தமிழ் : பருவம் 1 இயல் 2 : பனைமரச் சிறப்பு
2. பனைமரச் சிறப்பு
மாலையில் பள்ளி முடிந்து, அழகனும், வண்ணமயிலும் மகிழ்வுடன் பேசிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் சாலையோரத்தில் பந்து போல கருப்பு நிறத்தில் ஒரு பழம் விழுந்து கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தனர். அது என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அவ்வழியே வந்த தாத்தாவிடம் இது என்னவென்று கேட்டனர்.
அழகன் : தாத்தா, தாத்தா இது என்ன பழம்?
தாத்தா : இதுவா! இதுதான் பனம்பழம்
வண்ணமயில் : இந்தப் பழத்தைத் தின்னலாமா? தாத்தா
தாத்தா : ம்…தின்னலாம் வண்ணமயில். மிகச் சுவையாக இருக்கும். சத்து மிக்கது.
அழகன் : இந்தப் பனம்பழத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது தாத்தா..
தேசிய மாநில அளவிலான சமூக, உணர்வுபூர்வமான செய்திகளை இனங்கண்டு அவற்றின் மீது கருத்தாடல் செய்தல்
தாத்தா : சொல்கிறேன் தம்பி! பனம்பழம் பனைமரத்தில் காய்த்துப் பழுக்கும். பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைப்பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரைஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம். இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனைத் தரக்கூடியது. அதனால் தான் பனைக்குக் கற்பகத்தரு என்ற பெயரும் உண்டு.
வண்ணமயில் : ஆகா! பனைமரம் இவ்வளவு சிறப்பானதா? தாத்தா, நான் நுங்கு மட்டுமே உண்டுள்ளேன், இந்தப் பனை மரத்தால் நமக்கு வேறு என்ன பயன்?
தாத்தா : நுங்கும், பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன. பனை ஓலைகள் கூடைகள் முடையவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகின்றன. பனஞ்சாறு பதநீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன்தருகிறது. மேலும், பனைமரம் புயலைத் தாங்கும் வலிமை பெற்றது.
அழகன் : இத்தனை பயன்மிக்கதா பனை?
தாத்தா : ஆமாம், அழகா! அது மட்டுமல்ல நமது முன்னோர்கள் பற்றியும் பண்டைய இலக்கியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள நமக்குப் பெரிதும் உதவியது பனை ஓலைச்சுவடிகள்தாம்.
வண்ணமயில் : அப்படியா!
தாத்தா : பனைமரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீர்மட்டம் உயரக் காரணமாக அமைகிறது.
அழகன் : அடேங்கப்பா…..! இம்மரத்திற்கு இவ்வளவு சிறப்பா?
தாத்தா : பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள், ஆகியவற்றைச் செய்து நீங்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடலாம்.
வண்ணமயில் : இத்தகு பயன்மிகு பனைமரத்தை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிவதில்லையே தாத்தா!
தாத்தா : நன்றாகக் கேட்டாயம்மா, சொல்கிறேன் கேளுங்கள். தமிழக இயற்கை வளத்தின் சான்றாக விளங்கும் பனைமரங்கள் எரிபொருளுக்காக வெட்டப்படுகின்றன. அதனால் அந்த மரத்தைச் சார்ந்து இருக்கும் பனங்காடை, பனை உழவரான் போன்ற பறவைகள் தம் வாழிடங்களை இழந்து வருகின்றன. “மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை”, இதனை உணர்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்.
அழகன் : பனைமரத்தினைப் பற்றிய பல அரிய செய்திகளை உங்கள் மூலம் அறிந்து கொண்டோம் தாத்தா.
தாத்தா : அறிந்து கொண்டதோடு மட்டும் விட்டு விடாதீர்கள். பனையின் சிறப்பினை உங்களது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.
