தமிழ் : பருவம் 1 இயல் 1 : அன்னைத் தமிழே!
1. அன்னைத் தமிழே!
அன்னைத் தமிழே – என்
ஆவி கலந்தவளே!
என்னை வளர்ப்பவளே!
என்னில் வளர்பவளே!
உன்னைப் புகழ்வதற்கே
உலகில் பிறப்பெடுத்தேன்
சொல்லில் விளையாடச்
சொல்லித் தந்தவளே!
சொல்லில் உனது புகழ்
சொல்ல முடியலையே!
– நா. காமராசன்
பொருள் அறிவோம்
என் அன்னையாகிய தமிழே! என் உயிரில் கலந்தவளே! என்னை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், என் உடன் சேர்ந்து வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளேன். சொல்லைக் கொண்டு விளையாடு வதற்குச் சொல்லிக் கொடுத்தவளே! அதே சொல்லினால் உனது புகழை என்னால் கூற முடியவில்லையே!
ஓசை நயமும் கருத்தும் மிக்க பாடல்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்.
வாங்க பேசலாம்
● பாடலை ஓசை நயத்துடன் பாடுக.
● பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்து மகிழ்க.
● மொழியின் சிறப்பினைக் கூறும் வேறு பாடலை அறிந்து வந்து பாடுக.
விடை
இன்பத்தமிழ்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! – பாரதிதாசன்
சிந்திக்கலாமா!
நாம் வளரும் போதே நம்முடன் சேர்ந்து வளர்வது தமிழ் மொழி எவ்வாறு? கலந்துரையாடுக.
விடை
மாறன் : நாம் பேசுவது என்ன மொழி?
கமலா : நாம் பேசுவது தமிழ்மொழி.
மாறன் : நாம் ஏன் தமிழ்மொழி பேசுகிறோம்?
கமலா : தமிழ் நம் தாய்மொழி அதனாலேயே பேசுகிறோம்.
மாறன் : ஏன் நாம் தமிழ்மொழியைப் பேச வேண்டும்?
கமலா : நாம் தமிழ்நாட்டில் பிறந்ததனால் நமக்குத் தமிழ்மொழி தாய்மொழியாக
விளங்குகிறது. ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது உயிர் போன்றது. உயிரை யாராவது வெறுப்பார்களா? அதனாலயே தாய்மொழியாகிய தமிழ்மொழியைப் பேச வேண்டும்.
மாறன் : அப்படியானால் நாம் வளரும் போதே நம்முடன் சேர்ந்து வளருமா நம்முடைய தாய்மொழி?
கமலா : ஆம் கட்டாயமாக வளரும். எப்படியென்றால், நாம் முதலில் சொல்லிப்பழகிய எழுத்து ‘அ, ஆ’ சொல்லிப் பழகிய வார்த்தை ‘அம்மா, அப்பா’. ஆனால் இன்று தமிழ் எழுத்துகள் அனைத்தையும் அறிந்துள்ளோம், வாசிக்கின்றோம். அதைப்போல அதிகமான சொற்களைப் பேசுகின்றோம், எழுதுகின்றோம், வாசிக்கின்றோம். அப்படியென்றால் நம்முடன் சேர்ந்து தமிழ் மொழியும் வளர்ந்துள்ளது என்றுதானே அர்த்தம். அதுதான் உண்மையும் கூட என்பது புரியவில்லையா?
மாறன் : புரிந்து கொண்டேன். உண்மைதான் புரியவைத்ததற்கு நன்றி!
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. அன்னை + தமிழே – என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அன்னைந்தமிழே
ஆ) அன்னைத்தமிழே
இ) அன்னத்தமிழே
ஈ) அன்னைதமிழே
[விடை : ஆ) அன்னைத்தமிழே]
2. பிறப்பெடுத்தேன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பிறப் + பெடுத்தேன்
ஆ) பிறப்பு + எடுத்தேன்
இ) பிறப் + எடுத்தேன்
ஈ) பிறப்பு + எடுத்தேன்
[விடை : ஆ) பிறப்பு + எடுத்தேன்]
3. மறந்துன்னை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மறந்து + துன்னை
ஆ) மறந் + துன்னை
இ) மறந்து + உன்னை
ஈ) மறந் + உன்னை
[விடை : இ) மறந்து + உன்னை]
4. சிறப்படைந்தேன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) சிறப்பு + அடைந்தேன்
ஆ) சிறப் + அடைந்தேன்
இ) சிற + படைந்தேன்
ஈ) சிறப்பு + அடைந்தேன்
[விடை : அ) சிறப்பு + அடைந்தேன்]
5. என்னில் என்ற சொல்லின் பொருள்
அ) உனக்குள்
ஆ) நமக்குள்
இ) உலகுக்குள்
ஈ) எனக்குள்
[விடை : ஈ) எனக்குள்]
வினாக்களுக்கு விடையளி
1. சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?
விடை
சொல்லில் விளையாட சொல்லித்தந்தவள் தமிழன்னை ஆவாள்.
2. எதைச் சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
விடை
தமிழ்ச்சொல்லினால் தமிழன்னையின் புகழைச் சொல்ல முடியவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
3. இப்பாடலின் ஆசிரியர் அன்னைத் தமிழை எவ்விதம் புகழ்கிறார்?
விடை
“என் அன்னையாகிய தமிழே! என் உயிரில் கலந்தவளே! என்னை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், என் உடன் சேர்ந்து வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளேன். சொல் கொண்டு விளையாடுவதற்குச் சொல்லிக் கொடுத்தவளே! அதே சொல்லினால் உனது புகழை என்னால் கூற முடியவில்லையே!” என்று ஆசிரியர் அன்னையாகிய தமிழைப் புகழ்கிறார்.
1. இப்பாடலில் இடம் பெற்றுள்ள ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
● என்னை
● அன்னை
● உன்னை
2. இப்பாடலில் இடம் பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
● கலந்தவளே
● வளர்ப்பவளே
● தந்தவளே
● கொடுத்தவளே
செயல் திட்டம்
● மொழியின் சிறப்பினைக் கூறும் இரண்டு பாடல்களை எழுதி வந்து படித்து / பாடிக் காட்டுக.
விடை
1. அன்னை மொழியே!
அழகான செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிந்த நறுங்கனியே!
– பாவலரேறு பெருசித்திரனார்
2. எங்கள் தமிழ்
அருள்நெறி அறிவைத் தரலாகும்.
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது.
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்.
– நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
பாடலை நிறைவு செய்வோம்
பட்டாம் பூச்சி பறந்து வா
பறக்கும் பூவாய் விரைந்து வா
பட்டுமேனி ஓவியம்
பார்க்க பார்க்கப் பரவசம்
தொட்டு உன்னைப் பார்க்கவா
தோழனாக ஏற்றுக்கொள்ள வா
சொல் உருவாக்கலாமா?
விடை
● கவியரசர்
● அன்னை
● குழந்தை
● தமிழ்மொழி
வண்ணம் தீட்டி மகிழ்வோம்
அறிந்து கொள்வோம்
தமிழ்ச்செல்வி, தமிழரசன்… என்பன போலத் தமிழ்மொழியை மட்டுமே பெயராகப் பயன்படுத்த முடியும்.