haste makes waste – பதறாத காரியம் சிதறாது
5. All that glitters is not gold – மின்னுவதெல்லாம் பொன்னல்ல