இருவரும் : கட்டாயமாகக் கூறுவோம் தாத்தா,
தாத்தா : மிக்க மகிழ்ச்சி குழந்தைகளே! தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் பயன்மிகு பனைமரம் நமது தமிழ்நாட்டின் மாநில மரமாகும். இதன் சிறப்புணர்ந்து நாம் பனங்கொட்டைகளைச் சேகரித்து குளம், ஆறு, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் ஊன்றிப் பாதுகாக்கலாம்.
இருவரும் : அப்படியே செய்வோம்! பனைமரம் காப்போம் பயன்பல பெறுவோம். மிக்க நன்றி தாத்தா!
தாத்தா : மகிழ்ச்சி குழந்தைகளே! சென்று வாருங்கள்.
அறிந்து கொள்வோம்
தமிழக அரசு சின்னங்கள்
சின்னம் : திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்
பாடல் : நீராரும் கடலுடுத்த தமிழ்த்தாய் வாழ்த்து
நடனம் : பரத நாட்டியம்
விலங்கு : வரையாடு
பறவை : மரகதப்புறா
மலர் : செங்காந்தள்
மரம் : பனை
விளையாட்டு : கபடி
வாங்க பேசலாம்
மரம் வளர்ப்பதனால் நாம் பெறும் பயன்கள் குறித்துக் கலந்துரையாடுக.
விடை
அமலன் : மரம் வளர்ப்பதனால் நமக்கு என்னனென்ன பயன்கள் உள்ளன?
ராதா : மரம் வளர்ப்பதனால் நமக்கு நிறைய பயன்கள் உள்ளன.
அமலன் : அப்படியா! எங்கே? சொல்லு பார்ப்போம்.
ராதா : மரங்கள் கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு நமக்குத் தேவையான உயிர் காற்றைக் கொடுக்கிறது.
அமலன் : மரங்களினால் வேறு என்ன பயன் உள்ளது?
ராதா : மரங்கள் நமக்குக் கனிகள், காய்கள், இலைகள், தண்டுகள், வேர்கள், பூக்கள்
என்று பலவற்றைத் தருகின்றன.
அமலன் : மரங்கள் மண் அரிப்பை எவ்வாறு தடுக்கிறது?
ராதா : மழைக்காலங்களில் அதிக நீர் பெருக்கெடுத்து ஓடும் போது நீருடன் மண்ணும் சேர்ந்து அரித்துக்கொண்டு ஓடும் அந்த சமயங்களில் மரங்களின் வேர்கள் மண்ணரிப்பைத் தடுத்து நிறுத்துகிறது.
அமலன் : நன்றாகச் சொல்கிறாய். இன்னும் கூடுதலாக சொல்லேன்.
ராதா : மரங்கள் நமக்கு வாசனை பொருட்கள், மூலிகைப் பொருட்கள், தளவாடப் பொருட்கள், எரிபொருட்கள் என பலவகையான பொருட்களை தருகின்றன. அதுமட்டுமல்லாமல் மரம் வளர்ப்பதால் தான் மழை வரும். மரங்கள் நீராவி சுழற்சிக்கு அதிக பயனை நல்குவதால், மரம் வளர்த்தால் மழை கிடைப்பது உறுதியே. மரம் மனிதர்கள் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், ஊர்வன, சிறு உயிரினங்கள் என்று எல்லாவற்றிற்கும் பயன் கிடைக்கின்றன.
சிந்திக்கலாமா!
கிளி வளர்த்தேன், பறந்து போனது,
அணில் வளர்த்தேன், ஓடிப்போனது,
மரம் வளர்த்தேன்…
இரண்டும் திரும்பி வந்தது…
டாக்டர் அப்துல்கலாம்
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. வல்லமை என்ற சொல்லின் பொருள்
அ) வலிமை
ஆ) எளிமை
இ) இனிமை
ஈ) புதுமை
[விடை : அ) வலிமை]
2. உயர என்ற சொல்லின் எதிர்ச் சொல்
அ) மேலே
ஆ) நிறைய
இ) தாழ
ஈ) அதிகம்
[விடை : இ) தாழ]
3. விழுந்து என்ற சொல்லின் எதிர்ச் சொல்
அ) நடந்து
ஆ) பறந்து
இ) எழுந்து
ஈ) நின்று
[விடை : இ) எழுந்து]
4. கரையோரம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கரை + ஓரம்
ஆ) கரை + யோரம்
இ கரைய + ஓரம்
ஈ) கர + ஓரம்
[விடை : அ) கரை + ஓரம்]
5. அங்கெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அங் + கெல்லாம்
ஆ) அங்கு + எல்லாம்
இ) அங்கு + கெல்லாம்
ஈ) அங்கெ + ல்லாம்
[விடை : ஆ) அங்கு + எல்லாம்]
6. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
அ) சாலையோரம் = சாலை + ஓரம்
ஆ) குருத்தோலை = குருத்து + ஓலை
வினாக்களுக்கு விடையளி
1. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
விடை
நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், கற்கண்டு, கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கின்றன.
2. சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் எவ்வாறு உதவுகிறது?
விடை
பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள் ஆகியவற்றை செய்து சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் உதவுகிறது.
3. பனைமரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?
விடை
“மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை” இதனை உணர்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். பனை மரத்தினைப் பற்றிய பல அரிய செய்திகளை அறிந்து கொண்டு, பனையின் சிறப்பினை நமது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும். பனங்கொட்டைகளைச் சேகரித்து குளம், ஆறு, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் விதைகளை ஊன்றி பாதுகாக்கலாம்.
4. பனைமரத்தின் பயன்களாக நீ கருதுவனவற்றை உம் சொந்த நடையில் எழுதுக.
விடை
(i) பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப் பகுதி, நடுமரம், பத்தை மட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைபீலி, பனங்காய், பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம். இப்பொருட்கள் அனைத்தும் மனிதர்களுக்குப் பயன்படுவன.
(ii) நுங்கும், பனங்கிழங்கும், பனம்பழமும் உணவாகப் பயன்படுகின்றன. ஓலை கூடைகள் முடையவும், கைவினைப்பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகிறது.
(iii) பனஞ்சாறு பதனீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன் தருகிறது. பனை மரம் புயலைத் தாங்கும் வல்லமை பெற்றது. பனை ஓலை ஓலைச்சுவடிக்காகவும் பயன்படுத்தப்பட்டது.
(iv) பனை மரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக்கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீர் மட்டம் உயர் காரணமாக அமைகிறது.
(v) பனங்காய் வண்டி, பனைஓலை காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள் ஆகியவற்றைச் செய்து விளையாட்டுக்கள் விளையாட பயன்படுகிறது. பறவைகளுக்கு வாழிடமாகவும் விளங்குகிறது.
உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் மரத்தாலான பொருள்களைப் பட்டியலிடுக
இணைந்து செய்வோம்
சொற்களுக்கு உரிய படங்களைப் பொருத்துக
மொழியோடு விளையாடு
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டுபிடித்து வட்டமிடுக
1. நிலவு – மதி ஆதவன் திங்கள் கதிரவன் சந்திரன் பரிதி.
2. அம்மா – சேய் அன்னை குழந்தை தாய் மழலை மாதா
3. மகுடம் – அரசன் மணிமுடி தலை கிரீடம் அணிகலன் அரசி,
4. திரள் – கூட்டம் கடைவீதி நெருக்கம் மக்கள் கும்பல் நெரிசல்,
மாதிரி செயல்திட்டம்
நோக்கம்
நமது மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும், உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தினையும், கிராமப் பகுதியையும் பசுமையாக மாற்ற மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது என முடிவு செய்தனர்.
திட்டமிடுதல்
மழை பெய்த அடுத்த நாளில் மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்யப்பட்டது. அதற்குள் தேவையான மரக்கன்றுகளைத் தன்னார்வலர்களிடம் இருந்தும், அரசு வனத்துறையிலிருந்தும் பெறுவது என்றும், பராமரிக்கத் தேவையான கூண்டுகளைத் தயார் செய்து வைத்துக் கொள்வது எனவும் கூட்டத்தில் பேசித் திட்டமிடப்பட்டது.
செயல்படுத்துதல்
மழைபெய்த மறுநாள் பள்ளி வளாகத்தில் போதுமான குழிகள் தோண்டப்பட்டு எருவிட்டு பலன்தரும் வேம்பு, வாகை, புங்கை போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டுகள் வைக்கப்பட்டன. சாலை ஓரங்களிலும், குளம், குட்டைகளின் கரையோரங்களிலும் பனைவிதைகள் ஊன்றப்பட்டன. மேலும் தன்னார்வலர் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அவற்றை நட்டு வளர்ப்பவர்களுக்குப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன.
மதிப்பீடு
திட்டமிட்டபடி செயல் நிறைவு பெற்றது மனத்திற்கு மகிழ்ச்சியை அளித்தது. இச்செயல்பாடுகளினால் விரைவில் பசுமைச்சூழல் ஏற்படும். மேலும் அடுத்த ஆண்டு முன்கூட்டியே திட்டமிட்டு இன்னும் அதிக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
இது போன்று மரக்கன்றுகளை நீங்களும் நட்டு வளர்க்கலாமே!
கலையும் கை வண்ணமும்
செய்முறை
தேவையான பொருட்கள்:
பனை ஓலைகள்; தேவையான எண்ணிக்கையில்
பனை ஓலைகளில் நடுவில் உள்ள தண்டை நீக்கி விட்டுப் பட்டைகளாக ஓலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து ஓலைகளை அருகருகே வரிசையாக வைக்க வேண்டும். வேறு ஓர் ஓலையை எடுத்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஓலைகளின் மேலும் கீழுமாகச் செருக வேண்டும். இப்படியே அடுத்தடுத்த ஒலைகளை இணைத்துப் பின்ன வேண்டும். ஓரங்களை மடித்துச் செருகிவிட வேண்டும். இப்பொழுது அழகிய பனை ஓலைப்பாய் தயார்.
செயல் திட்டம்
பனை ஓலைகளைக் கொண்டு காற்றாடி, விசிறி, பொம்மைகள், பெட்டிகள் போன்ற பொருள்களைச் செய்து வருக.
இலக்கணம் – பால்
திணையின் உட்பிரிவே பால் ஆகும், பால் என்ற சொல்லிற்குப் பகுப்பு என்பது பொருள்.
பால் ஐந்து வகைப்படும்
உயர்திணை
1. ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால் எனப்படும்.
* அவன் என்ற பெயரில் சுட்டப்படும்.
2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனப்படும்.
* அவள் என்ற பெயரில் சுட்டப்படும்.
3. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் மனிதர்களைக் குறிப்பது பலர்பால் எனப்படும்.
* அவர்கள் என்ற பெயரில் சுட்டப்படும்.
அஃறிணை
4. அஃறிணையில் ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.
* அது என்ற பெயரில் சுட்டப்படும்.
5. அஃறிணையில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் எவை இருந்தாலும் அவை பலவின்பால் ஆகும்.
* அவை என்ற பெயரில் சுட்டப்படும்.
கீழ்க்காணும் சொற்களை வகைப்படுத்துக
அவள், சென்றனர், படித்தான், வந்தது, பறந்தன. ஓடினர், எழுதினான், விளையாடினர், குயவன், நாட்டிய மங்கை, மேய்ந்தன, வகுப்பறை, கற்கள், ஆசிரியர், மாணவர்கள், வீடு, பெற்றோர். தங்கை, அண்ணன், மரங்கள், செடி, மலர், பூக்கள்.
பொருத்துக
விடை
1. அவன் வரைந்தான்.
2. அவள் ஆடினாள்.
3. அவர்கள் பாடினார்கள்.
4. அது ஓடியது.
5. அவைகள் பறந்தன.